முனிவரும் மனமகிழ்ந்து தகுதிவாய்ந்த அங்கிரஸைப் பேசும்படி பணித்தனர்
அனைத்தும் அர்ப்பணித்த இமவானே! மலையினும் பெரிய மனம் உனக்கு !
உலகை அடக்கிய விஷ்ணுபோல் உயிர்கள் அனைத்தும் உன்னிடம் அடக்கம்
பூமியைத் தாங்கும் உன்னால் ஆதிஷேஷனும் சிரமமின்றி இருக்கின்றான்
உன்மடியில் தவழும் கங்கையும் பிறநதியும் உலகையே உய்விக்கின்றன
விஷ்ணுபாதம் உதித்த கங்கை மறுபடி உன்னிடம் உதித்துப் பிறந்தாள்
உலகளவு உயர்ந்த பெருமாள் போல் நீயும் உயர்ந்து பரந்திருக்கிறாய்!
தேவரைப் போல் யாகத்தில் பாகம் பெரும் நீ தங்க மேருவை மங்க வைத்தாய்
மலைவடிவில் கடினம் கொண்ட நீ மனத்தளவில் மிகவும் மென்மையானவன்
உனக்கு நன்மைதரும் செயலை எடுத்துரைக்கவே நாங்கள் வந்துள்ளோம் !
சகல சித்தியும் புத்தியும் சக்தியும் பெற்றவர் சிவபெருமான் என நீ அறிவாய்
ரதத்தினைத் தாங்கும் குதிரைபோல் அண்ட சராசரத்தைக் காப்பவர் அவரே
ஆத்மாவிற்கும் ஆத்மா அவர்! தவத்தின் பலன் தரும் பரம்பொருளும் அவரே!
உலகிற்கே நலன்தரும் நம்பிரான் உன்மகள் பார்வதியை வேண்டுகிறார்
சொல்லுடன் பொருள் சேர்வதுபோல் சிவ பார்வதி இணைய வேண்டும்
உலகின் தந்தையான அவரைப் பார்வதி மணந்தால் உலகுக்கே தாயுமாவாள்
சிவனை வணங்கும் இந்திராதி தேவர் பார்வதியையும் வணங்கித்துதிப்பர்
சிவனிடம் நீ கொள்ளும் சம்மந்தம் உன் குலத்திற்கே பெருமை அளிக்கும்
அவரிலும் பெரியவர் எவருமிலா சிவனும் வணங்கும் பெருமை பெறுவாய்”
முனிவர் உரை கேட்ட பார்வதி நாணி தாமரை இதழ்களை எண்ணலானாள்
தன்மனோரதம் கூடுவகில் மகிழ்ந்த இமவான் மேனையை நோக்கினான்
கணவன் கருத்தே தன் கருத்தெனக் கூறிய மேனையும் கண்மலர்ந்தாள்
அதேகணத்தில் தன் எண்ணத்தை செயலில் காட்டிட விழைந்தான் இமவான்
“பார்வதியைச் சிவபிரானுக்குக் கன்னிகாதனமாய்த் தரும் பேறுபெற்றேன்
பரமன் மனைவி உங்களை வணங்குகிறாள்” என முனிவரிடம் உரைத்தனன்
நமஸ்கரித்த பார்வதியை பலன்பெறும் ஆசிகளால் வாழ்த்தினர் முனிவர்
வெட்கம் தழுவிய பார்வதியை மடியில் அமர்த்திக் கொஞ்சினள் அருந்ததி
பிரிவை எண்ணிக் கலங்கிய மேனையை சிவன் பெருமை கூறித் தேற்றினள்
மணநாள் குறிக்க இமவான் வேண்ட நான்காம் நாளென முனிவரும் கூறினர்
இமாவானிடம் விடைபெற்ற முனிவர் சிவனிடம் செய்திகூறி தம்மிடம் ஏகினர்
புலன்களை அடக்கிய பிரானும் நான்கு நாட்களை சிரமத்துடன் போக்கினார்