கண்ணன் கதையமுது! – தில்லைவேந்தன்

                        கண்ணன் கதையமுது!

Pin on Baby krishna      

Animated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccess                            

 கண்ணன் கதையமுது!

பாயிரம்!

முன்னோர் வணக்கம்!

அறியா வயதில் எனைப்பிரிந்த
   அன்புத் தந்தை, என்அறிவை
நெறியாய் வளர்த்த என்பாட்டன்,
   நேற்றும், இன்றும், என்றென்றும்
சிறியேன் மனத்தில் வாழ்தெய்வம்
   தினமும் வணங்கும் என்அன்னை –
முறையாய் மூவர் திருவடிகள்
   முதலில் பணிந்து தொடங்குகிறேன்!

பிள்ளையார் துதி!

தொடங்கிடும் செயல்து லங்க,
   சொற்றமிழ் புகழ்வி ளங்க
தடங்கலும் தடையும் நீங்க
   தரைமிசை இசையும் ஓங்க,
புடமிடு பொன்னாய்க் குற்றம்
   பொசுக்கியே போக்கும் வெற்றிக்
கடபடக் களிற்றின் ஞானக்
   கழலினைப் பணிந்தேன் நானும்.

கண்ணன் துதி!

மீனும் பறக்க விரிவானின் மேல்தாவி மேவுதல்போல்
நானும் விருப்பத்தால் நற்றமிழ்ப் பாக்கள். நவிலவந்தேன்
பேனும் உலகில் பெருமாளாய்ச் செய்கின்ற பேரருளே
கானில் கறவைகள் கன்றுகள் மேய்த்த கருமுகிலே!

நிலமகள் சுமையைத் தீர்க்க
   நீளுல கதனில் வந்தாய்!
அலமரும் மனச்சு மையை
   அகற்றிட வரமாட் டாயோ?
வலமுறப் பார்த்தன் தேரை
   வாகுடன் செலுத்தி வென்றாய்!
நலமுற வாழ்க்கைத் தேரை
   நடத்திட வரமாட் டாயோ?

தமிழ் வணக்கம்

தேனோடு பாலாய்க் கனியோடு கரும்பாய்த்
   தித்திக்கும் என்றன் தமிழே
ஊனோடு மறமும் உயிர்போன்ற அறமும்
   உவந்தேத்தி நின்ற தமிழே
வானோடு முகிலும் மழையாக மாறி
   வாழ்த்தாதோ உன்னைத் தமிழே
கோனோடு மக்கள் குறைபோக்கி என்றும்
   கோலோச்சும் அன்னைத் தமிழே

அவையடக்கம்

உளத்தினில் கோயில் கட்டி
   உயர்ந்தவர் வாழ்ந்த நாட்டில்
திளைத்திடும் அறியா மையால்
   சிறிதுமே திறமை இன்றிக்
களத்தினில் இறங்கி விட்டேன்
   கண்ணனின் கதையைச் சொல்ல.
அளத்தலில் புலமை கொண்டோர்
   அவரெனைப் பொறுத்தல் வேண்டும்

வீடுகள் தோறும் பிள்ளை
   விரும்பியே சுவர்கள் மீது
கோடுகள் போட்டால் அன்பால்
   கொள்வரே படமே என்று.
பீடுறு குழல்வாய்க் கண்ணன்
   பெருங்கதை யானும் சொன்னால்
பாடுறு புலமை வல்லீர்
   பற்றுடன் ஏற்றுக் கொள்வீர்

Animated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccess

 

 

 

கண்ணன் கதையமுது  ( நூல்)

வடமதுரை

நெடுமுகில்கள் இடிமுழங்க மழைகொ டுக்கும்
   நீள்வயல்கள் கதிர்விரிய வாய்சி ரிக்கும்.
தடம்நிறைய, புனல்நிறைய,மனம்நி றைய,
   தண்டமிழ்போல் தழைக்கின்ற நகரைச் சொல்ல
இடம்கொடுக்கும் சொல்லில்லை, எந்த நாளும்
   இல்லையென்று சொல்லாத மக்கள் உண்டு.
வடமதுரை வண்நகரை வாழ்த்திப் பாட
   வரவேண்டும் மீண்டுமொரு கம்ப வண்டு!
( தடம் – நீர்நிலை)

மடமயில்கள் விளையாடும் சோலை போன்று
   மங்கையர்கள் நடமாடி மகிழ்ந்தி ருப்பர்.
அடவிகளும், அருவிகளும் பொழில்கள், பொய்கை
   அழகென்ற சொல்லுக்குப் பொருளைக் கூறும்
இடமகன்ற வீதிகளில் மாளி கைகள்
   இருபுறமும் உயர்மலைகள் என்று நிற்கும்
வடமதுரை எனப்புலவர் பரவிப் பாடும்
   வளநகரின் மன்னனவன் சூர சேனன்.
( அடவிகள் — காடுகள்)

கண்ணன் கதையமுது!

(வடமதுரை மன்னன் சூரசேனன் மகன் வசுதேவனுக்கும், தேவகனின் அருமை மகள் தேவகிக்கும் திருமணம் நடைபெற்றது. மணவிழா முடிந்ததும் மணமக்களைத் தேரில் ஏற்றிச் செல்கிறான் தேவகிக்கு அண்ணன் முறையான கம்சன்)

வசுதேவன் தேவகி திருமணம்

மன்னவனின் மைந்தனவன் அழகில் மிக்கான்
   வசுதேவன் பெயர்கொண்டான் அறத்தில் நிற்பான்
அன்னவனும் தேவகனாம் அரசன் ஈன்ற
   அருமைமகள் தேவகியை மணந்து கொண்டான்
பொன்னணிகள் தேர்,பரிகள், கரிகள் மற்றும்
   பொருள்யாவும் பரிசெனவே தந்தான் தந்தை.
மின்னனையாள் அண்ணன்முறை ஆன கம்சன்
   மெல்லியலாள் தேரோட்ட முன்வந் தானே.

கம்சன் தேரினைச் செலுத்துதல்

சங்கொடு முழவொ லிக்கச்
   ததும்பிடும் பண்வி ளங்க
மங்கையர் வாழ்த்துப் பாட
   மங்கல மொழிகள் கூறத்
தங்கையின் மனங்க ளிக்கத்
   தாவியே தேரில் கம்சன்
பொங்கிடும் பூரிப் போடு
   புரவியைச் செலுத்த லானான்

(அப்போது அங்கு வானில் ஒலித்த அசரீரியின் குரல், வசுதேவன்-தேவகியின் எட்டாம் மகனால் கம்சனுக்கு மரணம் நேரும் என்று கூறவே கொதிப்படைந்த அவன் தேவகியைக் கொல்ல முற்படுகிறான்)

அசரீரியின் எச்சரிக்கை

கடிவாளம் அண்ணன் கையில்
களிப்பொன்றே மணப்பெண் நெஞ்சில்
அடியோடு தமைம றக்க
ஆதவனை முகில்ம றைக்க
இடியோசை போன்று வானில்
எவ்வுருவும் இன்றிப் பேசும்
வெடிகுரலும் வரவே கம்சன்
விழிப்புடனே கேட்க லானான்.

மகிழ்வுடன் தேரை ஓட்டும்
மாபெரும் முட்டா ளோநீ
மகனென உன்றன் தங்கை
வயிற்றினில் எட்டாம் பிள்ளை
பகையெனக் கொல்வான் உன்னை
பார்மிசை மாய்ந்து வீழ்வாய்
மிகமிகத் தெளிவாய்க் கூறி
வெடிகுரல் நின்ற தம்மா!

திகைத்தான் கம்சன் திடுக்கிட்டான்
தீயாய் உள்ளம் கொதித்திட்டான்
பகைத்தேள் இவளின் வடிவத்தில்
பாசக் கொடுக்கால் கொட்டுமுன்னே
வகுத்தேன் தப்பும் வழியினைநான்
வாளால் வகிர்ந்து மாய்த்திடுவேன்
மிகுத்த சினத்தால் கூறியவன்
வெறியால் தரையில் குதித்திட்டான்.

( தொடரும்)

Animated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccessAnimated Krishna Wallpapers - Top Free Animated Krishna Backgrounds - WallpaperAccess

                             

7 responses to “கண்ணன் கதையமுது! – தில்லைவேந்தன்

 1. Arumaiyaana thuvakkam Anna.
  வீடுகள் தோறும் பிள்ளை
     விரும்பியே சுவர்கள் மீது
  கோடுகள் போட்டால் அன்பால்
     கொள்வரே படமே என்று.
  பீடுறு குழல்வாய்க் கண்ணன்
     பெருங்கதை யானும் சொன்னால்
  பாடுறு புலமை வல்லீர்
   பற்றுடன் ஏற்றுக் கொள்வீர்

  Varigal Miga inimai..

  Like

 2. வார்த்தைகள் வரமாய்ப் பெற்று
  மனத்திடை உதித்த தைக்காண்
  சேர்த்ததை அறிந்தார் யாரும்
  செப்புவர் கவிதை வித்தை
  கோர்த்தநல் மாலை தன்னை
  கோவிந்தன் சூடக் காண்பர்
  நேர்த்தியாய் வரைந்த ஓலை
  நிலமெலாம் நிற்கும் தானே!

  அருமை!

  கவிஞர் சுரேஜமீ, மஸ்கட்
  17.11.2021 இரவு 10:49

  Like

 3. என்னே ஒரு சொல்வளம்! ஆரம்பமே மிக மிக அருமை!! படிக்கப்படிக்க மனது காட்சிகளில் லயித்துப்போகின்றது!! அடுத்த அத்தியாத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  Like

 4. Kuvigathin puthu vasagan nann. Thillai vendan enum nata rajanin kannan katthai miga arumai. Kuvigatththil kuviyum kavithaigalai padikka aaval.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.