வெகுநாட்களுக்குப் பின்
இன்று வானத்தில் மேகமூட்டம்
மகிழ்ச்சியாய் இருக்கிறது
இரவு எப்படியும் மழைவரும்
இன்றுதான் வைக்க வேண்டுமா
சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
மாலைநேரம் முடிந்து
இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது
அலுவலக மேலாளரைக் கடிந்துகொண்டே
கால்கள் நடைபோட்டன
பேருந்து நிலையம் நோக்கி
மல்லி வாங்காததற்காய்
தினமும் ஏளனமாய்க்
கடந்து செல்லும்
அதே பூக்காரரை அழைத்து
மல்லி வாங்கி பக்குவமாய்க்
கைப்பையில் மறைத்தாயிற்று
அவளுக்குப் பிடித்த தேன்மிட்டாய்
எனக்குப் பிடித்த உலர்திராட்சை
இருவருக்கும் பிடித்த இஞ்சிமிட்டாய்
மறக்காமல் வாங்கியாகிவிட்டது
வீடு திரும்பையில்
தினமும் செல்லும்
பிள்ளையார் கோவில்
இன்று ஒருநாள் மட்டும்
வேண்டாமென முடிவாயிற்று
இன்னும் வரவில்லை
வீடு செல்லும் பேருந்து
நேரம் 8.30 நெருங்கிவிட்டது
மூ(பூ)த்த மகளும், இளைய மகளும்
படிக்கும் பள்ளியில் இன்று
இன்பச் சுற்றுலா செல்கிறார்கள்
நள்ளிரவில் புறப்படுவதாய்த் திட்டம்
இரவே பள்ளிக்குச் செல்ல வேண்டுமாம்
வீட்டிற்குச் செல்ல இன்னும்
அரைமணி நேரமாகும்
இன்றிரவு மகள்கள்
வீட்டில் இருக்கமாட்டார்கள்
எல்லா ஏற்பாடுகளும் சரி
இன்று என்னவளுக்கு … …
அப்படி இருக்க வாய்ப்பில்லை
வழக்கம் போலவே காலையில்
மகள்களுக்கு அவள்தானே
விபூதி வைத்துவிட்டாள்
எப்போதாவது வீடு வரும்
உறவினர்கள் இன்று மட்டும்
வந்திருக்கக் கூடாது
மனதினுள் மௌனப் பிரார்த்தனை
சில நிமிட நடையில்
வீடடைந்துவிடலாம்
நல்ல நாவலின் கடைசி
பத்துப் பக்கங்கள் புரட்டும்
பரபரப்பு மனதில்
வாசல் நுழைந்ததும்
வண்ண மயிலாய் அவள்
கட்டியிருந்த கசங்காத புடவையில்
கசங்குகிறது மனம்
அவள் இதழ்களில் உதிரும் புன்னகை
இது வழக்கத்திலிருந்து மாறுபட்டுள்ளது
இன்று வானமும் மகிழ்ச்சியாயிருக்கிறது
இடியும் மின்னலுமாய் வெளியில் வானம்
வெகுநாட்களுக்குப் பின்
இன்று வானத்தில் மேகமூட்டம்
இன்னும் சிறிது நேரத்தில்
எப்படியும் மழைவரும்
கவிஞரே, நிச்சயம் உம் மனது போலவே மழை வந்திருக்கும் அல்லவா? சபாஷ்!
LikeLike