ஒரு புலிக்கலைஞனின் திறமையை இந்த வார்த்தைகளில் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் அசோகமித்திரன்!
படிக்கும் போதே நமக்கு ஒரு உதறல் ஏற்படும்! அப்படி நம்மைத் தாக்கிய வரிகள்:
இதைப்படித்துவிட்டு முழுக்கதையையும் படியுங்கள்! இந்த வரிகளின் பெருமை இன்னும் அதிகமாகப் புலப்படும்!
”சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.”
”ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம் நிறையப் போகிறதே?”
”நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.”
அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.
”பேஷ்” என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்த வண்ணம் இருந்தோம்.
அவன் கைகளை ஒரு முறை உடம்பைத் தளர்த்திக் கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
”பேஷ்” என்று சர்மா மீண்டும் சொன்னார்.
அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.
அவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ”ஐயோ” என்றேன்.
அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ”ஓ” என்று கத்திவிட்டோம்.
அது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.
அவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.
”பத்திரம்பா, பத்திரம்பா” என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது.
அவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.
நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.
சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.
நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.
”நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா” என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான்.
”நீ எங்கேயிருக்கே?” என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப்பேட்டை என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக் கொண்டேன். அவன் தயங்கி, ”ஆனா, எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க” என்றான்.
”ஏன்?” என்று சர்மா கேட்டார்.
”இல்லீங்க….. என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.
”எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்” என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ”நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.