‘குமுதா ஏனிப்படி சோபாவில் உட்கார்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று எதிர் வீட்டு ஹேமா பரிவுடன் விசாரித்தாள் அதிசயமாக காலை எட்டு மணிக்கு அவசரமாகப் பறக்கும் குமுதா சோபாவில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து. ஆம், ஒன்பது மணிக்குள் கணவர், இரண்டு பிள்ளைகளை பள்ளி அனுப்பிவிட்டு தானும் ஒரு காட்டன் புடவையுடன் சிறிய ஒப்பனையுடன் ஆபீஸ் செல்பவள் இப்படி உட்கார்ந்திருந்தால் யாருக்குத்தான் அதிசயமாக இருக்காது! அது அபார்ட்மெண்ட் ஆகையால் எதிரும் புதிரும் உள்ள குமுதாவும் ஹேமாவும் நல்ல நண்பர்கள். ‘என்ன செய்வது ஹேமா வேலை செய்ய விடாமல் இப்படி சப்பாத்தி மாவு மாதிரி பிசைகிறது. இதோடு இரண்டு மூன்று முறை இப்படி ஆகி விட்டது. பெருங்காயம் போட்டு தண்ணீர் குடிப்பேன். சரியாகி விடும். ஆனால் இன்று அதற்கும் மசியவில்லை’ என்று ஹீன ஸ்வரத்தில் முனகினாள். ‘ஆமாம் சொன்னால் கேட்டால்தானே! எல்லா வேலையும் முடித்த பிறகுதான் சாப்பிடுகிறாய். கேஸ் நன்றாக பிடித்துக் கொண்டிருக்கும்’ என்று சொல்லிவிட்டு லிப்ட் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அதிசயமாக குமுதாவின் கணவர் மாதவன் வீட்டிற்கு வரவும் இவள் தன் வீட்டிற்குள் சென்று விட்டாள். மாதவன் தனியார் கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பதால் நேரத்திற்கு வீட்டிற்கு வர மாட்டார். சில சமயம் இரண்டு நாட்கள் கூட கம்பெனியிலேயே இருந்து விடுவார். எல்லா உள் வெளி வேலைகளும் குமுதா தலையில்தான். அதனாலேயே வேலைகளுக்கு நடுவில் அவள் தன் சாப்பாட்டைத் துறந்து விடுவாள். பிறகென்ன இந்த மாதிரி அவஸ்தைதான். ஆனால் இன்று மிகவும் துடித்து விடுகிறாள். அருகில் வந்து மாதவன் கவலையுடன் ஆனால் கோபமாகப் பார்த்தான். ‘என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய். எத்தனை தடவை இப்படி துடிக்கிறாய். வா டாக்டரிடம் சென்று ஒரு முழு செக் அப் செய்து விடலாம்’ என்று வாத்சல்யம், கோவம், அன்பு எல்லாம் ஒரு சேரக் கூறினார். ‘இல்லை நான் டாக்டரிடம் வர மாட்டேன். இப்ப குழந்தைகள் வர நேரம். அவர்களுக்கு சாப்பாடு போடணும், இன்று வேலைக்காரி வர மாட்டாள் அந்த வேலை வேற இருக்கிறது’ என்று சிறிது அலுப்புடனும், பொறுப்புடனும் கூறிக் கொண்டே வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். அதோடயே கேஸ் ஸ்டவ்வை துடைத்துக் கொண்டிருந்த போது வலி அதிகமாகவே டாக்டரிடம் செல்ல ஒத்துக் கொண்டாள். வேறு வழி!
டாக்டர் சந்திரசேகர் கிளினிக் ஒன்றும் தூரமில்லை. எதிர்ப்புறம்தான். கைராசிக்காரர். அங்கே இருக்கும் பலர் அவரிடம்தான் செல்வார்கள். சுற்று வட்ட ஜனங்களெல்லாம் செல்வதால் எப்போதும் கூட்டம் இருக்கும். குமுதாவிற்கு அதுதான் பிடிக்காது. சமயங்களில் இரண்டு மணி நேரம் கூட காத்திருக்க வேண்டி வரும். குமுதாவிடம் ஆபீஸ் விஷயம், அரசியல் எல்லாம் பேசுவார். அது இன்னமும் நேரம் எடுக்கும். ஆனால் டாக்டரிடம் சென்று விட்டு வந்தாலே பாதி வியாதி குணமாகி விடும். குமுதா கூட வேடிக்கையாக ‘டாக்டர் உங்கள் கிளினிக்குக்கு வந்தாலே சரியாகி விடுகிறது. உங்களைப் பார்க்க வேண்டியது கூட இல்லை. வாசலில் ஓர் உண்டியல் வைத்து விடுங்கள். திருப்பதி மாதிரி காணிக்கை செலுத்தி விடுகிறேன்’ என்பாள். ‘அதெப்படி ஆபீஸ் கதையெல்லாம் பிறகு யார் இவ்வளவு அழகாகச் சொல்லுவார்கள். எனக்கு அது வேண்டுமே’ என்று கேலி செய்வார். எப்படியோ கிளினிக் வந்தார்கள். நினைத்த மாதிரியே நல்ல கும்பல். காத்திருந்தார்கள். அவர்கள் முறை வந்தவுடன் நன்கு பரிசோதித்து விட்டு ‘இப்படி இரண்டு மூன்று முறை ஆயிற்று. ஆகையால் ஹாஸ்பிடலில் சேர்த்து அப்சர்வ் செய்கிறேன். நாளை வீட்டிற்கு போய் விடலாம் ஒன்றும் இல்லையென்றால்’ என்று ம்ருதுவாகச் சொன்னார். மாதவனும் ‘அதுதான் சரி இங்கேயே இரு. நான் போய் துணிமணிகள் எல்லாம் எடுத்து வருகிறேன்’ என்று கிளம்பி விட்டார்.
குமுதாவிற்கு ரூம் கொடுத்து விட்டார்கள். அவள் மெதுவே கட்டிலில் படுத்துக் கொண்டாள். மேலே மின்விசிறியைப் போல் அவள் நினைவும் வீட்டைச் சுற்றின. ‘இப்போது வலியும் குறைந்து விட்டது, பாவம் குழந்தைகள் (10, 8 வயசு). தானே போட்டு சாப்பிட கூடத் தெரியாது, தட்டெல்லாம் வேறு தேய்க்க வேண்டும், வீடும் குப்பையோடு இருக்கிறது, இவருக்கு காப்பி இல்லாவிட்டால் ஆகாது, டிகாஷன் போட செண்டும், யூனிபார்ம் அயர்ன் பண்ண வேண்டும், ஷூ பாலிஷ் போட வேண்டும் இத்யாதி’ என்று மனசு வட்டமிட ஆரம்பித்ததோ இல்லயோ வெளியில் வந்தாள். சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினாள். தன் துணிகளே எங்கு இருக்கிறது என்று தெரியாத மாதவன், எப்படியோ குமுதாவின் துணிகளை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் ரூமீல் பார்த்தான். பின் அங்குள்ள நர்ஸைக் கேட்டால், ‘அட்மிஷன் இன்னும் போடவில்லை, இதோ வருகிறேன்’ என்று இப்போதுதான் சொல்கிறாள். குழம்பிய மாதவன் வேறு வழி தோன்றாமல் வீட்டிற்கு வந்தால் அங்கு அவன் காண்பது என்ன! குமுதா பாத்திரத்திற்கு வலி ஏற்றிக் கொண்டிருக்கிறாள்!