“கா.. கா”
காலம்பர காக்கா கத்தினா நாங்க கடிகாரமே பார்க்க மாட்டோம்.. எங்களுக்குத் தெரியும்.. சரியா மணி ஏழரை..
எங்க பால்கனி க்ரில்ல உட்கார்ந்து கரெக்டா எதிர இருக்கிற சமையல் அறையை எட்டிப் பார்க்கும்..
அந்த சமயத்துல சாப்பாடு ரெடியாயிருக்காது.. அதனால மீனா.. அதான் என் சகதர்மணி ஒரு பிஸ்கட்டைக் கொண்டு வந்து பால்கனி திண்டுல வெப்பா.. அந்தக் காக்கா மறுபடியும் “கா.. கா”ன்னு கத்திட்டு பிஸ்கட்டைக் கவ்விண்டு பறந்து போயிரும்..
அப்புறம் சரியா ஒம்பது மணிக்கு மறுபடியும் “கா.. கா”..
இப்ப மீனா ஒரு கிண்ணத்துல சாதம் எடுத்து, பருப்பு போட்டு, நெய் விட்டு ரெடியா வெச்சிருப்பா.. அதை சுவாமி முன்னால வெச்சு நமஸ்காரம் பண்ணிட்டு பால்கனி திண்டுல கொட்டுவா. அந்தக் காக்காயும் “தேங்ஸ்”ன்னு சொல்ற மாதிரி அவளை ஒரு பார்வை பார்த்துட்டு சாதத்தை ருசிக்க ஆரம்பிச்சுரும்..
நான் கூட சில சமயம் கிண்டலாக் கேட்பேன்..
“தினம் எனக்கு சுடச் சுட சாதம் போடறயோ இல்லையோ.. காக்காய்க்குப் போட்டுடறே.. இது என்ன நியாயம்?”
உடனே மீனா சீரியஸா என்னை அடக்குவா..
“ஐயையோ.. இப்படியெல்லாம் பேச்சுக்குக் கூட கிண்டல் பண்ணாதேங்கோ.. காக்கா யாரு? நம்ம பித்ருக்கள்.. தினம் காக்காய்க்கு சாதம் போடறது.. நம்ம பித்ருக்களுக்கு சாப்பாடு போடறதுக்கு சமம்”
எனக்கு இதுலலாம் அதிகமா நம்பிக்கை இல்லைன்னாலும் அதுக்கு மேல நான் எதுவும் பேச மாட்டேன்.. ஏன்னா நான் ஒரு வார்த்தை சொன்னாக் கூட.. என்னைப் பேச விடாம..
“உங்களுக்குத் தான் எதுலயுமே நம்பிக்கை கிடையாதே.. பித்ரு காரியம் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க இதுலலாம் நம்பிக்கை வெக்காததுனால தான்.. ஆபீஸ்ல உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் தட்டிப் போயிண்டே இருக்கு”
அப்படின்னு அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சு போட்டு.. என்னைக் கிட்டத்தட்ட வீரமணி ரேஞ்சுக்கு நாஸ்திகன் ஆக்கிருவா..
காக்காய்க்கும் மீனாவுக்கும் ஆன உறவே அலாதி தான்..
திடீர்னு ஒரு நாள் “வாங்கோ.. வாங்கோ” அப்படின்னு வாய் நிறைய யாரையோ வெல்கம் பண்ணினா.. யாரோ விருந்தாளி வந்திருக்கான்னு ஹாலுக்குப் போனா.. அங்க மீனாவைத் தவிற வேற யாரும் இல்லை.. அப்புறம் பார்த்தா காக்காயைத் தான் “வாங்கோ வாங்கோ”ன்னு மீனா ஆசையா வரவேத்திருக்கா..
அது மட்டுமில்லை.. அப்பப்ப காக்காயோட அவ பேசற அழகே தனி..
”என்ன அவசரம்.. சூடா இருக்கு.. மெதுவாச் சாப்பிடுங்கோ..”
“இன்னிக்கு சாதம் கொஞ்சம் குழைஞ்சிருக்கு.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ”
“நாளைக்கு அமாவாசை.. மறக்காம வந்துருங்கோ”
அந்தக் காக்காயும் மீனா சொலறதெல்லாம் புரிஞ்ச மாதிரி அவளைப் பார்த்து ”கா கா”ன்னு குரல் கொடுத்துட்டுப் போயிரும்..
சத்தியமாச் சொல்றேன்.. கல்யாணமான இத்தனை வருஷத்துல ஒரு தடவைக் கூட மீனா எங்கிட்ட இப்படி அக்கறையா அனுசரணையாப் பேசினதே கிடையாது..
சரி அதை விடுங்க.. சொந்தக் கதை.. சோகக் கதை.. உங்களுக்கு எதுக்கு?
மறுபடியும் காக்காய்க்கு வருவோம்..
ஒரு நாள் காலம்பர மீனா கவலையோட வந்து..
“ஏன்னா.. பிஸ்கட் காலியாயிருத்து.. நேத்து வாங்க மறந்துட்டேன்” அப்படின்னு சொன்னா.. வழக்கமா ரெண்டாவது டோஸ் டீ உறிஞ்சும் போது நான் ரெண்டு பிஸ்கட் டீயில முக்கி சாப்பிடுவேன்.. அதை நினைச்சுத் தான் மீனா கரிசனப் படறான்னு நம்பினேன்.
”அதனால என்னம்மா.. இன்னிக்கு பிஸ்கட் இல்லாம டீ சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..”
ஆனா அடுத்த கணமே மீனா வாய் திறந்த உடனே என் நம்பிக்கை எவ்வளவு பெரிய அபத்தம்னு புரிஞ்சுண்டேன்.. என் சுய கௌரவம் அதள பாதாளத்துகுப் போய்.. அதுக்கும் கீழ போக முடியாம தத்தளிச்சிண்டிருந்தது..
”ஆமா.. சின்னக் குழந்தையாட்டுமா உங்களுக்கு பிஸ்கெட் ஒண்ணு தான் குறைச்சல்.. இப்ப காக்காய் வந்துரும்.. அதுக்குப் போட பிஸ்கட் இல்லையேன்னு நான் கவலைப் பட்டுண்டிருக்கேன்”
இதைக் கேட்ட அப்புறம் இனி வாழ்க்கைல பிஸ்கட்டே சாப்பிடறதில்லங்கற முடிவுக்கு நான் வந்துட்டேன்னு நீங்க நினைச்சா.. மன்னிக்கணும்.. அப்படியெல்லாம் அவசரப் பட்டு முடிவு எடுத்து மாட்டிக்கிற ஆள் நானில்லை.. “வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு கவுண்டமணி பாணில உதறித் தள்ளிட்டுப் போற ஆள்..
சரி.. என்னை விடுங்க.. கமிங் பேக் டு காக்காய்..
பிஸ்கட் இல்லாம காக்காயை எப்படி சமாளிக்கறதுன்னு மகனையும், மகளையும் கூப்பிட்டு வெச்சிண்டு கேபினட் ரேஞ்சுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தினா மீனா.. (நான் எப்பவுமே எதிர் கட்சிங்கறதுனால ஆலோசனைக் கூட்டத்துல எனக்கு இடம் கிடையாது). இறுதியா அவா ஒரு முடிவுக்கு வந்தாச்சுன்னு தெரிஞ்சுது.. ஆனா அது என்ன முடிவுன்னு காக்காய் வந்து வழக்கம் போல குரல் கொடுத்த அப்புறம் தான் தெரிஞ்சுது..
சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து வந்த உடனே காப்பியோட கொரிக்க வழக்கமா ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி வெச்சிருப்பேன்.. நேத்து தான் கடைக்காரர் ரொம்ப ரெகமெண்ட் பண்ணினாரேன்னு நாடா பக்கோடா வாங்கிண்டு வந்திருந்தேன். காக்கா கத்தின உடனே பிஸ்கட்டுக்கு பதிலா அந்த நாடா பகோடாவுலேர்ந்து கொஞ்சம் சர்வ் பண்ணினா மீனா.. வழக்கமான பிஸ்கட் இல்லாம மெனு மாறினதுல அந்த காக்காயோட கண்ணுலயே சர்ப்ரைஸ் தெரிஞ்சுது,, சந்தோஷத்துல “ஊ.. லல்லா” ரேஞ்சுக்கு “கா.. கா”வை ராகம் இழுத்துக் கத்திட்டு பகோடாவை ஒவ்வொண்ணா கவ்வி “நறுக் முறுக்”ன்னு சாப்பிட்டு.. ஏதோ பத்ம விபூஷனே கிடைச்ச மாதிரி சந்துஷ்டியாப் பறந்து போச்சு..
ஐ.நா. சபையே தீர்த்து வெக்க முடியாத பிரச்சனையை தான் தீர்த்து வெச்ச சந்தோஷம் மீனா முகத்துல..
மணி ஒம்பது.. வழக்கம் போல டாண்ணு காக்கா வந்தாச்சு..
மீனாவும் ரெடியா கிண்ணத்துல வெச்சிருந்த ஆவி பறக்கற சாதத்தை பால்கனி திண்டுல கொட்டினா,,
அதை உத்துப் பார்த்த காக்கா திரும்பி மீனாவை முறைச்சுப் பார்த்தது..
”என்ன பார்க்கறேள்? சாதம் போட்டிருக்கேனே.. சாப்பிடுங்கோ”
ஆனா காக்கா அதை லட்சியம் பண்ணலை.. மறுபடியும் மீனாவை முறைச்சுப் பார்த்தது..
”ஐயையோ.. ஏன் சாப்பிட மாட்டேங்கறேள்? உடம்பு சரியில்லையா? இல்லை ஏதாவது தப்பு நடந்துருத்தா?”
மீனாவோட குரல்ல இருந்த கவலையான கரிசனம்.. ஒரு தடவைக் கூட என் விஷயத்துல.. சரி விடுங்கோ.. இப்ப எதுக்கு அது?
மீனா கேட்ட உடனே காக்கா காலைல பகோடா போட்ட இடத்துல உட்கார்ந்தது.. அவளைப் பார்த்துத் தலையை ஆட்டி ஆட்டி குரல் கொடுத்தது..
“என்ன சொல்றேள்? புரியலையே..”
மீனா கவலையோட குழம்பினா..
இதைப் பார்த்துண்டிருந்த நான்..
“புரியலை? உன் விருந்தாளிக்கு சாதம் வேண்டாமாம்.. காலைல நீ போட்ட நாடா பகோடா தான் வேணுமாம்..”
நான் சொல்லி முடிச்ச உடனே “கா கா”ன்னு குரல் கொடுத்து காக்கா ஆமோதிச்சது..
மீனா நாடா பகோடாவைக் கொண்டு வந்து போட்டா.. உடனே காக்கா கண்ணுல ஆயிரம் வாட் பிரகாசம்.. லபக் லபக்னு ஒண்ணு விடாம சாப்டுட்டு ஜாலிலோ ஜிம்கானான்னு துள்ளலா(!) பறந்து போச்சு..
அதுலேர்ந்து தினம் காக்காய்க்கு சாதம் கிடையாது.. கார சாரமா நாடா பகோடா தான்.. வழக்கமா காலம்பர மட்டும் வந்துண்டிருந்த காக்கா இப்பலாம்.. காலம்பர, மத்தியானம், சாயங்காலம்னு மூணு வேளையும் கரெக்டா வந்து நாடா பக்கோடா சாப்பிட்டுப் போறது..
மாசாந்திர மளிகை லிஸ்டுல முதல் ரெண்டு இடத்துல இருந்த மஞ்சப் பொடி, கடுகு.. இப்ப ரெண்டாவது,, மூணாவது இடதுக்குப் போயிருத்து.. முதல் இடத்தைப் பிடிச்சிருக்கிறது ரெண்டு கிலோ நாடா பகோடா..
எனக்குத் தாங்கலை..
“என்னடி இது அநியாயம்.. மாசா மாசம் ரெண்டு கிலோ நாடா பக்கோடாவா? கட்டுப்படி ஆகுமா?”
நான் கேட்ட உடனே மீனா கறாரா சொல்லிட்டா..
“இதப் பாருங்கோ.. பித்ருக்கள் விஷயத்துல கணக்குப் பார்க்காதேங்கோ.. அது நல்லதில்லை.. யாரு கண்டா.. உங்க பரம்பரைல யாருக்காவது நாடா பக்கோடா பிடிக்குமோ என்னமோ.. அதான் காக்கா அதை விரும்பிச் சாப்பிடறது”
மீனா இதைச் சொன்னதும் யோசிச்சுப் பார்த்தேன்..
அட ஆமாம்.. எங்கப்பாவுக்கு நாடா பக்கோடா ரொம்பப் பிடிக்கும்..
Hilarious..!
LikeLike