ரொஜர் பெடரர் பற்றிய விவரங்கள் ஒரு செய்தித் தாளில் குறிப்பிட்டு இருந்தது. அதைப் படிக்கத் தொடங்கியதும் எனக்குப் பல வருடங்களுக்கு முன்னால் என்னுடன் ஆலோசித்த குருநாதன் நினைவுக்கு வந்தார். அவரது மனைவி வனஜாவும்!
குருநாதன் டென்னிஸ் விளையாட்டு வீரன் மட்டும் அல்ல. குறிப்பாக ரொஜர் பெடரரின் பரம விசிறி, அவன் ஆடிய ஒவ்வொரு ஆட்டத்தைப் பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். உங்களுக்கு இவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
தனியார் நிறுவனத்தில் டைரக்டரின் காரியதரிசியாகக் குருநாதன் இருந்தார். மிகச் சுறுசுறுப்பாக வேலை வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வேலையில் அவ்வளவு அக்கறை, விளைவாக ஓய்வு பெற்றும் கூட வேலையில் இருக்க வைத்தார் டைரக்டர்! அதே ஓட்டம்!
அவசரமாக அன்றைக்குக் குருநாதன் டைரக்டர் மீட்டிங்கில் இருக்கையில் அந்த இடத்திற்குச் சென்றார். டைரக்டர் அவரை ஆச்சரியமாகப் பார்த்து “ம் சொல்லுங்க குருநாதன்” என்றார். மிக அவசியம் ஏதேனும் இல்லாமல் குருநாதன் இவ்வாறு வரமாட்டார் எனத் தெரியும். குருநாதன் ஸ்தம்பித்து நின்றார். எதற்காக வந்தோம்? ஒன்றும் புரியவில்லை. மன்னிப்பு கேட்டுச் சென்று விட்டார். இது என்னவென்று டைரக்டர் வியப்பு அடைந்தார். நம்பிக்கையானவர் என்பதால் பரவாயில்லை என விட்டு விட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு பூஜை செய்து கொண்டு இருக்கையில் குருநாதன் வனஜாவை அழைத்து திப்பிலி கேட்டார். அவளுக்குப் புரியவில்லை. திரும்பத் திரும்ப குருநாதன் திப்பிலி தரச் சொன்னார். வனஜா கண் பிதுங்கி ஒன்றும் புரியாமல் அவரை பார்த்து இருந்தாள். குருநாதன் கோபித்துக் கொண்டு துளசி இலையை எடுத்து வந்தார். கையில் துளசியைப் பார்த்ததும் “ஓ துளசியா” என வனஜா சொன்னதும் எப்போதும் சொல்லாத பல வார்த்தைகளில் அவளைத் திட்டித் தீர்த்தார். வனஜா ஆடிப் போய்விட்டாள். “இப்படி இருந்ததே இல்லை. பாவம் வேலையில் என்ன தொந்தரவோ?” என நினைத்து விட்டு விட்டாள்.
குருநாதன் வேலை செய்து கொண்டு, கூடவே எப்போதும் போல டென்னிஸ் வீரர்களுக்குப் பயிற்சி தருவதையும் செய்து வந்தார். அவருடைய கனவே இங்குப் பயிற்சி பெறுபவர்களில் ஒருவராவது நாட்டுக்காக உலகளவில் விளையாட வேண்டும் என்பது தான். ரொஜர் பெடரரின் ஆட்டத்தை மையமாக வைத்தே பயிற்சி பெறுபவர்களின் ஆட்டத்தை மேம்படுத்துவார். என்றைக்காவது அவர் ஆடுவதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என ஒரு குட்டி ஆசை! காலம் வரும் எனச் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
இப்படிப் போய்க்கொண்டு இருக்க, வனஜா அலுத்துக் கொண்டாள், “இவரிடம் வேலை ஒன்று சொன்னால் முடிக்காமல் வந்து விடுகிறார்” என வெளிமாநிலத்தில் வசிக்கும் மகனிடம் சொன்னாள். அவனோ வயசு, வேலைப் பளு எனச் சொல்லி சமாதானம் செய்தான், ஆனால் அவளுக்கு மனதிற்குள் சங்கடமாக இருந்தது.
வனஜாவுக்குப் புதிராகவே இருந்தது. ஏனென்றால் பலமுறை இப்போதெல்லாம் வேலையிலிருந்து குருநாதன் கைப்பேசியில் அழைத்து “இதை அனுப்பு, அது இருக்கா பாரு?” என்று ஏதோ ஒரு சாமானை தான் விட்டு வைத்த ஃபைலை டிரைவரிடம் கொடுத்து அனுப்பி வைக்கச் சொல்வதுண்டு. அவளுக்கு இது புதிதாக இருந்தது. இதுவரை பொருட்களை வைத்துக் கொள்வது, பொறுப்புடன் எடுத்துச் செல்வதைப் பற்றி குடும்பத்தையே கேலி செய்திருக்கிறார். இவரா இப்படி இருக்கிறார் எனப் புதிதாக இருந்தது.
இதில் இன்னொன்றும் சேர்த்தி. குருநாதன் செய்தித் தாளைப் படித்துக் கொண்டே காப்பி அருந்துவது என்று பல வருடப் பழக்கம். சமீபத்தில், அன்றையச் செய்தித் தாளைக் காட்டி அது அன்றையது இல்லை எனச் சத்தம் போட்டார். வனஜா தேதியைப் பார்த்து அன்றையது தான் எனச் சொன்னதும், “நீயும் அந்த செய்தியில் உள்ளவர்கள் போல என்னை ஏமாற்றி விடாதே” என்றார் குருநாதன். முதலில் இவ்வாறு கேட்க வனஜாவுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டு விளக்கம் சொல்லப் போகக் குருநாதன் செய்தித் தாளை அவள் முகத்தில் விசிறி அடித்து, குளிக்கச் சென்றதைப் பார்த்து நடுநடுங்கிப் போனாள்.
மகனை அழைத்துச் சொன்னாள். அவன் “அப்பாவை நீ தான் கோபப் படுத்தி விட்டாய்” எனச் சொல்லித் தட்டிக் கழித்து விட்டான். பரிதாபம்.
குருநாதன் அவசரமாக ஃப்ரிட்ஜ் பக்கம் வந்து, “ஆங்… எதற்கு இங்கு வந்தேன்?” என்று யோசித்து, கதவை முறைத்த படி தடாலென அதை மூடுவார். அந்த நேரத்தில் ஏதாவது கேட்டால் சுள்ளென்று எரிந்து விழுவார்.
யார் இதைப்பற்றி எது சொன்னாலும் குருநாதன் பதிலுக்கு, “எனக்கு ஒன்றும் இல்லை. வனஜா தான் ஏதோ கற்பனை செய்கிறாள்” என்பார். தான் மறந்துவிட்டதாகக் குருநாதன் ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார்.
நாளாக நாளாக, வனஜாவுக்கு ஏதோ ஒரு புது மனிதன் போலக் குருநாதன் தோன்றினார். புதுசு புதுசாக அவருடைய நடத்தை, பழைய நடவடிக்கை மாறிக்கொண்டே இருந்தது. ஞாபகமும் தடுமாற்றமும் அதிகரித்தது.
குருநாதன் தினசரி வேலைகளான பல் துலக்குவது, ஷேவ் செய்து கொள்வது, குளிப்பது, சாப்பிடுவது, வேலைக்குப் போவது இவற்றைச் செய்து வருவதால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம். கடந்த இரண்டு வாரங்களாகக் குளித்து விட்டு வருகையில் சோப் வாசனை வருவதில்லை, கேட்டால் முறைத்து விட்டுப் போவது விசித்திரமாக இருந்தது. உடலிருந்து ஏதோ வாடை வருவதையும் பற்றி அவரிடம் கேட்டல் குருநாதன் அப்படி ஒன்றும் இல்லை என்று விட்டார். தினந்தோறும் செய்யும் ஷவரம் முழுமையாக இல்லை.
தட்டைச் சுற்றி வெளியில் சாப்பாடு விழுவதைக் கவனித்த வனஜா, முதலில் வேலை அவசரம் என உதறிவிட்டாள். ஆனால் நாளாக நாளாகக் காப்பி குடிக்கும் போதும் தளும்பி விழுவதைக் கவனித்தாள். ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.
வேறொரு புது நடத்தை குருநாதனிடம் பத்து நாட்களாகத் தோன்றியது. யார் அழைப்பு மணி அடித்தாலும், தனக்கு ஏதோ அபாயம் எனச் சொல்ல ஆரம்பித்தார். வேலையிலும் யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டு இருப்பதாகப் புகார் செய்தார்.
நரம்பியல் மருத்துவரிடம் அழைத்து வந்தாள். கொஞ்சமும் விருப்பம் இல்லாவிட்டாலும் குருநாதன் ஒப்புக்கொண்டு வந்ததே பெரிது என் வனஜா நினைத்துக் கொண்டாள். குருநாதன் அறைக்குள் வருவதைப் பார்த்ததுமே மருத்துவருக்குப் பிரச்சினையை யூகிக்க முடிந்தது. நரம்பியல் பரிசோதனைகள் முழுதாக செய்தபின் மூளை ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்தார்.
அத்துடன் குருநாதனின் மனநிலைப் பரிசோதனைக்காக என்னிடம் அனுப்பி வைத்தார். எங்கள் துறையில் இப்படி முழு விவரங்களுடன் வருவோருக்கு மென்ட்டல் ஸ்டேட்ஸ் எக்ஸாமினேஷன் என்று செய்வதுண்டு.
அதைத் தான் செய்யத் தொடங்கினேன். ஆரம்பத்தில் பதில்களை அளித்து வந்தார். யோசனை செய்து கணக்கு, பொது நிலவரம் எனக் கேள்வி கேட்க உணர்வுகள் களங்க ஆரம்பித்தது. குருநாதன் தன்னால் இந்த “அசட்டுத்தனமான” கேள்விகளுக்கு அதாவது அன்றைய நாள், தேதி, இருக்கும் இடம், விலாசம் என்றதக்கு பதில் தருவதைக் குழந்தைத் தனம் எனச் சொல்லித் தட்டி விட, பதட்டம் காட்ட ஆரம்பித்தார். மீதமுள்ளதை ஒரு நாள் இடைவெளி கொடுத்துப் பிறகு செய்து முடித்தேன். அப்போதும் அதே பதட்டம், பல தவறான பதில்கள்.
மனநிலைப் பரிசோதனை முழுவதும் முடிந்த பின், குடும்பம், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் இப்படிப்பட்ட வளங்களைப் பற்றியும் அவரிடமும், வனஜாவிடமும் கேட்டு அறிந்து கொண்டேன். இந்தக் கண்டுபிடிப்புகள் சிகிச்சை முறையை வடிவமைப்பதில் உதவும்.
குருநாதனின் பரிசோதனை விளைவுகளை டாக்டரிடம் காண்பித்து முக்கிய அம்சங்களை எடுத்துச் சொன்னேன்.. அதே நேரத்தில் வனஜா ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்து வந்திருந்தாள். எல்லாவற்றையும் வைத்து குருநாதனுக்கு ஏற்பட்டிருப்பது டிமென்ஷியா, அதில் ஆல்சைமர்ஸ் (Dementia Alzheimer’s) என்றமுடிவுக்கு வந்தோம். அதாவது மூளையின் உயிரணுக்களில் சேதமோ இழப்போ உண்டாகி, அதனால் மூளையில் சரியான இணைப்புகள் நேராததால் டிமென்ஷியா ஏற்படுகிறது, அதாவது மூளை செயல்பாட்டுக் கோளாறின் அடையாளங்களாக ஞாபக மறதி, தட்டுக்கிட்ட செயல்கள் என்றெல்லாம் தென்படுகின்றன.
மூளையின் எந்த பாகத்தில் டிமென்ஷியா நேர்கிறதோ அதன்படி நடத்தையில் குறைபாடுகள் நேரும். பிரதான ஆதரவாக வனஜா இருப்பதால் அவளிடம் அனைவற்றையும் விவரித்தோம். இந்த செய்தி கேட்டு அவள் அதிகம் பதட்டப் படவில்லை, மாறாக ஓரளவு ஆறுதல் கூட இருந்தது, குருநாதன் செய்கைகளுக்கு ஒரு வர்ணனை, பெயர் கிடைத்தது என்று!
அவளுடைய கேள்விகள், குழப்பங்களை ஸெஷன்களில் நாங்கள் தெளிவுபடுத்த, நிலைமையை ஓரளவு ஒப்புக் கொண்டு, சமாதானம் ஆக முயல முடிந்தது. இருந்தும் டிமென்ஷியாவைப் பற்றிய பல தகவல்களைத் தந்தேன்,.எளிதல்ல, இருந்தும் வேலைப் பளுவை ஒரு பக்கம் வைத்து இதையும் படித்துப் புரிந்து கொள்ள முயன்றாள். ஆமாம் வீராங்கனை மங்கம்மாவானாள் வனஜா!
குருநாதனிடம் பேசுகையில், தனக்கும் ஒர் சில நேரத்தில் தனக்கு ஏதோ ஆகிறதோ எனத் தோன்றுவதாகக் கூறினார். குருநாதனிடமும் எல்லாவற்றையும் விவரித்தோம்.
அவருடைய டைரக்டருடனும் சற்றுத் தனிமையில் சந்தித்துப் பேசினோம். குருநாதன் இவ்வளவு ஆண்டுகளாக அவ்வளவு நேர்மையான உழைப்பாளராக இருந்ததால், வேலையிலிருந்து முழுதும் நீக்காமல், தொடர்ந்து தன் காரியதரிசிக்கு உதவி அளிக்க அனுமதித்து ஏற்பாடுகள் செய்தார். அவரது இந்தச் செய்கை குருநாதனுக்கு உதவும், வேலையில் மூளையைச் செலுத்துவது அதன் செயல்பாட்டைச் சற்று பாதுகாக்கும் என்பது எங்கள் நோக்கம்.
கணவன் மனைவி இருவருடனும் கூடி, இருப்பதைப் பாதுகாக்க மேற்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பட்டியலிட்டோம். அதிலிருந்து குருநாதன் தினந்தோறும் இதுவரை செய்யாத ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என முடிவானது. செடிகளை வளர்ப்பது இவர்களுக்குப் பல நன்மைகள் தரும் என்ற ஆராய்ச்சியை விளக்கி, அதைத் துவங்கினோம். துளசிச் செடிகளைக் குருநாதன் தானாக வாங்கி வந்து, நட்டு, வளர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்தோம். முதலில் வனஜாவிற்கு இதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவள் எந்த உதவியும் தரக் கூடாது என்று கட்டாயமாகச் சொன்னேன்.. வனஜாவிற்கு நான் இருதயம் இல்லாதவள் என்றே தோன்றியது. குருநாதன் செய்யச் செய்ய, அவரிடம் கடுகளவு நல்ல மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்துச் சமாதானம் ஆனாள்.
சின்னச் செடி தந்த தைரியம் அடுத்ததாகக் குருநாதன் தன் பிரியமான ரொஜர் பெடரர் பற்றிய விவரங்களை வரைபடமாகச் செய்யத் தானாக முடிவெடுத்தார். இதை மிக ஆர்வத்துடன் செய்து வந்த குருநாதன் செயலை நாங்கள் அவனைவரும் வரவேற்க, அவர் மிகச் சந்தோஷம் அடைந்தார். இவற்றைப் பார்த்து வந்த வனஜா, ஒன்று புரிந்து கொண்டாள் – இவ்வாறு பிடித்தமான பயனுள்ள செயல்களில் ஈடுபடுவதில், ஏதோவொரு அளவிற்குக் குருநாதன் நலத்தைக் காக்கலாம் என்று!
இதுபோல மாதங்கள் போக, குருநாதனின் ஐயப்பாடுகள் அதிகரித்தது. பல சந்தேகங்கள். யாரோ தன்னைக் கவனித்து வருவதாக. ஜன்னலை, கதவை மூடிவிடுவதே புதியதோர் பழக்கம். வனஜா தெளிவுபடுத்தினாலும் ஏற்றுக் கொள்ள மறுத்த குருநாதன் கோபம் அடைந்து திட்டுவது அதிகரித்தது.
இதைத் தனியாகச் சமாளித்துப் பார்த்துக் கொள்வது வனஜாவுக்குக் கடினமாயிற்று. பிள்ளைகள் வர மறுத்துவிட்டார்கள். தவித்தாள். ஸெஷனில் இதை ஆராய்ந்தோம். வனஜா தவிப்பிற்கு ஈடு கொடுக்க,குடும்ப நண்பர்களுடன் குருநாதனின் நிலைமை என்னவென்று பகிரலாம் என்று நாங்கள் ஊக்கமூட்ட, அவள் அதைச் செய்தாள்.
இரட்டடிப்புப் பயன் கிடைத்தது. சொல்லச் சொல்ல, பல உரையாடல்கள். அவர்களுக்கு விளக்கம் அளிக்க, தன் மனதிலிருந்த பயம் விலகியது. வனஜா தனக்குத் தெரியாததை என்னுடனும், டாக்டரிடமும் பேசித் தெளிவு பெற்று அவர்களுக்குத் தெளிவு செய்தாள். பலரை இந்த டிமென்ஷியா பற்றிக் கற்பிக்க ஆரம்பித்தாள்.
இதைக் கேட்டவர்களுக்குப் புரிய வந்தது, வயதாகும் போது, எப்படிக் காது, கண்பார்வை இதில் பாதிப்பு ஏற்படக் கூடுமோ, அதேபோல் மூளையிலும் வயதின் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று. இது தனக்கும் நேரலாம், தனக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கும் நேரலாம். இதைப் பற்றி மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்தால், நிலைமையைச் சமாளிப்பது எப்படி, பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாப்பது எப்படி என்பதற்கு விடை கிடைக்கக் கூடும், அவதிப் படுவோருக்குப் பயன் தரும் என்று புரிந்து கொண்டார்கள். மாறாக, இப்படி ஞாபகத் தடுமாற்றம், தட்டுக்கிட்ட செயல்கள் நேரும் போது, பலர் “பாவம், வயதாகி விட்டது, சகஜம் தான்”, என்று விட்டு விடுகிறார்கள், அல்ல வெளியே சொல்லக் கூச்சப் பட்டு, மற்றவருக்குத் தெரியாமல் சமாளிக்கப் பார்க்கிறார்கள்.
அது தான் வனஜா செய்யவில்லை. டிமென்ஷியா என்று அறிந்ததும், அதை ஒளித்து, வேறு விவரிப்பதைத் தவிர்த்தாள். இதனால் பலர் உதவ முன் வந்தார்கள். இருவர் தாங்கள் நடைப்பயிற்சி செல்லும் போது குருநாதனைச் சேர்த்துக் கொண்டார்கள். இந்த கூட்டமைப்பின் பலம் வளர வளர, இவர்களையே மேற்பார்வையாளராக முன் எடுத்துச் செல்ல நாங்கள் வனஜாவை ஊக்குவித்தோம். இதுதானே வேண்டியது, அதுவும் நம்மைப் போன்ற சமூகத்தில், கலாச்சாரத்தில். நாம் எப்போதும் அக்கம் பக்கத்தில், தெரிந்தவர்களுக்குக் கை கொடுப்பவர்களாயிற்றே!!
குழந்தைகள் இருவர் ( துணைக் கதை) – மாலதி சுவாமிநாதன்
அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வாசலில் இளநீர் விற்றுக் கொண்டு இருப்பவன் நகைத்தான். பார்த்தால் அவன் எதிரே ஒரு ஆறு வயதுள்ள பையன் இளநீரை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தான். “ம்ம்ம்…” என்று சப்புக் கொட்டிக் கொண்டிருந்தான். சென்றவர்களின் கவனம் திரும்பின. இவனைப் பார்த்துப் பார்த்து வியாபாரம் சுறுசுறுப்பாகப் போனது. இளநீர் விற்பவன் குஷியானான்.
அருகில் பையனுடைய பெற்றோரும் இளநீரை ருசித்து அருந்திக் கொண்டிருந்தார்கள். அம்மா பையனின் தலையை வருடிக் கொடுத்தவாறே கேட்டாள், “நல்லா இருக்கு இல்ல?” பதிலுக்கு “உம்” என்றான்.
முடித்தவுடன் மூவரும் காய்களை பக்கத்திலிருந்த சாக்குப்பையில் போட்டார்கள். அம்மா இளநீர் விற்பவனிடம் திரும்பி “தேங்க்ஸ்” என்றாள். அவனும் கையை மார்பில் வைத்து தலையை ஆட்டினான்.
பையனைப் பார்த்து “அங்கிளுக்கு நன்றி சொல்லு” என்றாள். பையன் அவனைக் கண் ஓரமாகப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மா “சொல்லு” என்றாள். உடனே பையன் “சொன்னேன், அது பாஸ் பட்டனில் இருக்கு” எனச் சொல்லிக்கொண்டே பந்தை விசிறி போடுவது போல ஜாடை செய்து கொண்டே நடந்து சென்றான். அவர்கள் ஸ்கூட்டர் அருகில் போய் விட்டான்.
யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே மைதிலி கதவைத் திறந்தாள். “அடடே பட்டு! வா , வா, சுஜா வா” என்று தன் மருமகளையும் பேத்தியையும் உள்ளே அழைத்துக் கொண்டாள்.
இது மைதிலியின் ஓய்வு நேரம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததே. இருந்தும் சுஜாதாவும் மேகாவும் வந்திருந்தார்கள். மேகாவும் மைதிலியும் பாச மழை பொழிவார்கள். சுஜா இதைப் பார்த்து நெகிழ்வாள்! இன்றைக்கு அதை அனுபவித்தே ஆக வேண்டும் என மனதில் நினைக்க, வந்தாள்.
சுஜாவின் கணவன் அசோக் இதையெல்லாம் ரசிக்க மாட்டான். மைதிலியின் சுபாவமே புரியாதவன். அதனால் தான் இவர் இருவர் மட்டுமே. மைதிலி தன்னால் முடிந்தவரை உதவி செய்பவள். நகரத்தின் பல பேருக்கு உதவுவாள். அனாதை இல்லங்களில் கதை சொல்லி, பாட்டுப் பாடம் சொல்லித் தருவாள். எல்லோருக்கும் தெரிந்தது, இந்த மூன்று மணிநேரம் மைதிலியின் நேரம், தொந்தரவு செய்யக் கூடாது என்று. மேகா மட்டுமே வரலாம்.
இப்போதும் மைதிலி மேகாவை தூக்கிக் கொண்டதிலேயே பற்று தெரிந்தது. குழந்தை கை கால்களைச் சுத்தம் செய்து நேரே சமையலறைக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள். அப்போது தான் பாலை காய்ச்சி வைத்திருந்ததால் சட்டென்று எடுத்து வந்தாள். சுஜாவிடம் தனக்கும் அவளுக்கும் கலந்திருந்த காப்பியை எடுத்து வரச் சொன்னாள்.
சுஜா வந்தவுடன் கொஞ்சிக் கொண்டிருந்த மேகாவை இறக்கிய படி மைதிலி “பட்டு மேகா இனி ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் போகப் போறா” என்று சொல்லி சுஜாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
மேகா உடனே “இல்லை பாட்டி, நான் யூ கே ஜீ” என்றாள்.
சுஜா மேகாவைத் திருத்தி “யூ கே ஜீ முடிந்து விட்டது. அடுத்ததாக ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட்” என்றாள்.
மேகா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள், தலையை ஆட்டிக் கொண்டே “இல்லம்மா, நீ பார்த்தே இல்ல, என் யூ .கே . ஜீ மிஸ் என்னைக் கட்டிண்டு நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்னு அழுதுகொண்டே சொன்னாள். நான் யூ.கே.ஜீ தான் மா.”
Very nice. The important role if family and friends to help the patient to recover is well said. Nothing is impossible to achieve. Only dedication is required
LikeLiked by 1 person
Very nice madam. It is very difficult to understand mental illness. The importance of family and friends told is well said. Hope the purpose of the story that is to create awareness among people as well as handling such patients is achieved.
With regards Girija
LikeLiked by 1 person