





கோமல் தியேட்டர் ஆரம்பவிழா அக்டோபர் 11ஆம் நாள் சிறப்புற நடைபெற்றது.
நடிகர் சத்யராஜ், திருப்பூர் கிருஷ்ணன் உரையாற்றினார்கள்.
எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் (லவ் பண்ணுங்க சார்), ஆர். சூடாமணி (பிம்பம்.), கல்கி (எஜமான விஸ்வாசம்), புதுமைப்பித்தன்( கட்டில் பேசுகிறது) மறம் தி.ஜானகிராமன் (விளையாட்டு பொம்மை) என்று ஐந்து புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் நாடகமாக மேடையேற்றப் பட்டன.
கல்கியின் வாரிசாக திருமதி சீதா ரவி, புதுமைப்பித்தனின் மகள் திருமதி. தினகரி மற்றும் சூடாமணிக்காக திருமதி பாரதி குத்துவிளக்கேற்றியது பலத்த கைதட்டல்களைப் பெற்றது. ஜெயகாந்தனின் புதல்வி தீபலக்ஷ்மி மற்றும் ஜானகிராமனின் புதல்வி உமா இருவரும் பங்கேற்க இயலவில்லை.
திருப்பூர் கிருஷ்ணன் ஐந்து எழுத்தாளர்ளைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கூறிவிட்டு, இந்த நாடகத்தைப் பார்க்கும் இளைஞர்கள் இவர்கள் கதைகளை விரும்பித் தேடிப் படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வாரிசுகளைக் கௌரவப்படுத்தியதைப் பாராட்டினார்.
நடிப்பிற்காக முதல் முதலில் சம்பளம் ரூபாய் பத்து கோமலிடமிருந்துதான் பெற்றேன் என்றார் நடிகர் சத்யராஜ். கோமலின் இயக்கத்தில் தொடங்கிய நடிப்பு, இன்று அவரது பேரன் ஆனந்த்சங்கர் இயக்கத்திலும் தொடர்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்
கோமல் தியேட்டர் உருவாக கடுமையாக உழைத்துள்ள திருமதி தாரிணி, நாடகத்திற்காக அரசாங்க வேலையையும் ஏற்காதவர் கோமல் என்று பதிவு செய்தார். தந்தையுடன் மகிழ்ச்சியுடன் கழித்த அந்த நாட்களையும் நினைவு கூர்ந்தார்.
இந்த நாடக அரங்கேற்றத்திற்கு உதவியவர்கள் பட்டியலில் குவிகம் அமைப்பையும் மேடையில் குறிப்பிட்டதற்கு குவிகத்தின் நன்றி.
சிறப்பு அம்சங்கள்
- அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்.
- பிரபலங்களின் கருத்துள்ள சிறுகதைகளை நாடகமாக்கும் முயற்சி.
- எல்லா இயக்குனர்களும் நடிகர்களும் மற்ற உதவியாளர்களும் செவ்வனே தங்கள் பணியினை நிறைவேற்றிய பாங்கு.
இந்த முயற்சியின் வெற்றி நாடக உலகில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று பின்னாட்களில் குறிப்பிடப்படும் என்று நம்பிக்கை உள்ளது