மின்சார இலாகாவில் நான் டைபிஸ்டாகக் கோவையிலிருந்து திருப்பூர் மாறுதல் பெற்றுப் பொறியாளர் அலுவலகத்தில் பணியேற்று ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.
டைபிஸ்ட் இருவர். இருந்ததோ ஒரு டைப் மிஷின். எனவே இரண்டு ஷிப்ட். நான் காலை 8 முதல் ஒரு மணிவரை .
ஒருநாள் இன்ஸ்பெக்ஷன் காரணமாகக் காலை 8.30 மணிக்கே கோவையிலிருந்து தலைமைப் பொறியாளரும்,உதவி மேற்பார்வைப் பொறியாளரும் எங்களது அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் எங்கள் பொறியாளர் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அறையிலிருந்து அழைப்பு மணி அடித்தது.
எங்கள் அலுலவகத்தில் அன்றைக்குதான் ஒரு புதிய ஹெல்ப்பர் சேர்ந்திருந்தான் . என் பையன் வயதுதான் இருக்கும். பள்ளியிலிருந்து நேராக ஆபீசுக்கு வந்தவன்போல மிகவும் சின்னப் பையனாக இருந்தான் . ஈரோட்டில் வேலை செய்த அவனது தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது.
அலுவலகர் அறையிலிருந்து மணி இரண்டாம் முறை அடித்தது. அவனுக்கு முன்னால் இருந்த ஹெல்ப்பர் எல்லாம் மணி அடித்ததும் உள்ளே சென்று அதிகாரிகள் சொன்ன வேலையைச் செய்துவருவார்கள். இந்தப் பையன் மணிச் சத்தம் கேட்டதும் மிரள மிரள விழித்தான்.
நான் அவனிடம் உள்ளே சென்று பார் என்று கண்ணால் ஜாடைகாட்டினேன்.
உள்ளே சென்ற அவன் ஒரு நிமிடத்தில் திரும்ப என்கிட்டே வந்தான். “ யக்கா , , 3 காப்பி வாங்கி வரச்சொன்னார்கள். நான் திருப்பூருக்குப் புதுசு! காப்பிக் கடை எங்கே இருக்கு?’ என்று என்கிட்டே கேட்டான். நானும் ஊருக்குப் புதுசுதான். இருந்தாலும் அன்னபூர்ணா ஹோட்டலில் நல்ல காப்பி கிடைக்கும் என்று மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே இருந்துதான் அலுவலகர்கள் காப்பி வாங்கி வரச்சொல்வார்கள் என்று அறிந்திருந்தேன். அந்த ஹோட்டல் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அதனால் அவனிடம், “ தம்பி சைக்கிள் எடுத்துக்கிட்டுப் போய் நல்ல காபி வாங்கிவா “ என்று சொல்லிக் காசுகொடுத்து அனுப்பினேன்.
‘சரிக்கா ‘ என்று சொல்லிவிட்டு சைக்கிளை ஆபீஸ் அறையிலிருந்து கஷ்டப்பட்டு இறக்கி எடுத்துக்கொண்டு போனான்.
வருவான் வருவான் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் ஆயிற்று அவன் வரவேயில்லை. இன்ஸ்பெக்ஷன் வந்த அதிகாரிகள் வேலையை முடித்துவிட்டுக் கோவைக்கே புறப்பட்டுச் சென்றுவிட்டனர் ஆனால் இன்னும் அந்த ஹெல்ப்பர் பையன் வரவேயில்லை. எங்கள் அலுவலக அதிகாரிக்கோ செமக் கோபம். ” “ஒரு காப்பி சரியான நேரத்துக்கு வாங்கிவரத் துப்பு இல்லே! என்ன பையன் இவன்! அவன் வந்தா உள்ளே அனுப்புங்க” என்று என்கிட்டே சொல்லிவிட்டு அறைக்குப் போய்விட்டார்.
‘என்னாச்சு இந்தப் பையனுக்கு .ஏன் இன்னும் அவன் வரவில்லை ? சாதாரணமா 10-15 நிமிஷத்தில வந்திடலாம்.. இவன் போய் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆகப் போகுது. பொறியாளர் வேற கோபமா இருக்கார் இவனுக்கு என்ன ஆயிற்றோ? அவன் அப்பா ஆபீஸ் வேலையாக வெளியே சென்றிருந்தபோதுதான் பஸ்சில் அடிபட்டு இறந்துபோனார்.’ என்றெல்லாம் எண்ணி என் மனம் புதிதாகச் சேர்ந்த பியூனுக்காக வருந்தியது.
ஒரு வழியாக அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு 3 டம்ளர் காப்பி எடுத்துக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க உள்ளே வந்தான். நான் அவனை ஒன்றும் சொல்லவில்லை. நேரே பொறியாளர் அறைக்குச் செல்லும்படி கூறினேன். ஒரு ஐந்து நிமிடத்துக்கு அவர் அவனைத் திட்டும் சத்தம் அலுவலகம் பூரா எதிரொலித்தது.
“சார்! அந்த யக்காதான் சைக்கிளை எடுத்துக்கிட்டு போகச் சொல்லிச்சு! அதனாலதான் சார் லேட்டாயிடுச்சு ‘ என்று கிட்டத்தட்ட அழும் குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அதைக் கேட்ட நான் உள்ளே சென்று “ சீக்கிரம் காப்பி வாங்கி வருவதற்காகத்தான் சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போகச்சொன்னேன்.” என்று என் பேச்சை நியாயப்படுத்தினேன்.
“என்னடா உளரரே! சைக்கிள்ள போனாதானே சீக்கிரம் வரமுடியும்?” பொறியாளர் வெடித்தார்.
அதற்கு அவன், “ சார்! எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. அதனால சைக்கிளை போகும்போதும் வரும்போதும் தள்ளிக்கிட்டே வந்தேன்”
“ சைக்கிளை ஓட்டத் தெரியாதுன்னா சொல்லவேண்டியதுதானே ? என்று பொறியாளர் மிரட்டினார்.
அவன் கண்ணில் நீர் கட்டியது.
“ சார்! இன்னிக்குத்தான் நான் வேலையில சேர்ந்திருக்கிறேன். பொறப்படும்போது எங்க அம்மா, ‘ இன்னிக்குத்தான் வேலையில சேரரே! யார் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்யணும் நல்ல பையன்னு பேரு வாங்கணும் ‘ அப்படீன்னு சொன்னாங்க அதனாலதான் சார்! யக்கா சைக்கிளை எடுத்துட்டுப்போன்னு சொன்னதும் எடுத்துக்கிட்டுப் போயிட்டேன்.” என்றான்.
பொறியாளரும் நானும் சிரித்துவிட்டோம்.
அவர், ‘சரி, சரி, மூணு காபியை நாம மூணுபேரும் குடிச்சிடலாம்” என்று சிரிப்பினூடே சொன்னார்.
அது பெரிய ஜோக் ஆகி அடுத்த ஷிப்ட்டில் வந்த அத்தனை பேருக்கும் தனித்தனியா சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.
ஆனால் அது புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனுக்கு எவ்வளவு வேதனையைத் தந்திருக்கும் என்பதை அன்றைக்கு நான் உணரவில்லை.
வருடங்கள் 34 உருண்டோடின!
விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அலுவலகத்திற்குச் செல்லவேகூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நண்பர் தன்னுடைய எலெக்டரிசிடி மீட்டர் பிரச்சினையை சரிபண்ணவே முடியவில்ல என்று வருத்தப்பட்டபோது அவருக்கு உதவலாம் என்று எங்கள் மின்சாரப் பொறியாளர் அலுவலகத்துக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்றேன்.
அலுவலகத்தில் மணிமேகலை முகுந்தன் உதவிப் பொறியாளர் என்று பெயர் போட்டிருந்தது.. சட்டென்று அவளை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற ஞாபகம் வந்தது. இருபது வருடங்களுக்கு முன்னால் அவள் அப்பாயிண்மெண்ட் ஆர்டரை நான்தான் டைப்பண்ணிக் கையெழுத்து வாங்கி அவள் கையில் கொடுத்தேன். அன்று அவள் பாவாடை தாவணி போட்டுக்கொண்டு சின்னப் பெண்ணாக இருந்தாள்.
என்னைப் பார்த்ததும் மணிமேகலைக்கும் அந்த ஞாபகம் வந்திருக்கும். ‘வாங்க அக்கா’ என்று வரவேற்று பஜ்ஜி டீ எல்லாம் வாங்கிக்கொடுத்தாள். என் நண்பர் மீட்டர் பிரச்சினையைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். பொறியாளர் இங்கேதான் இருக்கிறார் அவரிடம் அனுமதிபெற்று உடனே சரி செய்துவிடலாம் என்று சொன்னாள். இன்னும் கொஞ்சம் ஊர்க்கதை பேசிவிட்டு நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பினேன்.
அப்போது அந்த அறைக்குப் பொறியாளர் வந்தார். மணிமேகலை எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு ‘இவங்க இந்த ஆபீஸ் பழைய டைப்பிஸ்ட். எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அடிச்சுக்கொடுத்ததே இவங்கதான் என்று என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தினாள். நான் வந்த விஷயத்தைப்பற்றியும் சொன்னாள். .
அவர் என்னை சில வினாடிகள் பார்த்துவிட்டு “என்னை நினைவிருக்கா யக்கா” என்றார். அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு சட்டென்று ஞாபகம் வந்தது. அவர்.. அவன்.. அந்த ஹெல்ப்பர் .. என்னால் நம்பவே முடியவில்லை. அவரே கூறினார் .
மணிமேகலை மேடம். நான் முதன் முதலில் இவங்ககிட்டேதான் ஜாய்ன்பண்னினேன். என் முதல்நாள் அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனக்கு உதவிசெய்ய இவர்கள் என்னைச் சைக்கிளில் போய் காப்பி வாங்கிவரச் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்போது சைக்கிளே ஓட்டத் தெரியாது. யார் சொல்லையும் தட்டக்கூடாது என்று வீட்டில் அம்மா சொன்னதால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே போய் காப்பி வாங்கிவந்தேன்.. எல்லாரும் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். இப்போ நினைச்சுப் பார்த்தா எனக்கும் சிரிப்பாத்தான் வருது. ஆனால் அப்பவே முடிவுசெய்தேன். நாம முயற்சிபண்ணி பெரிய ஆளா வரணும் என்று. பார்ட் டைம் இஞ்சினியரிங் முடிச்சு இன்னிக்கு இங்கேயே பொறியாளரா வந்திட்டேன்.” என்று தயங்காமல் தன் முதல்நாள் அனுபவத்தைச் சொன்னார்.
‘சொன்னா நம்பமாட்டீங்க ஒவ்வொரு புரமோஷன் கிடைக்கும்போது உங்களைத்தான் நினைச்சுக்குவேன்.’ என்று அவர் என்னிடம் சொன்னதும் என் கண்ணில் நீர் கட்டியது..
“வாங்க யக்கா ! நான் வெளியேதான் போயிக்கிட்டு இருக்கேன். உங்களை வீட்டிலேயே கொண்டுவிட்டு விடுகிறேன் ‘ என்று சொல்லித் தன் ஸ்கோடாவில் அவரே ஓட்டிக்கொண்டு வந்து என் வீட்டில் விட்டுவிட்டுப் போனார் அந்த ஹெல்ப்பர்.!
‘பிறர் மனம் துன்புறாதபடி செயல் புரிக! அதுவே நாகரிகம் ’ என்ற ஆன்றோர் வாக்கு ரிடையராகி பத்துவருடம் கழித்து மண்டையில் உதித்தது.
அருமையான சிறுகதை! நாகரிகம் எல்லா சமயங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதை வலியுறுத்தும் கதை!
LikeLike
உண்மைக் கதை என்று தான் நினைத்து வாசித்தேன். அருமை…
வாழ்த்துகள்
எஸ் வி வேணுகோபாலன்
LikeLike
யதார்த்தமான கதை. எல்லோருக்கும் அலுவலக வாழ்வில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.நம் பழைய நினைவுகளை தட்டி எழுப்பி புன்னகை பூக்க வைக்கிறது. நன்று
LikeLike
Mikka arumai.
LikeLike
அன்பின் பரிணாமம் அந்த பொறியாளரிடம் பார்க்கிறேன்.
LikeLike
நல்ல கதை
வத்ஸலா
LikeLike