குவிகம் 100
நேற்று மாலை குவிகம்100, புத்தக அறிமுக நிகழ்வை கண்டு இரசித்தேன். அறிமுகப் படுத்த ஏதாவது இலக்கணம் உண்டா தெரியாது ஆனால் கவிதை, கட்டுரைகளை அறிமுகப் படுத்திய திரு. செந்தூரம் ஜெகதீஷ் அவர்களும், கதைகள் மற்றும் நாடகத்தை அறிமுகப்படுத்திய திருமதி. ரம்யா வாசுதேவன் அவர்களும் ‘அறிமுகப் படுத்தலின்’ இலக்கணத்தை நமக்கு அறிமுகப் படுத்தி அழகாக நிகழ்வை நகர்த்திச் சென்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.
ஆமாம்! இக்குழுமத்தில் புதிதாக இது யார் என்ற எண்ணம் ஒரிருவர் தவிற மற்றவர்களுக்கு தோன்றுவது நியாயம்தான்.
இக்குழுமத்திற்கு சற்றும் பொருந்தாதவன் நான். ஓரம் நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய என்னை இலக்கியவாதிகளும், படைப்பாளிகளும் உலவும் குவிகத்தின் நடுக் கூடத்திற்கு கை பிடித்து இழுத்து வந்து விட்டவர் நண்பர் சுந்தர்ராஜன்.
அகவை எழுபதில் இருக்கும் நான் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்னர் வரை கூட ‘ ஏடறியேன், எழுத்தறியேன் எழுத்து வகை நானறியேன்’ என்ற வைரமுத்துவின் வரிகளின் உதாராணமாகத்தான் வாழ்க்கையின் தேடலில் தொலைந்திருந்தேன். நாற்பது ஆண்டுகள் தேடலில் எழுத்துக்கள் கூட அதிகம் படிக்கவில்லை, ஆனால் வாழ்க்கையை அதிகம் படித்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் மனைவி மறைந்த பின்னர் அவளுக்கு நான் எழுதிய கடிதம்தான் என் முதல் எழுத்து.
பின் துயரத்தை மறக்க சுந்தர்ராஜன், முத்து சந்திரசேகரன் மற்றும் எனது சென்னை கிறித்துவ கல்லூரி நண்பர்கள் இனைந்த வாட்ஸ்அப் குழுவில் எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் ஊக்குவித்தார்கள். சுந்தரின் கைதட்டல் பலமாக இருந்தது.
கடந்த ஆண்டு என் கட்டுரைகளையும் கதைகளையும் ஒழுங்கு படுத்தி 280 பக்கங்கள் கொண்ட புத்தகமாக பதிப்பித்து என்னை மகிழ்வித்தது குவிகம்.
பத்தாயிரம் மைல் பயணித்தவனும் பல நூற்கள் கற்றவனுமே ஒரு முழுமனிதன் என சீனப் பழமொழி போல வாழ்வில் ஒரு புத்தகமாவது எழுதி தன் சந்ததிக்கு விட்டுச்செல்பவன் ஒரு முழு மனிதன் எனவும் படித்த ஞாபகம்.
என்னை முழுமனிதனாக்கிய பெருமை சுந்தர ராஜன்- கிருபானந்தன் இருவரையும் சேரும்.
இங்கு கிருபானந்தமன் அவற்களைப் பற்றி சற்று கூற வேண்டும். என் புத்தகம் வெளிவந்த நாட்களில் அவர் அமெரிக்காவில் இருந்தார். அங்கு இரவு இங்கு பகல். அங்கு பகல் பொழுதில் என் எழுத்தைப் படிப்பார், இங்கு பகல் பொழுதில் அதைப்பற்றி என்னிடம் உரையாடுவார்.
எப்பொழுது உறங்குவார் என கேட்க வில்லை. நான் அதிகம் சந்தித்ததில்லை. வீடியோவில் முகத்தை காட்ட மாட்டார். சுந்தர் அவரை ‘கிருபா’ என்று அழைத்ததால் அவரை முப்பது வயது இளைஞர் என்று எண்ண வைத்த சுறு சுறுப்பு. என் புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்தார். தலை வணங்குகிறேன்.
நண்பர் சுந்தரைப்பற்றி அதிகம் புகழ்ந்தால் ஐம்பது ஆண்டுகள் நட்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
ஒன்று சொல்லியே ஆக வேண்டும்.
என்னுள் ஒளிந்து இருந்த சிறு திறமையை ஊக்குவித்து, வெளி கொணர்ந்து புத்தகம் போட வைத்து, குவிகத்தில் ‘நடுப் பக்கம்’ என எனக்கு ஒரு பக்கம் ஒதுக்கி குவிகம் 100 ல் என் கதையையும் இடம் பெறச் செய்துள்ளார். அனைத்திற்கும் காரணம் புதிய எழுத்தாளர்களை உலகிற்கு அறிமுப்படுத்தும் உயர்ந்த நோக்கமே. இத்தொண்டு இலக்கிய அன்னையால் ஆசீர்வதிக்கப் பட்ட அவருக்கு பல சிறப்புகளை கொடுக்கட்டும்.
இடியோ, மழையோ, இல்லை சென்னையில் உள்ளாரோ அல்லது ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்றுள்ளாரோ குவிகம் இலக்கிய வாசல் வீடியோவில் அவரது சிரித்த முகம் தோன்றினால் அச்சமயம் ஞாயிறு மாலை மணி 6.30. இந்த அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்,
சுந்தர ராஜன்-கிருபானந்தன் – குவிகம் மூவரும் பல்லாண்டுகள் வளமுடன் வாழ வாழ்த்தும்-
(குவிகம்100 ல் ஒரு கதைக்கு சொந்தக்காரன்)