
கம்ப இராமாயணம் சுந்தர காண்டம்-
இராம தூதனாக வந்து ஆறுதல் தந்த அனுமனை சீதை வாழ்த்துதல்
” மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதாய்ச்/
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?/
அம்மையாய் அப்பனாய அத்தனே அருளின் வாழ்வே/
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு என்றாள்”
கம்ப இராமாயணம் காப்பியங்களின் வரிசையில் முதன்மை நிலையில் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலைபெற்றிருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பினும், அழிழ்தனைய திகட்டாத் தீந்தமிழில் கம்பர் இராமாயணக் கதையை நாடகத்திற்குரிய விறுவிறுப்புடன் விவரித்திருப்பது மிக முக்கிய காரணம் எனலாம். அவன் கவிச் சித்திரத்தில் கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாக ஒளிவிடுகின்றனர்.
அசோக வனத்தில் அரக்கியர் வதை செய்ய அல்லலுற்று இருக்கின்றாள் சீதை. உடலும் உள்ளமும் வாட, இன்னலில் வதங்கிய சீதை, மெல்லிய இடையைப் போல மற்றைய அங்கங்களும் இளைத்து மெலியும் வண்ணம் துயருற்று இருந்தாள். ” நலன் அற உணங்கிய நங்கை/ மென்மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்”. வாழ்வை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கலங்கித் திகைப்புற்ற சீதையின் துயர் போக்கி அனுமன், இராம தூதனாய், அவளுக்குப் புத்துயிர் தருகின்றான். அப்போது மனம் உவந்து சீதை அனுமனை வாழ்த்துகின்றாள்:
” பாதாளம், பூமி, வானுலகு என்னும் மூன்று உலகங்களையும் படைத்தவன் பிரம்மன். அவன் தந்தை நாராயணனே இப்போது இராம பிரானாக அவதரித்திருக்கின்றான். அந்த இராம பிரானின் தூதனாய் வந்த அனுமனே! உயிர் நீக்கத் துணிந்த எனக்கு புத்துயிர் தந்த நிறைவு பெற்ற பண்பாளனே! சிறையிலிருக்கும் இந்நிலையில் உனக்கு என்ன கைம்மாறு நான் செய்ய இயலும்? தாயும், தந்தையும், தெய்வமும் என மூன்றுருவும் ஓர் உருவாய் வந்து எனைக் காத்த அருளின் வடிவமே! உயிர் விடத் துணிந்த என்னைக் காத்து, எனக்கு மறுமை என்னும் புகழ்மிகு புத்துயிர் தந்தாய்” என அனுமனுக்குப் புகழ்மாலை சூட்டுகின்றாள் சீதாப் பிராட்டி.
” செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” என்றார் வள்ளுவப் பெருமான். சீதை இதற்கு முன்னர் அனுமனுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. கைம்மாறாய் உதவி செய்ய வேண்டிய நிலையில் இல்லாத அனுமன், சீதைக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும், விண்ணுலகும் ஈடாகக் கொடுத்தாலும் போதாது. எனவேதான், சீதை அனுமனை அருளின் வாழ்வே ( Personification of Benevolence ) என விளிக்கின்றாள். “தாயும், தந்தையும், தெய்வமும் இணைந்த வடிவாய் வந்து, என் உயிர் பிரியாது காத்து, புகழுறு புத்துயிர் தந்தாய். உனக்கு சிறையிலிருக்கும் என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்?” என வருந்துகின்றாள்.
கம்பன் கவியமுதம் தரும் பேரின்பம் சுவைத்தால், ” அமுதும் தேனும் எதற்கு?” என்றே கேட்க யுத்த காண்டம்-இராவணன் இராமனின் போர்த்திறம் கண்டு இவனோ வேத முதல்வன் என வியத்தல்:
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ்வேத முதல்காரணன் என்றான்.
கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டம் இராவணனை கதாநாயக நிலைக்கு உயர்த்தி, எவராலும் வெல்லப்படாத மாவீரனாக உருவகிக்கப்பட்டு, இராம பிரானின் போர்த்திறம் கண்டு மலைத்து, ” இவன் யார்?” என்று வியந்து, வினவி, ” இவன் வேத முதல் காரணன்” என விழிப்புறுதல் அடைகின்ற அற்புதக் காட்சி.
யுத்த களத்தில் இராம- இராவண யுத்தம். மயிர்க் கூச்செறியும் மலைக்க வைக்கும் போர்ச் சம்பவங்கள். இராமனை எளிதில் வென்று விடலாம் என்ற அகந்தையில் இராமனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கின்றான். இராமன் இராவணனின் தேர்க்கொடியை முதலில் அம்பு வீசி அறுத்து எறிகின்றான். பின்பு, தவவலிமையால் இராவணன் பெற்ற படைகள் அனைத்தையும்- தாமதப் படை, ஆசுரப் படை, மயன் படை, தண்டாயுதம், மாயையின் படை, சூலம்- இராமன் தன் வில்லாற்றலால் வலுவிழக்கச் செய்துப் பொடிப் பொடி ஆக்குகின்றான்.
அக்கணத்தில்தான், இராவணன் இராமன் ” யார் என?” எனத் திகைப்புற்றுப் பேசுகின்றான்:
” இவன் ( இராமன்) சிவபெருமானோ? அல்லன்; பிரம்மனோ? அல்லன்; திருமாலாம் நாராயணனோ? அல்லன்; நான் தவ வலிமையால் வரம் இருந்து அடைந்த ஆயுதங்களை எல்லாம் அழிக்கின்றான். அதனால் பெருந்தவம் செய்து வரம் பெறும் வலிமையுடையனும் அல்லன். இவன் வேதங்களின் வித்தான முதற் காரணனோ?” என தனக்குத் தானே வினவி, விடை கண்டு, இராமபிரானை வேதங்களின் தலைவன், மூவர்க்கும் முதல்வன் எனத் தெளிகின்றான்.
இதனால்தான் இராவணன் வீழ்ச்சியில் மாட்சி பெற்றவன் ஆகின்றான் எனப் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் ஆய்வு முடிவில் அறிவிக்கின்றார்.
Sent from Yahoo Mail for iPhone