குவிகம் பதிப்பகம்- புத்தக வெளியீட்டு விழா.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-12-2020) குவிகம், அவர்கள் பதிப்பிட்ட மூன்று புத்தகங்களை விழா எடுத்து வெளியிட்டனர். சற்று கால தாமதமாக வெளியிட்டதற்கு தலைமை தாங்க திரு. மோடி வருவதாக இருந்ததுதான் காரணம் என்ற செய்தி ஒன்று காதில் விழுந்தது. கொரானாவை காரணம் காட்டி அவர் வர இயலாததால் வேறு யாரையும் அழைக்க மனதில்லாது ஜூம் வழியே வெளியிட்டு விட்டனர்.
ஜூம் வழி என்றாலும் நண்பர்கள் திரு. சுந்தரராஜனும், திரு. கிருபாநந்தனும் ஏற்பாடுகளை மிகவும் தட புடலாக பண்ணியிருந்தார்கள். தோரணம், பேனர் மட்டும்தான் கட்ட வில்லை. எதிலும் புதுமை செய்யும் ‘குவிகம்’ புத்தகங்களை புதுமையாக வெளியிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நாம் விஷயத்திற்கு வருவோம்.
அந்த மூன்று நூல்களில் என்னுடைய ‘ சில நினைவுகள், சில கதைகள், சில கட்டுரைகள் ’ ஒன்று என்பதே சிறப்புச் செய்தி. புத்தகத்தின் கனம் பெரிதென்பதால் என் நூலை முதலாவதாக வெளியிட்டார்கள்.
நூலை வெளியிட நண்பர் சந்திர சேகரனை கேட்டுக் கொண்டிருப்பதாக சுந்தர் கூறினார். எனக்கு தேவையில்லாத கேள்விதான், இருந்தாலும் அவரை ஏன் தெரிந்தெடுத்தீர்கள் என்று கேட்டேன். சுந்தர் என்றும் மாறாத தன் அழகிய புன்முறுவலுடன் “ அவர் ஒருத்தர்தாங்க உங்க புத்தகத்தை முழுவதும் படித்திருப்பார்” என்று நேர்மையுடன் கூறிய பதில் எனக்கு புடித்தது.
உண்மைதான் , சந்திர சேகர் முதல் அட்டை முதல் கடைசி அட்டை வரை படித்திருந்தோடல்லாது, படித்ததை நினைவிலும் நிறுத்தியிருந்தார்.
எனக்கு லேசான பயம் வந்தது. சந்திர சேகர் என் மீது உள்ள அன்பினால் ‘மோகனின் எழுத்து சேவை, நாட்டிற்கு தேவை’ என்ற ரீதியில் பேசி விடுவாரோ என்ற பயம் தான். ஆனால் அவர் அப்படி எல்லாம் பேச வில்லை. அதற்கு ஒரு படி மேலே சென்று என்னிடம் இல்லாத தகுதியெல்லாம் இருப்பதாக புகழ்ந்தார். நானும் சபையடக்கம் கருதி மறுப்பு கூறாது மகிழ்வுடன் கேட்டுக் கொண்டேன்.
என் நூலைப் பற்றி அவர் விவரித்த தகவல்கள் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் முடிந்தவுடன் நாம் இப்படியெல்லாம் எழுதியிருக்கோமா என நூலை எடுத்து சரிபார்த்துக்கொண்டேன். சந்திரசேகர் என் மீது கொண்ட பாசத்தை சற்று அதிகமாகவே கொட்டி விட்டார். அவர் பேசும் ஆங்கிலத்திற்கு இணையாக தமிழிலும் அழகாக பேசினார்.
அடுத்த கட்டம் சற்று விவகாரமானது. அன்று மாலை சுந்தர் என்னை அலைபேசியில் கூப்பிட்டு நீங்கள் ஒரு ‘ ஏற்புரை’ மூன்று- நான்கு நிமிடங்கள் நிகழ்த்த வேண்டுமென்றார். அப்பொழுதே என் கால்கள் நடுங்கியது அவருக்கு தெரிந்திருக்காது. கூடவே சற்று மேக்கப் செய்து கொள்ளுங்கள்என்றார், உங்கள் சிலவில் ஒரு மாலையும் நீங்களே வாங்கி போட்டுக் கொண்டு அமருங்கள் என்று மட்டும் கூற வில்லை.
எனக்கு இரண்டு- மூன்று பேர்களுக்கு மத்தியில் பேசுவதே கஷ்டம். உறவுகள் என்னை ‘மௌன சாமியார்’ என வெளிப் படையாக கூறாது ‘ மோகன் அதிகம் பேச மாட்டான்’ என்பார்கள், நண்பர்களோ அதைவிட டீஸண்டாக ‘ மோகனுக்கு மௌனமே மொழி’ அல்லது ‘ மோகன் ஒரு அமைதிப் புறா’ என்பர்.
சுந்தர் என்னை வம்பிலே மாட்டி விடுகிறாரே, புத்தகம் எழுதியதே தவறோ என்று கூட சற்று எண்ணினேன்.
என் முறை வந்தவுடன் அறையின் கதவை மூடி விட்டு, கால்கள் நடுங்குவது தெரியாதவாறு கேமராவை சற்று உயர்த்திப் புடித்து உளறி முடித்தேன்.
பார் கோடெல்லாம் கொடுத்து ஜூம் வழியே புதிய முயற்சியாக புத்தக விற்பனையும் நடந்தது.
ஒலி,ஒளி விண்ணில் தவழ்ந்து வரும் பொழுது ஆங்காங்கே விண்ணவர்களும், செய்தியறிந்தும் இணைய முடியாதவர்கள் மனதளவிலும் , நிகழ்வில் பங்கு கொண்டோர் மகிழ்வுடனும் வாழ்த்த விழா இனிதே முடிந்தது.
நான் மேலே குறிப்பிட்ட அனைவர்க்கும் நன்றிகள் பல. குவிகத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!