அம்மாவின் கை உணவு எழுதிக்கொண்டு வரும் திரு சதுர்புஜன் ( உண்மைப் பெயர் பாஸ்கர் ) அவர்களுக்கு பிப்ரவரியில் ஸ்வீட் 60 .
வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
இதுவரை .வந்தவை :
1. கொழுக்கட்டை மஹாத்மியம் , 2. இட்லி மகிமை, 3. தோசை ஒரு தொடர்கதை, 4. அடைந்திடு சீசேம், 5. ரசமாயம்
6. போளி புராணம் , 7. அன்னை கைமணக் குறள்கள் , 8. கலந்த சாதக் கவிதை , 9. கூட்டுக்களி கொண்டாட்டம்
10. சேவை செய்வோம்
இப்போது
பஜ்ஜி பஜனை !
இடி இடிக்குது மின்னலடிக்குது
போடலாமா பஜ்ஜியை ?
கடலை மாவைக் கரைத்துக் கலந்து
வெட்டலாமா காய்களை ?
உருண்டு திரண்ட உருளைக் கிழங்கு
நான்கே நான்கு வேண்டுமே !
வெங்காயமும் இருந்துவிட்டால்
விறுவிறுப்பு கூடுமே !
வாழைக்காய் இல்லையெனில்
பஜ்ஜி என்பதில்லையே !
கத்திரி, மிளகாய் இல்லையெனில்
கதை முடிவதில்லையே !
அழகழகாய்க் காய்களையே
அரித்து எடுத்துக் கொள்ளுவோம் !
எண்ணைச் சட்டி காய வேண்டும் –
பொறுமை வேண்டும் மக்களே !
கடலை மாவில் தோய்த்தெடுத்து
காயைப் போட்டுத் திருப்பும்போது
இஸ்ஸ் என்ற சத்தம் வந்து
இனிய இம்சை செய்யுமே !
எண்ணையை வடிய வைத்து
எடுத்து எடுத்து போடுவாள் !
போடப் போடக் கணக்கு இன்றி
கபளீகரம் பண்ணுவோம் !
நாக்கு சுடும் என்று சொல்லி
நன்றாய் உள்ளே தள்ளுவோம் !
கண்களிலே கண்ணீர் வர
கணக்கு இன்றி உண்ணுவோம் !
சட்னி சாம்பார் சேர்ந்து விட்டால்
சுவை கூடிடும் உண்மையே !
ஒன்றுமில்லாமல் உண்பதென்றால்
அதுவும் எனக்கு சரி சரி !
சுடச்சுட சுட பஜ்ஜி உண்டு
சுவையில் திளைத்து ஆடுவோம் !
எடுக்க எடுக்க கைக்கும் வாய்க்கும்
போட்டி முடியவில்லையே !
இந்தியாவில் எங்கு சென்றும்
இந்த பஜ்ஜி உண்ணலாம் !
பக்கோடா என்று சொல்கிறான் –
பார்த்தால் நம்ம பஜ்ஜிதான் !
சுபா, கிரி, ரவி, பிரேமா –
எல்லோருமே வாருங்கள் !
பஜ்ஜியை ஒரு பிடி பிடிப்போம் –
கூடித் தின்போம் வாருங்கள் !