குவிகம் சிறுகதைப் போட்டி

இவற்றைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படும்.

பரிசு பெற்ற கதைகள் குவிகம் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும்.
அத்துடன் அவை குவிகம் மின்னிதழிலும் வெளியாகும்.

பரிசளிப்பு விழா ஜனவரி 2019 இல் நடைபெறும்.

நிபந்தனைகள்: 

கதை ஆசிரியரின் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும்.

பத்திரிகைகள், மின்னிதழ்கள், ஏனைய சமூக வலைத் தளங்களில் இந்தக் கதை வந்ததில்லை என்றும், போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை, வேறுஎந்தப் பத்திரிகைக்கும் அனுப்ப மாட்டேன் என்றும் கதைக்கான முழுப்பொறுப்பையும் படைப்பாளி என்ற முறையில் நானே ஏற்கிறேன் என்றும்,கதைப் பெயர் குறிப்பிட்டு, பொறுப்புக் கடிதம் ஒன்றையும் கூடவே அனுப்பவேண்டும்.

கதையை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் இணைப்பாக மட்டுமேஅனுப்பவேண்டும்.

A- 4 அளவில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பவேண்டும்.

கதை அனுப்புவோர் தங்கள் பெயர், விலாசம், மின்னஞ்சல்,  அலைபேசி எண் இவற்றைத் தவறாமல் குறிப்பிடவேண்டும்.

கதையுடன் கதாசிரியரின் சுய விவரங்களையும், புகைப் படத்தையும் அனுப்புதல் நலம்.

கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: நவம்பர் 15, 2018

கதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் magazinekuvikam@gmail.com


தலையங்கம் – சபரிமலை தீர்ப்பு

Related image

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு,  பெண்கள் – குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகம்  பல  ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – கடவுள்  எல்லோருக்கும் பொதுவானவர் என்ற வாதத்தை  முன்வைத்து உச்சநீதி மன்றத்தில் இளம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 2006இல் பொது நல  வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றத்தின் 5 நீதிபதிகள்  கொண்ட அரசியல் சாசன அமர்வு அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

அதேசமயம், இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதி ‘‘ஆழமான மத உணர்வுகளைக் கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுபூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல’’ எனக் கூறினார்.

நான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் சபரி மலை கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆனது.

இது தவறான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கிய கருத்து:

– மத விவகாரத்தில் அரசோ நீதிமன்றமோ தலையிடக்கூடாது.

– முஸ்லீம் போன்ற மற்ற மதங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா?

– கோவிலுக்கென்று விதிக்கப்பட்ட சில ஆகமங்கள் போற்றப்படவேண்டும்.

– ஜல்லிக்கட்டு தீர்ப்புபோல் இதுவும் மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.

–  பெண்களின் மாதவிடாய் நைஷ்டிக பிரம்மச்சாரி விரதத்திற்கு விரோதம்.

இது சரியான தீர்ப்பு என்று சொல்பவர்களின் முக்கியக் கருத்து:

– ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம்

– கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

– உலகில் உள்ள மற்ற  எல்லா ஐயப்பன் கோவில்களிலும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

– சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்ற தடைஉத்தரவு  1950 களில்தான்  பிறப்பிக்கப்பட்டது.

– சம்பிரதாயங்களும் வழக்கங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டும்

குணத்தைப் பார்த்து , குத்றத்தைப் பார்த்து அவற்றுள் எது அதிகம் என்று பார்த்தால்

…………தீர்ப்பு சரியே!

கோவிலுக்குச் செல்வதும் செல்லாததும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.

நான்காம் தடம் – அ. அன்பழகன்

சுந்தர் ராஜன் , நான் கடைசியாகப் படித்த புத்தகம்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அந்தப் புத்தகத்தில் உள்ள சில விஷயங்களை அப்படியே எழுதியுள்ளேன். சில விஷயங்களைச் சுருக்கி எழுதியுள்ளேன். அதோடு என்னுடைய கருத்துகளையும் கூறியுள்ளேன்.

சமீபத்தில் நான் படித்த புத்தகம் திரு.ஆனந்த குமார் அவர்கள் எழுதிய ‘நான்காம் தடம்’.

சமகால ‘தந்த்ர’ மார்க்கத்தின் உச்ச குரு என்று ஓஷோவால் போற்றப்பட்ட ரஷ்ய ஞானி குர்ட்ஜிப்பின் கதை.  போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்தில் ரஷ்யாவின் எல்லைப்புற நாடான அர்மேனியாவில் தச்சுத் தொழிலாளிக்கு மகனாகஃப் பிறந்தவர் குர்ட்ஜிப். அவர் தச்சுத் தொழிலாளி மட்டும் அல்ல;’எசொக்கு’ என்று அழைக்கப்படும் கவிஞர், பாடகர், கதைசொல்லி. எசொக்குகள் ஒன்றுகூடி வரலாற்றுக் காவியங்களைப் பாடி மகிழ்வது வழக்கம். அப்படிப்பட்ட கதைசொல்லிகளின் சங்கமத்திற்கு குர்ட்ஜிப்பையும் அழைத்துச்செல்வார். இளம் குர்ட்ஜிப் ஞானியாக மலர்வதற்கான விதை அங்கே போடப்படுகிறது.

குர்ட்ஜிப் துணிச்சல் மிக்கவனாகவும்,விழிப்புணர்வு மிக்கவனாகவும் வளரவேண்டும் என்பதற்காக தினசரி குர்ட்ஜிப்பின் படுக்கையில் பாம்பை விட்டு வைப்பாராம் அவனது தந்தை . இதனால் காலையில் எழும்போது மிகுந்த எச்சரிக்கையோடுதான் எழுவான்  குர்ட்ஜிப் .

தந்தையும் அவரது நண்பர் அருட்தந்தை போர்ஷ் என்பவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வார்கள். அப்போது குர்ட்ஜிப்பும் அவர்கள் உடன் இருப்பான். அவர்களின் ஆன்மிகம் சார்ந்த உரையாடல்களை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருப்பான் சிறுவன் குர்ட்ஜிப். அருட்தந்தை போர்ஷ் அவர்களின் உதவியோடு குர்ட்ஜிப் பள்ளிக்குச் செல்லாமலே வரலாறு, புவியியல், உடற்கூறு அறிவியல்,கணிதம், ரஷ்ய மொழி போன்றவற்றைக் கற்றுத் தேர்கிறான். சாதாரண கல்வி அறிவைத்தாண்டி தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை ஒன்று உண்டு என்று குர்ட்ஜிப்பின் உள்மனம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஆன்மிகத்தேடல் உடைய நண்பர்கள் பலரின் நட்பு அவனுடைய ஆன்மிக தேடலுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. குர்ட்ஜிப்பின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் அப்போது நடக்கிறது…….

ரியாஸோ என்ற ஒரு இளம்பெண் மீது குர்ட்ஜிப்புக்குக் காதல் ஏற்படுகிறது. அதே பெண்ணை கார்பெங்கோ என்ற நண்பனும் காதலிக்கிறான். பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு யோசனை சொல்கிறார்கள். அதாவது ஒரே பெண்ணைக் காதலிக்கும் இருவருக்கும் இடையே ஒரு போட்டி வைப்பது. போட்டியில் தோற்றவன் காதலில் விலகிக்கொள்ள வேண்டும். நிபந்தனைக்கு ஒப்புக்கொள்கிறார்கள். போட்டி என்றால் சாதாரண போட்டி இல்லை. உயிரைப் பணயம் வைக்கும் அபாயகரமான போட்டி. அருகிலேயே ஒரு ராணுவ தளம் இருக்கிறது. அங்கே ராணுவ வீரர்கள் பீரங்கி சுடும் பயிற்சியை மேற்கொள்வார்கள். தினசரி காலை முதல் மாலைவரை இந்தப் பயிற்சி நடக்கும். வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. நண்பர்கள் திட்டப்படி ராணுவ வீரர்கள் வருவதற்கு முன்பாகவே அவர்களுக்குத் தெரியாமல் குர்ட்ஜிப்பும், கார்பெங்கோவும் ராணுவ தளத்திற்குள் நுழைந்து விட வேண்டும். அங்கே குண்டுகள் பாய்ந்து தாக்கும் இலக்குகளுக்குக் கீழே பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருக்கும். இருவரும் ராணுவ வீரர்களுக்குத் தெரியாமல் பதுங்கு குழிகளில் பதுங்கி இருக்கவேண்டும். வீரர்கள் பயிற்சி முடித்துவிட்டுச் செல்லும்வரை குழிக்குள்ளேயே ஒளிந்திருக்கவேண்டும். பாய்ந்து வரும் குண்டுகளால் உயிர் போகவும் வாய்ப்பு உண்டு. இருவரில் யார் காயமின்றி வருகிறாரோ அவரே போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதிகாலையிலேயே ராணுவ வீரர்களுக்குத் தெரியாமல் குர்ட்ஜிப்பும்,கார்பெங்கோவும் உள்ளே நுழைந்து பதுங்கு குழிகளுக்குள் பதுங்கிக்கொள்கிறார்கள். பாய்ந்து வரும் குண்டுகளுக்கு மத்தியில் குர்ட்ஜிப் நாள் முழுவதும் பதுங்கி இருக்கிறான்.முதன் முறையாக மரணபயத்தைச் சந்திக்கிறான். நாள் முழுவதும் பாய்ந்து வரும் பீரங்கி குண்டுகளுக்கு மத்தியில் மரணபயத்தோடு பதுங்கி இருந்தது குர்ட்ஜிப் மனதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. ராணுவ வீரர்கள் பயிற்சி முடிந்து சென்ற பின்னாலும் குழிக்குள் பதுங்கியே இருக்கிறான். ‘ராணுவ வீரர்கள் சென்று விட்டார்கள். வெளியே வாருங்கள்’ என்று நண்பர்களின் குரல் கேட்டு குர்ட்ஜிப் மெதுவாக வெளியே வருகிறான். கார்பெங்கோவைக் காணவில்லை. காலில் குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடக்கிறான். நண்பர்கள் அனைவரும் அவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். போட்டியில் வெற்றி பெற்றாலும் குர்ட்ஜிப்பின் மனம் காதலில் லயிக்கவில்லை. மரணபயம் அவரது மனதை வேறொரு தளத்தில் இயங்கச்செய்கிறது. பதுங்கு குழியில் குர்ட்ஜிப்புக்கு ஏற்பட்ட மரணபயம் மாறாத உண்மையை கண்டுணர வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்துகிறது. மனித வாழ்வின் அடிநாதமாக இருக்கும் அந்த மாறாத உண்மையைக் கண்டறியும் பயணத்தைத் தொடங்குகிறார் குர்ட்ஜிப். ஆன்மிக நாட்டம்கொண்ட நண்பர்கள் பலர் அவரது பயணத்தில் துணையாக வருகிறார்கள்.

ரமண மகரிஷி அவர்கள் வாழ்விலும் ஞான மலர்வுக்குக் காரணமாக இருந்தது மரணபயம்தான். ரமணமகரிஷியோ திருவண்ணாமலையில் ஐக்கியமாகி விடுகிறார்.

ஆனால் குர்ட்ஜிப் ஞானத்தைத் தேடி உலகமெங்கும் பயணிக்கிறான். துருக்கி, கிரேக்கம், ஜார்ஜியா,இராக்,எகிப்து, ஆப்கானிஸ்தான், என்று பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறான். காடு,மலை, பள்ளத்தாக்கு என்று அலைகிறான்.

Image result for gurdjieff

( மீதி அடுத்த இதழில்)

கண்ணம்மா – தில்லை வேந்தன்

கண்ணம்மா !

Related image

கார்த்திகை நிலவோ, கவிதையின் அளவோ

     காதலின் விளைவோ கண்ணம்மா

ஈர்த்திடும் பண்ணோ,என்னிரு கண்ணோ

     ஈடிலாப் பொன்னோ கண்ணம்மா.

ஆர்த்திடும் அலையோ, அசைந்திடும் சிலையோ

     ஆசையின் வலையோ கண்ணம்மா

பூத்திடும் அரும்போ, பொங்கலின் கரும்போ

     புன்னகைக் குறும்போ கண்ணம்மா.

காலையின் பனியோ, கற்பகக்  கனியோ

     கற்பினுக்கு அணியோ கண்ணம்மா.

வேலையின் முத்தோ, மென்மலர்க் கொத்தோ

      மேன்மையின்  வித்தோ கண்ணம்மா

மாலையின் காற்றோ, மையலின் ஊற்றோ,

       மஞ்சளின் நாற்றோ கண்ணம்மா.

சோலையின் வனப்போ, சுவைதரும் இனிப்போ

     சொற்றமிழ்ச் சிறப்போ கண்ணம்மா.

                              ( வேலை — கடல் )

தீங்கனிச் சாறோ, செய்தநற் பேறோ,

     சிரித்திடும் சீரோ கண்ணம்மா.

ஈங்கொரு திருவோ, எழிலதன் உருவோ,

     இலக்கியக் கருவோ கண்ணம்மா.

பாங்குறும்  ஒளியோ, பாற்கடல் துளியோ,

       பைந்தமிழ்க் கிளியோ கண்ணம்மா.

ஓங்கிய பண்போ, உள்நிறை அன்போ,

     உண்டெவர் உன்போல் கண்ணம்மா.

சரித்திரம் பேசுகிறது – யாரோ

  

குப்தசாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களைக் கூறி இரண்டு மதிப்பெண் பெற்றோமல்லவா?
இன்னொரு காரணம் கூறினால் இன்னுமொரு மதிப்பெண் பெறலாம்.
பதில்: யசோதர்மன்.
இது என்ன புதுக்கதை?
சரித்திரம் சொல்வதையே நாம் பேசுவோம்..

குப்த மன்னர்கள் – பூர குப்தன், நரசிம்ம குப்தன், புத்த குப்தன், பாலாதித்யன், இறுதியில் பானு குப்தன்.
இவர்கள் காலத்தில் ஹூணர்கள் இந்தியாவில் படையெடுத்துப் பெரும் வெற்றியும் பெற்றனர்.
இதனால் மட்டுமல்ல – மாளவத்தின் மன்னன் யசோதர்மன் எழுச்சியும் – குப்தர்களின் முடிவுக்கு ஒரு காரணம்.

ஆக.. இந்த யசோதர்மன் யார்?

குமாரகுப்தன் காலத்தில் மாளவத்தை ஆண்டு, கப்பம் கட்டி வந்த மாளவ மன்னன் பந்துவர்மன். இவன் ஔலிகர ராஜ்யப் பரம்பரையைச் சேர்ந்தவன். அந்தப் பரம்பரையில் கி பி 500ம் ஆண்டு பிரகாஷ தர்மனுக்குப் பிறந்தவன் யசோதர்மன்!
யசோதர்மன், ‘விக்ரமாதித்யன்’ என்ற பட்டம் (அந்த கால ‘பாரத ரத்னா’) சூட்டிக்கொண்டான்..
சந்திர பஞ்சாங்கம் ஒன்று ‘விக்ரம் சம்வாத்’ என்ற பெயரில் தொடங்கினான்.
கஜிராகோவில் விஷ்ணு கோவில் கட்டினான்.
இரண்டாம் காளிதாசன் எனப்படும் மகாகவி, யசோதர்மன் அரசவையை அலங்கரித்தான்.
யசோதர்மன் ஆட்சி வடக்கே இமயத்திலிருந்து தெற்கே திருவிதாங்கூர் வரை இருந்தது.
வேறு என்னதான் செய்தான்?
எப்படி நமது ‘சரித்திரம் பேசுகிறது’ அத்தியாயமாக?
மேலே படிப்போம்.
வருடம்: கி பி 532:

ராமன் கதையென்றால் ராவணனின் மகத்துவம்பற்றி அறியவேண்டும்.
ராவணன் சிறந்த சிவபக்தன்….ராக்ஷசன்.
அதுபோல் மிஹிரகுலன் சிறந்த சிவபக்தன்….ராக்ஷசர்களுக்குக் குறைந்தவன் அல்லன்.
மிஹிரகுலன் ஹூணர் தலைவன் தோரமானாவின் மகன்.

(தோரமானா)
தோரமானா, பஞ்சாப் தேசத்தில் ஹூண சாம்ராஜ்யத்தை உருவாக்கி, குப்தர்களுடன் போரிட்டான். கி பி 510 ல் தோரமானா பானுகுப்தனைத் தோற்கடித்தான். மகதத்தை வெல்லும் ஆசையில் படையெடுத்துஅச் சென்ற தோரமானா வாரணாசியில் இறந்தான்.

(ஏரான் பன்றி – தோரமானா கல்வெட்டுகள்)

அவனுக்குப் பின்பு, அவன் மகன் மிஹிரகுலன் ஆட்சிக்கு வந்தான்.
மிஹிரகுலன் 530 வரை ஹூண அரசனாக இருந்தான்.
சகலா நகரை (இன்றைய சியால்கோட்) தலைநகராகக்கொண்டு ஆண்டான்.
பாரதத்தின் பல பகுதிகளை (காந்தாரம், காஷ்மீர்) கைப்பற்றினான். வெற்றிக்குமேல் வெற்றி அவனிடம் வந்து குவிந்தது.

(MIHIRAKULA- By Classical Numismatic Group, Inc. http://www.cngcoins.com, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=61258049)

புத்த சமயப் புத்தகங்கள் சொல்வது:
மிஹிரகுலன் குற்றம் இழைத்தான்!
கொடுமைகள் பல செய்தான்.
பௌத்த தலங்களை அழித்தான்.
பெளத்த விஹாரங்களைக் கொளுத்தினான்.
புத்த துறவிகளைக் கொன்று குவித்தான்.
1600 பௌத்த விஹாரங்களை, ஸ்தூபங்களை மற்றும் ஆசிரமங்களைதித் தரைமட்டமாக்கினான்.
காந்தாரத்திலிருந்து (இன்றைய ஆப்கானிஸ்தான்) பல்லாயிரம் பிராமணர்களை அழைத்து, காஷ்மீரில் குடியமர்த்தினான்.
மிஹிரகுலன் ஒரு சிறந்த சிவபக்தன்..காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் மிஹிரேஸ்வரர் ஆலயத்தை  கட்டினான். மேலும், மிஹிரகுலனின் நாணயங்களின் பின்னால் ரிஷபச் சின்னமும் திரிசூலமும்,”ஜயது வ்ருஷப” (ரிஷபமே வெல்லும்) ,”ஜயது வ்ருஷத்வஜ” என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

ஒரு காட்சி சரித்திரத்தைப் புரட்டி எடுத்தது:
இடம்: மாளவ நாட்டு தலை நகரம் – அரண்மனை.
வருடம்: கி பி 528
மன்னன் யசோதர்மன் ஒரு மாவீரன்.
27 வயது இளைஞன்.
வீரன் மட்டுமல்ல …
மாபெரும் படைத்தலைவன்..
தனது வீரப் பிரதாபங்களைக் காட்டித் தனது படைகளை ஊக்குவித்து வெற்றிகண்ட மன்னர்கள் சரித்திரத்தில் பல உண்டு.
யசோதர்மன் அந்த ஜாதி!
இளம் வயதிலே மன்னன் ஆனான்.
ராக்ஷச குணம் கொண்ட ஹூணர்களின் அரிப்பு அவன் நெஞ்சை வாட்டியது.
மந்திரிமார்களுடன் மந்திராலோசனை செய்தான்.
யசோதர்மன்:
“அமைச்சர்களே! நாம் இன்று சரித்திரத்தின் விளிம்பில் இருக்கிறோம்.
இந்தியாவை இந்த புல்லுருவிகளிடமிருந்து காப்பது நமது ஒவ்வொருவரது கடமையாகும்.
மாபெரும் குமாரகுப்தனும், ஸ்கந்தகுப்தனும் – இதை முழுமையாக செய்யவில்லை.
அந்த மாமன்னர்கள் காந்தாரத்தைவிட்டு வெகு தொலைவில் இருந்தது – ஒரு காரணம்.
மேலும் அவ்வளவு தொலைவில் இருந்து படைகளை நடத்தியது அவர்கள் நிதி நிலைமையையும் சீரழித்தது.
நம் நாடு ஹூணர்களின் ராஜ்யத்திற்கு அருகில் உள்ளது.
குப்த மன்னன் நரசிங்ககுப்தன் இன்று ஒரு சிறு குறுநில மன்னன் போல ஆகிவிட்டான்.
நாம் தான் ஏதாவது முடிவு செய்ய வேண்டும்..
அதுவும் இன்றே!”
சபையில் பயங்கர மௌனம்..
மிஹிரகுலனைத் தாக்குவதா?
அனைவரது முகமும் திக்பிரமையில் ஆழ்ந்திருந்தது.
யசோதர்மன் சிரித்தான்.
“மந்திரிகளே! யசோதர்மன் என்றொரு மன்னன் இருந்தான்.. இறந்தான் என்பதை விட ..
யசோதர்மன் என்றொரு மன்னன் இருந்தான்… ஹூணர்கள் எனும் வியாதியை இந்தியாவிலிருந்து ‘அடியோடு ஒழித்தான் … என்ற பெயர் சரித்திரத்தில் வரவேண்டும்…
அல்லது..
அந்த முயற்சியில் இறந்தான் என்ற பெயர் வரவேண்டும்”
சபையினர் மெய்சிலிர்த்தனர்.
மன்னன் தொடர்ந்தான்:
“அந்த வெற்றியை மாபெரும் தூண் ஒன்று நிறுவி அதில் பொறிக்கச் செய்வேன்… இது சத்தியம்”
சபை அமைதி இழந்தது..
ஆரவாரம் அடைந்தது..
யசோதர்மன்:
“இந்த வெற்றிக்காக நான் இன்னொரு முயற்சி செய்துள்ளேன்.. நரசிங்ககுப்தனை நான் சந்தித்திருக்கிறேன். குப்தா நாடு இன்று சிறியதாக இருந்தாலும் அவனது மனம் பெரியது…திடமானது.. ஸ்கந்தகுப்தன் தொடங்கியதை முடிவுக்குக் கொண்டுவர அவன் துடித்ததை நான் கண்கூட பார்த்திருக்கிறேன். அவன் தாய் மகாராணி இந்த விஷயத்தில் பெரும் உறுதியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பியிருக்கிறேன்”
ஆஹா… ஆஹா … என்று ஆரவாரம் சபையில் அலை மோதியது..
சில காரியங்கள் நடக்கவேண்டும் என்றால் .. அதற்குத் தேவையான அனைத்தும் தானே சேர்ந்து வரும்…
அதுவும் அன்றே நிகழ்ந்தது!
மந்திராலோசனை கதவு மெல்லத் திறந்தது..
படைத்தலைவன் ஒருவன் உள்ளே நுழைந்து மன்னனின் காதில் ஏதோ சொன்னான்…
மன்னன் முகம் மலர்ந்தது..
“மந்திரிகளே … என் ஓலைக்கிணங்கி …குப்த மகாராணியும்… குப்த சேனாதிபதியும் வந்திருக்கிறார்கள்…வீரனே… உடனே அவர்களை அழைத்து வா”.
இருவரையும் ராஜ மரியாதையுடன் வரவேற்று ஆசனத்தில் அமரவைத்தான்.
மகாராணி:
“யசோதர்மா ! உனது வீரத்தையும் துடிப்பையும் நான் நன்கு அறிவேன்… சரித்திரத்தில் முக்கியக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.. நாம் – குமாரகுப்த சக்கரவர்த்தி மற்றும் ஸ்கந்தகுப்த சக்கரவர்த்தி போல பெரும் சக்தி கொண்டவர்கள் அல்ல. இருந்தாலும் நாம் இணைந்து செயல் பட்டால் ஹூணர்களை இந்தியாவிலிருந்து ஒரேயடியாகத் துரத்த முடியும்…”

யசோதர்மன் :
‘மகாராணி! எங்கள் எண்ணமும் அதுவே… தங்கள் சேனாபதியுடன் சேர்ந்து நாங்கள் திட்டமிடுவோம்…சரித்திரத்தில் ஹூணர்கள் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது.”

திட்டமிட்டபடி.. குப்தர் படை கிழக்கிலிருந்து மிஹிரகுலனின் படையைத் தாக்கியது.
அதே நேரம் யசோதர்மனின் படை தெற்கிலிருந்து தாக்குதல் தொடங்கியது.
இந்த கிடுக்கிப்பிடியில் ஹூணர்கள் சிக்கி சின்னாபின்னமாகினர்.
யசோதர்மன் வாள் ஹூணர்களை கொன்று குவித்தது.
ஈசல் கூட்டத்தை நெருப்பு அழிப்பது போல ஹூணர்கள் மாண்டனர்
மிஹிரகுலன் ராக்ஷசன் போல் போராடினான்.
ராம-ராவண யுத்தம்போல தோற்றமளித்தது.
முடிவில் .. மிஹிரகுலன் – யசோதர்மன் தாக்குதலில் பெருங்காயமுற்று வீழ்ந்தான்.

(யசோதர்மன் – மிஹிரகுலன் சண்டைக் காட்சி)

யசோதர்மன் மிஹிரகுலனைஅச் சிறைப்பிடித்தான்.
ஹூண சைன்னியம் ஒழிந்தது…
எஞ்சியது காஷ்மீர் பகுதிக்கு ஓடி ஒளிந்தது…
மாண்டசோர் சிறையில் மிஹிரகுலன் அடைக்கப்பட்டான்.
மாதம் ஒன்று சென்றது.
அரண்மனையில் யசோதர்மன், நரசிங்ககுப்தன், அவன் தாய் மகாராணி பெரும் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
கொண்டாட்டம்!
கும்பலே கொண்டாட்டம்!
யசோதர்மன் மிஹிரகுலனை சிறையிலிருந்து கொண்டு வந்து அரண்மனையில் நிறுத்தியிருந்தான்.
கைகள், கால்கள் கட்டப்பட்டுத்- தூணில் கட்டப்பட்டிருந்தன.
உடலெங்கும் காயங்கள்.
தவறு.
காயங்களில் உடல் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அவ்வளவு காயங்கள்.
யசோதர்மன் அவனிருக்கும் இடத்தை நெருங்கினான்.
அவன் பெரும் தலையில் தனது சக்தி கொண்ட கை வைத்து அழுத்தினான்.
அவன் தலை குனிந்தது.
யாருக்கும் தலை குனியாத அந்த ராக்ஷஸத் தலை குனிந்திருந்தது.

யசோதர்மன்:
“சபையோரே, குப்தமன்னரே, மகாராணி அவர்களே!
நமது வெற்றியை இன்று தூண் ஒன்றில் பறைசாற்றிக் கல்வெட்டாகக் குறிக்கிறேன்.”

யசோதர்மனின் ஒரு கல்வெட்டு இவ்வாறு குறிப்பிடுகிறது :
“ஸ்தானுவைத் (சிவபிரான்) தவிர,வேறு எவர் முன்பும் தலை வணங்காத மிஹிரகுலன்..இன்று யசோதர்மன் முன் அவன் தலை சாய்கிறது” .

(யசோதர்மனின் மாண்டசோர் கல்வெட்டு)

(யசோதர்மனின் மாண்டசோர் கல்வெட்டு)

யசோதர்மன் :
“வெற்றியைக் கொண்டாடும் இந்நாளிலே…
இந்தக் கொடியவனுக்குத் தகுந்த தண்டனை தர விழைகிறேன்.
என்ன தண்டனை வழங்கலாம்”
‘மரணம்… மரணம்… ‘ – என்று சபையோர் முழங்கினர்.
யசோதர்மன்:
‘ உத்தமம். இந்தகிக் கொடியவன் மிஹிரகுலனை சிரச்சேதம் செய்ய ஆணையிடுகிறேன்!”
சபையில் ‘ஆஹா.. ஓஹோ ‘ என்று கோஷம் பொங்கியது.
மகாராணி முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை.
சோகம்தான் இருந்தது.
எழுந்தாள்.
“யசோதர்மா! நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மிஹிரகுலன் போரில் மாண்டிருந்தால் அது சரி. இன்று அவன் காயப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய் … செத்த பிணத்தைப்போல இருக்கிறான். இவனை சிரச்சேதம் செய்வது கீழான படுகொலை. இதை செய்வது நமக்குத் தகுமா?
நாம் ஹூணர்களல்ல.. நமது கலாசாரம் இந்தக் கொலையை அனுமதிக்காது”
அவள் குரல் பணிவாகவும் அதே சமயம் திட்டவட்டமாகவும் இருந்தது.

யசோதர்மன்: “மகாராணி… உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்… மிஹிரகுலன் இரண்டு மாதம் சிறையில் இருந்து உடல் சற்று நலமானதும்… காஷ்மீருக்கு அப்பால் நாடு கடத்துகிறேன்”

சில மாதங்கள் கழித்து மிஹிரகுலனை யசோதர்மன் விடுதலை செய்தான்.
மிஹிரகுலன் காஷ்மீரத்தின் மன்னனைக் கொலைசெய்து அரியணையைக் கவர்ந்து – காந்தாரத்தைத் தாக்க முற்பட்டான்.
ஒருசில மாதங்களிலே அவன் தனது காயங்கள் காரணமாகவே காலமானான்.
அத்துடன் ஹூணர்கள் இந்திய சரித்திரத்திலிருந்து மறைந்தனர்.

ஒரு சில வருடங்களில் யசோதர்மன் தனது நாற்பது வயதில் காலமானான்…
மாளவ அரசும் மெல்ல அழிந்தது…
நரசிங்ககுப்தனுக்குப்பிறகு…பானுகுப்தா, குமாரகுப்தா III , விஷ்ணுகுப்தா … என்று பத்து வருடங்கள் கடந்தது. அந்த அரசர்கள் ஆண்டபின் …
குப்த ராஜ்யமும் அழிந்தது…
பொற்காலம்… போர்க்காலமாயிற்று…

‘சரித்திரம் படித்து என்ன பிரோயஜனம்’ – என்று பலர் நினைப்பதுண்டு.
அரசியலாளர்கள் சரித்திரத்திலிருந்து படிக்கவேண்டிய பாடங்கள் பல உண்டு.
இந்த ‘யசோதர்மன்’ சரித்திரத்தில் அறியப்படவேண்டிய பாடம் என்ன?
குமாரகுப்தன், ஸ்கந்தகுப்தன் சாதிக்க முடியாததை யசோதர்மன் எப்படிச் சாதித்தான்?
கூட்டு முயற்சி இருந்தால் எந்த எதிரியையும் வெல்லலாம்.
இந்திய மன்னர்கள் ஒற்றுமையாக இருந்தால் வெளிநாட்டு எதிரிகள் ஒன்றும் செய்யமுடியாது..
அந்த ஒற்றுமை இல்லாததால் – சரித்திரத்தின் பாடத்தை மறந்ததால்– பின்னாளில் வெளிநாட்டு அரசுகள் இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்தனர்.

இனி என்ன நடந்தது… காலம் பதில் சொல்லும்… சரித்திரம் பேசும்…காத்திருப்போம்…

நன்றி:
https://www.jatland.com/home/Yasodharman
https://en.wikipedia.org/wiki/Eran_boar_inscription_of_Toramana
https://kalvisolai.files.wordpress.com/2012/12/tet-paper-2-history-7th-kc.pdf
http://www.ensyklopedia.com/purugupta-of-gupta-dynasty-step-brother-and-successor-of-skandgupta-467-ad-473-ad/
https://en.wikipedia.org/wiki/Yashodharman

பாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்

Related image

பாரதியிடம் சில கேள்விகள்.

பதில்கள் பாரதியின் வரிகளில் இருந்து.

வணக்கம் பாரதியாரே, உமது தொழில்?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்

உமது ஜாதி?

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(அடடா, என்ன பரந்த மனப்பான்மை!)

உமக்குப் பிடித்த நூல்?

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே

உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை

(உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை!)

நீர் ஒரு தீர்க்கதரிசி. நாடு விடுதலை பெறும் முன்னரே நீர் சுதந்திரப் பள்ளு பாடினீர். இனி நடக்கப் போவதை உம்மால் சொல்ல முடியுமா?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

(பலே.. பலே!)

மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டும் என்று தேவியிடம் வேண்டினீர், கிடைத்தது. எங்களுக்கும் அந்த தந்திரத்தைக் கற்றுத்தரக் கூடாதா?

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

(அட, இதுதான் ரகசியமா?)

சரி, நாளைக்கு உமக்கு பிரதமர் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்?

இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்

(அப்பாடா, இன்னும் உம் பேச்சில் புரட்சிக் கனல் பறக்கிறதே!)

இந்தியா வல்லரசு நாடாகுமா?

எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

(கேட்கவே இனிக்கிறதே! உம் வாயில் ஒரு மூட்டை சர்க்கரை போட வேண்டும்!!)

இன்றைய இளைஞருக்கு உமது அறிவுரை?

உடலினை உறுதி செய்,
பணத்தினைப் பெருக்கு,
வையத் தலைமை கொள்

(அம்மாடி, ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும்!)

கற்காமல் அறியக்கூடிய கலை ஏதேனும் உண்டா?

சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை.

(அருமை, அருமை!)

நீர் இறைவனிடம் வேண்டுவது என்னவோ?

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்

சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
நமக்கு ஒரு தீங்கு வரலாகாது பாப்பா

இந்தியருக்கு நீவீர் கூற விரும்புவது?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

உமது கவிதை பற்றி உமது மதிப்பீடு?

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை

அதுவே எங்கள் மதிப்பீடும்.

அனுமனுக்கு மயிர்க்கால் தோறும் ராம நாமம் ஒலிக்குமாம், உமக்கு?

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(அடடா, கேட்கவே மயிர்க் கூச்சிடுகிறதே!)

கடைசியாக ஒரு கேள்வி. இப்போது எல்லா சாமியார்களும் காயத்ரி மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். இதை நீர் முன்னமே தமிழில் சொன்னதாக எனக்கு நினைவு?

செங் கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

நன்றி! உமது தேமதுரத் தமிழோசை என்றும் எங்கள் காதில் ஒலிக்கும்.


எனது நெடுங்கால நண்பர் கவிஞர் தீபப்ரகாசன் எழுதிய கறபனைக் கட்டுரை
வைதீஸ்வரன்

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

முதல் பகுதி: 

ஸந்த்யாவின் தாய்  விஷ்வகர்மா கொடுத்த அந்த மருந்தின் தன்மை புரியாமல் அதை ஸந்த்யாவிற்குப் புகட்டப் போகும் அந்தத் தருணத்தில் ராகு தேவன் சுய உரு எடுத்து அவள் கரத்தைத் தடுத்து நிறுத்தினான்.

காவலர் யாருமில்லாத அந்தத் தனி அறையில் திடீரென்று ஒரு மூன்றாவது மனிதன் வந்ததுமில்லாமல் தன்  கையைத் தடுக்கிறானே என்ற பயமும் கோபமும் எழுந்தது விஷ்வகர்மாவின் தர்மபத்னிக்கு.   படுத்துக் கொண்டிருந்த ஸந்த்யாவும் எழுந்து உட்கார்ந்தாள். ஆனால் அவளுக்குப் பயம் ஏதும் இல்லை.   பாம்பைப்போல் நீல நிறத்தில் இருக்கும் இவனுக்கு இங்கு வருவதற்கு என்ன துணிச்சல் என்ற கோபம் மட்டும் எழுந்தது. ஆனால் அவன்  மண்டியிட்டு முகத்தைக் கீழே சாய்த்துக் கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அமைதியாக இருக்கும் தோரணையைப் பார்த்தால் அவன் தீங்கு எதுவம் செய்ய வந்தவன்போல் தோன்றவில்லை; மாறாக அவர்களிடம் ஏதோ சொல்ல வந்தவனைப்போலத் தெரிந்தது.

ஸந்த்யா குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு “யார் நீ? இந்த அறைக்கு வந்தவன் யாராக இருந்தாலும் அவன் சிரம் கொய்யப்படும் என்பது உனக்குத் தெரியுமா?” என்று சீறினாள்.

” முதலில் நீங்கள் இருவரும் என்னை மன்னிக்கவேண்டும் . ஏற்கனவே சிரம் கொய்யப்பட்டுத் தவிக்கும் என்னை சிவபெருமான் தான் வரம் அளித்து வாழவைத்தார். நான் உங்கள் இருவருக்கும் நன்மையைச் செய்யவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள்”

“முதலில் நீ யார்,  எதற்கு இங்கு வந்தாய் என்பதைச் சொல்! அதற்குப் பின் நாங்கள்  முடிவு செய்கிறோம்  உன்னை எப்படித் தண்டிப்பது  என்று” . அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் ஸந்த்யா.

“தேவி! தாயே! நான் ராகுதேவன், சூரியதேவனின் எதிரி, இப்போது வந்திருப்பது விஷ்வகர்மாவின் பேராசையைத் தடுக்க”

“என்ன துணிச்சல்  எங்கள் முன் இதைச் சொல்ல?” என்று கூறி அறையின் சுவற்றில் மாட்டியிருந்த வாட்களை உருவிக் கொண்டு மண்டியிருக்கும் அவன் தலையைச் சீவ  இருவரும் பாய்ந்து வந்தனர்.

ராகுதேவன் இம்மியும் அசையவில்லை.  தலையைத் தூக்கவும் முற்படவில்லை.

தேவிமார்களே! நான் உங்கள் மணாளர்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எதிரி இல்லை. அதை என்னால் நிரூபிக்க முடியும்”

என்ன உளறுகிறாய்?”

“ஆம், தேவி! விஷ்வகர்மா சூரியதேவனின் அனுமதியைப் பெற்று உங்கள் வம்சத்தை அழிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். நான் உங்கள் வம்சத்தைக் காக்க வந்துள்ளேன். இப்போது சொல்லுங்கள் நான் உங்கள் சேவகனா இல்லையா?”

” நீ பொய் சொல்லுகிறாய்!”

” தாயே! இப்போதே நான் சொன்னதை நிருபிக்கிறேன்.  தங்கள் கையிலிருக்கும் மருந்துக் கிண்ணத்தைப்பற்றிதித் தங்கள் கணவர் என்ன சொன்னார்? அது ஸந்த்யா தேவியின் உடலுக்கு நல்லது என்றுதானே! அந்த மருந்தின் ஒரு சில துளிகளை அதோ அந்த மாடத்தில் அடைகாக்கும் புறாவின் கீழே இருக்கும் முட்டைகள் மீது விடுங்கள்! உங்களுக்கே உண்மை புரியும்”  என்றான் ராகு.

ஸந்த்யா தயங்காமல் தாயிடமிருந்து மருந்தை வாங்கிக் கொண்டு சாளரத்திற்கு அருகில் சென்று புறாவைஃப் பறக்கவிட்டு அங்கிருக்கும் மூன்று முட்டைகளின் மீது ஒவ்வொரு துளி  மருந்தைத் தெளித்தாள். தாய்ப்புறா அவள் தலைக்கு மேல் படபடவென்று சிறகால் அடித்துக் கொள்வதைத்தவிர வெறொன்றும் புலப்படவில்லை.

“ஒன்றும் ஆகவில்லை. நீ எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய்!” என்று சந்த்யா சொல்லும்போதே அந்த மூன்று முட்டைகளும் மெல்ல அசையத் தொடங்கின. அவை மெதுவாகச் சுற்றத் தொடங்கின. இரண்டே வினாடிகளில் அவை வெடித்தன. அதுமட்டுமல்லாமல் அவத்றின் கரு பற்றி எரியத் தொடங்கின. திக்பிரமை அடைந்த சந்த்யா தீயை அணைக்க என்ன செய்வது என்று நினைப்பதற்குள் துடித்துக்கொண்டிருந்த தாய்ப்புறா அந்தத் தீயில் விழுந்து தன் உயிரைக் கொடுத்துத் தீயை அணைத்தது.

ஸந்த்யாவும் அவள் அன்னையும் துடிதுடித்துப் போய் விட்டார்கள்.

“தேவி! உங்களுக்கு இப்படிப்பட்ட அதிர்ச்சியைக் கொடுத்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும். உண்மையை உங்களுக்கு உணர்த்திய அந்தத் தாய்ப் புறாவைப்பற்றியும் எரிந்து போன முட்டைகளைப்பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவை அழியவேண்டும் என்பது பிரும்மா படைத்த விதி. அதைப்போல உங்கள் வயிற்றில் வளரும் மூன்று சிசுக்களும்  வாழவேண்டும் என்பதும் விதி. விதியை தன் மதியால் மாற்ற விஷ்வகர்மா முயன்றார்.”

” என் தந்தைக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்? “

“அதற்குக்  காரணம் மகாபிரும்மருத்ரன் என்ற மகா சக்தி வாய்ந்த குழந்தை உங்களுக்குப் பிறக்கவேண்டும் என்ற அவரது பேராசை.”

“என் தந்தையின் இந்த கேடுகெட்ட செயலுக்காக நான் வேதனைப்படுகிறேன். என் குழந்தைகளைக் காப்பாற்றிய உங்களுக்கு என் வந்தனம். இப்பொதே போய் சூரியதேவனை ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு ஸந்த்யா அந்தத் தளத்தின் மறு கோடியில் இருக்கும் சாந்துக் குளியல் அறைக்கு ஓடினாள்.

Related image

ஆனால் சூரியதேவனோ விஷ்வகர்மாவின் திட்டப்படி விமானத்தில் ஏறி தன் மண்டலத்துக்குப் போய்க் கொண்டிருந்தான்.

சூரியதேவன் தன்னை விட்டுச் சென்றதைப் பார்த்த ஸந்த்யாவும் அருகில் இருந்த மற்ற விமானத்தில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றாள்.

தன் கணவனின் எண்ணத்தைக் கெடுத்துவிட்டானே என்ற கோபத்தில், ஸந்த்யாவின் அன்னை  கையிலிருந்த வாளால் ராகுவின் கழுத்தை வெட்ட அவன் மீண்டும் ஒரு முறை தலை வேறு உடல் வேறாகக் கிடந்தான்.

அறைக்கு வந்த விஷ்வகர்மா இதைப் பார்த்துத் திகைத்துப் போய் என்ன செய்வது என்று அறியாமல் திக்பிரமையில் நின்றார்.

(தொடரும்)

இரண்டாம் பகுதி

வாட்ஸ் அப்’ செயலியை சுவாமி தத்தாம்ஸானந்தா தேவ லோகத்திற்குத் தரப் போகிறார் என்றதும் நாரதர் பயங்கர டென்ஷன் ஆகியிருந்தார்.  திரிலோக சஞ்சாரியான அவர் சமீபத்தில் இந்தியா சென்றபோது அங்கே வாட்ஸ் அப்பினால்  நடக்கற அலப்பரையைப் பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்தார். 

அதனால்தான் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டு ‘வேண்டாம் வேண்டாம். வாட்ஸ் அப் மட்டும் வேண்டாம் என்று அலறிக் கொண்டிருந்தார். 

எல்லோருக்கும் சற்று எரிச்சலாக இருந்தாலும் பிரும்மாவின் பிள்ளையாயிற்றே என்று சற்று அடக்கி வாசித்தார்கள். பிரும்மாவே கடுப்பாகி ” விஷயத்தைக் கூறாமல் ஏன் அலறுகிறாய்?’ என்று கேட்டதும் அதுதான் சாக்கு என்று அனைவரும் நாரதரைக் கசா முசாவென்று பேசத் தொடங்கினார்கள்.

ஆனல் நாரதர் , நம்மூர்  பாஷையில் சொல்லப்போனால் ‘பனங்காட்டு நரி’. யார் என்ன சவுண்ட் விட்டாலும் அதுக்கு மேல குரல் எழுப்பி ஆளை அப்படியே அமுக்கி விடுவார். பிராஜக்ட் மெம்பர் எல்லாருக்கும் நல்லா புரிகிறமாதிரி விளக்கமா சொல்ல ஆரம்பித்தார்.

” எல்லாரும் கவனமா கேளுங்க! வாட்ஸ் அப் ஒரு நல்ல உபயோகமான ஆப்தான் . ஆனால் நாம பாற்கடலைக் கடைஞ்சபோது அமிர்தத்தோட ஆலகால விஷமும் வந்தது இல்லையா? அன்னிக்கு நல்ல வேளையா சிவபெருமான் அதைக் காப்பி குடிப்பதுபோலக் குடித்து நம்மையெல்லாம் காப்பாத்தினார். அதனால அவருக்கு ஒரு பெரிய கண்டம் வர்ரதா இருந்தது.  பார்வதி தேவி தடுத்ததினால அவருக்கு வர இருந்த கண்டம் கழுத்திலேயே தங்கிடுச்சு.

இந்த வாட்ஸ் அப் அதைவிடக் கொடுமை. பிரீயா கொடுத்தா பினாயிலும் குடிக்கும் இந்திய மக்கள் பிரீயா கிடைச்ச இதை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.

தமிழ் நாட்டின் முக்கியப் பத்திரிகையான விகடனில் வாட்ஸ் அப் பற்றி ஒரு ஆர்டிகிள் எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்தால் உங்களுக்கு அதன் கொடுமை புரியும்” என்று சொல்லி தன் கையிலிருந்த பிட் பேப்பரைப் படிக்க ஆரம்பித்தார்.

“கோலிகுண்டு சீசன், பம்பரம் சீசன், கிட்டிப்புள் சீசன்போல முன்பு ஃபேஸ்புக்கில் கமென்ட் போட்டு அதிக லைக் வாங்க வேண்டுமென்று வெறி பிடித்து அலைந்தவர்கள் சிலர். இப்போது வாட்ஸ்அப்பிலும் கொலைக்குத்தை ஆரம்பிக்கிறார்கள்.
ஒருபக்கம் முக்கியமான தகவல்களை பரப்புவது, ஆபத்து காலங்களில் உதவுவது என்று வாட்ஸ்அப்பால் பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த அட்மின் அட்டகாசம் தொடர்கிறது.

கொக்கி குமாரு, பக்கி பாஸ்கரு என்று வயலன்ட் கேங்குகள் போல இவர்களும் வாட்ஸ் அப் குரூப்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியான தகவல்களைப் பரிமாறுகிறார்களா என்றால் இல்லை. மொக்கை ஸ்டேட்டஸ்களையும், கேட்டுப் புளித்துப்போன பொன் மொழிகள், ஜோக்குகளையும் போட்டு கொலையாய்க் கொல்லுகிறார்கள்.

”எங்க வீட்டு வாசலில் குப்பை, நகராட்சி அள்ளவில்லை” என்று போட்டோவை ஷேர் செய்து குரூப்பிலிருக்கும் அனைவரின் செல்லையும் குப்பையாக்குகிறார்கள். உண்மையில் அந்தக் குப்பையைப் போட்டதே அந்த வாட்ஸ் அப் அட்மின் ஆறுமுகமாகத்தான் இருக்கும். டாஸ்மாக் பாரில் உட்கார்ந்துகொண்டு ”கே எஃப் பீர் கிடைக்கல, பிரிட்டிஷ்தான் கிடைச்சது. உங்க ஏரியாவுல கிடைக்குதா?” என்று பாட்டிலையும் கண்றாவி சைட் டிஷ்ஷையும் போட்டோ எடுத்து ஷேர் செய்வது என்று வாட்ஸ்அப்பை, நம் ஊரிலுள்ள பார்களிலிருக்கும் வாஷ்பேசின்போல் ஆக்கி விட்டார்கள்.

இதாவது பரவாயில்லை. பண்டிகை தினத்தன்று ”மட்டன் வாங்கிவிட்டோம், இன்னும் சமைக்கலை” என்று குளோசப்பில் அந்த மட்டனைக்காட்டி செல்போனைப் பதறவிடுகிறார்கள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….அப்பா!

இதைவிட காமெடி, சிலர் ரமேஷ் ஃப்ரெண்ட்ஸ், சுரேஷ் ஃப்ரெண்ட்ஸ், கருவைக்காட்டு நண்பர்கள், பிணந்தின்னி குரூப்ஸ் என்று ஆரம்பிப்பார்கள். இவர்கள் பின்னால் ஒரு குரூப் சேர்ந்தவுடன் அட்மினே அதிலிருந்து விலகிப்போய்விடுவார். ஏன் குரூப் துவக்கினார், ஏன் விலகினார் என்று யாருமே அறிந்து கொள்ளமுடியாது. அதனால், அவருக்கு அடுத்ததாக அதில் இணைந்தவர் ஓ.பி எஸ் மாதிரி அடுத்த அட்மினாகி விடுவார்.

‘’ஏய்…நீ, வாட்ஸ்அப் குரூப் நடத்துறியா, போலீஸ்ல மாட்டப்போறே, உங்க வாட்ஸ்அப் தகவல்களை எல்லாம் அமெரிக்க உளவுத் துறையிலேர்ந்து அண்டார்டிகா உளவுத் துறைவரை வாட்ச் பண்ணுகிறார்கள். நம் ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல இதை ரெக்கார்டு பண்ணவே ஒரு டீம் இருக்கு. உன் குரூப்புல உள்ளவன் எவனாவது வில்லங்கமான மேட்டரை அதுல ஏத்திவிட்டான்னா, அவனைப் பிடிக்க மாட்டாங்க. அட்மினான உன்னைத்தான் பிடிப்பாங்க. சமீபத்துல ஜம்மு காஷ்மீர்ல பல பேரைப் பிடிச்சு குண்டாஸ்ல போட்ருக்காங்க என்று விளையாட்டாக ஓட்டுவதைக் கேட்டு நம் அப்பிராணி அட்மின் கதி கலங்கிவிடுவார். அதோடு அவர் ஆரம்பிச்ச குரூப்பிலிருந்து அவரே நைசாக விலகிவிடுவார். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது பல பேருடைய கதை.

வருகிற மெசேஜை அப்படியே காப்பி பண்ணி அடுத்த குரூப்பில் போடும் என் நண்பன், ”காபி டூ பேஸ்ட் செய்த விரலை செல்லில் மட்டுமல்ல, வேறு எந்த இடத்தில் வைத்தாலும் அந்த மெசேஜ் பதிவாகிறது” என்கிறான். எல்லாம் ஒரு மனப்பிராந்திதான்.

இன்னும் சிலபேர் 60 குரூப்களில் இருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால், அவர்களுடைய செல்போன் சத்தம் போடாமல் ஒரு நிமிடம்கூட இருந்ததில்லையாம். மாத்தி மாத்தி ஒரே மெசேஜை 60 குரூப்களும் அனுப்பி அவரை டார்ச்சர் செய்கிறார்களாம். இதனால் செல்லை அவ்வப்போது ஆஃப் பண்ணிவிடுகிறார். இன்னும் சில வாட்ஸ்அப் குரூப்களில் குட்மார்னிங் மெசேஜ் சொல்லியே கொலவெறி ஏற்றுகிறார்கள்.

என்ன டெக்னாலஜி வந்தாலும் இந்த இம்சை அரசன்கள் தொல்லை தாங்க முடியலையேப்பா”

கேட்டீர்களா? இந்த கலாசாரம் தேவ உலகத்துக்கு வேண்டுமா?

அது மட்டுமல்ல. தவறான செய்திகளை உண்மைபோல போட்டு சகட்டுமேனிக்கு அவற்றை பார்வர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரவது ஒரு வயதான பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு ‘இவள் தான் ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தையைக் கடத்துகிறாள்’ என்று போடப்போக அது வைரலாகி எல்லோருக்கும் பார்வர்ட் ஆக கடைசியில் அந்தப்பெண்மணியை மக்கள் கொன்றுவிடுகிறார்கள். இதைப்போன்ற கொலைகள் நிறைய நடந்திருக்கின்றன.

அதனால் அரசாங்கமே வாட்ஸ் அப் நிறுவன ஆட்களை அழைத்து ‘தவறான ஆபத்தான விஷமத்தனமான வெடிக்கும் செய்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவுவதால் கும்பல் கொலை நிகழ்கின்றன. வாட்ஸ் அப் இதற்கு உடன் போவதால் அவர்களும் தண்டிக்கப்பட நேரிடும் என்றும், அதைத் தடுக்க அவர்கள் எதாவது உடனே செய்ய வேண்டும்’  என்று எச்சரித்திருக்கிறார்களாம்.

இப்படிப்பட்ட வாட்ச் அப் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கும் இந்த உலகத்துக்கு வந்தால் என்னாகும் என்பதை நீங்களே  யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நாரதர் ஒரு வழியாகப் பயமுறுத்திப்  பேசி முடித்தார்.

தேவர்கள் அனைவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

தமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்

Image result for 96 படம்

சென்ற  மாதம் மேற்குத்தொடர்ச்சி மலை  திரைப்படத்தைப் பற்றி எழுதியிருந்தோம்.

அதைப்போல ஆனால் அதைவிட இன்னொரு படம் தமிழ் சினிமா உலகைக் கலக்கி வருகிறது.

அது தான் விஜய் சேதுபதி – திரிஷா நடித்து வெளியான 96 என்ற படம்.

பார்த்த மக்கள் அனைவரும்  ஒரே குரலில் ஏகோபித்த பாராட்டு (96%)

அழகி, ஆட்டோகிராஃப், பள்ளிக்கூடம் போன்ற கதை கொண்டது தான் இந்த 96.

1996இல் பத்தாவது படித்த வகுப்பு மாணவர்கள் 22 ஆண்டுகள் கழித்து திரும்பவும் சந்திப்பதுதான் கதையின் அடித்தளம்.

அப்போது காதலித்துத் திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்துவிட்ட இருவர் மீண்டும் சந்திக்கும் உணர்ச்சி பூர்வமான காவியம்தான் இது.

பா. ப. ப.

பார்ப்பதற்கு படம் பரவசம்

அடுத்தது, 

இன்னொரு பேர் சொல்லும் படம் பரியேறும் பெருமாள்.

 

Image result for பரியேறும் பெருமாள்

சாதியும் மதமும் மனித இனத்திற்கே எதிரானது என அழுத்தம், திருத்தமாகச் சொன்ன விதத்தை மனதாரப் பாராட்டுகிறோம் – தினமலர்

பத்திரிகைகளும் ரசிகர்களும் மனம் திறந்து பாராட்டுகளை அள்ளி  வீசும் படம்

அடுத்தது, 

அடுத்தது மணிரத்னத்தின் ‘ செக்கச் சிவந்த வானம்’

Related image

வசூலில் சாதனை படைத்த மணிரத்னத்தின் ஸ்டைலிஷ் கேங்க்ஸ்டர் படம்.

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், மற்றும் பல மாடல் அழகிகள் நடித்த வாரிசுப் போட்டி படம். 

தூள் பறக்கிறது.

கோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்

கோமல் தியேட்டர் ஆரம்பவிழா அக்டோபர் 11ஆம் நாள் சிறப்புற நடைபெற்றது.

நடிகர் சத்யராஜ், திருப்பூர் கிருஷ்ணன் உரையாற்றினார்கள்.

எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் (லவ் பண்ணுங்க சார்), ஆர். சூடாமணி (பிம்பம்.), கல்கி (எஜமான விஸ்வாசம்), புதுமைப்பித்தன்( கட்டில் பேசுகிறது) மறம் தி.ஜானகிராமன் (விளையாட்டு பொம்மை) என்று ஐந்து புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் நாடகமாக மேடையேற்றப் பட்டன.

கல்கியின் வாரிசாக திருமதி சீதா ரவி, புதுமைப்பித்தனின் மகள் திருமதி. தினகரி மற்றும் சூடாமணிக்காக திருமதி பாரதி குத்துவிளக்கேற்றியது பலத்த கைதட்டல்களைப் பெற்றது. ஜெயகாந்தனின் புதல்வி தீபலக்ஷ்மி மற்றும் ஜானகிராமனின் புதல்வி உமா இருவரும் பங்கேற்க இயலவில்லை.
திருப்பூர் கிருஷ்ணன் ஐந்து எழுத்தாளர்ளைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கூறிவிட்டு,  இந்த நாடகத்தைப் பார்க்கும் இளைஞர்கள் இவர்கள் கதைகளை விரும்பித்  தேடிப் படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வாரிசுகளைக் கௌரவப்படுத்தியதைப் பாராட்டினார்.

நடிப்பிற்காக முதல் முதலில் சம்பளம் ரூபாய் பத்து கோமலிடமிருந்துதான் பெற்றேன் என்றார் நடிகர் சத்யராஜ். கோமலின் இயக்கத்தில் தொடங்கிய நடிப்பு, இன்று அவரது பேரன் ஆனந்த்சங்கர் இயக்கத்திலும் தொடர்வது பெரும் மகிழ்ச்சியைத்  தருகிறது என்றார்

கோமல் தியேட்டர் உருவாக கடுமையாக உழைத்துள்ள திருமதி தாரிணி, நாடகத்திற்காக அரசாங்க வேலையையும் ஏற்காதவர் கோமல் என்று பதிவு செய்தார். தந்தையுடன் மகிழ்ச்சியுடன் கழித்த அந்த நாட்களையும் நினைவு கூர்ந்தார்.

இந்த நாடக அரங்கேற்றத்திற்கு உதவியவர்கள் பட்டியலில் குவிகம் அமைப்பையும் மேடையில் குறிப்பிட்டதற்கு குவிகத்தின் நன்றி.

சிறப்பு அம்சங்கள்

 • அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்.
 • பிரபலங்களின் கருத்துள்ள சிறுகதைகளை நாடகமாக்கும் முயற்சி.
 • எல்லா இயக்குனர்களும் நடிகர்களும் மற்ற உதவியாளர்களும் செவ்வனே தங்கள் பணியினை நிறைவேற்றிய பாங்கு.

இந்த முயற்சியின் வெற்றி நாடக உலகில் ஒரு புதிய சகாப்தத்தின்  ஆரம்பம் என்று பின்னாட்களில் குறிப்பிடப்படும் என்று நம்பிக்கை  உள்ளது

பணம் – சுஜாதா

Related image

முகனூலில் உலாவிக்கொண்டிருக்கும் சுஜாதா அவர்களின் கட்டுரை: 

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது.

பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள்.

எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு என்று தருவாள்.
இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம்.

ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு ஜனோபகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது.

அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய்.

நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள்.

பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள்.

லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன்.

மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள்.

பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன்.

ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார்.

பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான்.

எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது.

ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை.

சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன்.

உல்லன் ஸ்வெட்டர், ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம்.

மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின் வேலை கிடைத்தது.

1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம்.

அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன்.

வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன்.
எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன்.

சம்பளம்? மயங்கிவிடாதீர்கள் ரூ.400!

முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது.

பங்களூருக்கு இடமாற்றம்.
செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.

என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது.

எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது.

யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம்.

ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு…

இன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும்.
இது இயற்கை நியதி.

அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.

இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது,

செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.

இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம்.
உண்மை நிலை இதுதான்.

இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது.

ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம்.

நான் தரும் எளிய புள்ளி விவரம் இது.

ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும்.

இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது.

இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.

– சுஜாதா.

“பெயரில் என்ன இருக்கிறது?” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

கௌரி, தனக்குச் செவ்வாய்க்கிழமைதான் ராசியான நாள் என்று முன்பே தெரிவித்து, அன்று என்னை ஆலோசிக்க வந்தாள்.

அவள் மகன் வேலுமணி, பத்து வயது சிறுவன். தலைவலி என்றும், பள்ளிக்கூடம் செல்ல அடம் பிடிப்பதாகவும் தெரிவித்தாள். மதிப்பெண்கள் குறைந்ததாகச் சொன்னாள்.

வேலுமணியை எங்கே கூட்டி சென்றாலும் அவனுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன் எனக் கடவுளின் முன்னே சத்தியம் செய்து அழைத்துச் செல்வாளாம். வேலுமணி, தனக்குச் செய்த சத்தியத்தை ஞாபகத்தில் வைத்திருப்பானாம். அவனை ஒத்துழைக்கச் செய்ய, இன்னும் சத்தியங்கள் செய்து வேலையை முடித்துக் கொள்வாளாம். இப்படிச் செய்வதுதான் தனக்குச் சரியாகத் தோன்றியது என்று கெளரி சொன்னாள்.

வேலுமணியின் ஆசிரியர் அவனிடம் கேள்விகள் கேட்டால் ஒன்றும் சொல்ல மாட்டான். கேட்டு சில நொடிகளில் தனக்குத் தலை சுற்றுவதுபோல் இருப்பதாகச் சொல்வான். வகுப்பு நேரத்தில் அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்காவிட்டால் நன்றாக இருப்பான். இதற்கு விடை காண்பதற்கு என்னைப் பார்க்க கௌரியிடம் ஆசிரியர் பரிந்துரைத்திருந்தார்.

தன்னுடைய தவிப்புகளை வேலுமணி தெளிவாக விவரித்தான். குறிப்பாகக் கணக்கு போடும்பொழுதும் மற்றும் ஆங்கிலம் படிக்கச் சொன்னால் மட்டுமே வேலுமணிக்குத் தலை சுற்றுவது போல் தோன்றுகிறதாம். வகுப்பு தோழர்கள் முன் பதில் சொல்லச் சொன்னால், பதில் தெரிந்தாலும் சொல்ல வரவில்லை என்றான். ஒவ்வொரு ஆசிரியர் கேள்வி கேட்பதும், அதற்குப் பதில் சொல்ல கஷ்டப்படுவதும், வகுப்பில் பிற மாணவர்கள் அவனைப் பார்த்து நகைப்பதும் அவமானமாக இருக்கிறது என்றான்.


அவன் அம்மா அவனை “என் மக்குச் செல்ல வெல்லம்” என்பாளாம். அவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதில் குழம்பிப் போய் இருந்தான். கெளரி, மற்றவர்கள் முன்னால், வேலுமணி என்று அழைக்க மாட்டாளாம். “என் மக்குச் செல்ல வெல்லம்” என்றே அழைப்பாளாம். இதனால், பல வருடங்களாக வேலுமணியும் எல்லோரிடமும் அப்படியே தன்னை அறிமுகம் செய்து வந்தான். யாராவது பெயரைக் கேட்டால், “வெல்லம்” என்றும், முழுப் பெயர் கேட்டால் “மக்குச் செல்ல வெல்லம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் இதுபோல் சொல்லும் போது, கெளரி நகைப்பாளாம். அதனால், தான் சொல்வது சரி என்றே வேலுமணி நினைத்து, அப்படியே தொடர்ந்து செய்தான்.

அன்று என்னை ஆலோசிக்க வந்து இப்படி தகவலைச் சொன்னதும் அதன் விளைவுகளைப்பற்றி உரையாடினோம். உடனே புரிந்துகொண்டான். ஆனால் அம்மாவிடம் சொல்ல அவனுக்குத் தயக்கம் இருந்தது. அவள் இங்கு சரியாக பதில் சொல்லப் பல இனிப்புகள் வாங்கித் தந்திருந்தாள். அவள் சொல்வதை செய்யாமல் விட்டு விட்டால் வாங்கியதைப் பிடுங்கி விடுவாள் என்று அஞ்சினான். கூடவே இன்னும் இரண்டு நாள் தன்னிடம் பேசமாட்டாள் என்று பயந்தான்.

எங்களை ஆலோசிக்க வருவோரின் நிலையை, நிலைமையைப் புரிந்துகொள்ள அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுக்கொள்வது எங்களின் தொழில்முறை. இந்த முறையைப் போல், சில சமயங்களில் இப்படி மதிப்பிடும்போதே செய்ய வேண்டிய சிகிச்சை ஆரம்பிக்க வேண்டியதாக நேரும். வேலுமணியை சற்று வெளியே அமரச் சொல்லி கெளரியை உள்ளே அழைத்தேன்.

அவள், தான் மக்கு என்று அழைப்பதற்குக் காரணம் இருப்பதாகக் கூறினாள். ஒன்று, அவர்கள் வீட்டில் இப்படிப்பட்ட பெயர்கள் சூட்டி அழைப்பது அவர்களின் பொழுதுபோக்கு என்றாள். இத்துடன், அவளுக்குத் தன் குழந்தை மற்றவர்கள் போல் புத்திசாலியாக ஆக இப்படி ஒரு கருவியை பயன்படுத்திச் செய்வதாகக் கூறினாள். அதை கேட்கக் கேட்க வேலுமணி மாறிவிடுவான் என நம்பினாள். இதனால் அவனுடைய மனதிடம் வலுவிழந்து போவதை கவனிக்கவில்லை.

அவளிடம் அவள் தன் பிள்ளையை “என் மக்குச் செல்ல வெல்லம்” என்பதால் குழந்தை மனதில் குழப்பம் ஏற்படுவதைப் பற்றிக் கலந்துரையாடினோம். “செல்லம்” என்ற அழைப்பு அன்பைக் காட்டுகிறது. அதே நேரத்தில் “மக்கு” அவனின் காக்நிடிவ் (cognitive) திறனான ஒன்றை மட்டும் எடை போட்டுக் காட்டுகிறது. அதிலும் அவன் திறன் மட்டம் என்று வெளிப்படுத்துகிறது. அதன் விளைவை மேலும் ஆராய்ந்ததில் கெளரிக்கு ஓரளவு புரிய ஆரம்பித்தது, வேலுமணி இதனால் குழம்பி போய், தன்னைப்பற்றித் தாழ்வான அபிப்பிராயம் கொண்டிருக்கிறான் என்று.

இதைச் சார்ந்து கெளரிக்கு ஒன்று செய்யச் சொல்லிப் பரிந்துரைத்தேன். அதாவது அவர்கள் அடுத்த முறை வரும் வரையில் வேலுமணியை இரு விதமாகவும் அழைப்பதென்று, அவனுடைய பெயரிட்டு “வேலுமணி” என்றும், “என் மக்குச் செல்ல வெல்லம்” என்றும். அழைத்தபின் அவனிடம் தோன்றும் மாற்றங்களைக் கவனித்து, குறித்து வரச் சொன்னேன்.
இரண்டே நாளில் அவள் மட்டும் வந்தாள். குறிப்பாக, அவனை “என் மக்குச் செல்ல வெல்லம்” சொல்லும்போது, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருமே அவனை “மக்கு” என்றே அழைக்கிறார்கள் என்றாள். தான் ஆசைப் பட்டதற்கு மாறாக, மக்கு என்ற கவசத்தைச் சூட்டினார்கள். இது அவளுடைய மனதைச் சங்கடப்படுத்தியதாகச் சொன்னாள். மாறாக அவனைப் பெயரிட்டுக் கூப்பிடுகையில் அவன் முகம் மலர்வதைக் கவனித்தாள். மேலும் அப்பொழுது செய்ய வேண்டிய வேலையை நன்றாக முடித்தான் என்றாள். தானே குறையைச் சுட்டிக் காட்டினால் மற்றவர்கள் அதைச் சொல்ல மாட்டார்கள் என்று தப்பாக நினைத்திருந்தாள். அம்மாவே சொல்கின்றாள் என்பதால் குழந்தைகள் அதை அப்படியே நம்பிவிட்டு, அதேபோலச் செயல்படுவார்கள்.

வேலுமணி “மக்கு” என்பதால் தனக்கு எதுவும் புரிவதில்லை என்று எடுத்துக் கொண்டான். அதற்கு ஏற்றவாறு பதில் சொல்லக் குழம்பி அமைதியாக நின்றான். சில ஆசிரியர்கள் “ஏன் மக்கு போல நிக்கிற” என்றதும், தான் மக்கு என்றே ஊர்ஜிதம் செய்து கொண்டான்.

சிறுவனாக இருப்பதால் இதைச் சமாளிக்கத் தெரியவில்லை. அதனால் எழுதப் படிக்க வேண்டும் என்றதும் தனக்குத் தலைவலி எனச் சொன்னான். இது நிகழும்போதெல்லாம் அவன் பாட்டி அடிக்கடி “அப்படியே தாத்தாவை உரித்து வெச்சிருக்க” என்பாள். இந்த வார்த்தைகள் தான் செய்வது சரி என்பதுபோல் லேலுமணிக்குத் தோன்றியது.

அவன் தாத்தாவிற்கு ஒரு வேலை செய்யக் கடினமாக இருந்தால் அவர் தலைவலி என்பாராம். எல்லோரும் அவரைச் சூழ்ந்து நிற்பதைப் பார்த்து வியந்திருக்கிறான். யாரோ ஒருவர் உதவி செய்து வேலையை முடித்து விடுவதைப் பார்த்திருக்கிறான். வேலுமணியைப் பொறுத்தவரை செய்ய முடியவில்லை என்றால் தலைவலி தோன்றும்.

தாத்தா-பாட்டி கெளரியுடன் வந்தார்கள், இதைப்பற்றி உரையாடினேன். முக்கியமாக, பெரியவர்கள் என்ன பேசுகிறோம், யாரை எதற்காக ஒப்பிட்டுப் பேசுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினேன். பெரியவர்கள் சமாளிப்பு, வார்த்தை உபயோகிப்பது இரண்டையும் வளரும் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு இதை உணர்ந்து செய்கிறோமோ, சொல்கிறோமோ அவ்வளவு நன்மை உண்டு. இயற்கையாக இருப்பது முக்கியம். செயற்கையாக இருந்தால் அதன் போலித்தனத்தை அறிந்து கொண்டுவிடுவார்கள்.

மூவரையும் தாங்கள் என்ன சொல்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்பதைக் கவனிக்கப் பரிந்துரைத்தேன். மேலும் ஒருவருக்கு ஒருவர் ஏதாவது மாற்றிச் செய்யவேண்டும் என்று தோன்றினால் அதைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னேன். இரண்டு வாரத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்றும், எதை மாற்றி அமைத்தார்கள் என்பதையும் வந்து விவரிக்கச் சொன்னேன்.

மூவரும் தாங்கள் சொல்வதை விவரித்தார்கள். அவற்றை மாற்றி அமைக்கையில் வாக்குவாதம் வந்ததால் செய்யவில்லை என்றார்கள்.

அவர்களுக்குப் பரஸ்பர உதவி செய்ய ரோல்ப்ளே செய்தோம். மூவரும் மாறிமாறி பாத்திரங்களைச் செய்ய மெதுவாகப் புரிய வந்தது. அவர்களை வீட்டிலும் ஒருவருக்கு ஒருவர் நடத்தையை மாற்றிக் கொள்ள எப்படி உதவுவது என்பதையும் இதில் செய்து பழகினோம். கூட்டுக் குடும்பமாக வாழ்வதில், உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை, ஒத்துழைப்புச் செய்தால் பல நலன்கள்.

இதைத் தொடர்ந்து, வேலுமணி தான் வீட்டுப்பாடம் செய்ய அம்மா பல தின்பண்டங்கள் கொடுத்து செய்ய வைப்பாள் என்றான். அவனுடைய பல் மருத்துவர் இனிப்பைக் குறைக்கச் சொல்லியும் இது நடந்தது. கெளரி-வேலுமணி இருவரையும் இதற்குப் பதிலாக என்ன செய்யலாம் என யோசிக்கச் சொல்லிக் குறித்துக்கொண்டோம். வெளியில் விளையாடுவது, கதை சொல்வது, பாட்டுக்கு நடனம் என்று வேறு விதமான பரிசுகள் பெறலாம், சில சமயங்களில் எதுவும் இல்லாமலும் செய்யலாம் என நாளடைவில் வேலுமணி புரிந்துகொண்டான்.

கெளரி, தான் வளரும் வயதில் கண்டிப்பான பெற்றோர் இருந்ததால் தன் பிள்ளையை முழுக்க ஃப்ரீயாக விட முடிவெடுத்திருந்தாள். மேலும் பாசம் காட்டுவதில் தன்னை மிஞ்சி எந்த அம்மாவும் இருக்கக் கூடாது என்பதற்காக இவ்வளவு வாங்கித் தந்தாள். தன் செயலில் உள்ள தவறான எடுத்துக்காட்டை அவள் காணவில்லை.
இதைப்பற்றி எடுத்துக்கொண்டு பேசினோம். முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் அன்றாட செயல்களை எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்ய மெதுவாகப் புரிதல் வந்தது. பாசம் காட்ட வேண்டும், பாசத்தால் அடிமையாக்கக் கூடாது.

கெளரி இப்படிச் செய்வதற்குக் காரணம் அவளுடைய கல்யாணம். தானாக தேர்ந்தெடுத்துச் செய்துகொண்டாள். அவள் கணவர் அவளைவிட பதினைந்து வயது மூத்தவர். வெளிநாட்டில் வசித்திருந்தார். அவர் பெற்றோர் கெளரி, வேலுமணியுடன் இருந்தார்கள். தான் தேர்ந்தெடுத்துச் செய்த கல்யாணம், பிள்ளையை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்கு இப்படிப் பார்த்து பார்த்துச் செய்து வந்தாள். வேலுமணியின் ஒன்பதாவது வயதுவரை அவனுக்குச் சோறு ஊட்டி, குளிப்பாட்டி, உடை அணிவிப்பது எனச் சகலமும் செய்தாள். “என் குழந்தை, அவன் மேல் அவ்வளவு பாசம். நான் செய்வேன்” என நினைத்ததினால்.

வேலுமணி தானாக செய்ய வேண்டிய கட்டம் வந்தது. அவன் வகுப்பில் பதில் சொல்லாதது, தோழர்களுடன் பழகாதது இதுவெல்லாம் அவன் இதுவரை தன்னால் முயற்சி எடுத்துப் பழகாததின் விளைவு. கழிப்பறை சென்று வருகையில்கூட அவன் பள்ளிக்கூடத்து ஆயாக்கள் அவனுக்கு எல்லாம் சரி செய்யவேண்டியதாயிற்று. வேலுமணி வளர்ந்து வரும் பிள்ளை என்பதால் அவன் தானாக செய்து கொள்ளவேண்டும் என்று பள்ளியில் சொன்னார்கள். அந்தப் பயிற்சியை விடுமுறை நாட்டுகளில் அவன் தானாக செய்யத்தொடங்கினான்.

தேவைகளைத் தன்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்ற புரிதல் வந்தது. அவனுடைய தன்னம்பிக்கை வளர்வதை அவனே உணர்ந்தான். மேலும், அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அரைமணி நேரம் விளையாடத் துவங்கினான்.

அவளுடைய மாமனார்-மாமியார் கெளரியை கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தனர். அவளும் தன் பாடங்களைப் படிக்க, வேலுமணி தன் பாடங்களைப் படிக்க, தாத்தாவும் பாட்டியும் அவனுக்கு உதவினார்கள். அவர்களுடன் கடைக்குப் போவது, அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது சேர்ந்தது. மெதுவாக அவனுடைய பல திறமைகள் வெளி வந்ததன , கூடவே அந்தத் தலை சுற்றல், பதில் பேசாதது  மறைந்தன .


திரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்

Related image

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

குவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி

“வா… வா…” என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை, மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணற வைத்தது. பார்வையும் புன்சிரிப்புமே பேசின.

“ஹலோ ஸவி, என்ன ப்ளெசண்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷனுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே” r-sudamaniஎன்று முகமலர்ச்சியுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.

“எவ்வளவு வருஷம் ஆச்சிடி நாம சந்திச்சு! என்னை நீ ஸ்டேஷனில் எதிர்பார்க்கலேன்னா உன்னை மன்னிக்க முடியாது” என்றாள் ஸவிதா.

ஸௌம்யா சிரித்தாள். “அப்பாடா! நீ இப்படிப் பேசினால்தான் எனக்கு வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கு.”

இரண்டு நிமிஷங்கள் வரையில் மௌனமுகங்களாய்ச் சகோதரிகள் எதிரெதிரே நின்றார்கள்; பேச்சுக்கு அவசியமற்ற அர்த்தமயமான, இதயமயமான நிமிஷங்கள். சாமான்களுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டாக்சியில் ஏறிக் கஸ்தூரிபா நகர் வந்து சேரும் வரை பரஸ்பரம், “எப்படியிருக்கே? உங்காத்துக்காரர், குழந்தைகளெல்லாம் சௌக்கியமா?” என்பதற்குமேல் உரையாடவே இல்லை. டாக்ஸியில் அவ்வளவு இடம் இருந்தபோது தம்மையறியாமல் நெருக்கமாய் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றே எல்லாமாய்ப் பொலிந்தது.

ஸவிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்றுக் குசலம் விசாரித்த பின், “நீ வரது நிச்சயமானதிலேருந்து உன் அக்காவுக்குத் தரையிலே கால் நிக்கலே!” என்று சிரித்தார்.

ஸௌம்யாவின் பார்வை சகோதரியிடம் சென்றது. மீண்டும் மௌனத்தில் ஒரு பாலம், புன்னகையில் மின்னும் ஆந்தரிகம்.

“இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே. ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு. வேறெதும் வித்தியாசமில்லே” என்றாள்.

நரை! ஸவிதா லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். ‘காலம் செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவுதான். பாவம் வருஷங்கள்!’ என்று சொல்வதுபோல் இருந்தது. அந்தச் சிரிப்பு. பிரிந்திருந்த காலமெல்லாம் இந்தச் சந்திப்பில் ரத்தாகிவிட்டது. பரஸ்பரம் பாசமுள்ளவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தாலும் எவ்வளவு எளிதாய்த் தொடர்ச்சியை மேற்கொண்டுவிட முடிகிறது! ஸௌம்யா சொன்னதுபோல், இத்தனை வருஷங்கள் ஆனதாகவே தெரியவில்லை. மனத்தளவில் அவர்களுள் வித்தியாசம் ஏது? எனவே பதினோரு ஆண்டுகளின் இடைவெளி கணப்போதில் தூர்ந்து விட்டது. பிரிவே இல்லாமல் எப்போதும் இப்படியே தாங்கள் இருவரும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்தது போலவே தோன்றியது.

விதவைத் தாய் இறந்தபோதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள். அந்தச் சூழ்நிலையே வேறு. வெவ்வேறு இடங்களிலிருந்து பறந்து வந்து ஒன்று சேர்ந்ததெல்லாம் ஒரு துக்கத்தில் பங்கு கொள்ள. அப்போது நிலவிய நெருக்கமும் ஒருமையும் அந்தத் துக்கத்தின் அம்சங்கள். பேச்செல்லாம் அம்மாவும் அவள் இறுதியின் விவரங்களுந்தான். காரியங்கள் முடிந்தபின் அவரவர்களின் இடத்துக்குத் திரும்பி விட்டார்கள்.

அதன்பின் இப்போதுதான் உண்மையான நெருக்கம். சிறிது காலமாக ஒருவித ரத்தச் சோகையால் பலவீனமுற்றிருந்த சௌம்யாவை அவள் கணவர், ஸவிதா குடும்பத்தினரின் அழைப்பின்பேரில், தாமும் குழந்தைகளும் வீட்டைக் கவனித்துக் கொள்வதாய்ச் சொல்லிவிட்டு ஒரு மாறுதலுக்காக அவளுடைய அக்காவிடம் பம்பாயிலிருந்து அனுப்பிவைத்தார்.

இப்போது சென்ற காலத்தைச் சகோதரியர் இருவருமாய் மீண்டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டாற்போல் இருந்தது. முதல்நாளின் மௌனத்துக்குப் பிறகு ஆந்தரிகமும் தோழைமையும் பேச்சில் உடைப்பெடுத்துக் கொண்டன. “அக்காவுக்கும் தங்கைக்கும் பேசி மாளாது போலிருக்கே!” என்று ஸவிதாவின் கணவர் பரிகசிப்பார். அவள் மக்கள் கிண்டலாய்ச் சிரிப்பார்கள். அது ஒன்றுமே ஸவிதாவுக்கு உரைக்கவில்லை. பேச்சு என்றால் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது ஒருநாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன்றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, “அதுக்காகத்தான் நான் சொல்றேன்…” என்று தொடரும்போது இழைகள் இயல்பாய்க் கலந்துகொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியைவிடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்து கொள்ளல்.

மற்றவர்களுக்கு உறைப்புச் சமையலைப் பரிமாறிவிட்டுத் தானும் தங்கையும் மட்டும் காரமில்லாத சாம்பாரை உட்கொள்ளும்போது அந்த ஒத்த ருசி இன்னும் ஆழ்ந்த ஒற்றுமைகளின் சிறு அடையாளமாய்த் தோன்றியது. அவ்விருவருக்கும் காபியில் ஒரே அளவு இனிப்பு வேண்டும். இருவருக்கும் அகலக் கரை போட்ட புடைவைதான் பிடிக்கும். மாலை உலாவலைவிட விடியற்காலையில் நடந்துவிட்டு வருவதில்தான் இருவருக்கும் அதிக இஷ்டம். உறக்கத்தினிடை இரவு இரண்டு மணிக்குச் சிறிது நேரம் கண்விழித்து நீர் அருந்திவிட்டு, மறுபடி தூங்கப் போகும் வழக்கம் இருவருக்கும் பொது. இப்படி எத்தனையோ! ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வோர் இனிமை. ஸவிதா நாற்பது வயதாகப் போகிறது. ஸௌம்யா அவளைவிட மூன்றரை வயது இளையவள். ஆனால் அந்த இனிமைக்குச் சிரஞ்சீவி யௌவனம். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்று.

வைத்தியமும் நடந்தது, ஒரு கடமையைப் போல.

ஸவிதா சகோதரியை உற்றுப் பார்த்தாள். “உனக்கு ரத்தம் கொஞ்சம் ஊறியிருக்குன்னு நினைக்கிறேன். முகம் அத்தனை வெளிறினாப்பல இல்லே.”

“உன் கைபாகந்தான்! இல்லேன்னா பம்பாயில் பார்க்காத வைத்தியமா?” என்று ஸௌம்யா சிரித்தாள்.

தயிரில் ஊறவைத்துச் சர்க்கரை சேர்த்த வற்றலை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டவாறு இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த டிபன் அவர்கள் பிறந்தகத்தில் பழக்கம்.

“இங்கே யாருக்கும் இது பிடிக்கிறதில்லே. இப்போதுதான் எனக்கு ஜோடியாய்ச் சாப்பிட நீ வந்திருக்கே” என்று கூறி மகிழ்ச்சியுடன் தயாரித்திருந்தாள் ஸவிதா.

மாலை நாலரை மணி இருக்கும். ஸவிதாவின் மூத்த மகன் பத்தொன்பது வயதான ராஜூ, எம்.எஸ்.ஸி. முதல் ஆண்டு மாணவன், கல்லூரியிலிருந்து திரும்பி வந்தான்.

“அம்மா, நாளைக்கு எங்க காலேஜில் எம்.எஸ்.ஸி. முடிச்சுட்டுப்போற ஸ்டூடண்ட்ஸுக்கெல்லாம் ‘ப்ரேக் – அப்’ பார்ட்டி நடக்கிறது.நான் நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வரமாட்டேன். ராத்திரி தங்கிட்டு அடுத்த நாள்தான் வருவேன்” என்றான்.

“சரி” என்றாள் ஸவிதா. ஸௌம்யா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நீ முதல் வருஷ ஸ்டூடண்ட்தானே ராஜூ? ஓவர்நைட் இருந்துதான் ஆகணுமா?”

“ஆகணும்னு ஒண்ணுமில்லே சித்தி. ஆனா எனக்கு ஆசையாயிருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பப் பேர் இருக்கப் போறா.”

அவன் அங்கிருந்து சென்றபின் ஸௌம்யா, “இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா ஸவி?” என்றாள்.

“ஆமாம்.”

“நீயும் வேணாம்னு சொல்றதில்லையா?”

“எதுக்குச் சொல்லணும்?”

“இப்படியெல்லாம் வீட்டை விட்டு வெளியே தங்க ஆரம்பிச்சுதான் இந்தநாள் பசங்க எல்லா வழக்கங்களையும் கத்துக்கறா. இல்லையா? சுருட்டு, கஞ்சா, குடி அப்புறம் கோ-எட் வேற.. நான் இப்ப ராஜூவை ஏதும் பர்சனலாய்ச் சொல்லலே.”

“புரிகிறது ஸௌமி. ஆனா காலம் மாறரதை நாம் தடுத்து நிறுத்திட முடியுமா?”

“குழந்தைகளை நாம் தடுத்துக் காப்பத்தலாமே?”

“உலகம்னா இப்படியெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் இந்த நாள் பசங்க வாழ்ந்தாகணும். அதுக்குமேல ஒழுங்காகவோ ஒழுக்கங்கெட்டோ நடந்துக்கறது அவா கையில இருக்கு.”

“பெரியவாளுடைய கன்ட்ரோலே அவசியம் இல்லைங்கறயா?”

“கன்ட்ரோல் பண்ணினா இன்னும் பிச்சுண்டு கிளம்பும், அவ்வளவுதான்.”

“குழந்தைகளுக்கு உதவி தேவை. அப்பா அம்மா வேற எதுக்குத்தான் இருக்கா?”

“தங்களுடைய அன்பு என்னிக்கும் அவாளுக்காகத் திறந்தே இருக்கும்னு குழந்தைகளுக்குக் காட்டத்தான். வேறு எப்படி உதவ முடியும்?”

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ஒரே சீராய்ப் போய்க் கொண்டிருந்த ஒன்றில் சிறு இடலுணர்வா? ஸௌம்யா தன் டிபன் தட்டை மேஜைமேல் வைத்தாள். வற்றல் இன்னும் மீதம் இருந்தது. ஸவிதா கண நேரம் அமைதி இழந்தாள். பிறகு கையை நீட்டித் தங்கையின் கையை மெல்லப் பற்றி அமுக்கினாள்.

“இதைப் பற்றிக் கவலைப்படாதே ஸௌமி. அடிபட்டுக்காமல் யாரும் வளர முடியாது. குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைச்சுக்க முடியுமா? முதல்லே, அவ அதை ஏத்துப்பாளா? சொல்லு. போகட்டும், புதுசா ஒரு ஹிந்திப்படம் வந்திருக்கே, போகலாமா? நீ அதை ஏற்கனவே பம்பாயில் பார்த்துட்டியா?”

“இன்னும் பார்க்கலே, போகலாம்.”

புதிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்று சகோதரிகள் வெகுநேரம் அதைப் பற்றி விவாதித்தார்கள்> ஸௌம்யாவுக்குப் படம் பிடிக்கவில்லை. “இப்படிப் பச்சையாய் எடுத்தால்தான் நல்ல படம்னு அர்த்தமா? இப்போதெல்லாம் சினிமா, இலக்கியம் எல்லாத்திலேயும் இந்தப் பச்சைத்தனம் ரொம்ப அதிகமாகி அசிங்கமாயிண்டு வரது. உனக்கு அப்படித் தோணலே?” என்றாள்.

“நாம அசிங்கத்தை விட்டுட்டு அதிலெல்லாம் இருக்கக்கூடிய கதை, கலை முதலான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துண்டு ரசிப்போம்.”

“முதல்லே விஷத்தைக் கொட்டுவானேன்? அப்புறம் அதில் நல்லது எங்கேன்னு தேடிண்டிருப்பானேன்? தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற சமாசாரந்தான்.”

அன்று இரவு ஸௌம்யா தன் பெட்டியிலிருந்து இரண்டு ஆங்கில சஞ்சிகைகளை எடுத்துக் குறிப்பிட்ட பக்கங்களில் திருப்பிச் சகோதரியிடம் கொடுத்தாள்.

ஸவிதாவின் கண்கள் விரிந்தன. “அட, உன் பேர் போட்டிருக்கே! கதையா? நீ கதை கூட எழுதறியா! எப்பலேருந்து? எனக்குச் சொல்லவே இல்லையே?”

“வெக்கமாயிருந்தது. மெள்ளச் சொல்லிட்டுக் காட்டலாம்ன்னுதான் எடுத்துண்டு வந்தேன். இப்போ ஒரு வருஷமாய்த்தான். எப்பவானும், சும்மா ஆசைக்கு படிச்சுப் பாரேன்.”

படித்ததும் ஸவிதாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை.

“ரொம்ப அருமையாய் எழுதியிருக்கே ஸௌமி! நீ காலேஜில் இங்கிலீஷ்லே மெடலிஸ்ட்னு ஒவ்வொரு வரியும் சொல்றது. அற்புதமான நடை.”

“நடை கிடக்கட்டும். விஷயம் எப்படி?”

ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, “நல்ல கதைதான், ஆனா… நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு” என்றாள்.

“நம்மைச் சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கிறது என் லட்சியம்.”

இருவரும் மௌனமானார்கள். அந்த மௌனம் ஸவிதாவின் நெஞ்சில் உறுத்தியது. மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல் தங்கையுடன் அடையாறு பாலம் வரை நடந்து உலாவிவிட்டு வந்த பிறகுதான் அந்த உறுத்தல் மறைந்தது.  அப்பாடா! எல்லாம் முன்புபோல ஆகிவிட்டது.

ஒன்பது மணிக்கு நூலகத்திலிருந்து சேவகன் புதிய வாராந்தரப் புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பழையவற்றை வாங்கிக்கொண்டு போனான். ஸௌம்யா புதிய புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். இரண்டில் மெலிதாயிருந்ததன் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் கண்டதும், “ஓ இந்தப் புஸ்தகமா? நான் படிச்சிருக்கேன். ஸவி, நீ இதை அவசியம் படி. உனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

ஸவிதா அப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். எவ்விதமான இலக்கியத் தரமோ மானிட ரீதியான வெளிச்சமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை அந்த நூல். இதையா அவளுக்குப் பிடிக்கும் என்றாள் ஸௌம்யா? அவள் சொன்னதிலிருந்தெல்லாம் ஸௌம்யா புரிந்து கொண்டது அவ்வளவுதானா?

“ஈராஸ் தியேட்டரில் வர ஒவ்வொரு தமிழ்ப்படத்துக்கும் அவளை அழைச்சுண்டு போயிடறியே. ஸௌமி மேலே உனக்கு என்ன கோபம்?” என்றார் அவள் கணவர்.

“பம்பாயில் அவளுக்கு அடிக்கடி பார்க்க முடியாதது தமிழ்ச் சினிமா தானே? அவள் இஷ்டப்பட்டுத்தான் நாங்க போறோம். இல்லையா ஸௌமி?”

“ஓரா” என்றாள் ஸௌம்யா. மற்றவர்கள் அர்த்தம் புரியாமல் விழித்தபோது ஸவிதாவுக்கு மட்டும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறுமிப் பருவத்தில் அவ்விருவரும் பெரியவர்களுக்குப் புரியாமல் தமக்குள் பேசிக்கொள்ள ஒரு ரகசிய மொழியை உருவாக்கியிருந்தார்கள். அவர்களாக ஏற்படுத்தும் பதங்களுக்கும் ஒலிச்சேர்க்கைகளுக்கும் தனித்தனியே அர்த்தம் கொடுத்த அந்த பிரத்தியேக அகராதியில் ‘ஓரா’ என்றால் ஆமாம் என்று பொருள். திடீரென அந்தரங்க மொழியை ஸௌம்யா பயன்படுத்தியபோது தம் ஒருமை மீண்டும் வலியுறுத்தப்படுவதுபோல் ஸவிதாவுக்குத் தோன்றியது. சகோதரிகள் புன்சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்கள்.

“சாயங்காலம் லேடீஸ் கிளப்புக்குப் போகணும். ஞாபகமிருக்கா?” என்றாள் ஸவிதா.

அவள் அங்கம் வகித்த மாதர் சங்கத்துக்கு அதுவரை சிலமுறைகள் சகோதரியை அழைத்துப் போயிருந்தாள். இன்று மற்ற உறுப்பினர்களிடம் தன் தங்கை கதை எழுதுவாள் என்று சொல்லிக்கொண்டபோது கண்களிலும் முகத்திலும் பெருமை ததும்பியது.

மன்றத் தலைவி ஸவிதாவிடம் அருகாமையில் உறைந்த ஓர் ஏழைப் பையனைப் பற்றி அன்று கூறினாள். கால் விளங்காத அவனைக் குடும்பத்தார் கைவிட்டார்களாம். பையன் படிக்க வேன்டும். அதைவிட முக்கியமாய்ச் சாப்பிட்டாக வேண்டும். அருகிலிருந்த ஒரு பள்ளிக்கூடக் காம்பவுண்டுக்குள் நாலைந்து நாட்களாகப் படுத்துக்கொண்டு அங்கிருந்து நகரமாட்டேனென்று அடம்பிடிக்கிறான். அவனது உடனடி விமோசனத்துக்காக மன்றத்தலைவி நிதி திரட்டிக் கொண்டிருந்தாள். “உங்களாலானதைக் கொடுங்க” என்று அவள் கேட்டபோது ஸவிதா பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். “நீங்க…?” என்று அப்பெண்மணி ஸௌம்யாவைப் பார்த்துக் குரலை நீட்டினாள். கணநேரம் தாமதித்த ஸௌம்யா ஒருதரம் சகோதரியை ஏறிட்டு விட்டுத் தன் பங்காக ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.

வீடு திரும்பும் வழியில் ஸவிதா, “பாவம், இல்லே அந்தப் பையன்?” என்றபோது ஸௌம்யா உடனே பதில் சொல்லவில்லை.

“என்ன ஸௌமி பேசாமலிருக்கே?”

“என்ன பேசறது? பாவம். எனக்கு மட்டும் வருத்தமாயில்லேன்னு நினைக்கிறியா? ஆனா..”

“ஆனா…?”

“இதெல்லாம் பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்சினை. தனி மனுஷா உதவியில் என்ன ஆகும்? நம்ம நாட்டில் வறுமை ஒரு அடியில்லாத பள்ளம். அதில் எத்தனை போட்டாலும் நிரம்பாது. அதனால், போட்டு என்ன பிரயோசனம்?”

“அடியில்லாத பள்ளந்தான். போட்டு நிரம்பாதுதான். அதனால் போட்டவரைக்கும் பிரயோசனம்.”

சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர். இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.

ஹாலுக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. ஸவிதாவின் பதினான்கு வயதான மகளின் கையிலிருந்து அப்போதுதான் வந்திருந்த பத்திரிக்கையைப் பிடுங்குவதற்காக அவளைவிட இரண்டு வயது இளையவனான தம்பி ஓடித் துரத்திக் கொண்டிருந்தான்.

“குட்றீ அதை எங்கிட்ட!”

“போடா தடியா, நான் பாத்துட்டுதான்.”

“அமிதாப்பச்சனை ஒடனே பாக்காட்டால் தலை வெடிச்சுடுமோ?”

இருவரும் கத்திக்கொண்டே விடாமல் ஓடினார்கள். சோபாவுக்குப் பின்னிருந்து வேகமாய் மூலை திரும்பிப் பாய்ந்தபோது பையன் சுவர் அலமாரியில் மோதிக் கொண்டான். அதன்  கண்ணாடிக் கதவு உடைந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓர் உயரமான ‘கட்கிளாஸ்’ ஜாடி பக்கவாட்டில் சரிந்தது. அது கீழேவிழுமுன் ஸவிதா ஓடிப்போய் அதைப் பிடித்துக் கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. “கடங்காரா, அதென்ன கண்மூடித்தனமாய் ஓட்டம்? இப்போ இது உடைஞ்சிருந்தா என்ன ஆயிருக்கும்?” என்று மகனைப் பார்த்து மூச்சிரைக்கக் கோபமாய்க் கத்தினாள்.

பையன் தலை கவிழ்ந்தது. “ஸாரிம்மா!” வேகம் அடங்கி அவனும் அவன் அக்காவும் அறையை விட்டு வெளியேறினார்கள்.

ஸவிதாவின் படபடப்பு அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று. ஸௌம்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பாரேன் ஸௌமி, நம் அப்பா அம்மா கொடுத்ததுன்னு  நான் இதை ஒரு பொக்கிஷம் மாதிரி காப்பாத்தி வச்சுண்டிருக்கேன். அது தெரிஞ்சும் இந்தக் குழந்தைகளுக்கு எத்தனை அஜாக்கிரதை?”

ஸௌம்யா ஏதும் சொல்லவில்லை.

“இது உடைஞ்சிருந்தால் எனக்கு உயிரே போனாப்பல இருந்திருக்கும். இதன் ஜோடியை உனக்குக் கொடுத்தாளே, நீயும் பத்திரமாய்த்தான் வச்சிருப்பே, இல்லையா,”

“பத்திரமாய்த்தான் இருக்கு.”

“இதே மாதிரி ஹால்லேதான் பார்வையாய் வச்சிருக்கியா நீயும்,”

“வச்சிருந்தேன்.”

“அப்படின்னா?”

“மேல் ஃப்ளாட் பொண்ணு அதைப் பார்த்து ரொம்ப அழகாயிருக்குன்னு பாராட்டினாள். அதனாலே அவள் கல்யாணத்துக்குப் பரிசாய்க் கொடுத்துட்டேன்.”

ஸவிதா அதிர்ந்து நின்றாள்.

“என்ன! கொடுத்துட்டயா? அதை விட்டுப் பிரிய உனக்கு எப்படி மனசு வந்தது?”

“ஏன் வரக்கூடாது?”

“அப்பா அம்மா நினைவாய்…”

“அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?”

மீண்டும் கத்தி முனையில் விநாடி இடறியது. சகோதரிகள் ஒருவரையொருவர் தீவிரமாய் வெறித்தார்கள். பார்வையில் குழப்பம்.

“நான்போய் நமக்குக் காபி கலக்கிறேன் ஸவி. ஜாடியை ஜாக்கிரதையாய் வச்சுட்டு வா.”

ஒரே அளவு இனிப்புச் சேர்த்த காபியை அவள் எடுத்துவர, இருவரும் பருகினார்கள். நழுவிப்போகும் ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொள்ளும் செயலாய் அது இருந்தது.

அதற்குள்ளாகவா இரு மாதங்கள் முடியப்போகின்றன? அந்த ஏக்கம் இருவர் பார்வையிலும் தெரிந்தது. அடிக்கடி ஒருத்தி தோழமையை மற்றவள் நாடிவந்து உட்கார்ந்துகொள்வதிலும் ‘இது அவளுக்குப் பிடிக்கும்’ என்று பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், ‘அடுத்த சந்திப்பு எப்போதோ?’ என்ற தாபம் தொனித்தது. எனினும் அத்தனை ஆந்தரிகத்திலும் இப்போதெல்லாம் பேச்சில் ஒரு கவன உணர்வு. சிரித்துக்கொண்டே அரட்டையடிக்கும்போது, பழைய நினைவுகளையோ இத்தனை வருஷக் கதைகளையோ பகிர்ந்து மகிழும்போது, சட்டென்று எழும்பிவிடக்கூடிய சுருதி பேதத்தைத் தவிர்க்க முனைந்து கொண்டே இருக்கும் ஒரு ஜாக்கிரதை. விளிம்புக்கு இப்பாலேயே இருக்க வேண்டுகிற கவலையில் நிழலாடும் ஒரு தயக்கம்.

அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் பிரதியைத் தபால் மூலம் பார்த்துவிட்டு ஸௌம்யாவின் கணவர், “அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டாயே! ‘நான்தான் ஸௌம்யா’ என்று நெற்றியில் அச்சடித்துக் கொண்டுவா” என்று எழுதியிருந்தார். அவரும் குழந்தைகளும் எழுதும் கடிதங்கள் மேற்போக்கில் உல்லாசமாயும் இயல்பாகவும் தொனித்த போதிலும் அவளுடைய இல்லாமையை மிகவும் உணர்கிறார்களென்ற ஜாடை புரிந்தது. விரைவில் கிளம்பிவிட வேண்டியதுதான்.

தாம் இனி இப்படி வருஷக்கணக்காகப் பிரிந்திராமல் ஆண்டுக்கொரு தடவை ஒருவரையொருவர் முறை வைத்துப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சகோதரிகள் தீர்மானித்துக் கொண்டார்கள்.

“நியூ இயர் ரெஸொல்யூஷன் மாதிரி ஆயிடக்கூடாது இது!” என்று ஸௌம்யா கூறிச் சிரித்தபோதே அவள் கண்கள் பனித்தன. ஸவிதாவின் மோவாய் நடுங்கியது. எதுவும் சொல்லாமல் ஓர் அட்டைப்பெட்டியை எடுத்து வந்து நீட்டினாள். அதனுள் ஓர் அடையாறு கைத்தறி நூல் சேலை. சிவப்பு உடல், மஞ்சளில் அகலமான கோபுரக்கரை.

“எதுக்கு இதெல்லாம் ஸவி?”

“பேசப்படாது. வைச்சுக்கோ.”

“உன் இஷ்டம். எனக்கு மட்டுந்தானா?”

“இதோ எனக்கும்.”

மயில் கழுத்து நிறம். ஆனால் அதே அகலக்கரை.

மீண்டும் புன்னகைகள் பேசின.

நாட்களின் தேய்வில் கடைசியாக இன்னொரு நாள். ஸௌம்யா ஊருக்குப் புறப்படும் நாள். ரெயிலுக்குக் கிளம்பும் நேரம். சாமான்கள் கட்டி வைக்கப்பட்டுத் தயாராயிருந்தன.

“கிளம்பிட்டாயா ஸௌமி?” ஸவிதாவின் குரல் கம்மியது.

“நீயும் ஸ்டேஷனுக்கு வரயோன்னோ ஸவி?”

ஆவலுக்கு ஆவல் பதிலளித்தது. “கட்டாயம்.”

“எப்போ எந்த ஊருக்குக் கிளம்பறதுக்கு முந்தியும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றது என் வழக்கம்.”

ஸவிதா மௌனமாய் இருந்தாள். ஸௌம்யாவின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

“ஆனா இங்கே பூஜை அறையே இல்லையே?” என்றாள் தொடர்ந்து.

“இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போதாதா?”

“நம்பிக்கை இருந்தால்னா? உன் நம்பிக்கை அந்த மாதிரின்னு சொல்றயா?” திடீரென்று ஸௌம்யாவின் முகம் மாறியது. “அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லைன்னு அர்த்தமா?”

“நான்… நான் அதைப்பத்தி ஏதும் யோசிச்சுப் பார்த்தது கிடையாது” ஸவிதாவுக்கு சங்கடம் மேலோங்கியது. “இப்போ எதுக்கு விவாதம் ஸௌமி, ஊருக்குக் கிளம்பற சமயத்திலே?”

“என்ன ஸவி இது! இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்ராயம் இல்லையா?”

“இதை ஒரு பெரிய விஷயம்னு நான் நினைக்கலே.”

ஸௌம்யாவின் கண்கள் அதிர்ச்சியில் பிதுங்கின. அவர்களுடைய சிறுமிப் பருவத்தின் சூழ்நிலை எத்தனை பக்திமயமானது! அம்மா அன்றாடம் பூஜை செய்வாள். சாயங்காலமானால், ‘போய்ச்  சுவாமி அறையிலும் துளசி மாடத்திலும் விளக்கு ஏத்துங்கோடி’ என்று பணிப்பாள். அவர்களை வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்கு அழைத்துப் போவாள். தோத்திரங்களெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். ‘வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் துணை இருக்கிறது ஆண்டவன் பெயர் ஒண்ணுதான்’ என்று போதிப்பாள். தான் அந்த வழியிலேயே நடந்து வந்திருக்க, இவளுக்கு மட்டும் என்ன ஆயிற்று?

“தெய்வ நம்பிக்கையை இழக்கற மாதிரி உனக்கு அப்படி என்ன அனுபவம் ஏற்பட்டது ஸவி?”

“அந்த நம்பிக்கை இழந்துட்டேனா இல்லையான்னு எனக்கே நிச்சயமாய்த் தெரியாது. ஆனா, அனுபவம்னு நமக்கே ஏற்பட்டால்தானா? கண்ணும் காதும் மனசும் திறந்துதானே இருக்கு? போகட்டும், உலகத்தின் பிரச்சினைகளையெல்லாம் பார்க்கறபோது இந்த விஷயம் ஒரு தலைபோகிற பிரச்சினையாய் எனக்குத் தோணலேன்னு வச்சுக்கோயேன்.”

“எத்தனை அலட்சியமாய்ச் சொல்லிட்டே? ஆனா நான், தெய்வத்தை நம்பலேன்னா என்னால் உயிரோடயே இருக்க முடியாது.”

பார்வைகள் எதிரெதிராய் நின்றன. அவற்றில் பதைப்பு, மருள். ஸௌம்யாவின் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை. தமக்கையைப் பார்த்த அவள் பார்வை ‘இவள் யார்?’ என்று வியந்தது. பிறகு கண்கள் விலகின.

ஸவிதா தவிப்பும் வேதனையுமாய் நின்றாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அர்த்தம் இருக்கும் போலவும் தோன்றவில்லை. ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு? ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல…

அன்பு… அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத்தான் அது இருக்கிறது.

மன்னிக்கவும். ஹெரால்ட்ராபின்ஸ்! வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைத்தான் அன்பு செய்து கொண்டிருக்கிறோம்.

“நாழியாறதே! பேசிண்டேயிருந்தால் ஸ்டேஷனுக்குக் கிளம்ப வேணாமா? வாசலில் டாக்ஸி ரெடி” என்றவாறு அங்கு வந்த அவள் கணவர் அவர்களைப் பார்த்து, “உங்க பேச்சுக்கு ஒரு ‘தொடரும்’ போட்டுட்டு வாங்கோ. அடுத்த சந்திப்பில் மறுபடியும் எடுத்துக்கலாம்” என்றார் சிரித்துக்கொண்டே.

“இதோ வரோம். வா ஸௌமி!” ஸவிதா தங்கையின் கையைப் பற்றிக் கொண்டாள். சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கைப்பிணைப்பு விலகவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

Image result for தமிழ் மாதங்கள்

(நன்றி:    http://www.tamilhindu.com/2012/05/tamil-months-and-nakshatras/)

ஒரு கருத்தரங்கில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் பௌர்ணமியன்று இணையும் நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று கூறினார். 
அந்த செய்தியைக் கேள்விப்பட்ட கலைஞரால்  சும்மாயிருக்கமுடியுமா?
சித்திரை , கார்த்திகை என்ற  மாதங்களுக்கு வேண்டுமானால் அவை பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் அதற்கு பூசை என்று வைக்காமல் ஏன் ‘தை’ என்று வைத்தார்கள் என்று தமது தமிழ் அறிவையும் அவருக்கே உரிய நக்கலையும் புலப்படுத்தினார். 
அதற்கு எதிராக  ராமச்சந்திரன் என்பவர்  தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் கூற்றை  மறுத்து  எழுதிய ஆதாரபூர்வமான மறுமொழியின் சுருக்கம் இக்கட்டுரை.

 

சித்திரை, வைகாசி முதலிய 12 மாதங்களின் பெயர்களும், அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்ட பெயர்கள் தான்  என்று  ஆணித்தரமாகக் கூறியுள்ளார். 

 

சித்திரை நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் -சித்திரை

விசாக  நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – வைகாசி

அனுஷம்  நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – ஆனி

பூர்வ ஆஷாட (பூராடம்)  நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – ஆடி

திருவோணம் (சிரவண) நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – ஆவணி

பூரட்டாதி நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – புரட்டாசி

அஸ்வதி  நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – ஐப்பசி

கார்த்திகை நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – கார்த்திகை

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – மார்கழி

பூஷ்யம் அல்லது தைஷ்யம் என்ரு சொல்லப்படும் பூச நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – தை

மகம் நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – மாசி

உத்தர பால்குன நட்சத்திரத்தில்  பௌர்ணமி வரும் மாதம் – பங்குனி.

 

இப்படிப் பார்த்துப் பார்த்து அமைத்திருக்கிறார்கள்.

நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? 

வியு (VIU )

வியூ (VIU ) என்ற வீடியோ ஒளிபரப்பு திட்டம் சிங்கப்பூர் , ஹாங்காங் போன்ற நாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது.

இப்போது  அது தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறது. 

துவக்க விழா வீடியோவை மேலே பார்க்கலாம். 

தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே காணக்கூடிய அளவில்        ( ஐ பி அட்ரஸ் கண்காணிப்பு) அமைக்கப்பட்டுள்ளது. 

மணிகண்டன் , வெங்கட் பிரபு போன்ற பிரபலங்கள் தயாரிக்கும் அசல் குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரியா நாடகங்களையும் தமிழ்த் திரைப்படங்களையும் இந்த சானலில் காணலாம். 

தமிழில் நல்ல புதிய வீடியோக்கள் இல்லையே என்று ஏங்கும் தமிழ் இளைஞர்களைக் கவர்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள செயலி (app ) இது. 

வியூ தயாரித்து வரும் வீடியோக்கள் 

கல்யாணமும் கடந்துபோகும் : நலன் குமாரசாமியுடன் இணைந்து. இதன் டிரைலர் பாருங்கள்  m 

மற்றவை :

மதராஸ் மேன்ஷன் : சூப்பர் டாக்கீஸ் உடன் இணைந்து 

கதவு எண்  403

நிலா நிலா ஓடி வா 

குறும்படங்கள்: 

வெங்கட் பிரபுவின் மாஷா அல்லா .. கணேஷா 

 விஜய் சேதுபதி நடிக்கும்  மணிகண்டனின் காற்று

இந்திர விழா

Image may contain: 1 person, smilingImage may contain: 8 people, people sitting

இந்திரன் 70 சென்னையில் அக்டோபர் 6ஆம் தேதி  நடைபெற்றது.

அந்த விழாவில் பங்கு கொண்ட நண்பர் மந்திரமூர்த்தி முகனூலில் எழுதியது:

” நேற்று சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்ய கலைபண்பாட்டு மையத்தில் பன்முகக் கலைஞரான கவிஞர் இந்திரன் அவர்களுக்கு ‘இந்திரன்- 70’ பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர் இவர். மும்பையில் 70 – வருடங்களில் வங்கியில் வேலை செய்தவர். யார் மீதும் எந்த வருத்தமும் இல்லாதவர் இந்திரன் என்று சிறப்பாகச் சொன்னார் கவிஞா் சிற்பி. மும்பையில் வேலை செய்த காலங்களில் விடுமுறை நாட்களில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞா் இந்திரன், தானும் கூடி தமிழ் இலக்கியங்கள் குறித்து மணிக்கணக்காகப் பேசுவதுவுண்டு என்ற தகவலை மேடையில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் ஞானசேகரன்.

எழுத்தாளர் இந்திரன்தான் தமிழில் தலித் இலக்கியம் குறித்து முதலில் எழுதியவர். கவிதை தவிர ஓவியம், சிற்பம்,சினிமா என பலவற்றைக் குறித்தும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், இயக்குநர் ஞானசேகரன், சுந்தரபுத்தன், வசந்த் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருமே சிறப்பாகப் பேசினர்.

உரைகளை நண்பர் Shrutitv Che சுருதி டிவியில் காண்க.

100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்

Related image

திரு எஸ் ராம கிருஷ்ணன்  அவர்கள் வெளியிட்டது

நன்றி: http://www.sramakrishnan.com/

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு கலந்துரையாடல் நிகழ்விற்குச் சென்றபோது பெரும்பான்மையினர் கேட்ட கேள்வி. எந்தப் புத்தகங்கள் முக்கியமானவை. எதை நாங்கள் படிக்க வேண்டும். அதுபற்றிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா என்பதே. முன்பு ஒருமுறை இது போன்றதொரு விருப்பபட்டியல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறேன். தற்போதைய தேவையை முன்னிட்டு கட்டாயம் வாசிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பும் 100 சிறந்த புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இவை முதன்மையாக படைப்பிலக்கியம் சார்ந்தவை.

1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் மூலமும் உரையும்
7) திருஅருட்பா மூலமும் உரையும்.
8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14)பாரதிதாசன் கவிதைகள்.
15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்
16)பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.
17)திருப்பாவை மூலமும் உரையும்
18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19)சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
20)தனிப்பாடல் திரட்டு.
21)பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24)மௌனி கதைகள்
25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45)சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46)மதினிமார்கள் கதை கோணங்கி
47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்
50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53)கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்
54)மோகமுள் – தி.ஜானகிராமன்
55)பிறகு .பூமணி
56)நாய்கள் நகுலன்
57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58)இடைவெளி – சம்பத்
59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
60)வாசவேஸ்வரம் – கிருத்திகா
61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64)பொன்னியின் செல்வன் கல்கி
65)கடல்புரத்தில் வண்ணநிலவன்
66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67)சாயாவனம் சா.கந்தசாமி
68)கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்
69)காகித மலர்கள் ஆதவன்
70)புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்
71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72)விஷ்ணுபுரம் ஜெயமோகன்
73)உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்
74)கூகை சோ.தர்மன்
75)ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்
76)ம் ஷோபாசக்தி
77)கூளமாதாரி பெருமாள் முருகன்
78)சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்
79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82)கல்யாண்ஜி கவிதைகள்
83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு. யூமா வாசுகி
95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு
96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்
98)தமிழக நாட்டுப் புறப் பாடல்கள் – நா.வானமாமலை
99)பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்
100)கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்

இந்தப் பட்டியல் என் நினைவிலிருந்து உருவாக்கபட்டது. விடுபடல்கள் நிச்சயம் இருக்க கூடும். அத்தோடு இது தரவரிசையல்ல. இவை நான் முக்கியம் என நினைக்கும் புத்தகங்கள். இந்தப பட்டியலுக்கு வெளியிலும் மிக முக்கியமான புத்தகங்கள் நிறைய உள்ளன.

இந்தப் பட்டியலோடு மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள், சரித்திரம் நுண்கலைகள், சினிமா தொடர்பான முக்கியப் புத்தகங்களின் தனித்த பட்டியல் ஒன்றையும் இன்னொரு நாள் வெளியிடுகிறேன்

உறுபங்கம் – நாடகம்

Image result for urubhanga drama by bhasa in tamil

“உறுபங்கம்” அல்லது (உறூபங்கா) என்ற நாடகம் கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது  என்றாலே நமது மதிப்பில் அது எகிறுகிறது அல்லவா?

மஹாகவி பாஸா என்பவர் எழுதியது ‘உறுபங்கா’ என்ற நாடகம் . மகாபாரதத்தின் கிளைக்கதை.

போர்க்களத்தின் ஓரத்தில் துரியோதனன் பீமனால் தொடை பிளந்து கிடக்கும் காட்சி.

அதற்குப்பின் நிகழும் காட்சிகள்தான் நாடகமே.

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் , இந்த நாடகம் துரியோதனனை நாயகனாக வரிக்கிறது.

வித்தியாசமாக இருக்கவேண்டும்  என்பதற்காக எழுதப்பட்டதா அல்லது   அந்தக் காலத்து மனோகரால் அமைக்கப்பட்டதா  என்பது  தெரியவில்லை.

துரியோதனன் மற்போரில் பீமனை அடித்துக் கீழே தள்ளிவிடுகிறான். அவன் நினைத்திருந்தால் பீமனைக் கொன்றிருக்க முடியும். ஆனாலும் யுத்த தர்மத்தின்படி கிழே விழுந்தவனை எழுந்து போரிட வா என்று காத்திருக்கிறான்.  பீமன் யுத்த நெறிகளுக்கு மாறாக துரியோதனனைத் தொடையில் பிளந்து  வெற்றி  கொள்கிறான். வெற்றி பெற்ற பீமனைப் பாண்டவர்கள் இழுத்துச் சென்று விடுகிறார்கள்.

அதன்பின் துரியோதனின் செயல்களும் உரையாடல்களும் அவனைத் துன்பயியல் நாடகத் தலைவனாக மாற்றுகின்றன.

மல்யுத்தத்தில் நடந்த அநீதியைக் கண்ட பலராமர் பொங்கி பீமனை அழிக்க எண்ணும்போது துரியாதனன் அவரைத் தடுக்கிறான். பாண்டவர் தவறு எதுவும் இல்லை, அனைத்தும் கிருஷ்ணன் எண்ணப்படியே நடக்கின்றன என்றும் கூறுகிறான்.

Image result for urubhanga drama by bhasa in tamil

தன் மகனை மடியில் வைத்துக் கொஞ்ச தொடையில்லையே என்று  வருந்துகிறான். கண் இல்லாத தன் தந்தை தாயின்  கதி இனி என்னாகுமோ என்று  கலங்குகிறான். போரில் நடைபெற்ற கொடுமைகளை  எண்ணி வேதனைப்படுகிறான்.

அந்தக்கால மரபுப்படி துன்ப இயல் நாடகத்தை அப்படியே முடித்துவிடக் கூடாது.

அதனால் முடிவில் அஷ்வத்தாமன் மேடைக்கு வந்து  பாண்டவர்களை எப்படியாவது கொல்வேன் என்று துரியோதனன் முன் சபதம் எடுக்கிறான். துரியோதனன் மகனை அடுத்த மன்னனாக்கி நாடகத்தை முடிக்கிறார்கள்.

சமீபத்தில் கன்னடம் வங்காளம் போன்ற மொழிகளில் “உறுபங்கம்” நாடகமாக  வந்து மக்களின் பாராட்டைப் பெற்றது.

பலப்பல பிறவிகள் வேண்டும்..! – கோவை சங்கர்

Worship Lord Muruga on Skanda Sashti to get his direct blessings and achieve whatever you want in life.!

பலப்பல பிறவிகள் வேண்டும் முருகா – உன்
பாதம் தொழுது நான் மகிழ்வதற்கே..!

அழகின் திருவுருவம் முருகா – என்
கனவிலும் நினைவிலும் நீதானே மருகா
உன்முகத்தைப் பார்க்கையிலே சூழலையும் மறக்கின்றேன்
தித்திக்கும் மதுவுண்ட வண்டாக ஆகின்றேன்!

நீநினைவில் நின்றாலே குழப்பமில்லை
மனதினிலே ஒருபோதும் கலக்கமில்லை
வஞ்சகரை யெதிர்த்திடவே தயக்கமில்லை
எதிரிக்கென் முன்வரவே துணிச்சலில்லை..!

பேச்சிலே கடுமையிலை நோக்கிலே கொடுமையிலை
நெஞ்சிலே கோபமிலை மனதினிலே தாபமிலை
அமைதியாய் இருக்கின்றேன் வெற்றி வடிவேலா
இன்பத்தில் திளைக்கின்றேன் சக்தி சிவபாலா..!

OM SUR INDIA.

அம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை ! – சதுர்புஜன்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 • கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
  ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  போளி புராணம் ஆகஸ்ட் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  அன்னை கைமணக் குறள்கள் செப்டம்பர் மாதம் 2௦18 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது

Related image

கலந்த சாதக் கவிதை !

வாழ்க்கை என்பது வரப்பிரசாதம் – அது
இன்பமும் துன்பமும் கலந்த சாதம் !
வாய்க்கு வாய் ருசியோ ருசிதான் – அது
வாழும் விதத்தில் இருக்குது மனிதா !

குழந்தை பருவம் இனிக்கும் காலம் – நமக்கு
இயற்கை வழங்கிய இனிப்பு சாதம் !
மழலை பேசியும் மரங்களில் ஏறியும்
மண்ணில் புரண்டும் மகிழும் காலம் !

வளரும் பருவம் வசந்த காலம் – அது
உப்புகாரம் ஏறிய எலுமிச்சை சாதம் !
சுறுசுறுவென்றும் விறுவிறுவென்றும்
துள்ளித் திரியும் இளமைக் காலம் !

காளையர் கன்னியர் காதல் காலம் – அது
மனதில் வெடிக்கும் அப்பளம், வடகம் !
நன்றாய்ப் பொரிந்தால் நல்லது நடக்கும்
சரியில்லையென்றால் சோகத்தில் முடியும் !

நடுவிலே வந்ததோர் பெற்றோர் காலம் – அது
நெடுநாள் நிற்கும் புளியஞ்சாதம் !
பொறுக்கி எடுத்து கடலைகள் தின்போம் !
பொறுப்புகள் சுமக்கும் கமகம காலம் !

அனைத்தையும் சமன்செயும் கடைசிக் காலம் – அது
குளிர்வித்து அமைதி தரும் தயிர் சாதம் !
அப்போதும் நமக்கு ஊறுகாய் வேண்டும் –
தொட்டுக்கத் தொட்டுக்கத் தொடரும் காலம் !

வாழ்க்கை என்பது வரப்பிரசாதம் – அது
இன்பமும் துன்பமும் கலந்த சாதம் !
வாய்க்கு வாய் ருசியோ ருசிதான் – அது
வாழும் விதத்தில் இருக்குது மனிதா !