குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
- அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
- எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
- பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
- ஜன கண மன ! – ஜனவரி 2021
- ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
- எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
- பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
- சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
- கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
- பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
- வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
- பஸ்ஸில் போகலாம் – மே 2021
- சிட்டுக் குருவி – மே 2021
- ஆகாய விமானம் – ஜூன் 2021
- எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
- பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
- வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
- தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
- விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
- மழையே வா ! – செப்டம்பர் 2021
- பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
- தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
- வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021 தமிழ் !
தமிழ் எங்கள் தாய் மொழி !
தொன்மையான தேன்மொழி !
சங்க காலம் முதற்கொண்டு –
இன்றும் வளரும் இனிய மொழி !
ஐந்து பெரும் காப்பியங்கள் –
அனைத்தும் தந்த அருமை மொழி !
கம்பன் இளங்கோ வள்ளுவன் என்று –
புலவர் பெருமை கொண்ட மொழி !
பாரதி என்ற பாட்டுத் தலைவனை –
பாருக்குத் தந்த பெரிய மொழி !
இயல் இசை நாடகம் எல்லாவற்றிலும் –
படைப்புகள் பெருகும் பெருமை மொழி !
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் –
பேசுவர் தங்கத் தமிழில் தான் !
அம்மா அப்பா போலே எனக்கு –
தமிழின் மேலும் பாசம் தான் !
எங்கள் தமிழை என்றும் காப்பேன் !
எப்போதும் அதை நேசிப்பேன் !
என்றும் நான் ஒரு தமிழன் தான் !
தமிழே எனக்கு தாய் என்பேன் !
பாப்பாவுக்கு பப்பாளி !
பாப்பா, பாப்பா பப்பாளி !
பழங்களில் சிறந்தது பப்பாளி !
பார்ப்பதற்கு எளிது பப்பாளி !
பெருமைகள் கொண்டது பப்பாளி !
மா பலா வாழை போலில்லை –
முக்கனி இல்லை பப்பாளி !
பூஜை நேரம் நம் வீட்டில் –
படைப்பதும் இல்லை பப்பாளி !
பரிமாறும் போதும் எப்போதும் –
பந்தியில் இல்லை பப்பாளி !
வெற்றிலை பாக்கு தட்டினிலே –
வைப்பதுமில்லை பப்பாளி !
வாயில் போட்டால் கரைந்திடுமே –
இன்சுவை கொண்ட பப்பாளி !
இனிக்கும் தன்மை முழுதாய்க் கொண்ட –
புளிப்பே இல்லா பப்பாளி !
வீட்டில் பின்னே வயற்காட்டினிலே –
எளிதில் விளையும் பப்பாளி !
அண்ணாந்து பாரு – ஆஹா அங்கே –
அழகாய்த் தொங்கும் பப்பாளி !
தவளத்து மாமி அன்பாய் எனக்கு –
அன்றே தந்தாள் பப்பாளி !
அந்நியச் சிறுவன் என்றாலும் எனக்கு –
அன்பாய் தந்தாள் பப்பாளி !
சத்துகள் நிறைந்த பப்பாளி – நோய்
தடுப்பும் செய்யும் பப்பாளி !
சப்புக் கொட்டி சாப்பிடு நீயும் –
சமத்து பாப்பா – பப்பாளி !
****************************************************