உலக இதிகாசங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஹோமரின் இலியட் மற்றும் ஓடிஸி என்ற இரு கிரேக்க இதிகாசங்களைப்பற்றி விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம்.
கிரேக்கம் என்பது ஒரு தனி நாடு அல்ல. ஒரு கலாச்சாரம். கிரேக்கம் உலகின் மிகப் பழைமையான நாகரிகங்களில் ஒன்று. பல நகரங்களைக் கொண்டது கிரேக்க தேசம். கிட்டத்தட்ட நம் சேர சோழ பாண்டியர் போல. தற்போதைய கிரீஸ் நாடும் , சைப்ரஸ் பகுதியும் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் முக்கிய தேசமாக இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் பல மொழிகளைப் பேசினார்கள். பெரும்பாலும் அவர்களுக்கிடையே சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர். பொது எதிரி வந்தால் அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்வர். கிரேக்க நாகரிகத்தையும் சரித்திரத்தையும் பற்றி எழுதப் புறப்பட்டால் அது ஒரு பெரிய புத்தகம் அளவிற்கு நீண்டுவிடும். அதனால் கிரேக்க கலாச்சாரம், சரித்திரம், நாடு, நகரம் ,மொழி ஆகியவற்றை ஹோமரின் காவியங்கள் மூலமே நாம் காணப்போகிறோம்.
கிரேக்கர்களுக்கும் இலியட் என்கிற டிராய் நாட்டிற்கும் நடந்த பத்து ஆண்டுப் போரின் கடைசி ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்துப் பின்னப்பட்ட கதை இலியட் ஆகும்.
டிராய் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஓடிசியஸ் என்ற வீரன் தன் நாடான இதாகாவிற்குத் திரும்பும் வழியில் சந்தித்த இன்னல்களையும் அவற்றை அவன் எவ்வாறு தன் அறிவினாலும் வீரத்தாலும் வெற்றி கொள்கிறான் என்பதே ஓடிசி கதையின் மையக்கருத்து.
உண்மையில் இவை இரண்டும் ஹோமரால் படைக்கப்பெற்றவையா என்பது இன்னும் அறிஞர்களின் விவாதமாக இருந்து வருகிறது. இன்றைய துருக்கியிலுள்ள ஐயோனியாப் பகுதியிலிருந்து வந்தவர் ஹோமர் என்று கருதப்படுகிறது. இதில் வரும் நிகழ்வுகள் பல பிற்கால இதிகாசங்களுக்கும் ஏன் பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் கருப்பொருளாக அமைந்தன.
பிற்காலத்தில் சாதாரண இளவரசனாக இருந்த அலெக்ஸாண்டருக்கு அவனது குரு அரிஸ்டாடில் இலியட் கதையைக் கூறி அவனுக்கு வீரத்தையும் விவேகத்தையும் ஊட்டினார். அந்தக் கதையின் தாக்கத்தில்தான் அவன் உலகை வெல்லப் புறப்பட்டான்.
இரவு நேரங்களில் கிரேக்க மக்கள் கண்பார்வையற்ற கவிஞர் ஹோமரை ஓர் உயரமான இடத்தில் நிறுத்தி வைத்து, கதை கூறக் கேட்பார்கள். ஹோமர் தனது கற்பனை வளத்தையும் கவிதை நயத்தையும் கலந்து அம்மக்களுக்குக் கதையைப் பாடல் வடிவில் கூறுவார். அவற்றின் தொகுப்புதான் இலியட் மற்றும் ஓடிஸி என்று சொல்லப்படுகிறது.
ஹோமரின் காவியங்கள் வாய்மொழி இலக்கியங்களாக தலைமுறைகள் கடந்து வந்திருக்கும் என்று நம்புகின்றனர் . பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவை எழுத்து வடிவிற்கு வந்தன என்றும் சொல்லப்படுகிறது.
ஹோமரின் காலம் கி மு எட்டாம் நூறாண்டு என்று கணிக்கப்படுகிறது. டிரொஜன் போர் கி மு 12 அல்லது 13ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கும் என்று யூகிக்கப் படுகிறது.
இலியட் பல கிளைக்கதைகளைக் கொண்ட பெருங்கதை. நம் இராமாயணம் மகாபாரதம் போல அதுவும் பாடல் வடிவில் புனையப்பட்டது. 15693 வரிகள். கிரேக்க நாட்டின் அயோனிக் மொழியின் தாக்கம் நிறைந்த கலப்பு மொழியில் அமைந்திருக்கிறது. பிற்காலத்தில் அது 24 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
இலியட் கதையின் மையக் கருத்தைக் கேட்டால் நாம் மிகவும் ஆச்சரியம் அடைவோம்.
இதுதான் அது !
ஒரு மாவீரன். அவனுக்கு ஓர் அழகிய மனைவி . தூரதேச அரசன் ஒருவன் அவள் அழகில் மயங்கி அவளைத் தன் நாட்டுக்கு கடத்திச் செல்கிறான். மாவீரன் தன் நண்பர்கள் உதவியுடன் போரிட்டுத் தன் மனைவியை மீட்கிறான்.
இது நம் ராமாயணம் அல்லவா என்று நம் மக்கள் நினைக்கலாம். ஆனால் இதுதான் இலியட் ஓடிஸியின் கதையும் கூட.
ராமாயணத்தில் ராமரின் மனைவி சீதையை இலங்கை அரசன் இராவணன் கடத்திச் சென்றான். ராமர் அனுமார், சுக்ரீவன் உதவியுடன் இராவணனைக் கொன்று சீதையை மீட்டார்.
இலியட்டில், கிரேக்க மன்னன் மெனிலேயஸ். அவனுடைய மனைவி உலக மகா அழகி ஹெலன். ட்ரோஜன் நாட்டு இளவரசன் பாரீஸ் என்பவன் அவள் மீது மோகம் கொண்டு அவளைக் கவர்ந்து சென்று தனது நகர் இலியட் என்கிற டிராய் நகரக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டான். கிரேக்க வீரர்கள் போரிட்டு ஹெலனை மீட்கிறார்கள்.
எப்படி இரு காவியங்களுக்கும் இப்படி ஓர் ஒற்றுமை என்று எல்லோரையும் எண்ணவைக்கிறது அல்லவா?
அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. உலகத்தின் ஆதி மக்கள் மத்திய ஆசியாவில் இருந்தார்கள் என்றும் அங்கு நடைபெற்ற பேரழிவின் காரணமாக அங்கிருந்த மக்கள் உலகின் பல பாகங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலர் இந்தியாவிற்கும் சிலர் கிரீஸிற்கும் சிலர் ஜெர்மனிக்கும் சென்றனர் என்று கூறுவர். அவர்கள் புலம் பெயரும் முன் அங்கே வழக்கத்தில் இருந்த கதையை ஒவ்வொருவரும் தாங்கள் புலம் பெயர்ந்த நாட்டின் வழக்கத்திற்கு ஏற்ப சில மாறுதல்களுடன் இதிகாசம் படைத்தனர் என்று கருதுவாரும் உண்டு. ஜெர்மானிய ஹிட்லரும் தான் ஆரியன் இனத்தைச் சார்ந்தவன் என்று கூறியதாக வரலாறும் தெரிவிக்கிறது.
இந்த மாபெரும் காவியத்தை பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள் தமிழில் மிகவும் அருமையாக மொழி பெயர்த்திருக்கிறார். அவருடைய படைப்பை மூலப் புத்தகமாக வைத்து இலியட் கதையைச் சுருக்கமாகவும் இல்லாமல் மிக நீண்டதாகவும் இல்லாமல் கதையைக் கொண்டு செல்ல விரும்புகிறேன். கில்காமேஷ் கதைக்கு சந்தியா பதிப்பகத்தின் க நா சுவின் அவர்களின் புத்தகம் மூல நூலாக்கியது. இப்போது நாகூர் ரூமி அவர்களிடம் இதற்கு அனுமதி கேட்டபோது சந்தோஷமாகச் செய்யுங்கள் என்று வாழ்த்திய அவரது பெருந்தன்மைக்கு மனமார்ந்த நன்றி
அடுத்த இதழிலிருந்து இலியட் கதைக்குச் செல்வோம்.
( நாகூர் ரூமி அவர்களின் புத்தகத்தைப் பற்றிய ஒரு காணொளி இங்கே )