
பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன – அவரது தமிழ்ப்பற்றும், தமிழர்கள் மீது கொண்டிருந்த அன்பும், தேச பக்தியும் அளவிடமுடியாதது. அவரது சமூகப் பார்வை சமரசம் இல்லாதது. நாட்டிற்கு உபதேசித்தவற்றை, வீட்டிலும் நடத்திக் காட்டியவர் பாரதியார்.
கவிதைகள், கட்டுரைகள், கதைகள், வசன கவிதைகள், பாஞ்சாலி சபதம், பகவத் கீதை, சந்திரிகையின் கதை, வேடிக்கைக் கதைகள் என பாரதியாரது எழுத்துலகம்பரந்துபட்டது. அவரது தேசப் பற்றுப் பாடல்கள் எழுச்சியூட்டுபவை.
கண்ணனைக் காதலானாக, தாயாக, சேவகனாக, தோழனாக, தந்தையாக, அரசனாக, சத்குருவாக, குழந்தையாக, காதலியாகப் பாவித்து அவர்
பாடியுள்ள பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.
திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரத்தில் 1882 ஆம் வருடம் டிசம்பர் 11 ஆம் தேதி சுப்ரமணியன் என்கிற சுப்பையா பிறந்தார்! தந்தை சின்னச்சாமி அய்யர் தன்பிள்ளையைப் பெரிய கணித மேதையாகவோ, யந்திரங்களை இயக்கும் விற்பன்னராகவோ உருவாக்க விரும்பினார். ஆனால் சுப்பையாவுக்கோ வார்த்தைகளின் கோர்வைகளிம் ( விழி என்றால் உடனே விழி, பழி, வழி, பிழி, சுழி என வார்த்தைகளை அடுக்குவாராம்!)
இயற்கையைரசிப்பதிலும் அதிக விருப்பம்! எப்போதும் ஏதாவது பாட்டு ஒன்றை இரைந்து பாடுவது மிகவும் பிடித்தமானது. இளமையிலேயே அன்னையை இழந்து விட்டதால், அம்மா மயக்கத்திலேயே கவிதைகள், பாடல்கள் புனைவார். எட்டயபுர சமஸ்தான வித்துவான்களும், புலவர்களும் சுப்பையாவை வெகுவாகப் பாராட்டி, அவரது பதினோராம் வயதில் “பாரதி” என்ற பட்டத்தைச் சூட்டினர்.
1921 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோவில் யானை தாக்க, அதிர்ச்சியில் நோய்வாய்ப் பட்டார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை
மறைந்தார்.
பாரதியார் சரித்திரங்களைப் பலர் எழுதியிருந்தாலும், வ.ரா., செல்லம்மாள் பாரதி ஆகியோரின் பாரதி சரித்திரங்கள் மிகவும் முக்கியமானவை.
வ.ரா. – வரதராஜ ஐயங்கார் ராமசாமி – சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், பாரதியாரின் பக்தர் – பாண்டிச்சேரியில் பாரதியுடன் வாழ்ந்தவர். பாரதியின் வரலாற்றைச் சிறப்பாகச் சொல்லும் நூல்களில் மிகவும் முக்கியமானது வ.ரா. வின் “மகாகவி பாரதியார்”. வாசிக்க வேண்டிய புத்தகம், அதிலிருந்து…
பாரதியின் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறையிலிருந்து வெளி வரும்போது, கிறிஸ்தவன் ஆகிவிட்டேன் என்கிறார். மதமாற்றம் பற்றி பாரதி கூறுவதைப் பார்க்கலாம்.
“ஹிந்து ஜனசமூக ஆசாரங்களிலும், கொள்கைகளிலும், தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள், கசடுகள் ஏறியிருக்கலாம். அவைகளை ஒழிக்க நாம் பாடுபட வேண்டும். அவைகளை ஒழிக்க முடியாது என்று பயந்து, வேறு மதத்தில் சரண்புகுவது என்பது, எனக்கு அர்த்தமாகாத சங்கதி. எல்லா மதங்களிலும் உண்மை உண்டு”.
பின்னாளில் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று, இந்தியாவுக்குத் திரும்பி வந்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து உழைத்த ஆர்யா இவர்தான் – பாரதியின் ஆதிகால நண்பர். ஜாதி, மதம் இவைகளைத் தாண்டி, பாரதி போற்றிய நட்பு போற்றுதலுக்குரியது!
“பாரதியார் நேருக்கு நேராக யாருடனும் சண்டை போடுவார். யாரையும் கண்டிப்பார். ஆனால் எதிரில் இல்லாதவர்களைப் பற்றி அவதூறு பேசும் கெட்ட வழக்கம் அவரிடம் துளிக்கூடக் கிடையாது”.
‘பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி’ – ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய உணர்ச்சி மிகு சரித்திரம் – தன் தந்தையாரின் சரித்திரத்தைத் தன் தாயாரே கூறுவதுபோல் அவர்களின் மகள் தங்கம்மா பாரதி எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து:
“திருநெல்வேலியில் படிக்கும்போது, பாரதியாரும் அவரது நண்பர் சுப்ரமண்ய சர்மாவும் “கலியாணராமன் செட்” என்ற கம்பெனி நடத்திய “துரோபதை துகிலுரிதல்” என்ற நாடகம் பார்க்கிறார்கள். பீஷ்மர், துரோணர் முதலியோரைப் பாஞ்சாலி தன் கேள்விகளால் நிலைகுலைய வைத்து, பதில் சொல்லத் திணறி, தலை குனிய வைத்த சாமர்த்தியம், அண்ணன் தாங்கமுடியாத அளவுக்குத் தப்பிதம் செய்துங்கூடச் சகோதரர்கள் அவனுக்கு மரியாதையாக அடங்கி வணங்கியது எல்லாம் அவரது (பாரதியாரின்) மனத்தை நெகிழச் செய்தது. பின்னாளில் உலகம் வியக்கும் ‘பாஞ்சாலி சபதம்’ இயற்ற, சிறுவயதில் அவர் பார்த்த இந்த நாடகமே காரணம்”
எட்டயபுரம் கழுகுமலையில் மறவர்களுக்கும் சாணார்களுக்கும் ஏதோ தகராறு – உற்சவத் தேரை விடக் கூடாதென மறிக்கிறார்கள். சாப்பிட உட்கார்ந்தவர், சாப்பிடாமல் கலகம் நடக்கும் இடத்தைப் பார்வையிடச் செல்கிறார் மானேஜர் வேங்கடராயர். “இவன் யாரடா பார்ப்பான், வழக்கு தீர்க்க வந்தவன்!” என்று யாரோ கத்தியால் குத்திக் கொன்று விடுகிறார்கள். பாரதியை மிகவும் பாதித்தது இந்தச் சம்பவம். அதுமுதல், “ஜாதிச் சண்டைகளும், சமயச் சண்டைகளும் ஒழிய வேண்டும்” என்று ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பாராம் பாரதியார்.
தனக்குப் பெண் குழந்தை பிறந்தபோது, காளிதாசனின் ‘சாகுந்தலம்’ சமஸ்கிருத நாடகத்தை மிகவும் விரும்பி வாசித்துக் கொண்டிருந்தாராம்; அதனாலேயே தன் குழந்தைக்கு ‘சகுந்தலா’ என்று பெயர் வைக்கிறார் பாரதியார்.
அவரது கவிதைகளைப் போலவே, கட்டுரைகளும், கதைகளும் சிறப்பானவை. சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் அவர் எழுதிய சுதந்திர எழுச்சிக் கட்டுரைகள் அன்றைய பிரிட்டிஷ் போலீஸ் அடக்குமுறைக்கு அவரை ஆளாக்கின.
புதுச்சேரியில், அரவிந்தர், வ.வே.சு ஐயர், வ.ரா. ஆகியோருடன் இணைந்து அரசியல், கலை, தத்துவம் எனப் பல தளங்களில் செயல்பட்டவர் பாரதியார்.
காலத்தால் அழியாத, கருத்தாழம் மிக்க கதைகளைப் படைத்துள்ளார் பாரதி! வேடிக்கைக் கதைகளில் மட்டுமன்றி, எல்லாக் கதைகளிலும் இழைந்தோடும் நகைச்சுவையும், பகடியும் வியக்க வைப்பவை.
பாரதியாரது கட்டுரைகளின் தெளிவும், நடையும் வாசிப்பவரைக் கட்டிப் போடுபவை. சமூகம், பெண்டிர்,கலைகள், பக்தி, தத்துவம் எனப் பல கட்டுரைகளில் அவரது தனித்துவம் தெரியும். அவரது சிந்தனைத் துளிகள் சிலவற்றை, இப்போது பார்க்கலாம்!
மூட நம்பிக்கைகளை அறவே வெறுத்தவர்
பாரதியார் – நாள், நட்சத்திரம், லக்னம் எல்லாம் பார்ப்பதனால் வரும் கால விரயம் குறித்து விசனப் படுகிறார். “சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதனால் கால, பொருள் நஷ்டங்களுடன், சோதிடருக்கு வேறு செலவாகிறது” என்கிறார்!
‘வாசக ஞானம்’ என்ற கட்டுரையில் மனிதர்கள் தாம் படித்தவைகளைக் கடைபிடிப்பதில்லை என்று வருந்துகிறார். ஆண்,பெண் சமமாகப் போற்றுதல், ஜாதி, மதம் பாராமல் அனைவரையும் ஒன்றாக நேசித்தல் போன்றவை ஏட்டளவிலேயே இருப்பதாக வருத்தப் படுகிறார்.
வாசக ஞானத்தினால் வருமோ சுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே’
என்னும் தாயுமானவர் கண்ணியைக் குறிப்பிட்டு, வெறும் படிப்பினாலும், வார்த்தைகளாலும் ஞானம் வந்து விடாது -அவற்றை வாழ்க்கையில் கடைபிடித்தாலே வரும் என்றும், திருவள்ளுவர் சொன்னபடி, ‘ஒன்றைச் சொல்லியபடி நடப்பதும்’ அவசியம் என்றும் கூறுகிறார் பாரதி.
’தர்மம்’ கட்டுரையில் “தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போரென்று ஸாமான்யர் சொல்லுகிறார்கள். சில சமயங்களில் தர்மங்களே ஒன்றுக்கொன்று முட்டுகின்றன’ என்கிறார். இறுதியில், ‘சுயநலம் ஒதுக்கி, உலக நலன் கருதி எடுக்கும் முடிவுகளே தர்மமாகும்’ என்பதை வலியுறுத்துகிறார்.
பெண் விடுதலை குறித்து அன்றே அவர் எழுதியவைஇன்றும் பொருந்திப்போவது வியக்க வைக்கிறது.
பெண்கள் வயதுக்கு வருமுன் விவாஹம் செய்யக் கூடாது,
இஷ்டம் இல்லாத புருஷனை விவாஹம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது,
விவாஹம் செய்த பிறகு புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்கவேண்டும் –அதற்காக அவளை அவமானப் படுத்தக் கூடாது,
தந்தை வழிச் சொத்தில் சமபாகம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும்,
விதவை விவாஹம் செய்துகொள்வதை தடுக்கக் கூடாது,
விவாஹமே இல்லாமல் தனியே இருந்து கெளரவமான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்,
பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வி வழங்க வேண்டும்,
தகுதியுடன் பெண்களும் அரசாட்சியில் இடம் பெறவேண்டும்,
போன்ற கருத்துக்கள் இன்று எவ்வளவு தூரம் கடைபிடிக்கப் படுகின்றன என்பது விவாதத்துக்குரியன!
நமக்கு நம் மீதே நம்பிக்கை இல்லாமையே நம் பயங்களுக்குக் காரணம்; அதற்கு அவர் கூறும் உவமையைப் பாருங்கள்:
கண்ணாடி மூடிக்குள்ளே தண்ணீர் விட்டு அதில் வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியைத் தண்ணீர் என நினைத்து அதில் வந்து மோதிக் கொள்ளுமாம்; பிறகு பெரிய தொட்டியில் கொண்டு போட்டாலும், தண்ணீரைக் கண்ணாடி என்று நினைத்துப் பயந்து பழைய எல்லைக்குள்ளேயே சுற்றுமாம். அது போலத் ‘தலை உடைந்து போமோ’ என்கிற பயம் நம் எலும்புக்குள் ஊறிக் கிடக்கின்றது.
கவிஞன் என்பவன் யார் ? பாரதி எழுதுகிறார்:
‘கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே
வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே
கவிதையாகச் செய்தோன் – அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின்
பேச்சு – இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடனே ஒன்றாக வாழ்பவனே கவி.
உணவு பற்றி…..
நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. கார ஸாரங்களும், வாசனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப்படுத்தும் வஸ்துக்கள் தேகபலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி,
கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல், பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.
இறுதியாக அவர் தமிழருக்கு அன்று சொன்னது:
‘தமிழா தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது.
தமிழா பயப்படாதே. ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு, ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்.
ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்யத்தை வேதமாகக் கொள்.
பெண்னை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர், மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம்.
‘பதிவிரதை’ என்ற கட்டுரையில் அவர் கூறுவதைக் கேளுங்கள்:
“ஸ்திரீகள் புருஷரிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமை போல நடித்தாலும், உள்ளே துரோகத்தை வைத்துக்கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.”
வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து, மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.
பாரதியின் அன்றைய வார்த்தைகள் இன்றைக்கும் தமிழனுக்கு வழிகாட்டுகிறது –
காரணம், பாரதி ஒரு தீர்க்கதரிசி!!
பாரதியைப் பற்றி எந்த மாணவராவது எந்தப் போட்டிக்காவது ஒரு கட்டுரை எழுதி அனுப்பவேண்டுமானால், டாக்டர் பாஸ்கரின் இந்தக் கட்டுரை ஒன்றே போதுமானது! புரூக்பாண்டு காப்பி டிகாக்ஷன் மாதிரி thick and condensed !
LikeLike