அபூர்வங்கள்-2- பானுமதி.ந

இதழ்: சித்திரக் கவிதை - 4

சென்ற இதழில் ‘ஸந்த’ என்ற சொல்லை வைத்து சந்தான ராமனைப் பாடிய தீக்ஷிதரைப் பார்த்தோம். இதில் கணக்கை வைத்து கண்ணனைத் துதித்த திருமங்கை ஆழ்வாரைப் பார்ப்போம்.

07/02/2022 அன்று இரத சப்தமி. சூரியனின் தேர் வடகிழக்காக நகரத் தொடங்கும் நாள். அன்று தேர் வடிவில் கோலம் போடுவார்கள். திருமங்கை ஆழ்வார் தேரைப் போலவே பாசுரம் பாடியுள்ள அபூர்வத்தைப் பார்க்கப் போகிறோம்.

சோழ தேசத்தில் திருக்குறையலூரில் பிறந்த இவர் சோழ மன்னனின் படைத்தளபதியாக இருந்து பல போர்களில் வெற்றி பெற்றவர். அதற்குப் பரிசாக திருமங்கை என்னும் குறு நிலத்திற்கு அரசனானார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இவர் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்று 137 பாடல்கள் பாடியுள்ளார்.

அவற்றில் திருவெழுகூற்றிருக்கை (ஏழு+ கூற்று+ அறிக்கை) என்பதைப் பற்றி நாம் இதில் பார்க்கப்போகிறோம். இது ரதபந்தம்- தேர் அமைப்பினை ஒத்த பா வடிவம். ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறி ஏறி இறங்கி இறுதியில் ஒன்றில் முடியும் வகையில் நாராயணனை இதில் பாடியுள்ளார்.

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில்   (5)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை   (10)
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்   (15)
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன்   (20)
அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி   (25)
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே   (30)
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்கச் செற்றனை
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய்   (35)
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த   (40)
கற்போர் புரிசைக் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே   (46)

இவ்வகைப் பாடல்கள் ஏழு அறைகளாகப் பிரிக்கப்பட்டு, கட்டங்கள் அமைத்து எண் ஒன்றிலிருந்து ஏழு வரை ஏறியும், இறங்கியும் சொற்களால் அமைக்கப்படும் சித்திரப் பாக்கள் அல்லது தேர் வடிவப் பாக்கள் என்று சொல்லப்படுகின்றன. பாடலில் இடம் பெற்றுள்ள எண்களும், பாடலின் பொருளும், அறிவு பூர்வமாகவும், தமிழ்ச் சுவையாலும் மேம்பட்ட அனுபவத்தைத் தருகின்றன.

பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் ஒற்றை உந்தியிலிருந்து பெரும் தாமரைப் பூ கிளைத்தெழுந்து பிரும்மன் உருவாகிறான்.

இரு சுடர்களான நிலவும், கதிரவனும் உதிக்க அஞ்சிய இலங்கையின் மூன்று மதில்களைக்  (கடல், மலை, வனம்) கடந்து இரு பக்கமும் வளையும் கோதண்டத்தால் அம்பினைச் செலுத்தி எதிரிகளை அழித்தான் இறைவன்.

நால் வகை நிலங்களை வேண்டி வாமனனாக வந்து மூவடியால் உலகம் அளந்தவன்.

நான்கு திசைகளும் நடுங்க, பெரிய திருவடியின் மீதேறி மும்மதம் கொண்ட இரு பெரும் செவியுடன் நின்ற ஒற்றை வேழமான கஜேந்திரனைக் காத்தவன்.

முத்தீ வளர்த்து, ஐந்து வகை வேள்விகளைச் செய்து, அனைவரின் நன்மைக்கென ஆறு வகை செயல்களைப் புரியும் வேள்வியரை இங்கே பாடுகிறார் ஆழ்வார்.

புற விஷயங்களில் ஐந்து புலன்களும் அலைபாய்வதை அடக்கி, மனது, புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கினையும் வசப்படுத்தி, சத்வம், ரஜஸ், தமோ (அமைதி, கோபம், சோம்பேறித்தனம்) ஆகிய மூன்றில், கோபத்தையும், சோம்பலையும் போக்கி, ஒரே ஒருவனான அவனை நினைப்பவர் உலக வாழ்வெனும் துக்கத்திலிருந்து மீள்கிறார்கள்.

மூன்று கண்களும், நான்கு தோள்களும் உடையவரும், ஐந்து நா கொண்ட பாம்பையும், கங்கை என்னும் ஆறையும் சிரசில் தரித்த உருத்திரனாக இருப்பவன் அவனே!

பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் நீலமணி போல், வராஹனாக சுமந்து காத்தருளிய கடவுளே!

அறு சுவைகளும் அவனே!

ஒளி பொருந்திய ஆயுதங்களை ஐந்து திருக்கரங்களிலும் ஏந்தும் எழில் கொண்டவனே!

அழகிய நான்கு தோள்கள் கொண்டவனே!

முந்நீர் வண்ணக் கடல் போலத் தோற்றம் காட்டுகிறாய்.

களங்கமில்லா ஒரு நிலவு; அது உன் இரு துணைவிகளான பெரிய பிராட்டியும், பூமித் தாயாரும். அவர்கள் பூவிலும் மென்மையான தமது இரு திருக்கரங்களால் முப்பொழுதும் உன் இரு திருவடிகளை வருட அறிதுயிலில் இருக்கிறான்.

நெறி முறைகள் மூன்று- சமூக, குல, நீதி ஆகியவைகள் வகுத்து நடத்துபவன்.

நால் வகை தொழில் தர்மம் சொன்னவன்.

ஐம்பெரும் சக்தியும் அவன் (நிலம், நீர், காற்று, விண், தீ)

ஆறு கால்களுடைய வண்டினம் தேன் குடித்து மயங்கும் மலர்களைச் சூடியுள்ள நப்பின்னையைக் கைபற்ற ஏழு எருதுகளை வென்றவனும் அவனல்லவா?

ஆறு சமயங்களும் அவனே. (ஸார்வாகம், பௌத்தம், சமணம், வைசேஷிகம், சாங்க்யம், பாசுபதம், நையாயிகம் என்று சொல்கிறார்கள் சிலர்; கணாதிபத்யம், கௌமாரம், சாக்தம், சைவம், வைணவம், சௌரம் என்றும் சொல்கிறார்கள் சிலர்.)

நறுமணம், அடர்த்தி, மென்மை, வசீகரம், சுருளான கேசம் என்ற ஐந்து சிறப்புகளுடைய குழலுடையவளான திருமகள், அவன் மார்பில் வசிக்கிறாள்.

அறம், பொருள், இன்பம், வீடு  என்ற நான்கையும் அருள்பவன் அவனே.

மும்மூர்த்தியாக, பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்ற வடிவில் இருக்கிறான்.

இருவகைப் பயனாகவும் இருக்கிறான். காரணக் காரியங்கள் அவன் மாயையால் காட்டப்படுகின்றன.

அனைத்தையும் அடக்கிய ஒன்று அவனே. ஒன்றே ஒன்றான பரமன் அவன்.

ஆழ்வார் பொன்னி நதியால் சிறப்புறும் இயற்கையைப் பாடி நிறைவு செய்கிறார். காவிரி பாய்ந்து, கழனி செழித்து, சோலைகள் மலர்ந்து, தேன் கனிகள் மிகுந்து, வானைத் தொடும் கொடிகள் மாளிகைகளின் மேலே பறக்கும் தென் திருக் குடந்தையில் அறிதுயிலும் பரமா, என் இன்னல்களைப் போக்காயோ என நமக்கும் சேர்த்து வேண்டுகிறார்.

இப்பாசுரம் மிகுந்த தத்துவ பொருளைக் கொண்டுள்ள ஒன்று. அதைப் பற்றி இதில் குறிப்பிடப்போவதில்லை. கணிதமும், தமிழும் இணையும் இறை அழகைக் கொண்டாடுவதுதான் நோக்கம்.

 

 

One response to “அபூர்வங்கள்-2- பானுமதி.ந

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.