கட்டிலில் இருந்து எழுந்துகொண்டு கையைத் தேய்த்துக் கண்ணைக் கசக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்….
விடிந்து வெகு நேரமாகி விட்டதோ!!..விடியப் போகும் இந்த நாளைப் பற்றி நேற்று இரவெல்லாம் எனக்குள் பரபரப்பாக இருந்தது. அநேகமாகத் தூக்கம் வரவேயில்லை. விடிவதற்காக இரவை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
ஆறு மணிக்கே எழுந்துவிடவேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். இந்த ஆறு மணி நான் என்றோ பிறந்த சுப வேளை. இதே தேதியில் எழுபது வருஷங்களுக்கு முன்னால் பிறந்த அதே தேதி… அதே ஆறு மணி… மீண்டும் இன்று!! ..
தினந்தினம் வேகமாக இறந்து கொண்டிருக்கும் இந்த முதுமையில் என் இன்றைய பிறந்த நாள் பற்றி எனக்குள் ஏனோ ஒரு அர்த்தமில்லாத …அக்கறை….பரபரப்பு…..
ஏதோ அசட்டு ஆசையாகக்கூட…இருக்கலாம்.. எழுந்தவுடன் என்னை சூழ்ந்துகொண்டு என் மகன் மகள் பேரன் பேத்தி எல்லோரும் கூடி நின்று என்னைக் கொண்டாடித் தழுவி என்னை நமஸ்காரம் செய்து “”என்னை.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டீ “ என்று ஆசையுடன் மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளவேண்டும். சிரித்துச்சிரித்துப் பேச வேண்டும்……என்று ஒரு…ஏக்கம்….
இப்போது யாரும் என்னுடன் இல்லை. எதுவும் நேரவில்லை. கையைத் தேய்த்துக்கொண்டு தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறேன் எனக்கு நானே பேசிக் கொண்டு..
மங்கலாக எதிரே தெரிகிறது வெற்றுச்சுவர்.. யாரும் என்னிடம் இல்லை. யாரும் வரவில்லை. இந்த முக்கியமான நாளைப் பற்றி யாருக்கும் அக்கறையோ ஞாபகமோ இருக்குமோ இருக்காதோ!!.
எல்லோரும் எங்கோ தூரத்து மூலையில் ஒளிந்து கொண்டு நான் உயிரோடிருப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள். இல்லை இன்னும் உயிரோடிருக்கிறேனா என்று கவலையுடன் பார்க்கிறார்கள். பார்க்காமலும் இருக்கப் பழகிக்கொண்டு விட்டார்கள்
என் மகன்களும் உறவுகளும் எல்லோருமே உலகத்தில் கால தூரங்களுக்கு அப்பால் உள்ள வேறு தேசங்களில் எட்டாமல் இருந்து கொண்டு என் அந்திம நகர்வின் முடிவான நிறுத்தத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் மெள்ள எழுந்து அடுப்பில் வென்னிர் சுடவைத்து அதில் டீத் தூளைப் போட்டுக் கலக்கி இரண்டு வாய் குடித்தேன். நகர்ந்து கூடத்துக்கு வந்து அண்ணாந்து பார்த்தேன். சுவற்றில் மாட்டியிருந்த படங்களில் மகன் மகள் குடும்பங்களும் பேரன் பேத்திகளும் கூடி உட்கார்ந்து கொண்டு போட்டோக்காரனைப் பார்த்துஅச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்…
அவர்கள் கொஞ்சம் என்னைப் பார்த்தும் சிரிப்பதாக எண்ணிக் கொண்டு என்னை ஏமாற்றி மகிழ்ந்து கொண்டிருந்தேன். சிரித்துக் கொண்டேன்.. இருந்தாலும் துக்கம் தான் மிஞ்சியது.. யாரையாவது எந்த முகத்தையாவது ரூபத்தையாவது நேரில் பார்க்க முடியாத இந்த நிசப்தமும் தனிமையும் பாரமாக நெஞ்சை அழுத்தியது..
பீரோக் கதவில் மாட்டியிருந்த கண்ணாடி முன்னால் போய் நின்றேன். அங்கே அசைகின்ற ஒரே..முகம்… எனக்குத் தெரிந்த முகம்.. அது ஒன்று தான்…
Happy Birth Day too You ..” என்று கண்ணாடிக்குள் அந்த முகம் சொல்லிக் கொண்டிருந்தது … ஒரு பிம்பம் இன்னொரு பிம்பத்துக்க்கு வாழ்த்துக் கூறுகிறது.!!
தாழ்வாரத்து ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பின்கொல்லை வெளிச்சமாகத் தெரிந்தது.. ஆகாசம் பரந்து சிவந்திருந்தது… பசுமையான மரங்கள் பூக்களுடன் குலுங்கிக் கொண்டிருந்தது..
என் தனிமைக்கு சற்றும் ஒவ்வாத குதூகலமாக அந்த வெளிச்சமும் மரங்களும்!!
நான் வழக்கமாகக் காலையில் சாப்பிடும் அவல் பொரியைக் கிண்ணத்தில் போட்டுக்கொண்டு பின் கதவைத் திறந்துகொண்டு அங்கே போனேன். அங்கே இருந்த கல்மேடையில் உட்கார்ந்து கொண்டேன்.
காற்று மெதுவாக இதமாக . எனக்கானது போல்.. வீசியது. ஆறுதலாக என் மனசை ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.
மெள்ள மெள்ள இனிமையான மிருதுவான ஏற்ற இறக்க ஸ்தாயிகளில் மறைந்திருக்கும் பறவைகள் பல்வேறு தொனிகளில் என்னை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தன. ஏதோ என்னிடம் ஒட்டுறவுடன் பாசமுடன் செல்லமாக சீட்டியடித்து அழைப்பதைப் போல் ஒலித்தது.
வண்ண வண்ணமாக சீருடை அணிந்த என் பேரன் பேத்திகள் போல் குருவிகளும் கிளிகளும் மைனாக்களும் கிளைகளில் தோன்றித் தோன்றி மறைந்து எனக்கு வேடிக்கை காட்டி விளையாடிக் கொண்டிருந்தன.
நான் என் கையிலிருந்த அவல் பொரியைப் புல் வெளியில் ஆசையுடன் இறைத்தேன். பறவைகள் கூடிக்கூடி இறங்கி வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு பொரியை கொத்திக்கொத்தித் தின்று தலையாட்டிவிட்டு சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. இவைகளுக்கெல்லாம் இன்று ஏதோ கொண்டாட்டமாக இருப்பது போல் குதூகலிக்கின்றன. இது… எனக்காத்தானோ! அப்படித் தான் தோன்றியது.!
என் காலடியில் திடீரென்று பஞ்சுப் பூவைத் தடவியதுபோல் ஒரு மெது மெதுப்பு. குனிந்து பார்த்தேன். வெண்கல நிறத்தில் ஒரு குட்டிப் பூனை உடம்பை நெளித்து வாலை நீட்டி வளைத்து முறுக்கி உடல் சிலிர்த்து சிப்பிக்குள் முத்துப் போன்ற நீலக் கண்களை சுருக்கி என்னைப் பார்த்து “மியாவ்” என்றது. அண்ணார்ந்து பார்த்து… வாஞ்சையுடன்..
அதற்கு எப்படி என் பிறந்த நாள் ஞாபகத்துக்கு வந்தது?..
மனத்தில் சற்று முன் உழன்றுகொண்டிருந்த வெறுமை பனிபோல் சற்று கரைந்து போய்க்கொண்டிருந்தது. கையிலிருந்த அவல் பொரியை மேலும் வெளியெங்கும் இறைத்தேன்…
அப்போது அடுத்த வீட்டு சுவர் தாண்டி ஒரு சின்னப் பந்து எகிறி வந்து என் காலருகில் உருண்டு விழுந்தது… நான் சுவற்றைப்பார்த்தேன். “அந்தப் பந்து “” எனக்குத் தெரிந்த பந்து தான் .!!
“ பாட்டீ…பாட்டீ… அந்தப் பந்தை கொஞ்சம் தூக்கிப் போடுங்கோ பாட்டீ…” என்று கண்ணன் கத்தினான்…அடுத்த வீட்டுக் குழந்தைக்கு இதுதான் வழக்கமான… குறும்பு…
” நாம்ப விளையாடலாமா…பாட்டீ?..”
“ஏண்டா…கண்ணா… ஒங்கூட நான் எப்படீடா வெளையாட முடியும் கோந்தை…. எனக்கு வயசாயிடுத்து டா….”
என் பிறந்த நாள் ஞாபகம் எனக்கு மேலும் உறுத்தலாக வயதைக் கூட்டிக் காட்டியது. ..
“போ பாட்டி…பொய் சொல்லாதே! ஒனக்கு வயசாகல்லெ!! நீ இன்னிக்குத்தானே பொறந்தே! எனக்குத் தெரியுமே!..” பலமாக சுவற்றுக்குப் பின்னாலிருந்து சிரித்தான்… கண்ணன்
கண்ணனிடம் நான் என்றோ சொன்ன தகவல்..!!!!
குழந்தைகள் எதையும் மறப்பதில்லை. யாரையும் வெறுப்பதில்லை.
சுவற்றுக்குப் பின்னால் உள்ள கண்ணனைப் போல்தான் எல்லோரும் இருப்பார்களோ!! . யாரும் யாரையும் வெறுப்பதில்லை எதையும் மறப்பதில்லை. கண்ணுக்குத் தெரியாமல்.. இருந்தாலும்….
குறை என்னுடைய பிம்பத்தில்தானோ!!..
மறைப்பது என் மனச் சுவர்தானா??…………….