வர்க் பிரம் ஹோம் –  எ. யாஸ்மின் பேகம்

சிறுகதை : ஏன்டா இப்படி? - Short story: Why is it like this?

ஏங்க…பக்கத்து வீட்டு சிந்து ரொம்ப தான் அலட்டிக்கிறா அவளுக்கு பேசக்கூடா நேரமில்லையாம் கேட்டா வரக் ஃப்ரம் ஹோம்னு சொல்றா.  ஆபீஸ் வேலையை வீட்டில பார்க்கறதுக்கு எதுக்கு இந்த அலட்டல்.  போன் செய்தா கூடா பேச நேரமில்லையாம் வேலையை முடிக்கனுமாம்” என்று புலம்பிக் கொண்டே காய்கறி வாங்கி விட்டு வீட்டினுள் நுழைந்தாள் சுஜிதா.

                           “அதுக்கு எதுக்கு நீ புலம்பறே முக்கால்வாசி வீட்டிலே இதுதான் இப்போ நடைமுறை.  எனக்கும் அப்படிதானே. நானே இந்த மாசத்துலயிருந்து தான் ஆபீஸ் போய் வேலை பாரக்கறேன்.  இப்போதான் சிறகை விரிச்சு வானத்துல பறக்கிற மாதிரி இருக்கு” என்றான் சுஜிதாவின் கணவன் தினேஷ்.

“அப்போ இத்தனை நாள் ஜெயிலயா இருந்தீங்க.. லாக்டவுன்ல எனக்கு இரட்டிப்பான வேலை சமையல் செய்து சுதந்திரமா ஒரு  நாடகத்தை பார்க்க விடறீங்களா ஆளாளுக்கு சேனலை மாத்திட்டு தீனியை கேட்டுட்டு எனக்கு இடுப்பே உடைஞ்சு போச்சு.”  என்று சீறீக் கொண்டு பாய்ந்தாள் சுஜிதா.

சரி சரி நீ பொங்காதே இப்போ தான் நிலைமை கொஞ்ச கொஞ்சமா சரியாயிட்டு வருதே.

அதாங்க நானும் சொல்ல வரேன்.  நிலைமை முழுமையா சீராகரத்துக்குள்ளே நானும் வரக் ஃப்ரம் ஹோம் செய்யலாம்னு இருக்கேன்.” என்று குண்டை தூக்கி போட்டாள் சுஜிதா.

சுஜி என்ன விளையாடறேயா நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லை.  வீட்டிலிருந்தே ஆபீஸ் வேலை செய்யறது ரொம்ப கஷ்டம். அதெல்லாம் முடியாது உன்னாலே.

“ஏன்  முடியாது….முடியாதுங்கற வார்த்தையே என் அகராதியிலே இல்லைங்க. நானும் படித்த பட்டதாரி.  கல்யாணத்துக்கு முன்னே நானும் டைபிஸ்டா வேலைப் பார்த்து இருக்கிறேன். லேப்டாப்பும் இருக்கு வேற என்ன வேணும்.  சிந்து மட்டும் பாருங்க ரொம்ப பண்றா எப்பக் கேட்டாலும் ஓர்க் ஃப்ரம் ஹோம்னு பீத்திக்கிறா”   

   சுஜி ஒண்ணு புருஞ்சுகக்கோ அவங்க ஸ்கூல டீச்சரா வேலை செய்யறாங்க . இப்பவல்லாம் குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸ் தானே நடக்குது. அந்த நேரம் நீ கால் பண்ணினா எப்படி பேசுவாங்க.  புலியை பார்த்து பூனை சூடு போடலாமா” என்று தினேஷ் நறுக்குத் தெறித்தாற்ப் போல் சொல்ல சுஜிக்கோ கோபம் தலைக்கேறியது.

“இப்ப என்னங்க நானும் ஆன்லைன் வேலை செய்து சம்பாதித்துக் காட்டாறேன். ஆடிக் காத்துல அம்மியும் நகரும் வேணும்னா பாருங்க.

  எது அம்மி நகரதையா …..

“இல்லை நான் வீட்டிலாயிருந்து சம்பாதிக்கறது”

“என்னமோ பண்ணு” என்று சொல்லிவிட்டு விட்டது வழி என்று கிளம்பி போனான் தினேஷ்.

அன்றே ஆன்லைனிலும் வலைத்தளங்களிலும் தேடி தன்னுடைய பயோ டேட்டாவை பதிவு செய்தாள்.

முகநூல் வாயிலாக நிறைய அழைப்புகள் வரவே.  மகிழ்ச்சியில் மூழ்கினாள் சுஜிதா.  எப்போதும் ஃபோனும் கையுமாக காணப்பட்டாள்

இரண்டே நாளில் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு வந்தது. செல்போன் சிணுங்கியது.

    “ஹலோ”…..

   “சுஜிதா மேடம் இருக்காங்களா”

  மேடம் என்று கேட்டதும் சுஜிதாவுக்கு ஏதோ ஐ.டி. கம்பெனியில் வேலைப் பார்ப்பது போல் உணர்ந்தாள்.

‘யெஸ் சுஜிதா தான் பேசறேன் நீங்க” என்று தன் குரலை சில வினாடிகள் சரி செய்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

நாங்க ஹோம் வொர்க் டாட் நெட் என்கிற கம்பெனியிலிருந்து பேசறோம். உங்க பயோ டேட்டாவை பார்த்தோம். நீங்க எங்க கம்பெனியில் ஓர்க் பண்ண தயாரா” என்று தடுமாற்றமில்லா கணீர் குரலில் பேசிய ஆண் குரல்.

  “அப்படியா….. ரொம்ப தேங்க்ஸ்….கண்டிப்பா ஓர்க் பண்றேன்.

  நீங்க உங்க ஆதார் அட்டை போட்டோ அனுப்புங்க.  உங்களுக்கு சம்பளம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்.  உங்க வேலை ரொம்ப எளிமையான வேலை தான். தினமும் ஓய்வு நேரத்துல வேலையை முடிச்சா போதும். என்று தேன் ஒழுகுவது போல் பேசிய அந்த கம்பெனியின் சேல்ஸ் எக்ஸிகூட்டிவ் .

        “பதினைந்தாயிரமா…..” என்று வாயை பிளந்தாள் சுஜிதா.

    “மீண்டும் அந்த ஆண் குரல் தொடர்ந்தது.

  அதுக்கு முன் நீங்க டெபாசிட்டா ரூபாய் ஐயாயிரம் கட்ட வேண்டும்.

  இதை கேட்டதும் சுஜிதாவின் பிளந்த வாய் தன்னால மூடிக் கொண்டது.

  “இல்ல மேடம் ஐயாயிரம் வெறும் டெபாசிட் ஆன்லைன் சாப்ட்வேர் சார்ஜஸ் தான்.  இது நீங்க வேலையை விடும் போது சம்பளத்துடன் உங்க டெபாசிட்டையும் அனுப்பிடுவோம்.

 சரிங்க நாளைக்கே ரூபாய் ஐந்தாயிரம் அனுபிடறேன்.”

  சுஜிதா பல முறை யோசித்த போதிலும் அவளின் சம்பளத்தை எண்ணி மனது அங்கலாயித்தது.  யோசித்து காலம் தாழ்த்தாமல் ஒரு முடிவுக்கு வந்தாள் சுஜிதா.

தன் வாயை கட்டி வயித்த கட்டி தன் அம்மா அப்பா விஷேச காலங்களிலும் தன் கணவர் கொடுக்கும் மாத செலவிலும் மிச்சம் பிடித்து வைத்த சிறுவாடு பணத்தை பதுங்கியிருந்த உப்பு ஜாடியிலிருந்து வெளிவந்தது.

பிள்ளையாரப்பா கஷ்டப்பட்டு சேர்ந்த பணம்.  இதை முதலீடா கொடுத்து பதினைந்தாயிரம் சம்பளம் அடுத்த மாசம் என் கையில் உன் முன்னால இது மாதிரியே வந்துடனும் உனக்கு பத்து தேங்காய் உடைக்கிறேன். என்று தன் கையால் இரு பக்கமும் நெற்றி பொட்டை கொட்டிக் கொண்டே கும்பிட்டாள்.

மறுநாள் முதல் ஆன்லைன் வேலை ஆரம்பிக்கப்பட்டது சமையல் வேலையை முடித்தாள்.  காலை ஐந்து மணிக்கே எழுந்து வாக்கிங் போனாள்.      

   சுஜி என்று குரல் கேட்க திரும்பினாள்.

   சிந்து நீயா…..

   ஆமா பார்த்து ரொம்ப நாள் ஆச்சே”

   ஆமா சிந்து நானும் ரொம்ப பிஸி. வொர்க் ஃபார்ம் ஹோம் பண்றேன் தெரியுமா பதினைந்தாயிரம் சம்பளம்.

   “அப்படியா அதை பத்தி பேச தான் கால் பண்னினேன் நீ போனே எடுக்கலா”.

   “எனக்கு ஆன்லைன் ஓர்க் சிந்து எப்படி எடுக்க முடியும். வேலை தானே முக்கியம்.  நான் இப்பவெல்லம் வெட்டி அரட்டை அடிக்கறது இல்லை.  சிந்துவின் வார்த்தைகள் அவளுக்கே திருப்பி விழுந்தது.

   “சரி சரி நான் விஷயத்துக்கு வரேன்.” என்று சலித்துக் கொண்டு தொடர்ந்தாள் சிந்து.

   “எங்க ஸ்கூல ஆன்லைன் டியூட்டர் வேணும்னு சொன்னாங்க நிரந்திரமில்லை ஒரு மூணு மாசம் செய்தாக்கூடபோதும்.  மாசம் பத்தாயிரம் தருவாங்க.  சின்ன கிளாஸ்க்கு தான் எடுக்கணும். அதான் உன்னை சிபாரிசு செய்திருக்கேன்.”

   “அடடா….. என்ன சிந்து இப்போ சொல்றே நானே பிஸியா வேலை செய்றேன்.  அதுவுமில்லாமே நல்ல சம்பளம் நீ என்னடான பத்தாயிரத்துக்கு என் டைம் வேஸ்ட் பண்ணிட்டு பேசிட்டு இருக்கிறே.  சாரி சிந்து தப்பா நினைக்காதே” என்று அலட்டல் பேச்சால் வந்த வாய்ப்பை தூக்கி எறிந்தாள் சிஜிதா.

  எறும்பைப் போல் சுறுசுறுப்பாக வேலை செய்துக் கொண்டிருந்த சுஜிதா இப்போது உட்கார்ந்த இடத்திலேயே வேலையினால் பல இன்னல்களை சந்தித்தாள். பதினைந்து நாட்களாக விடாமல் உட்கார்ந்தபடியே வேலை செய்ததில் முதுகு வலிதான் மிச்சம்.      

  பத்தாததுக்கு கண் எரிச்சல், தலைவலி என்று கூடிக் கொண்டே போனது வியாதி. கெட்டு போனது ஆரோக்கியம். இருந்தாலும் கடின உழைப்பு வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் உழைத்தாள் சுஜிதா.

இன்னும் பதினைந்து நாட்களில் பதினைந்தாயிரம் சம்பளம் வந்துவிடும் என்று ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தாள்.  முழு நாளும் ஆன்லைன் வேலை என்று கவனித்ததில் வீட்டை கவனிக்காமல் விட்டு விட்டாள். எப்போதும் சுத்தமாக இருந்த வீடு குப்பை கூளமாய் போனது.  இதுக்கு நேரமின்மையே காரணமாயிருந்தது சுஜிக்கு.  வீட்டு வேலை, சமையல் வேலை, துணி வேலை என்று பெருகிக் கொண்டே போனது இதில் ஓர்க் ஃப்ரம் ஹோம் வேலை வேறு.

நாட்கள் ஓடியது. தேதியும் பிறந்தது. செல் போனில் நோட்டிபிகேஷன் சவுண்ட் வரவும் அதை பார்த்த சுஜிதாவுக்கு கண்கள் விரிந்தன.

  “ஏங்க……. இங்கே பாருங்க……. என் அக்கவுண்டல சம்பளம் பணம் வந்திருச்சு.” 

  “அதான் தெரியுமே”

  “தெரியுமா எப்படிங்க”

  “அட வேலைக்கு சேர்ந்து இன்னியோட ஒரு மாசம் மூணு நாள் ஆகுது.”

  “அது சரிதாங்க ஆனா ஒரு வேலை ஃப்ராட் கம்பனியா இருந்தா என்ன பண்றது தான் பயமா இருந்துச்சு.  என் பிரண்ட் மல்லிக்காவுக்கு அப்படிதான் நடந்துச்சாம்.”

  “சரி நீ அதை பற்றியெல்லாம் யோசிக்காதே சரி நான் கிளம்பறேன்.” என்று சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினான் தினேஷ்.

        கைபேசி சிணுங்கியது.

        “ஹலோ தினேஷ் இருக்கானா”

  “அவர் இப்போதான் கிளம்பி போனார். ஆனா செல் போனை மறந்து விட்டுட்டு போயிட்டார்.” என்றாள் சுஜிதா.

  “ இல்ல அவன் உங்க சேமிப்பு கணக்குக்கு பதினைந்தாயிரம் ட்ரான்ஸ்பர் பண்ண சொன்னான். அதான் பணம் ரிசீவ் ஆயிடுச்சானு கன்ஃபர்ம் பண்ண தான் கால் பண்ணினேன்.

 இதை கேட்ட சுஜிதா அதிர்ச்சி அடைந்தாள்.

சரியாக தினேஷ் வீட்டினுள் நுழைய.

“சுஜி என் போனை மறந்து விட்டுட்டேன் என்று சொல்லிக் கொண்டே போனை வாங்கினான். மறு முனையில் அவன் நண்பன் இருக்கவும் நிலைமையை புரிந்துக் கொண்டான்.

 டேய் பாலா நான் திரும்ப கூப்பிடறேன்.” என்று சொல்லிவிட்டு செல்போனை துண்டித்தான்.

“சுஜி நீ வேலை செய்த கம்பெனி ஒரு ஏமாற்று கம்பனினு காலையில தான் உன் போன் மூலமா வந்த மின் அஞ்சல் வாயிலா தெருஞ்சிக்கிட்டேன்.  நீ இவ்வளோ கஷ்டப்பட்டும் உனக்கு ஏமாற்றத்தை கொடுக்க விரும்பல. அதுவுமில்லாமல் நீ நினைக்கிற ஓர்க் ஃப்ரம் ஹோம் அவ்வளவு சுலபமில்லை. இதுல போலியும் காலந்திருக்கு. நம்பி ஏமாந்தவங்களும் நிறையா. நீ வீட்டிலிருந்து சம்பாதிக்கணும்னு நினைக்கிறது தப்பில்லை சுஜி அதை உன் திறமையைக் கொண்டு செய்யணும். இவ்வளவு வருடமா இந்த வீட்டுல நீ ஓர்க் ஃப்ரம்  ஹோம் மேக்கரா இருக்கே..  உன்னை ஒரு நாள் கூட நான் பாராட்டியது இல்லைனு நினைக்கும் போது  தவறு என் மேல தான் தோணுச்சு சுஜி. நீ யாருக்கும் அடிமையில்லை நீ சுதந்திரமாய் இருக்கலாம். உனக்கு பிடிச்ச விஷயத்தை நீ செய்யலாம்.”.

இதை கேட்ட சுஜிதாவுக்கு கணவனின் அன்பான பேச்சும் அனுசரணையும் அவளுக்கு தெம்பை தந்தாலும் இவ்வளவு நாள் கணவனை புரிந்துக் கொள்ளாமல் வீம்பாய் நடந்துக் கொண்டதை நினைத்து வருத்தமடைந்தாள் சுஜிதா.

     

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.