பிரபல எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு சாகித்ய அகாதமி பரிசு 2020 ஆண்டுக்காக வழக்கங்கப்பட்டுள்ளது.
அவரது செல்லாதபணம் என்ற நூலுக்கான விருது இது !
இதற்கு முன்பாக இமையம் இந்திய அரசு வழங்கிய இளநிலை ஆய்வு நல்கை, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது உள்ளிட்ட கௌரவங்களைப் பெற்றிருக்கிறார்.
இமையம் அவர்களுக்குக் கிடைத்த இந்த விருதுக்கு குவிகம் மிகவும் பெருமைப்படுகிறது.
அவரின் சிறப்புக்களை ‘இன்னும் சில படைப்பாளிகள் ‘ என்ற பக்கத்தில் எஸ் கே என் விளக்கிக் கூறுகிறார்.
இமையம்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர். இயற்பெயர் அண்ணாமலை. முதல் புதினமான ‘கோவேறு கழுதைகள்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகி உள்ளது. சுந்தர ராமசாமி “தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை” என்று புகழ்ந்து கூறியுள்ளார். இவரது ‘எங் கதெ’ மிகவும் கவனத்தை ஈர்த்த மற்றொரு புதினம்.
ஆறு நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் தமிழிலக்கியத்திற்கு இதுவரை இவரது பங்களிப்பு.
இந்த மாதப்படைப்பாளிகளில் இமையம் அவர்களின் கதையினைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும்போது கிடைத்த செய்தி
எழுத்தாளர் இமையத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிப்பு: ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது
** ** ** ** ** ** **
நறுமணம் என்கிற சிறுகதை
கைக்கடிகாரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி ஐந்து. பத்து இருபதடி தூரத்தில் முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோடலைட்டின் வழியே விருத்தாசலத்தைச் சுற்றிச் செல்லும் புறவழிச் சாலை போடுவதற்கான வரைபடத்தையும், அதற்கான நிலத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்தான்.
புறவழிச்சாலை அமைக்கக் கையகப்படுத்தவேண்டிய தேவையான நிலத்தை அடையாளம் கண்டு குறிக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆனந்தனும் அவனது உதவியாளன் கதிரேசனும்.
நேரமாகிவிட்டதால் வேலையை மறுநாள் தொடரலாமே என்கிற எண்ணம் கதிரேசனுக்கு. அதைப பலமுறை வாய்விட்டும் சொல்கிறான். ஆனந்தனோ இன்னும் சற்று நேரம் வேலை செய்யும் எண்ணத்துடன் சில கட்டளைகளை இடுகிறான். இன்னும் சில புள்ளிகளை அடையாளம் இட வைக்கிறான்.
நடக்கும் வேலையை இப்படி விவரிக்கிறார்
காலையிலிருந்து ஒவ்வொரு இடமாக அடையாளமிடுவது, கம்பி ஊசி, வெள்ளை மாவுப் பைகளைத் தூக்கிக்கொண்டு நெல் வயல், கரும்பு வயல், முந்திரிக்காடு, முள்காடு என்று நடப்பது, கடுமையான வெயில் என்று எல்லாம் சேர்ந்து அவனைக் களைப்படையச் செய்திருந்தன. ஆனந்தனுக்கு எந்த இடத்தில் அடையாளமிட வேண்டும் என்று சொல்வது மட்டும்தான் வேலை. அதுவும் தியோடலைட்டைப் பார்த்து. கதிரேசனுக்கு ஆனந்தன் சொல்கிற இடத்தில் கம்பி ஊசி ஊன்றி அடையாளமிடுவதோடு அதற்கு நேர் எதிர்ப் புறத்திலும் சரியான அளவில், சரியான இடத்தில் ஊசியை ஊன்றி அடையாளமிட வேண்டும். அது முன்பு அடையாளமிட்ட இடத்துக்கும், புதிதாக அடையாளமிடுகிற இடத்துக்கும் நேராக இருக்க வேண்டும். அது கல்லாக இருந்தாலும், முள்ளாக, சேறு, சகதி, உளையாக இருந்தாலும் அடையாளமிட்டுத்தான் தீரவேண்டும். வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு அடையாளங்களுக்கிடையே உள்ள தூரத்தை அவ்வப்போது டேப்பால் அளந்து பார்க்க வேண்டும். அளவு பொருந்தி வரவில்லையென்றால் அடையாளத்தை மாற்ற வேண்டும்.
அப்படிக் குறியிடவேண்டிய ஓரிடம் ஒரு சாமி கோயிலாக இருக்கிறது. ‘சாமிக் குத்தம்’ வந்துவிடும் எனச் சொல்கிறான் கதிரேசன்.
“அதெல்லாம் பாத்தா நம்ப நாட்டுல ஒரு அடி ரோடுகூடப் போட முடியாது. பொக்லைன் வந்தா எல்லாத்தயும் ஒரு நிமிஷத்தில கிளியர் பண்ணிடும். பொக்லைனை சாமிக் குத்தம் ஒண்ணும் செய்யாது. அந்தப் பெரிய ஆலமர வேர்ல பாயிண்ட் பண்ணு. அதுக்கு எதிர் சைடுலயும் மார்க் பண்ணு.” கட்டளையாக வெளிப்பட்டது ஆனந்தனுடைய குரல்.
இன்னும் சில இடங்களைத தேர்ந்தெடுத்து அடையாளம் இட்டபிறகு “பேக் அப்.” என்று ஆனந்தன் சொல்கிறான். கிளம்புகிறார்கள். கொண்டுவந்த தண்ணீர், ‘கூல்ட்ரிங்’ தீர்ந்துபோயிருக்கிறது. அந்த ஆளில்லாக் காட்டில் ஒரு கூரைவீடு கண்ணில்படுகிறது
மக்கிப்போன சிறிய கூரை வீடு. வாசல் தெற்குப் பக்கம் பார்த்து இருந்தது, வீட்டு வாசலிலிருந்து பத்தடி தள்ளி ஒரு கிழவரும், கிழவியும் எதிரெதிராக உட்கார்ந்துகொண்டு புளிச்சக்கீரையை உருவிக்கொண்டிருந்தனர். இரண்டு பேருக்கிடையில் முறம் இருந்தது. கிழவிக்குப் பக்கத்தில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து ஏழெட்டு அடி தூரத்தில் இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாடுகள் கட்டப்பட்ட இடத்திலிருந்து மேற்கில் பத்தடி தூரத்தில் ஆறு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. கிழவியைச் சுற்றி ஒரு கோழியும் ஏழெட்டுக் குஞ்சுகளும் சுற்றிச்சுற்றி மேய்ந்து கொண்டிருந்தன.
‘வியாதி வந்துடும்’ என்கிற கதிரேசனின் எச்சரிக்கையையும் மீறி, தண்ணீர் வாங்கிக் குடிக்கிறான் ஆனந்தன். “என்ன, இங்க சமையல் பண்றீங்க?” என்று கேட்கிறான்
“அடுப்பு எரிஞ்சா சோறு எங்கனாலும் வேவும்.” (-இது கிழவர்.) “கல்யாணத்துக்கா ஆக்குறன்? ஒரு சோறு. ஒரு குழம்பு. அதுவும் ஒரு நாளக்கி ஒருவாட்டி. அத இங்க வச்சே பொங்கிடுவன்.” (இது கிழவி)
மழை வந்தால், இடையில், மழை விடும் சமயத்தில், சோறாக்கிக் கொள்வார்களாம். நகை, பணம் என்றெல்லாம் இல்லாததால் திருடர் பயமும் கிடையாதாம். இரண்டு மகள்கள் மூன்று மகன்கள் இருந்தும் பத்து வருடமாக இங்கேதான் வாசமாம்.
எங்களுக்காக நீங்க சண்டப் பண்ணிக்க வேணாம். காட்டுல இருக்கிற மோட்டாரு கொட்டாயிக்கிட்ட இருக்கிற களத்தில் தங்கிக்கிறம்னு நாங்களே ஒதுங்கி வந்துட்டம்.”
காட்டில் வசிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை (“காட்டுல இருக்கிறது கஷ்டமில்ல. ஊருல இருக்கிறதுதான் கஷ்டம். பாம்பு பல்லியவிட துஷ்ட மிருகம் மனுசங்கதான்.”)
ரேஷனில் கொடுக்கும் அரிசி, காட்டில் விளையும் கீரை இவைதான் உணவு. மேல் செலவிற்காக மகன்கள் பணம் கொடுப்பார்களா?
“தருவாங்க. போட்டிபோட்டுக்கிட்டு. கூலி ஆளுவுளக் கொண்டாந்து வுட்டுட்டு வேல வாங்குன்னு சொல்லிட்டுப் போவாங்க. முந்திரிக் கொட்டப் பொறுக்கிவையின்னு சொல்லுவாங்க. காட்டுல ஆடு மாடு நுழயாம பாத்துக்கச் சொல்லுவாங்க. கரண்ட் உள்ள நேரத்துக்கு மோட்டாரு போடும்பாங்க. இப்பிடி நூறு வேல தருவாங்க. அது போதாதா?” கிழவர் வாய்விட்டுச் சிரித்தார்.
“அவனவன் சோத்த அவனவன்தான் சம்பாரிக்கணும். அவனவன் வவுறு அவனவன்கிட்டதான இருக்கு?”
அங்கே இருக்கிற மாடுகள் பெரிய மகனுடையது. இரண்டாவது மகன் தன பங்கிற்கு ஆடுகளை கொடுவந்து விட்டிருக்கிறான்.
“ஒங்களோட இன்னொரு மவன் கொண்டாந்து கோழிய வுட்டுட்டாரா?” சிரித்துக்கொண்டே ஆனந்தன் கேட்டான்.
மூன்றாவது மகன், (அரசாங்கப் பணியில் இருப்பவன்- மனைவியும் அப்படியே) தன் பங்கு நிலம் வீடுகளை விற்றுவிட்டு சென்னையோடு போயிவிட்டான்.
‘எதயும் விக்காத, நாங்க உசுரோட இருக்க மட்டும் ஒன்னோட பாகத்தப் பாத்துக்கிறம். நம்ப காட்டுக்குள்ளாரப் பிறத்தியாளக் கொண்டாந்து வுடாத’ன்னு இந்தக் கிழவரு எம்மானோ சொல்லிப்பாத்தாரு. கால்ல வியிந்துகூடக் கேட்டாரு. அவன் நாங்க சொன்ன எதயும் கேக்கல.
தினம் ஒரு ஆளாவது, கார்- மோட்டர்பைக் பஞ்சர் என்று வண்டியை நிறுத்துவார்கள். அந்த வழியாகப் பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் தண்ணீர் கேட்க வருவார்கள்.
“அதுக்குன்னே குடம் வச்சியிருக்கன். ந்தா அங்க இருக்குதில்ல?” கிழவர் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். வாசலை ஒட்டி ஒரு செப்புக் குடம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சில்வர் சொம்பு ஒன்றும் இருந்தது.
அந்த வயதான தம்பதியர் தனியாக இல்லையாம்.
“அங்க வெள்ளக் குதிரமேல கள்ளவீரன் சாமி குந்தியிருக்கான் பாரு.”
ஆனந்தன் எழுந்து நின்று கிழக்கில் பார்த்தான். ரோட்டிலிருந்து கிழக்கில் ஒரு பர்லாங் தொலைவில் ஏழெட்டு மரங்களுக்கிடையே சிமெண்டால் செய்யப்பட்ட குதிரை மட்டும்தான் மங்கலாகத் தெரிந்தது. சாமி சிலை இருப்பது தெரியவில்லை .
கிழவரோ அந்த ‘கள்ள வீர’னின் பிரதாபங்கள், வீர பராக்கிரமங்கள், அவனது இருபத்தியொரு சேனாதிபதிகள் என்று உற்சாகமாகச் சொல்கிறார். கிழவருடைய உற்சாகமான பேச்சைக் கேட்ட ஆனந்தன், எழுந்து நின்று கோவில் இருக்கிற இடத்தையும் கிழவருடைய வீட்டையும் பார்த்தான். நேராக இருந்தது. முன்பு அடையாளமிட்ட இடங்களையும் பார்க்கிறான். கடைசியாக அடையாளமிட்ட இடத்தில் கதிரேசனை நிற்கச் சொல்கிறான்.
கிழக்கில் கள்ளவீரன் சாமி கோவில் பக்கம் பார்த்தான். பிறகு கிழவர், கிழவி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். நாளைக்குக் காலையில் வந்ததும் அடையாளமிட வேண்டிய இடம் கிழவருடைய வீடு. பேண்ட் பாக்கெட்டில் இருந்த வரைபடத்தை எடுத்துப் பார்த்தான். பிறகு அணைக்கப்பட்டிருந்த அடுப்பைப் பார்த்தான். சோற்றுக் குண்டான், கீரைச் சட்டி, ஆடு, மாடு, கோழி, பள்ளிக் குழந்தைகள், வழிபோக்கிகளுக்காகத் தண்ணீர் வைத்திருந்த செப்புக் குடம் என்று ஒவ்வொன்றாகப் பார்த்தான். எல்லாம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள்வரைதான் இருக்கும். பிறகு பொக்லைன் வந்து எல்லாவற்றையும் சமமாக்கும். கருங்கல் ஜல்லி கொட்டப்படும், தார் ஊற்றப்பட்டுச் சாலையாகும். இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் ஹாரன் அடித்தபடி எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஆனந்தனும் கதிரேசனும் போகவேண்டிய கார் வந்துவிடுகிறது. ஏறிக்கொள்கிறார்கள். கிழவர் கேட்ட ‘ரோடு எந்தப் பக்கமா வருது?’ என்கிற கேள்வி ஆனந்தன் காதில் விழவில்லை .
“இந்தக் கூர ஊட்டுல நெருப்ப வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடு காட்டத் தவிர வேற எடமில்ல.” கிழவர் சொன்னது காரில் ஏறிவிட்ட ஆனந்தனுடைய காதில் விழவில்லை. சைலோ கார் விருத்தாசலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது. காரிலிருந்தபடியே திரும்பிப் பார்த்தான். கிழவியும், கிழவரும், வீடும் தூசு மாதிரி காணாமல் போயிருந்தனர்.
என்று கதை முடிகிறது.
—- ———— ——————- —————-
அதிகம் பேசப்பட்ட சிறுகதைகளில் ஒன்று நறுமணம். கதையின் பெயர் நடுவே இப்படி வருகிறது
திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி ஆனந்தன் கேட்டான் “இந்த ஊரு பேரு என்ன?”
“நறுமணம்.”
“நல்லா இருக்கு. அந்த நகர், இந்த நகர்னு இல்லாம.”
யதார்த்தமான வர்ணனைகள், விவரங்கள், உரையாடல்கள் ‘பை-பாஸ்’ பயணிகளுக்கு செய்யும் சௌகரியங்கள் எளிய மக்களின் கஷ்டங்கள் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் வினோதம். சிரமங்கள் புரிந்தும், எதையும் தடுக்கவியலாத நிலைமை ….. இவையெல்லாம் படிப்பவர்களின் மனதில் சில அடையாளங்களை விட்டுத்தான் செல்கிறது