அவளுடைய உடை அலங்காரத்தைப் பற்றியோ அல்ல அவளைப் பற்றியோ கேள்விகள் கேட்டாலே கிரிஜாவிற்கு உடல் நடுங்கியது, படபடத்தது, வேர்வை ஊற்றியது. மறைந்து விடவேண்டும் எனத் தோன்றுகிறது என்றாள். இந்தப் பேச்சு, எண்ணம் வரும் நேரங்களில் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் கூடவே கண்ணீரும் தளும்புமாம்.
அவள் இப்படி இருக்க விருப்பப் படவில்லை. இவ்வளவு நாளாக எப்படியோ காலத்தைக் கடத்திவிட்டாள். கணவருடன் இயற்கைச் சுற்றுலா செல்லும் போதும், தான் நடத்தும் வகுப்பில், பள்ளிக்கூடத்தில் இது எதுவும் நேர்வதில்லை என்றதைக் கவனித்தாள். கூடிய சீக்கிரம் பெண்ணிற்குக் கல்யாணம். இந்தத் தறுவாயில், இவ்வாறு இருப்பதை மாற்ற எண்ணி, பள்ளிப் புத்தக நூலகத்தினில் விவரங்களைச் சேகரித்து, மனநல நிபுணரை அணுகுவதென முடிவு செய்தாள். வந்தாள். கிரிஜா போன்றவர்களுக்கு இது எளிதானது அல்ல. இந்த அடியெடுத்து வைப்பதே நலன் அடைவதின் முதல் படி.
எதனால், எதற்காக கிரிஜாவிற்கு இப்படியெல்லாம் நேருகிறது என்பதை மையமாக வைத்து அவளுடன் ஸெஷன்களை ஆரம்பித்தேன்.
ஒரு மாதத்திற்கு முன்பு தான் கிரிஜா ஓய்வு பெற்றாள். அவள் ஆசிரியராக இருப்பதை மிக ரசித்தாள். பள்ளியில் ஊக்கம் மிகுந்தவளாகவும், மிக நம்பிக்கையுடனும் செயல் பட்டாள். ஓய்வு பெற்ற பின்னும் இலவசமாகக் கற்றுத் தருவதென்று இருந்தாள். கணவன்-மனைவி மனதிற்குப் பிடித்தபடி எழுத, படிக்க, தோட்டக்கலை, உலகச் சுற்றுலா எனப் பல திட்டங்களைத் தீட்டினார்கள். இந்த கிரிஜா படபடக்கும் பயத்தை உள்ளே அடக்கி வைத்திருந்தவள் தான்!
கிரிஜா அவள் பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை. இவள் பிறந்தது அவளது பெற்றோர் இஷ்டப்படி அல்ல. பிரியமான பெரிய பையன் போல மற்றொரு ஆண் பிள்ளை வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். பெண் குழந்தை பிறந்ததைக் கொஞ்சமும் வரவேற்கவில்லை. என்றைக்கும் சலுகைகள், பாசமெல்லாம் மகனுக்கு மட்டுமே. தினந்தோறும் பள்ளியிலிருந்து கிரிஜா திரும்பி வரும் போது வீடு பூட்டி இருக்கும். ஐந்து வயதான கிரிஜா கதவு அருகில் உட்கார்ந்து அழுவாள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அம்மா வருவாள், கிரிஜா அழுவதைப் பார்த்து, அசடு எனத் திட்டிவிட்டு அடிப்பாளாம்.
இருந்தும் அம்மா அன்பை எப்படியாவது பெற வேலைகளில் கிரிஜா சிறுவயதிலிருந்தே உதவிகள் செய்தாள். இதெல்லாம் அம்மாவின் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள். அம்மாவை மகிழ வைக்க, பாத்திரம் தேய்த்து வைப்பாள். கிரிஜா போன்றவர்கள் அங்கீகாரத்திற்கு ஏங்குபவர்கள். நீட் ஃபார் அப்ரூவல் (need for approval) என்போமே, இதைத்தான். எதை எப்படிச் செய்தாலும் அம்மா குறை கூறி உதாசீனம் செய்வாள். தான் சரியாகச் செய்யவில்லை எனக் கிரிஜா நினைப்பாள். எதைச் செய்தாலும், சரிதானா என்ற சந்தேகம் சூழ, அதிருப்தி கொள்வாள்.
ஒன்பதாவது வயதில் கிரிஜாவின் தந்தை சாலை விபத்தில் மரணம் அடைந்தார். துயரத்தை அம்மாவால் தாள முடியவில்லை. அதனால் அடிக்கடி கிரிஜாவைத் தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். தாத்தா பாட்டியும் இவளைக் குறை கூறுவது அதிகரித்தது. அண்ணன் ஆண்பிள்ளை என்பதால் அம்மாவுடன் இருந்தான்.
இதனால் தான் அம்மா சொத்து முழுவதையும் அண்ணன் பெயரில் எழுதி விட்டதில் கிரிஜா அதிர்ச்சிப் படவில்லை. பட்டதாரி அண்ணன் நல்ல வேலையிலிருந்தான். அண்ணனும் அவன் மனைவியும் அவளைத் துச்சமாக நினைத்தார்கள். ஒரு வழியாக கிரிஜா படிப்பை முடித்து விட்டு டீச்சராக வேலையில் சேர்ந்தாள். வேலை செய்யும் இடத்தில் எல்லாம் இதற்கு நேர்மாறாக. அவளை மதித்தார்கள், சந்தோஷமாக இருந்தது!
இவை ஒவ்வொன்றையும் பல ஸெஷன்களில் பல வழிமுறைகளில் எடுத்து ஆய்வு செய்தோம். அப்போது கிரிஜா தன்மேல் இருந்த சந்தேகம் குறித்துத் தெளிவு அடைந்தாள். அவள் வளரும் பருவத்தில், வீட்டிற்குள் எதைச் செய்தாலும் குறை கூறியதில், தன்னிடம் ஏதோ குறைபாடு உள்ளதோ என்ற சந்தேகம் சூழ்ந்தது. உடனடியாக பயம் தன்னைக் கவ்வியது. அம்மா, தாத்தா, அண்ணன் தன்னை கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியதால் இந்த சந்தர்ப்பங்களில் வியர்வை ஊற்றியது, கைகால் நடுக்கம், உலர்ந்த நாக்கு ஏற்பட்டது. தவறுகள் நேர்ந்தது. மனம் தளர்ந்தது என்ற சங்கிலித் தொடரை உணர்ந்தாள். குறைபாடு தன்னிடம் அல்ல என்பதை உணர்ந்தாள்.
தன்னுடைய பெண்ணிற்குக் கல்யாணத்திற்கு முன்னே இதைவிட மனதில் பலசாலி ஆகவேண்டும் எனக் கிரிஜா விரும்பினாள். இதனால் தான் அவள் என்னைத் தேடி வந்தாள்.
மேற்கொண்டு ஸெஷன்களில் கிரிஜா வகுப்பில் பெற்ற திருப்தி, தெளிவு இவை தன்னை ஊக்குவித்ததை முழுமையாகப் புரிந்து கொண்டாள். இத்தனை நாட்கள் இவையே உறுதுணையாக இருந்ததால்தான் மனநிலை தன் பிடியில் இருந்தது என்பதை உணர்ந்தாள். தன்னுடைய இந்த வளம் அவளை வியக்கச் செய்தது.
இருந்தும் நெருங்கிய நண்பர் யாரும் இல்லை. கண்ணீர் பொங்க, இப்போதெல்லாம் இந்தத் தனிமை அதிகமானது என்றாள் கிரிஜா. இந்த நிலைமையைச் சுதாரிக்க அவளுடன் கலந்து உரையாடினோம். இதிலிருந்து அவள் செய்யக் கூடிய பல பணிகளைப் பட்டியல் இட்டோம். இவையெல்லாம் உறவுகளை உருவாக்கச் சிறிய முயற்சிகளே. செய்யச் செய்ய, உறவு வளர வளர தன்னம்பிக்கை கூடவே வளர்ந்தது. வேலையை விருப்பத்துடன் செய்வதும் இந்த நிலையை மேம்படுத்தியது.
இத்தனை வாரங்களுக்குப் பிறகு வியப்புடன் தயக்கம் கலந்தவாறு கிரிஜா தன்னை பற்றிய மற்றொரு தகவலைப் பகிர முன்வந்தாள். பள்ளியில் ஒரு பயிற்சி அளித்து வருகையில் அப்போது வந்த ஆலோசகரின் கணிப்பில் கிரிஜா அயல் நோக்கு உடையவள் (extrovert), அதாவது மற்றவரோடு நன்றாகப் பழகும் தன்மை உடையவள், என வந்தது. தன் பயம், பதட்டத்திற்கு இந்தத் தன்மை பொருந்தாது என்று அந்தத் தகவலைக் கிரிஜா சட்டை செய்யவில்லை.
இப்போது ஸெஷன்களில் இதை மையமாக வைத்து ஆராய்ந்தோம். கிரிஜா வாழ்க்கையில் நடந்ததைப் பார்த்தாள். அதிலிருந்து அவள் தெளிவாகப் புரிந்து கொண்டாள், குறிப்பாகத் தாயார் கூறிய கருத்தை நிஜம் எனத் தான் எடுத்துக் கொண்டோம் என்று. அதாவது அந்த சூழலில் என்ன சொன்னால், செய்தால் அம்மா சுகமாக இருப்பாள் என்ற ஒன்றை மட்டுமே மனதில் வைத்து செயல் பட்டாள். அம்மாவின் ஒப்புதலுக்கு ஏங்கினாள். அதனால் தான் அம்மா நிந்தனை செய்த போது, தான் சரியாகச் செய்யவில்லை என்பது தான் நிஜம் என ஏற்றுக்கொண்டாள். சதா சுய அறிவுறுத்தல் (auto suggestion) செய்து வந்த நிலை.
அதே கிரிஜா, பள்ளியில் தைரியமாக, துணிச்சலாகச் செயல் பட்டாள். வகுப்பு, கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் போது கிரிஜா இயல்பாக இருக்க முடிந்தது.
எந்த எதிர்பார்ப்பும் பார்க்காமல் தன்னை மணந்த கணவர் மேல் கடல் அளவு அன்பைக் குவித்தாள் கிரிஜா. அவரோ சுபாவத்தில் மிக அமைதி காப்பவர். யாருடனும் அதிகம் பேச மாட்டார். வேலை இடத்திலும் தேவைக்கு மேல் ஒரு வார்த்தை கூட வராது. இயற்கை ரசிகன், படிப்பது, பாட்டுக் கேட்பது, என இருப்பவர். தன் வாழ்வில் தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டதில் அவ்வளவு பூரித்துப் போன கிரிஜா அவர் சுபாவத்துடன் ஒன்றிணைந்து போக தானும் அதிகம் பேசாமல், நண்பர்கள் போக்குவரத்து இல்லாமல் இருந்தாள். நாட்கள் கடந்து போக, மனதில் ஒரு மூலையில் இது தான் நான் எனக் கிரிஜா நம்பினாள்.
அம்மா அன்பையும் ஒப்புதலையும் பெறுவதற்கும் கணவனின் சுபாவத்துடன் இணையவே தன் குணத்தை மாற்றிக் கொண்டது தன்னை அறியாமல் கிரிஜா செய்தது.
கிரிஜாவின் சுய அறிவுறுத்தல் நிலைத்து நின்றது. இந்த உருவாக்கம் அம்மாவின், கணவரின் ஒப்புதல் பெறவே. திரும்பத் திரும்ப தன் குணத்தைக் கிரிஜா மற்றவர்களுக்காக மாற்றியதை எடுத்துக் கொண்டோம். அவள் அதைக் குற்ற உணர்வு இல்லாமல் பரிசீலனை செய்ய வழிகளைப் பரிந்துரை செய்தேன். அதைச் செய்து வரும்போது அவளுக்கு பிடித்தவற்றைக் குறித்துக் கொள்ளச் சொன்னேன். நம்மில் பெரும்பாலானவர்கள், தன்னையே ஆராயும் தருணத்தில், நம்முடைய குறைகளை எளிதாகக் கூறுவோம். பிடித்ததை, நல் குணங்களை வரிசைப் படுத்துவதில் தட்டுத் தடுமாறுவது இயல்பு தான். அது தான் கிரிஜாவிற்கு நேர்ந்தது. தடுமாறிப் போனாள். இதை எதிர்பார்த்தேன். கிரிஜாவிடம், காலி நாற்காலியில் அவளுடைய இன்னொரு சுபாவம் அமர்ந்து இருப்பதாகக் கருதிப் பேசச் சொன்னேன்.
முதலில் என்னிடமே கூறினாள். பிறகு அந்தக் காலி நாற்காலியைக் காட்டிப் பேச ஆரம்பித்தாள். இவ்வாறு செய்துவர, வெகு விரைவில் கிரிஜா உணர்ந்தாள், தன் இயல்பான குணம், மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவது தான் என்று.
இவற்றுடன் கிரிஜா அம்மாவின் சொற்களால் தன் மீதான தாக்கத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். புகழ்ச்சி பெறத் தான் ஏங்குவது அறிய வந்தது. இதனால் கண்ணைக் கட்டி விட்டது போல இருந்ததை உணர்ந்தாள். அறியாமலேயே விட்டவற்றைக் கிரிஜா வரிசை செய்ததில், பள்ளியில் பேச்சுப் போட்டி, ஓட்டப் பந்தயம் எனப் பல திறமை, மற்ற ஆசிரியரின் அரவணைப்பும் ஞாபகம் வந்தது. இவையெல்லாம் அவளுடைய அடையாளங்களாகக் காணத் தொடங்கினாள். அம்மாவின் அன்பைப் பெறவே எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, அதற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. எவ்வளவு காலம் இதைச் செய்ய முடியும்? அதுதான் இப்போது விஸ்வரூபம் எடுத்து உடலில் பல விதமான மாறுதல் காட்டியதை உணர்ந்தாள். எந்த எண்ணத்தால் நேர்ந்தது, ஏன் எதற்காக என்ற முழுமையான அறிதல் வந்தது. அவை வேர்வை, உடல் முழுவதும் நடுக்கம், வாய் உலர்வது என வெளிவந்தது.
இந்த நிலையின் தெளிவு பிறந்ததும் சமாதானம் ஆனாள். விளைவாக, பல காரியங்களைப் புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்தாள். கணவரைக் கூடச் சேர்த்து, காலையில் நடப்பது, கடவுள் பிரார்த்தனை, பக்கத்தில் உள்ள நிறுவனத்தில் இருவரும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்குக் கல்வி கற்றுத் தருவதென்று பலதைத் துவங்கினார்கள்.
இதனாலும், தான் செய்வதை ரசித்துச் செய்வதாலும் நடுக்கம், பயத்திற்கு இடமே இல்லாமல் போயிற்று. கிரிஜா ஸெஷன்களில் நன்றாகப் புரிந்து கடைப்பிடித்து வந்தவை உதவியது. குறைகள், நிகழ்ந்த தோல்விகளை ஞாபகப் படுத்திச் சரிசெய்வது இதுவே வாழ்வின் இன்னொரு தந்திரம்.
கிரிஜா புரிதலை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவளுடைய மகளின் கல்யாணம் ஆனது. தன்னைப் பற்றிய பல தகவல்களைப் புதிதாகப் புரியவும் செய்தது. அதாவது புது மனிதர்களைச் சந்திப்பில் அவள் பெற்ற சுகம். தானாகவே செய்வதைப் பார்த்து தன்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உருவாகியது. அதே போல் கணவனையும் சேர்த்துச் செய்வதில் மேலும் ஆனந்தம் பெற்றாள். எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்ய முடிந்தது. அவளுடைய குரல், முகபாவம், உடல் மொழி எல்லாம் இதைத் தெரிவித்தது.
கிரிஜா தன் மனநலனை சீர்திருத்த எடுத்துக்கொண்ட நிர்ணயம், அவளுடைய முழு பங்களிப்பு, ஒத்துழைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தது.
*******************************