மழை கொட்டோகொட்டென்று கொட்டி நம்மை அச்சத்திலாழ்த்தும் நேரமிது.
ஆனால் இந்த மேகங்களைப் பார்க்கும்போது என்னென்ன எண்ணங்களெல்லாம் ஒவ்வொருவருக்கும் உதித்தன என்று அசை போட்டதின் விளைவே இந்தக் கட்டுரை!
00000000000
என் கனவுகளின் வானில் மிதக்கும் மாலைநேரத்து மேகம் நீ;
என் அன்பின் தாபங்களால் உனக்கு வண்ணங்களும் வடிவங்களும் தருகிறேன்.
முடிவற்ற என் கனவுகளின் கருவான நீ எனக்கே சொந்தம், எனக்கே சொந்தம்- (தாகூர்- தோட்டக்காரன்:30)
You are the evening cloud floating in the sky of my dreams.
I paint you and fashion you ever with my love longings.
You are my own, my own, dweller in my endless dreams!
காதலனின் அன்புமொழிகளாக அமைந்த இது, தாகூரின் தோட்டக்காரன் எனும் கவிதைத் தொகுப்பிலுள்ளது. அன்புக் காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் இன்மொழிகளால் புனையப்பட்டது. படிக்கவும் ரசிக்கவும் ஏற்ற விரசமில்லாத அருமையான தொகுப்பு.
மேகங்கள் எவ்வாறு காதலர்களோடு சம்பந்தப்படுத்தப்பட்டன என்பது வியப்பைத்தான் தருகின்றது. இந்திய மொழிகளில்தான் மேகங்களைக் காதலர்களுடன் தொடர்பு படுத்திக் கவிதைகள் காலகாலங்களாக, ஸ்ம்ஸ்க்ருதம், தமிழ், வங்கமொழி எனப் பலவற்றுள்ளும் பாடப்பட்டுள்ளன போலும். நான் அறியாதது இன்னும் பல மொழிகளில் இருக்கலாம்.
‘மேகம் காதல் வேட்கையைத் தூண்டும் பொருள்களில் ஒன்றாகும். மழைக்காலத்தில் மேகத்தின் தொடர்பால் தாழம்பூ பூக்கும்; அதன் மணமும் காதலைத் தூண்டுவதாகும்,’ என்று காளிதாசனின் மேகசந்தேசத்துக்கு உரையெழுதிய ஆசிரியர் திரு. வேங்கடராகவாச்சாரியர் கூறுகிறார்.
மேகசந்தேசம் ஒரு அருமையான காதல்காவியம். மனைவியைப் பிரிந்து வாடும் யட்சன் ஒருவனின் கதையாக அமைந்து அருமையான பாடல்களைக் கொண்ட இணையற்ற காவியநூல். யட்சர்கள் மென்மை உள்ளம் கொண்ட தேவலோக மனிதர்கள். எங்கும் பிறர் கண்களுக்குப் படாமல் அலைந்து திரிபவர்கள். ஒரு யட்சன் ஏதோ ஒரு தவறுக்காக தன் அரசன் குபேரனால் ஓராண்டிற்கு நாடுகடத்தப்படுகிறான். தனது தெய்வத்தன்மையை இழந்து பூலோகத்திற்கு வந்து தன் இளம் மனைவியைப் பிரிந்து வாடுகிறான். இவ்வாறே ஏழெட்டு மாதங்கள் செல்கின்றன. மழைக்காலம் வருகிறது. மழைமேகங்கள் அடர்ந்து வானில் உலவுகின்றன. மேகங்கள் ஆகாயத்தில் பலவிதமான வடிவங்கள் கொண்டு தோன்றும். மழைக்காலக் கருமேகங்களை யட்சன் யானைபோன்று காண்கிறான். அவை யட்சனுடைய பிரிவுத்துயரையும் தாபத்தையும் மிகவும் அதிகரிக்கின்றன.
ராமகிரி எனும் மலையில் தங்கியுள்ள யட்சன் அந்த மேகத்தை தன் நண்பனாக்கிக் கொண்டு அதனைத் தன் காதல் மனையாளிடம் தூது விடுகின்றான்.
காளிதாசன் இதனை முகாந்தரமாகக் கொண்டு பாரத பூமியின் இயற்கை அழகை வருணிப்பது மிகவும் அழகானது. பாடல்கள் (ஸ்லோகங்கள்) உள்ளத்தை இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் ஆழ்த்தும். இளம் உள்ளங்களைக் காதல் நினைவுகளில் திளைத்து மயங்கச் செய்யும். முதியோர் உள்ளங்களை இளம் பருவத்து இனிய நினைவுகளில் ஆழ்த்திவிடும்.
சம்ஸ்க்ருதம் தெரியாவிட்டாலும் இதனைப் படித்து ரசித்து அனுபவிக்க திரு. சுப்ர. பாலன் அவர்கள் கல்கியில் தொடராக எழுதி, புத்தகமாக வெளிவந்துள்ள ‘தூது செல்லாயோ’ எனும் அற்புதமான நூலைப் படித்து அனுபவிக்க வேண்டும். படிக்கும்போது கேட்டு ரசிக்க உடன் ஒரு அழகான இசைத்தொகுப்பின் பதிவு. விஸ்வமோஹன் பட் இசையமைப்பில் ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திர ஸாதே ஆகியோரின் மயக்கும் குரல்களில் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்ட காளிதாசனின் ‘மேகதூதம்’ நூலின் ஸ்லோகங்கள். (யூ ட்யூபில் உள்ளது. கேட்டு மகிழலாம்). மேகங்களை முழுமையாக ரசிப்பதற்கு இதுவே எளிதான அருமையான வழி!
00000000000
சங்க இலக்கியங்களில் பொருளீட்டிவரப் பிரிந்து சென்றிக்கும் தலைவனின் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி மழைமேகங்களைக் கண்டு பிரிவால் வருந்தும் பாடல்களைக் காணலாம். அவற்றின் கவிதைச்சுவையில் உள்ளம் பறிகொடுக்கலாம்.
ஆனால் அதிகமாக யாரும் அறிந்திராத ‘மேகவிடுதூது’ எனும் பெயரில் ஒரு அழகான இலக்கியச்சுவை நிறைந்த நூலை அண்மையில் விரிவாகப் படிக்க நேர்ந்தது.
திருநறையூரிலே கோயில் கொண்டெழுந்தருளியுள்ள பெருமாள் நம்பியிடத்து மையல்கொண்ட ஒரு தலைவி, அவரிடத்தே தன்னுடைய ஆற்றாமையைத் தெரிவித்து அவரணிந்த திருத்துழாய்மாலையை வாங்கிவரும்படி மேகத்தைத் தூதுவிடும் செய்தியைப் பொருளாக்கி நயமுடையதாகப் பாடப்பட்டிருப்பதொரு கலிவெண் பாட்டு இந்நூல்.
வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே- வானத்து (10)
என்றெல்லாம் மேகத்தைப் போற்றுகிறாள் தலைவி. வானம் எனும் சொல் ஆகாயம், மேகம் எனும் பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல் பலவிதங்களில் மேகசந்தேசத்தின் போக்கிலேயே எழுதப்பட்டுள்ளது. (இதனை இயற்றிய கவிஞரான பிள்ளைப்பெருமாளையங்கார் காளிதாசனைக் கட்டாயம் படித்திருப்பார். அந்த நயத்தைத் தமிழில் குழைத்து வடித்திருக்கிறார் போலும்!)
“மேகமே, பின்பு அதிகப்படியான எனது கவலையால் உன்னைத் தூதாக திருநறையூர்ப் பெருமானிடம் அனுப்புகிறேன். மன்மதன் குளிர்ந்த மலர் அம்புகளை என்மீது எய்யாமல் இருக்க, வெண்மையான சங்கை உடைய சீதரனிடம் எனக்காக ஒரு சொல் சொல்லமாட்டாயோ? அவனிடமிருந்து ஒரு துழாய் மாலையையாவது எனக்குக் கொண்டுவந்து தர மாட்டாயோ? கேதகை எனும் தாழைக்குக் கணவனான நீ எனக்கு அப்பெருமானைக் கணவனாக்க மாட்டயோ?” என்றெல்லாம் மேகத்தைக் கேள்விக்கணைகளால் துளைக்கிறாள்.
விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பான்
மைம்முகிலே சந்தாக மாட்டாயோ-பெய்ம்மதவேள்
தண்ணப்பஞ் செய்வதெலாந் தாமோ தானடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ-வெண்ணத்தின்
சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய்கொணர்ந்தெ
னாதரவு தீர்த்தருள லாகாதோ- கேதகைக்கு
மின்கேள்வ னாக்கியநீ விண்ணோர் பெருமானை
யென்கேள்வ னாக்கினா லேராதோ
சொல் பொருள் இலக்கிய நயங்களில் சிறப்பான நூல் இது.
00000000000
நமது திரைப்படங்களிலும் காதலியோ காதலனோ மேகத்தைத் தூதாக அழைக்கும் பாடல்களைக் கவிஞர்கள் இயற்றி அவை மிகவும் பிரபலமாகியுள்ளன. “அன்பு மேகமே இங்கு ஓடிவா, எந்தன் துணையை அழைத்துவா,” “ஓடும் மேகங்களே, ஒருசொல் கேளீரோ,” ஆகியன அப்படிப்பட்ட சில பாடல்கள்.
00000000000
மேக் ராகம் என்பது ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரு அழகான ராகம்- மேகம் என்றே பொருள்படும். மேகத்தோடிணைந்து மழை பொழியும் ராகம் மேக் மல்ஹார்!
தான்ஸேனின் சங்கீதத்தின் பெருமையை உணர்த்தும் ஒரு சிறுகதை.
அக்பர் சக்ரவர்த்திக்கு தீபக் ராகத்தை முறைப்படி பாடினால் விளக்குகள் தானாகவே எரியும் என்பதனை நேரில் காண ஆசை. அதனால் அந்த ராகத்தைப்பாட தன் ஆஸ்தான இசைக் கலைஞனான தான்சேனைப் பணிக்கிறார். பாடுபவனையே அந்த ராகம் வெப்பத்தில் எரித்துவிடும் என்பதனை உணர்ந்திருந்த தான்ஸேன் முன்னேற்பாடாகத் தன் மகளுக்கு மேக்மல்ஹார் ராகத்தைப்பாடப் பயிற்சியளிக்கிறார். தீபக் ராகத்தினால் விளக்குகள் எரியத்தொடங்கியதுமே அவள் மேக்மல்ஹாரைப் பாட வேண்டும்; அவ்வாறே பாட, பெருமழை பெய்து தீபக் ராகத்தினால் எழுந்த வெப்பத்தைத் தணித்ததென்பது ஒரு சுவையான கதை.
தமிழிசையிலும் மேகராகக் குறிஞ்சி எனும் ராகம் உண்டு.
00000000000
மேகங்கள் வானில் உலாவந்ததொரு தருணத்தில் இயற்கையின் சக்திகளும், சக்திவாய்ந்த மந்திரச் சொற்களும் கூடி அமைந்ததொரு தெய்வீகக் கீர்த்தனை அற்புதமானதொரு இசைக்கலைஞரின் குரலில் கூடிப் பரிணமித்து என்னையொரு தெய்வீகச் சூழலில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு. திறந்தவெளி அரங்கில் ஒரு கச்சேரி. அதிகமான கூட்டத்தால் மிகவும் பின்புறத்தில் தரையில் ஒரு ஒலிபெருக்கியின் சமீபம் அமர்ந்திருந்தேன். மாலை மணி ஏழு. இன்னும் பகல் வெளிச்சம் முழுமையாக மறையவில்லை. வானில் அங்கங்கே மேகங்கள் பல வடிவங்கொண்டு மிதந்தன. “ஜம்பூபதே” எனும் தீக்ஷிதர் கீர்த்தனையைத் தொடங்கினார் பாடகர். அவர் தன் இசையிலாழ்ந்து பாடப்பாட கண்களில் ஆனந்தவெள்ளம் புறப்பட்டுப் பெருகிற்று. கண்களை மூடி அமர்ந்து கேட்டது போய், கண்கள் திறந்து வானில் கருமேகங்களுடன் சஞ்சரித்தன.
‘பர்வதராஜனின் மகள் உன்னை வழிபடுகிறாள்; பஞ்சபூதங்களாலும் ஆன பிரபஞ்சமாக நீ உள்ளாய்! அனைத்துயிர்களுக்கும் தயை புரியும் சம்பு நீ!’ என்றெல்லாம் திருவானைக்காவில் நாவல்மரத்தடியில் குடிகொண்ட ஜம்புகேசுவரரைப் போற்றும் பாடல்.
பர்வதஜா ப்ரார்த்திதாப்புலிங்க விபோ
பஞ்ச பூதமய ப்ரபஞ்ச ப்ரபோ
சர்வஜீவ தயாகர சம்போ
அனைத்துயிர்களுக்கும் தயைபுரியும் சம்புவே என உருகியுருகிப் பாடகர் இசைத்த வேளையில் பஞ்சபூதங்களும் காற்று, மழை, இடி, மின்னல், எனப் பொழிந்த இயற்கையின் அற்புதத்தை, இசையோடு இணைந்து அனுபவித்தது ஒரு அபூர்வ அனுபவம். ஈசனை, அவனிருப்பை உணர்ந்து பிரமித்த தருணம் அது.
ஓ மேகங்களே! எத்தனை அற்புதங்களை உள்ளடக்கிக் கொண்டு உலகை வலம் வருகின்றீர்கள் நீங்கள்!
உங்கள் பெருமையைச் சொல்ல என்னால் எப்படி முடியும்?
———————————