பத்தாம் நாள் காரியம் முடிஞ்சது.
நெருங்கிய சொந்தங்கள் எல்லோரும் ஒவ்வொருத்தாரா கிளம்பிட்டாங்க.
இப்போ அம்மாவும் கார்த்திக்கும் மட்டும்தான் வீட்டில்.
அப்பா இல்லாத வெறுமையை உணர ஆரம்பித்து விட்டார்கள் இருவரும்.
அவர் பணி ஓய்வு பெற்றதில் இருந்து, எப்போதும் வீட்டில் கூடவே இருந்தார்.
காலையில் எழுந்து சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வார்.
டிவியில் பிரார்த்தனை பாடல்களை அந்தந்த நாட்களுக்கு ஏற்ப போட்டு விடுவார்.
திங்கள் என்றால் ருத்ரம், சமகம், ரமேஷ் ஓஜா அவர்கள் வித்யாசமான குரலில் பாடும் சிவ மானசபூஜா, லிங்காசகடகம் போன்ற பாடலகள் ..
செவ்வாய் என்றால் கந்தசஷ்டி , வேல் மாரல் ..
புதன் முழுதும் கணபதி பாடல்கள்..
வியாழன் அன்று குரு, சாய் பாபா..
வெள்ளி- அம்மன் பாடல்கள்
சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் (தினமும் கூட உண்டு) ஹனுமான் சாலிஸா ..
ஞாயிறு அன்று ஆதித்ய ஹ்ருதயம்
என்று அவரது பட்டியல் வரிசை பிசகாமல் பாடல்கள் ஒலிக்கும்.
அப்புறம் அம்மாவின் சமையலுக்கு உதவி.
எல்லாம் முடித்து விட்டு அவரது லாப்டப்பில் உட்கார்ந்தால் அதற்கப்புறம் லேசில் எழுந்திருக்க மாட்டார்.
பலசமயம் கார்த்திக் அப்பாவை கடிந்து கொண்டு இருப்பான்.
” அப்பா.. எப்ப பார்த்தாலும் மொபைல், கம்ப்யூட்டர் அப்பிடின்னு இருக்கேளே .. வேற ஏதாவது பண்ணுங்களேன்.”
அந்த சமயத்தில், அம்மாவும் அடுப்பறையில் இருந்து வெளியே வந்து இவனோடு சேர்ந்து கும்மி அடிப்பாள் .
அப்பா முணுமுணுப்பார். ” எனக்கு பொழுது போக்குன்னு என்னடா இருக்கு? .. உன் அம்மாவுக்கு சமையல் கட்டு வேலை . உனக்கு ஆபீஸ் வேலை ..
முன்ன மாதிரி என்னால புத்தகம் எல்லாம் இப்ப படிக்க முடிலடா..
” அப்பா , நாங்க எல்லாம் உங்க நன்மைக்குதான் சொல்ரோம் .. மூணு வருஷம் முன்னாடி உங்களுக்கு பயங்கரமா கழுத்து வலி வந்து துடித்தது மறந்து போச்சா.. ? கழுத்துப் பட்டை போட்டுண்டு அஞ்சு மாசம் சுத்திண்டு இருந்தேளே .. எப்படியோ போங்கோ ” என்று சொல்லிவிட்டு போய் விடுவான்.
இப்போ அவருடைய லேப்டாப் கம்ப்யூட்டர் எல்லாம் கேட்பாரற்று கிடந்தது. கார்த்திக் கண்களில் கண்ணீர்.
அவர் திடீரென்று பிரிந்து விடுவார் என்று யாரும் எதிர் பார்க்கவே இல்லை.
எல்லா சடங்குகளும் முடிந்து , கொஞ்சம் கொஞ்சமாக வீடு யதார்த்த சூழ்நிலைக்கு வந்து கொண்டு இருந்தது.
அப்பா பேரில் என்னென்ன சொத்துக்கள் வைத்து இருந்தார் என்று இவர்களுக்கு அவர் சொன்னது இல்லை.
அவராக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
சொல்வதற்கான சந்தரப்பமும் அவருக்கு கிடைக்கவில்லை.
” அம்மா, அவருடைய பாங்க் டெபாசிட், ஷேர் , ம்யூச்சுவல் ஃபண்ட் எல்லாம் பெயர் மாத்தனும் . உன் கிட்ட இந்த விவரங்கள் எங்கே அப்பிடின்னு எப்போவாவது சொல்லி இருக்காரா?
நானும் எதுவும் கேட்டு வெச்சுக்கலையே .. “
” கார்த்திக், நாங்க அதைப் பத்தி எல்லாம் பேசிக்கவே இல்லைடா..
எல்லாம் அவரே பாத்துக்கட்டும்னு விட்டுட்டேன்.. வங்கிக் கணக்கு, எலக்ட்ரிசிட்டி பில் , வீட்டு வரி எல்லாமே அவர் கம்ப்யூட்டர் மூலம் பண்ணிடுவார்.
நீ ஆபீஸ் வேலையில் ரொம்ப பிஸியா இருக்கரதாலே உன் கிட்டேயும் அவர் சொன்னதில்லை.
வீட்டுப் பத்திரம் கூட அவர் எங்க வெச்சு இருக்காருன்னு தெரியாது. அவரும் எனக்கு இந்த ATM ல பணம் எடுக்கறது, ஆன் லைன்ல பில் பணம் கட்டரது எல்லாம் சொல்லித் தரல .. நானும் ஒதுங்கியே இருந்துட்டேன்…
பல வருஷங்களுக்கு முன்னாடி நானும் அவரும் வங்கிக்கு நேராகவே சென்று டெபாசிட் போடுவோம். அப்போது கிடைத்த டெபாசிட் ரசீது எல்லாம் மட்டும் எங்கே என்று எனக்கு தெரியும். அப்புறம் சில வருடங்களாக அவர் எல்லாமே ஆன்லைன் மூலமா தான் .. ரசீது இல்லை.”
கார்த்திக்குக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பல விவரங்கள் அவனுக்கு வீட்டில் தேடியதில் கிடைக்கவில்லை.
அன்றுதான் பல கோடிக்கான பணம் வாரிசுகளால் கோரப்படாமல் ஃபிக்ஸ்ட் டெபாசிட் என்று வங்கியிலும் ஷேர், ம்யூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்ட் என்று மற்ற இடங்களிலும் கேட்பாரின்றி பல வருடங்களாக முடங்கி இருப்பதாக அவனுக்கு ஒரு குறும் செய்தி வாட்சப்பில் வந்திருந்தது.
பாடுபட்டு சேர்த்த அப்பாவின் சொத்தும் அப்படி கேட்பாரின்றி வீணாக போய் விடுமோ என்ற கவலையில், இரவு முழுவதும் அம்மாவும் அவனும் இதைப்பற்றியே பேசிக் கொண்டு இருந்தனர்.
காலையில் எதற்கும் அப்பாவின் கம்ப்யூட்டர் திறந்து பார்க்கலாம் என்று உட்கார்ந்தான்.
நல்ல வேளை அது அவன் ஏற்கனவே உபயோகித்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் என்பதாலும், அதை அவர் பாஸ் வோர்ட் மாற்ற வில்லை என்பதாலும் அது வழி விட்டது.
கம்ப்யூட்டர் உள்ளே ‘கார்த்திக்’ என்ற ஒரு கோப்பகத்தில் சொத்து பற்றிய அத்தனை விவரங்களையும் ஒன்று விடாமல் ஒரு எக்சல் ஷீட் டில் போட்டு வைத்திருந்தார்.
வீட்டு வரி , மின்சார கட்டணம் செலுத்துவதற்கான முறைகள், அதற்கான கடவு சொற்கள் ( பாஸ் வோர்ட்) எப்போது எந்த இணய தளத்தில் போய் கட்ட வேண்டும், எந்தெந்த வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கிறார், எத்தனை ஷேர் , ம்யூச்சுவல் ஃபண்ட் எங்கு உள்ளது. அதன் கணக்கு எண்கள் போன்ற விவரங்கள் தெளிவாக இருந்தன. தனது பென்ஷன் விவரங்கள் , எப்படி அதை மனைவிக்கு மாற்றுவது என்ற விவரங்களும் ஒரு டாக்குமென்ட்டில் எழுதி இருந்தார்.
சிலவற்றின் ஒரிஜினல் சான்றிதழ்கள் வீட்டில் எந்த பையில் போட்டு வீட்டில் எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்றும் எழுதி இருந்தார்.
வீட்டுப் பத்திரம் எந்த வங்கியில் இருக்கிறது, அந்த லாக்கர் எண் அதன் சாவி எண் கூட எழுதி இருந்தார் ( வங்கியில் லாக்கர் எண்ணும் , சாவி எண்ணும் வேறு வேறாக இருக்கும்)
அதிசயம் என்னவென்றால், தர்ப்பணம் செய்ய கோத்திரம், மூன்று தலைமுறையினர் பெயர்கள் எல்லாம் கூட ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
கடைசி வரியில், ஒரு சிகப்பு டைரியை வீட்டில் எங்கே வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு ‘அம்மாவுக்கு அந்த தகவல் ‘ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
” அம்மா.. , அப்பா கம்ப்யூட்டர் ல சும்மா பேஸ்புக் யுட்யூப் தான் பார்த்துண்டு இருந்தாரோ அப்பிடின்னு நினைச்சேன்.. எவ்வளவு விஷயங்களை டாக்குமென்ட் செஞ்சி என்னோட வேலையை சுலபம் ஆக்கி இருக்காரு பாரு ..
இப்ப எல்லா சொத்துக்களையும் ஈஸியா க்ளைம் பண்ணலாம்.. எதுவும் வீணாகாது “
” கார்த்திக் எனக்கு கம்ப்யூட்டர் எல்லாம் பாக்கத் தெரியாதுன்னு இந்த டைரியிலேயும் சொத்துக்கள் பற்றிய எல்லா விவரங்களையும் எழுதி இருக்கார் டா.. அந்த கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் , இன்னும் பல பாஸ்வேர்ட் கூட குறிச்சி எங்கேயோ பத்திரமா வெச்சிருக்கார் . ஒரு நாள் இந்த டைரி பத்திக் கூட சொல்ல வந்தார் . நாந்தான் காதுல வாங்கிக்கவே இல்லை…”
என்று கண்ணில் கண்ணீரும், கையில் தேடி எடுத்த சிவப்பு டைரியுமாக அம்மா வந்தால்.
” சரிம்மா .. இனிமே நீ கூட இதெல்லாம் தெரி ஞ்சிக்கணும்.. இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம்.. சாயந்திரம் ATM ல பணம் எடுக்கப் போறேன். என கூட வாங்க..
நீங்களும் கூட இதை எல்லாம் சுலபமா பழகிக்கலாம். நான் வெளியூர் போனா கூட நீங்க இதெல்லாம் தனியா செய்யலாமே ..” என்றான்.
படத்தில் மாலைக்கு நடுவே அப்பா நிம்மதியாக புன்னகை செய்வது போல கார்த்திக் உணர்ந்தான்.
ஆஹா ஆஹா, நல்ல வேலை செய்திருக்கிறார்.
LikeLike