Daily Archives: May 16, 2022
குவிகம் குறுக்கெழுத்து – சாய்நாத் கோவிந்தன்
1
உ
|
ப்
|
2
ப
|
ரி
|
3
கை
|
4
து
|
ணை
|
||
தி
|
சு
|
தி
|
ம்
|
5
ஊ
|
||||
6
ரி
|
ஷ
|
ப
|
ம்
|
7
க
|
பி
|
ல
|
ர்
|
|
தி
|
ர
|
வ
|
||||||
8
க
|
ழி
|
9
ப
|
ண்
|
டி
|
10
கை
|
சி
|
||
ற்
|
ட்
|
வீ
|
||||||
11
சி
|
வ
|
12
கா
|
சி
|
13
பா
|
ச
|
ந்
|
14
தி
|
|
லை
|
வ
|
15
ரா
|
ம்
|
ன
|
||||
16
நி
|
ல்
|
17
கு
|
ம்
|
மா
|
ள
|
ம்
|
விட்டுப்போன கட்டத்தால் தவறவிட்டவர் -2
தவறான எழுத்தால் தவறவிட்டவர் – 4
மொத்தம் பங்குபெற்றோர் : 20
சரியான விடை எழுதியவர்கள்:
விஜயலக்ஷ்மி , துரை தனபாலன், விஜயா சம்பத், சிவகுமார், கல்யாணராமன்
வரதராஜன் , விஜயா சம்பத், அனிதா ராஜேஷ், ஜெயா ஸ்ரீராம், சாந்தி ரசவாதி
இந்திரா ராமநாதன் , கௌரிசங்கர், ராமமூர்த்தி, நாகேந்திர பாரதி ~
இவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்
துரை தனபாலன் அவர்கள்!
அவருக்கான பரிசு ரூபாய் 100 காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
வ வே சு வைக் கேளுங்கள்
வ வே சு
- வசந்தா திருப்பூர் பிள்ளையார் – முருகன் ( கார்த்திகேயன்) இருவரும் தெற்கில் ஒருமாதிரி வடக்கே ஒரு மாதிரி இருக்கிறார்களே ! எப்படி ஏற்பட்டது இந்த மாறுதல்? –
தெற்கில் கணபதி பிரும்மச்சாரி; முருகன் சம்சாரி. வடக்கில் கணபதி சம்சாரி; கார்த்திகேயன் பிரும்மச்சாரி. வள்ளி கதை அங்கு கிடையாது. கண்ணனுக்கு அங்கே மீரா; இங்குள்ள கோதை அங்கே கிடையாது. இங்கே சிவன் , அங்கே உருத்திரன். இந்தப் பின்னணி பற்றியெல்லாம் அறிஞர் அ.ச.ஞா எழுதியுள்ளார். அவரும் கூட இதன் காரணம் என்னவென்று எழுதவில்லை. நமது மதத்தின் பெருமையே அதுதான். தெய்வ உருவங்கள் மட்டுமன்றி அவை சார்ந்த புராணங்களும் மாறுபடும். வேற்றுமைகளுள் ஒருமை காண்பது நமது மதம். சின்னச் சின்ன மாறுதல்களுடன் நமது நாட்டில் மட்டும் 300 வகையான இராமாயணங்கள் உள்ளன.
நான் சொல்லும் காரணம் இது: அக்காலத்தில் எல்லாமே “கர்ண பரம்பரைதான்” பக்தி இலக்கியங்கள் காதால் கேட்கப்பட்டுப் பரவியவை. இமய முதல் குமரிவரை பல மொழிகள் பேசும் மக்களிடை ஒரு செய்தி வாய்வழி பரவுமென்றால் அதில் மாற்றங்கள் இல்லாமலிருந்தால்தான் அதிசயம்.
2. ராய செல்லப்பா – கம்பனுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்குமா?
நிச்சயம் தெரியும். அகச் சான்றுகள் பல உள்ளன. பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கம்பனுக்கு மூலத்தின் மொழி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. கம்பனுக்கு இரண்டு முக்கியப் பெருமைகள் உண்டு. ஒன்று வால்மீகியை அடியொற்றி எழுதினான்; இரண்டு வால்மீகியிலிருந்து மாற்றியும் எழுதினான்.
தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ.
என்ற கம்பன் பாடலில் தேவபாடையான சம்ஸ்கிருதத்தில் இராமாயணம் பாடிய மூவர்களில் மூத்தவரான வால்மீகியின் சொல்வழியே நான் தமிழ்ப் பாக்கள் வடித்திருக்கிறேன் என்கிறான். மற்ற இருவர் வசிட்டர், போதாயனர் ஆவர்.
மேலும் தமிழகத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்ப்பண்டிதர்கள் (உ.வே.சா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை , தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், போன்ற பலர்) தமிழ் , சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளும் அறிந்தவர்களாகவே இருந்துள்ளனர். மொழிவெறுப்பு வளராத காலம் அது.
- ராம் – usa சமீபத்தில் படித்த நாவல்களில் நீங்கள் பெரிதும் ரசித்த நாவல்?
இரா. முருகன் எழுதிய ராமோஜியம் ( கிழக்குப் பதிப்பகம்)
- சுந்தரராஜன் USA சங்க காலத்தில் உரைநடை எப்படி இருந்திருக்கும் ? –
எட்டுத்தொகை பத்துப்பாட்டு மூலமே நாம் சங்கத்தை அறிவோம்..அவை அனைத்தும் செய்யுள் நடையிலேதான் உள்ளன. தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர் சேனாவரையர், கல்லாடனார், நச்சினார்க்கினியார் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் போன்றோர் உரைநடை செய்யுள் நடையை விடக் கடுமையானது.
பேச்சு நடை எப்படி இருந்திருக்கும்..ஒருவேளை
அந்தக் கால ராஜாராணி திரைப்பட வசனங்கள் போல இருந்திருக்கக் கூடும்
- துரை தனபாலன் : நத்தம் போலக் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது என்ற குறளின் பொருளை சற்று விளக்கமாகக் கூறுங்கள். (மு.வ., இளங்குமரனார் போன்றோரின் விளக்கங்கள் கூட நிறைவாகத் தோன்றவில்லை)-
புகழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் தரும் அற்புதமான குறள் இது. இங்கே புகழ் என்பது இல்லறத்தான் ஈகையினாலே பெறுகின்ற கீர்த்தி .பூதவுடலை வருத்தி வளர்வதன்றோ புகழுடம்பு . வாழும் போது உள்ளது பூதவுடல் ; அது வீழ்ந்த பின்னே நிலைப்பது புகழுடல் . அழியப் போகின்ற உடலைப் பயன்படுத்தி அழியாப் புகழைப் பெறுவது வித்தகர்களுக்கே உரியது ;பிறர்க்கு அரிது.
நத்தம் ஆகும் கேடும் , உளது ஆகும் சாக்காடும் என்று “ஆகும்” என்பதைக் கொண்டு சேர்த்து போட்டுப் பாருங்கள் ,புரிந்துபோய்விடும்
ஆக நிலையாமையைப் பயன்படுத்தி நிலைத்த புகழைப் பெ றுவது வித்தகர்களான அறிவாளிகளுக்கே கூடும் என்பது குறள் சொல்லும் பொருள் .
- நாகேந்திர பாரதி ‘சித்தர் பாடல்களின் சிறப்பு ’ பற்றி ஓர் ‘அறிமுக முன்னோட்டம்’ தர இயலுமா? –
கேள்வி பதில் பகுதியைக் கட்டுரை எழுதப் பயன்படுத்திக் கொண்டால் அது தவறல்லவா! எனவே சுருக்கமாகச் சொல்கிறேன் .
நமது சித்தர் பரம்பரை தொடங்குமிடம் பொதிகை !ஆம் ! அகத்தியர்தான் சித்தர் குழாத்தின் தலைமகனாகக் கருதப்படுபவர் . அங்குதான் தமிழும் பிறந்தது. எனவே சித்தர் பாடல்களின் முதல் சிறப்பு அவை முதலில் பிறந்தவை என்பதே.
பத்தாவது திருமுறையாக வைக்கப்பட்டு வணங்கப்படுவது திருமூலர் எழுதிய திருமந்திரம் . உதாரணத்திற்கு திருமூலர் எனும் சித்தரின் பாடல் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறேன்,
சிவாகமப் பேரறிவைக் கொண்ட ஆதி நூல் திருமந்திரம்தான். எளிய சிறு கலிவிருத்தங்களால் அமைந்த இதன் மூவாயிரம் பாடல்களும் ஒரே யாப்பில் சமைந்தது என்றாலும் வாசகர்களுக்கு அலுப்போ சலிப்போ தோன்றுவதில்லை.
அந்த யாப்பைக் கையாளுவதில் திருமூலர் அபார வெற்றி அடைந்திருக்கிறார் ஆழ்ந்த சிந்தனைகள் , உள்ளுணர்வுகள் . அவற்றுள் புதைபொருட்கள் ஆகியவை இவற்றில் உண்டு. கடினமான உருவகங்களைக் கொண்டதேனும் ,பழகு தமிழில் மிக எளிய நடையில் குறியீடுகள் மூலம் பாடல்கள் அமைந்திருப்பது திருமூலரின் மேதாவிலாசத்திற்குச் சான்று
பொருத்தமான எளிய சிறு சொற்கள் இவர் பாடலிலே சிறகடித்துப் பறக்கின்றன சிந்தனையைக் கிளறுகின்றன .ஓசையும் பொருளும் இசையுமாறு உருவகக் கவிதைகளை இயற்றியுள்ளது பெரிய சாதனையாகும். உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் .
யோகப்பயிற்சியால் வைராக்யம் தோன்றும். அதனைக் கொண்டு தத்துவ ஆராய்சசி செய்ய ,சிவம் வெளிப்படும். சிவம் வெளிப்பட சித்த விருத்திகள் அடங்கும்.சிவாநுபூதி கிடைக்கும். இதனைச் சொல்லும் எளிய பாடல். எளிய சொற்களுக்குள் குறியீடாக தத்துவம் அடங்கியிருக்கும் .
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே .
( வழுதலை வித்து = யோகப்பயிற்சி ; பாகல் =வைராக்கியம் ; புழுதி =தத்துவம்; பூசணி =சிவம் ; தோட்டக்குடிகள் =இந்திரியங்கள்; வாழைக்கனி =சிவாநுபூதி )
இது போலவே அனைத்து சித்தர் பாடல்களும் எளிய வழக்குச் சொற்கள் கொண்டு மரபு சார்ந்த யாப்புகளில் புனைய பட்டவை. ஆனால் இக் குறியீடுகளை விளங்கிக் கொள்வது அத்தனை சுலபமல்ல.
7.ஜி.பி.சதுர்புஜன். தந்தை, மகன் ( தந்தை மகற்காற்றும் உதவி, மகன் தந்தைக்காற்றும் உதவி) என்பதைப் பற்றியெல்லாம் எழுதிய திருவள்ளுவர், ஆசிரியர், மாணவன் ஆகியவர்களைப் பற்றி எழுதாதது ஏனோ? –
எழுதவில்லை என்பதை நீங்களே தீர்மானம் செய்து விட்டால் எப்படி? நிச்சயம் எழுதியுள்ளார் . ஆனால் மாணவர் ஆசிரியர் என்று பெயர் குறிப்பிடாமல் எழுதியுள்ளார். ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம் .
செல்வம் உள்ள ஒருவனிடம் வறுமையான ஓர் ஏழை எவ்விதம் நாணத்தை விட்டு உடல் வளைந்து பணிந்து நிற்பானோ அவ்விதம் ஆசிரியர் முன் நின்று கற்றுக்கொள்பவனே தலை சிறந்த மாணவன் .பிறர் எல்லாம் கடையர் என்கிறார் வள்ளுவர் .
“உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர் ( குறள் 235 }
சரி! ஆசிரியரைப் பற்றி எங்கே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்?
கேட்பவரைத் தன் பேச்சாலே முற்றும் கவர வேண்டும் அதாவது பிணிக்க வேண்டும் . கேளாதவர்கள் விரும்பிக் கேட்க வரவேண்டும் .
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கிறார். மாணவரின் கவனம் சிதையாமல் தன் சொல்வன்மையால் அவர்களைக் கட்டிப் போட வேண்டும். அந்த சார் கிளாசா “போர்” என்று சொல்லாமல் அவரைக் கேளாத மாணவரும் “விரும்பி “ அவர் வகுப்புக்கு ஒடி வரவேண்டும் . அதுதானே சிறந்த ஆசிரியரின் இலக்கணம் .
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் “ என்ற குறள் நல்லாசிரியருக்குப் பொருந்தாதா? இவை போல இன்னும் பல உள்ளன .
நல்ல மாணவராகத் திருக்குறளில் தேடிப்பாருங்கள் .வள்ளுவனார் நல்ல ஆசிரியராகத் தென்படுவார் .
- கவிஞர் செம்பருத்தி : திருக்குறள் அதிகாரத் தலைப்புகளைக் கொடுத்தது வள்ளுவரா அல்லது தொகுப்பாசிரியர்களா ?
நிச்சயமாகத் தொகுப்பாசிரியர்கள்தான் செய்திருக்க வேண்டும். வள்ளுவர் என்ற மாபெரும் புலவர், அட்டவணை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துப் பாடல்கள் என்று திட்டம் போட்டுக்கொண்டு சரியாக 133 அதிகாரங்களை எழுதியிருப்பார் என்று எண்ணுவது குறளாசானின் மேதைமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும்
திருவள்ளுவர் ஆயிரக்கணக்கான குறள் பாக்களை எழுதியிருப்பார் .கிடைத்ததைத் தொகுத்தவர்கள் வகைப்படுத்தியதே இந்த ஆயிரத்து முந்நூற்று முப்பது எண்ணிக்கை.
இதெல்லாம் என் சொந்த சரக்கல்ல .பல ஆண்டுகளுக்கு முன் இதே கேள்வியைக் கேட்ட போது பேராசிரியர் நாகநந்தி சொன்ன பதில் இது .
- சங்கரநாராயணன் , சென்னை : இலக்கணம் என்றாலே கசப்பாக இருக்கிறதே என்?
கட்டுப்பாடு என்றால் யாருக்கும் பிடிப்பதில்லை. இலக்கணம் என்பது மொழிக்கட்டுப்பாடு . ஆனால் அது இல்லையென்றால் மொழி அழிந்துவிடும் முதலில் கசந்தாலும் இலக்கணம் புரியத் தொடங்கிய பின் இனிக்கும். இது என் சொந்த அனுபவம் .
- ஆதிகேசவன் : சென்னை :பக்திக்கும் அறிவியலுக்கும் தொடர்பு உண்டா ?
பக்தி நெஞ்சம் சம்பந்தப்பட்டது ; அறிவியல் மூளை சம்பந்தப்பட்டது . நெஞ்சுக்கும் மூளைக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
உலக இதிகாசங்கள் – இலியட் எஸ் எஸ்
ஹோமர் எழுதிய இலியட் கதையைப் படிக்கும் போது இலியட் என்பதற்கான அர்த்ததைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
டிராய் என்ற நகரம் தற்போதுள்ள துருக்கிப் பகுதியைச் சேர்ந்தப் பழமையான நகரம். ஹோமர் கதை சொன்ன காலத்தில் அது அனைவராலும் டிராய் என்றே அறியப்பட்டது. ஆனால் அதற்கும் முந்திய காலத்தில் -அதாவது ஹோமரின் கதை நடந்த காலத்தில் அந்தப் பகுதி இலியோஸ் , இலியம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஊரைப் பற்றி – அங்கு நடந்த போரைப் பற்றி எழுதப்பட்டதால் இந்தக் காவியம் ‘இலியட்’ என்று அழைக்கப்படுகிறது. ஹோமர் கதையிலேயே இலியம் -டிராய் என்ற இரண்டு பேரும் மாறி மாறி வரும். இரண்டும் ஒரே நகரத்தைக் குறிப்பவைதான்.
சுருக்கமாக இலியட் என்றால் இலியோஸ் நாட்டின் கதை என்று பொருள்.
இது எப்படி என்றால் ராமர்+ அயனம் சேர்ந்து ராமாயணம் ஆனது போல. அயனம் என்றால் பாதை -பயணம் என்று பொருள். ராமரின் வாழ்க்கைப் பாதை , ராமர் சென்ற நீண்ட பயணம் ராமர் காட்டிய வாழ்க்கை நெறி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.
இன்னொரு முக்கிய செய்தி. இலியட் கதைக்குள் நுழையும் முன் கிரேக்கக் கடவுள்கள் பற்றிய சில உபகதைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் ராமாயணத்தை மகாவிஷ்ணு, சிவன், பிரும்மா, இந்திரன், சூரியதேவன், சமுத்திரராஜன், வாயு, குபேரன்,பரசுராமர், போன்ற தேவர்களைத் தெரியாமல் படிப்பது போல இருக்கும்.
இலியட் காவியத்தின் நாயகனான அக்கிலிஸ் பிறப்பு எப்படி நடைபெற்றது என்பது முதல் கதை.
கிரேக்க இதிகாசத்தில் தலைமைக் கடவுள் ஜீயஸ். அவனது தம்பி பொசைடன். இருவரும் திட்டீஸ் என்ற கடல் தேவதை மீது மோகம் கொள்கிறார்கள். இருவரும் அவளுக்காக சண்டை போட்டுக்கொள்ள இருந்தார்கள். அப்போது கடவுள்களில் முக்காலமும் அறிந்த ஞானி ஒருவர் ‘இவளுக்குப் பிறக்கும் மகன் அவன் தந்தையை விட மிகமிக சக்திவாய்ந்தவனாக இருப்பான் ‘ என்று கூறுகிறார். அண்ணன் தம்பி இருவருக்கும் தங்களைவிட தன் மகன் உயர்ந்த இடத்தில் வந்தால் தங்கள் கடவுள் பதவிக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து திட்டீஸ் மீது கொண்ட காதலைத் தியாகம் செய்ய முன் வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அவளுக்கு பீலியஸ் என்ற அரசனுடன் திருமணம் செய்து வைக்கின்றார்கள். அதிலும் அவர்கள் சுயநலம் கலந்து இருக்கிறது. மானுடன் ஒருவன் மூலம் திட்டீஸுக்குப் பிறக்கும் மகன் மனிதன் தானே! அவன் எப்படியும் இறந்துவிடுவான், தங்கள் பதவியை யாரும் அசைக்க முடியாது என்பதில் கருத்து ஒருமித்து இருந்தார்கள்.
பீலியஸ் -திட்டீஸுக்கு பிறந்த மகன்தான் இலியட்டின் நாயகன் அக்கிலிஸ். நமது பீமனைப் போல் வீரமும் வலிமையும் கொண்ட மாபெரும் போர் வீரனாகத் திகழப் போகின்றவன்!
கடல் தேவதை திட்டீஸ் தன் மகன் அக்கிலிஸ் மீது உயிரையே வைத்திருந்தாள். அதனால் அவன் அழிவே இல்லாத மானிடனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கினாள். பாதாள உலகில் உள்ள சிறிய நதியின் தண்ணீரில் எந்த மனிதனின் பாகங்கள் படுகின்றனவோ அவை அழியாமல் இருக்கும் என்ற ரகசியத்தைத் தெரிந்துகொள்கிறாள். குழந்தையாய் இருக்கும் தன் மகன் அக்கிலிஸைக் குதிகாலைப் (Achille’s heels) பிடித்து அவன் உடல் முழுவதையும் அந்த பாதாள நதித் தண்ணீரில் முக்கி எடுக்கிறாள்.
அவள் நம்பிக்கை வாழ்ந்ததா அல்லது மகாபாரத காந்தாரி மாதிரி பொய்த்ததா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.
அது என்ன மகாபாரதக் காந்தாரி கதை?
மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் நடக்கும் 17 வது நாளில் காந்தாரி தன் மகன் துரியோதனன் கதாயுகப் போரில் எந்த இடத்தில் அடிபட்டாலும் இறந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறாள். கண்ணைக் கட்டிக் கொண்டு அவள் அத்தனை நாள் சேமித்து வைத்த நேத்ர சக்தியை தன் மகனின் உடலில் செலுத்தினால் அது அவன் உடலை வஜ்ரமாக்கிவிடும் என்பதை அறிந்திருந்தாள் காந்தாரி! அதனால் அவனைப் பிறந்த மேனியுடன் வரச் சொல்கிறாள். தனக்கு நித்திரத்துவம் தரும் அந்த நேத்ர சக்தியைப் பெற அவனும் வெட்கத்தைவிட்டுப் பிறந்த மேனியுடன் சென்றான். ஆனால் எதிரில் கிருஷ்ணன் வருவதைப் பார்த்து அவன் இடுப்பில் துணியைக் கட்டிக் கொண்டான். . காந்தாரி தன் கண் கட்டை அவிழ்த்து அவன் முழு உடலைப் பார்க்கையில் தன் உடல் வஜ்ரம்போல் மாறுவதை அவனும் உணர்ந்தான். ஆனால் இடுப்பில் மர்ம பாகத்திற்கு கீழ் தொடை வரை அவன் ஆடை அணிந்திருப்பதைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். இனி அவளால் மீண்டும் நேத்ர சக்தியைப் பிரயோகிக்கமுடியாது. இது கிருஷ்ணன் செய்த சதி என்பதை உணர்ந்து கோபம் கொள்கிறாள்.
‘கவலைப்படாதே அம்மா! கதாயுத்தத்தில் தொடையில் யாரும் அடிக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது ” என்று துரியோதனன் கூறுகையில் கண்ணன் எங்கோ சிரிப்பது அவன் காதில் விழவில்லை. இறுதிப்போரில் பீமன் அவனது தொடையில் அடித்தே அவனைத் தோற்கடிக்கிறான். அதுவும் கண்ணன் அர்ஜுனன் மூலம் துரியோதனனின் தொடைதான் அவனது பலவீனம் என்பதைத் தொட்டுக் காட்டிய பிறகே அது நிகழ்கிறது.
பீலியஸ் -திட்டீஸ் திருமணத்தின் போது நடந்த இன்னொரு நிகழ்வு இலியட் கதைக்கு அடிகோலிய உப கதை !
நம் நாரதர் போல கிரேக்க இதிகாசத்திலும் எரிஸ் என்ற தேவதை இருந்தாள். செல்லுமிடமெல்லாம் ஏதாவது கலகம் செய்வது அவள் வழக்கம். அதனால் அவளை பீலியஸ் -திட்டீஸ் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அழைப்பில்லாமலே அவமானப்படுத்தப்பட்ட எரிஸ் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் திருமணத்திற்கு வந்தாள்.
வந்தவள் சும்மா இருக்கவில்லை. அவளால் அது முடியாது. அங்கிருந்த ஒரு மேடையில் ‘உலகில் மிகச் சிறந்த அழகிக்கு இது சொந்தம்’ என்று ஒரு தங்க ஆப்பிளில் எழுதிவைத்துவிட்டுச் சென்று விட்டாள். பிறந்தது கலகம்.
அங்கிருந்த முப்பெரும் தேவியர் மூவருக்கும் போட்டி! தங்களில் யாருக்கு அந்த தங்க ஆப்பிள் சொந்தம் என்பதற்காக! தங்க ஆப்பிள் மீது ஆசையினால் அல்ல. அதன் மூலம் ‘தான்தான் அகிலாண்டகோடி உலகுக்கும் அழகி என்பது நிரூபணம் ஆகும் ; ஆகவேண்டும்’ என்ற கொலைவெறி !
( இரண்டாம் நூற்றாண்டு ஓவியம் இந்தப் பிரபஞ்ச அழகிப்போட்டியைப் பற்றியது)
அவர்கள் ஹீரா, அதினி, அப்ரோடைட்டி என்ற மூன்று தேவதைகள். ஹீரா திருமணங்களின் தலைவி. அதினி அறிவிக்கு அதிபதி. அப்ரோடைட்டி காதல் தேவதை ! அவர்களுக்குள்தான் அப்போது அழகுப் போட்டி துவங்கியது. அழகில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.
பீலியஸ் -திட்டீஸ் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்துத் தேவர்களும் தங்களில் யார் அந்த பிரபஞ்ச அழகி என்பதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மூவரும் ஆணையிட்டார்கள். அவர்களில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது ? அதனால் பிறக்கும் மற்ற இரண்டு பேரின் கோபத்தை எப்படி சமாளிப்பது ? இதற்கான விடை தெரியாமல் எல்லாக் கடவுளர்களும் திணறினார்கள்.
ஜீயஸ் கடவுளுக்கு ஒரு யுக்தி உதித்தது.
“இந்தப் பிரபஞ்ச அழகிப் போட்டியின் நடுவராக டிராய் என்ற நகரத்தின் இளவரசன் பாரிஸ் என்பவனை நியமிப்போம். அவன் பிரபஞ்சத்தின் பேரழகன்! அவன் கூறினால் மூன்று தேவியரும் ஒப்புக் கொள்வார்கள், அதுமட்டுமல்ல அவன் ஒருமுறை சிறந்த காளைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் அவனுடைய காளை கலந்துகொண்டபோதும் மற்றவருடைய காளையைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தான். அந்த அளவு நியாயமானவன். ” அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
பாரிஸ் அங்கு வரவழைக்கப்பட்டான். அவனுடைய அழகு தேவ உலகத்து மாதர்களை உரித்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. இருப்பினும் தான் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதை நன்றாகப் புரிந்துகொண்டான் பாரிஸ் . தன்னால் மறுக்கவும் முடியாது. ஒருவரை சிறந்த அழகி என்று கூறினால் மற்ற இருவரின் கோபம் எந்த அளவிற்குப் போகும் என்பதையும் உணர்ந்திருந்தான். ஒரு முடிவுக்கு வந்தான்.
பிரபஞ்ச அழகி போட்டி துவங்கியது. மூன்று பெரும் தங்கள் அழகுகள் தெறிக்க அங்கே நடனமாடினார்கள். பாடினார்கள். ஒய்யாரமாக நடந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அழகு. தனித்தனியே அவர்கள் வரும்போது அவள்தான் பிரபஞ்சப் பேரழகி என்று அனைவரும் நிச்சயமாகக் கூறினார். ஆனால் மூவரும் சேர்ந்து வரும் போது யார் பேரழகி என்று சொல்ல முடியாமல் திகைத்தனர்.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஏன் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ஏரிஸ் தேவதையும் பாரிஸ் எப்படித் தீர்ப்பு வழங்கப் போகிறான் என்று இதயத்தைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.
பாரிஸ் எழுந்து நின்றான்.
“இந்த இடத்தில் மூவரும் சேர்ந்து இருக்கும்போது என்னால் சரியான தீர்ப்பு வழங்க முடியாது. அதோ இருக்கும் ஈடா மலை உச்சியில் நான் காத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவராக மலை உச்சிக்கு வந்து அருகிலிருக்கும் ஈடா அருவியில் குளித்துப் பின்னர் பிறந்த மேனியாக என்னிடம் வரட்டும். நான் ஒவ்வொருவரையும் அவர்களின் உண்மையான அழகினைப் பார்த்து அவர்களில் யார் பேரழகி என்ற தீர்ப்பை வழங்குகிறேன்.” என்று கூறினான்.
அனைவருக்கும் அது சரி என்றே பட்டது. பாரிஸ் மலை உச்சிக்குச் சென்றான். முதலில் வந்தவள் ஹீரா. திருமணத்தின் தேவதை அல்லவா ? அவள் அருவிக்கு வர வர அவளது ஆடைகள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டிருந்தன. அவள் அருவியில் குளித்து மெல்ல மலை உச்சிக்குச் செல்லும் படியில் ஏறி நடந்த வரும்போது சந்தனக் காற்று அவளிடமிருந்து பரவி பாரிஸை மயக்கியது. அவன் அருகில் அவனை முத்தமிடுவது போல பக்கத்தில் வந்த ஹீரா ” என்னைப் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுத்தால் டிராய் என்னும் சிறிய ஊரில் இளவரசனாக இருக்கும் உன்னை இந்தக் கண்டத்துக்கே அரசனாக்குகிறேன்” என்று மயக்கும் குரலில் மற்றவர் கேட்காதவாறு கூறினாள். பாரிஸ் அவளிடம் ” தேவி! மலையடிவாரத்தில் காத்திருங்கள்! நான் இன்னும் சற்று நேரத்தில் முடிவை அறிவிக்கிறேன்” என்றான்.
அடுத்து வந்தவள் அதினி ! புத்திக்கு அதிபதி அல்லவா? அவள் அப்படியே காற்றில் மிதந்து வந்தாள். அவளது ஆடைகள் மெல்லிய திரைச்சீலை போல அழகை மறைப்பதற்குப் பதிலாக அதிகப் படுத்திக் காட்டியது. அருவியில் அவள் குளிக்கும்போது அந்த ஆடை மெல்ல மறைய அவள் தேகம் பனிக்கட்டிபோல கண்ணாடி போல மின்னத் தொடங்கியது. அவளும் மெதுவாக பாரிஸ் இருக்கும் உச்சிக்கு வந்து அவனைக் கட்டிப் பிடிப்பதுபோல அருகே வந்து .” அழகா! நீ என்னைப் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுத்தால் எந்தப் போரிலும் நீயே வெல்லும்படி உனக்கு புத்தி சாதுரியத்தை வழங்குவேன்! உன்னை வெல்ல உங்கள் உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்! அதனால நீ பெறப்போக்கும் பொன்னும் பொருளும் அளவில்லாதபடி இருக்கும்” என்று ஆசை வார்த்தைகளைத் தேன் ஒழுகுவது போலக் கூறினாள். அவள் அருகாமை பாரிசுக்கு மயக்கத்தைத் தந்தது. மிகவும் தடுமாறி,” தேவி! மலையடிவாரத்தில் காத்திருங்கள்! நான் இன்னும் சற்று நேரத்தில் முடிவை அறிவிக்கிறேன்” என்றான்.
மூன்றாவதாக வந்தவள் அப்ரோடைட்டி! காதல் தேவதை ! முதலிரவுக்கு வரும் பருவப்பெண் போல நாணத்தையும் வெட்கத்தையும் இதழிலும் நெஞ்சிலும் தேக்கி வைத்துக் கொண்டு தலையிலிருந்து கால் வரை முழுதும் போர்த்திய தங்க உடையில் நடந்தே அருவிக்கு வந்தாள். நடை பழகும் அவளது ஒவ்வொரு அடியும் பார்ப்பவர் உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டிக்கொண்டே இருந்தது. மறைந்த அழகே இவ்வளவு அழகு என்றால் முழுவதும் தெரிந்தால் என்ன அழகோ என்று பாரிஸை முற்றிலும் மயக்கியது அவளது தவழும் நடை. அருவியில் குளிக்கும்போது அவளிடம் புன்னகையைத் தவிர வேறு உடை இல்லை. பாரிஸ் அவள் அழகைப் பார்த்து மூச்சு விடாமல் அப்படியே சிலை போல நின்றான். அதே மயக்கும் புன்னகையுடன் பாரிஸ் அருகே வந்து அவன் மடியில் விழுந்தாள். ” இப்போது சொல்! நான் தானே பேரழகி? ” பாரிஸால் ஒன்றும் பேச முடியவில்லை. ” எனக்குத் தெரியும் மற்ற இருவரும் உனக்கு அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொல்லியிருப்பார்கள் ! ஆனால் நான் தப் போகும் சுகத்திற்கு அது ஈடாகாது. அதுதான் பெண் சுகம்! என்னைப் பிரபஞ்சப் பேரழகியாக்கு! உனக்கு என்னைப் போலவே இருக்கும் உலகப் பேரழகியின் சுகத்தைத் தருகிறேன்! அதோ பூவுலகில் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்த அழகியை என் கரத்தில் பார்! ” என்று அவளது கைவிரல்களை விரித்துக் காட்டினாள். அவள் கையில் கிரேக்கப் பேரரசின் ஸபார்ட்டா நாட்டு அரசன் மெனிலியஸ் மனைவி ஹெலனின் முகம் தெரிந்தது!
அந்த முகம் ஆயிரக் கணக்கான கப்பல்களை அழித்த முகம்!
அந்த முகம் இலட்சக்கணக்கான போர் வீரர்களைக் கொன்ற முகம்!
அந்த முகம் ஒரு நாட்டையே அழிக்கும் ஆற்றல் படைத்த அழகு முகம்!
ஹீரா மண்ணாசை காட்டினாள் ! அதினி பொன்னாசை காட்டினாள்! அப்ரோடைட்டி பெண்ணாசையைத் தூண்டுகிறாள்!
முடிவில் பெண்ணாசையே வெல்கிறது! இதிகாசம் தரும் பாடம் அதுதானே!
காதல் தேவதை அப்ரோடைட்டியையே பேரழகியாக தீர்ப்பு கூறி தங்க ஆப்பிளைக் கொடுக்கிறான் பாரிஸ்!
அப்போது விதிக்கப்பட்டது இதிகாச வித்து!
இராவணன் சீதையத் தூக்கிக்கொண்டு செல்லப் பிறந்தது ராம -ராவண யுத்தம்
தங்க ஆப்பிள் ( Apple of discard ) பாரிஸ் ஹெலனைத் தூக்கிக் கொண்டு செல்லப் பந்தாய் உருண்டது!
கிரேக்கர்களுக்கும் டிராய் நாட்டுக்கும் இடையே பத்தாண்டு டிரோஜன் யுத்தம் வரக் காரணமாயிற்று! !
(தொடரும்)
சரித்திரம் பேசுகிறது – யாரோ
ராஜராஜன்- மும்முடிச்சோழன்
இராஜராஜன் நமது நாயகனாக இருக்கும் போது எழுதுவதற்கு நமக்கு என்ன குறை? சரித்திரத்துடன், சொந்த சரக்கையும் சேர்த்து ஒரு கலக்குக் கலக்குவோம்.
முன்கதை:
காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம். இந்த இடத்துக்குப் பயணப்பட்டு திரும்பிய அருண்மொழி, மாறன் என்ற மாவீரனை தன்னுடன் அழைத்து வந்தான்.
இனித் தொடர்வோம்.
உத்தம சோழன் சோழ மன்னனாக இருந்த போது, அருண்மொழிவர்மன் சும்மா இருக்கவில்லை. சோழப்படையைப் பலப்படுத்தினான். மாறன், தான் காந்தளூர்ச்சாலையில் பயின்ற போர்க்கலையை போதித்து, நல்லப் பயிற்சியைக் கொடுத்து, சோழர் படையைப் பலப்படுத்தினான். சேரனின் கடற்படை ஒரு தகர்க்கமுடியாத பலமாக இருப்பது அறிந்து – அதை விட பலமான கப்பற்படையை அருண்மொழி சிருஷ்டித்தான்.
வருடங்கள் 8 உருண்டோடின.
கி பி 985.
மதுராந்தகன் மறைந்தான்.
ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985.
அருண்மொழி பட்டாபிஷேகம் செய்து சோழ மன்னனானான் – ராஜராஜனானான்.
அந்நாளில், சோழப் பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது சேர நாட்டில் இயங்கிவந்த காந்தளூர்ச் சாலை. ‘தன் அண்டை நாட்டில் ஒரு போர்ப் பயிற்சிக் கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல’ என்று ராஜராஜன் கருதினான். தனது மூதாதையர் பாண்டியர்களை பல முறை வென்றும் – திரும்பத் திரும்ப முளைத்து எதிர்க்கும் பாண்டியரின் பலத்தை ஆராய்ந்தான். அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், காந்தளூர்ச்சாலைப் போர்க்கழகத்தில் பயிற்சி பெற்றவர்களே என்று தெரிய வந்தது. அதனால்தான் 8 வருடமுன்பு, காந்தளூர்ச்சாலையைத் தானே பார்வையிட வந்தான். போட்டியிலும் கலந்து கொண்டான்.
அதை நாமும் பார்த்தோம். ரசித்தோம்!
ராஜராஜன் சேர, பாண்டிய, ஈழக் கூட்டணியின் வலுவை நன்கு அறிந்திருந்தான். இவற்றை ஒவ்வொன்றாக அழிக்கவேண்டும்.
காந்தளூர்ச்சாலை சேரனின் நேர் ஆளுமையில் இருந்தது.
வந்தியத்தேவருடன் ஆலோசனை செய்தான்.
முடிவு செய்தனர்.
சேரனுக்குச் செய்தி அனுப்புவோம்.
செய்தி இதுதான்:
“காந்தளூர்ச்சாலை உடனடியாக மூடப்படவேண்டும்”
ராஜராஜன் மாறனை அழைத்தான்.
“மாறா! நீதான் சேரனிடம் தூது செல்லவேண்டும்” – என்றான்.
“இக்கணமே புறப்படச் சித்தம் சக்கரவர்த்தி” என்றான்.
வஞ்சி மாநகரில் மாறன், சேரன் மன்னன் பாஸ்கரனை அவன் அரண்மணையில் சந்தித்தான்.
சேரனின் முகத்தில் லேசான புன்சிரிப்பு.
‘அன்று, உன்னை நான் வென்றேனே’ என்பது போல பாவனை.
மாறனின் முகத்திலும் ஒரு புன்சிரிப்பு வந்தது.
‘அன்று, நீ என் தலைவனிடம் தோற்றவன் தானே’ என்பது போன்ற ஒரு பாவம்.
சேரனுக்கும் அந்த தோல்வி நினைவுக்கு வந்து அவன் முகம் சற்றுச் சுருங்கியது.
சேரன் சொன்னான். “மாறா! அன்று, என்னுடன் சேருமாறு நான் உன்னை அழைத்தேன். நீயோ – அந்த சோழனிடம் போய்ச் சேர்ந்துவிட்டாய். மதுராந்தகனுக்குப் பயந்து அடங்கிப்போய் ஆட்சியைக் கைவிட்ட அருண்மொழியிடம் நீ சேர்ந்தாய்!” என்று ராஜராஜன் மீது தன்னிடம் இருந்த வெறுப்பைக் காட்டினான்.
மாறன் கோபத்தை அடக்கிக்கொண்டு:
‘மன்னரே! மாமன்னர் சோழதேவர் ராஜராஜர் தங்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்” என்று சொல்லி “கழகம் மூடப்படவேண்டும்” என்றான்.
“என்ன கழகத்தை மூடவேண்டுமா?” என்றான் சேரன்.
மாறன் தொடர்ந்தான்:
“காந்தளூர்ச்சாலையின் போர்க்கழகம் மூடப்படவேண்டும் என்பது சோழச்சக்கரவர்த்தியின் விருப்பம்” என்றான்.
சேரன் கோபித்து, “ஆஹா.. காந்தளூர்ச்சாலையின் மகிமை அருண்மொழிக்கு பயம் கொடுத்தது போலும். உன்னைப்போல ஓரிரு துரோகிகள் காந்தளூர்ச்சாலைப் போர்க்கழகத்திலிருந்து பகைவன் பக்கம் சென்றிருக்கலாம். ஆனால் காந்தளூர்ச்சாலையின் ஏனைய வீரர்கள் எல்லோரும் சேரநாட்டைக் காக்க சூளுரைத்துள்ளனர். உலகிலேயே சிறந்த கடற்படை – அது எங்களது. அது சோழனுக்கு ஒரு சிம்ம சொப்பனம் ஆகும். ஆம். புலிக்கு அது ஒரு சிம்ம சொப்பனம்! நீயும் ஒரு புலியின் வால்! அருண்மொழிக்குச் சொல். காந்தளூர்ச்சாலை மூடப்பட மாட்டாது.” என்ற சேரன் ராஜராஜனைப் பற்றி இழிவாகப்பேசினான்.
மாறன் பொங்கிவிட்டான்.
“சரியாகத்தான் சொன்னீர்கள் சேரமன்னரே! நான் புலியின் வால் தான். ஆனால், புலியின் கரங்கள் எத்தகையது என்பதைத் தங்களைத் தவிர வேறு யார் அறிவார்கள்” என்றான். இதைச் சொல்லும் போது மாறனின் முகத்தில் கோபம் மறைந்து, இகழ்ச்சி கலந்த ஒரு புன்முறுவலும் விளைந்தது.
‘மாறன், தான் காந்தளூர்ச்சாலையில் 8 வருடமுன் போட்டியில் அருண்மொழியின் கரங்களில் தோற்றதைத் தான் குறிப்பிடுகிறான்’ என்பதை சேரன் உணரத்தவறவில்லை.
கொதித்தான்!
‘மாறா! புலியின் வாலை ஒட்ட நறுக்குகிறேன். உன்னைச் சிறையில் பிணைத்து வைக்கிறேன். புலி என்ன செய்கிறது என்று பார்ப்போம்” என்றான்.
“புலியின் வாலைப் பிடித்தவன் கதி என்னவாகும் என்பது தாங்கள் அறியாததா?” என்றான் மாறன்.
சேரன், மாறனை உதகைக்கோட்டையில் சிறை வைத்தான்.
ராஜராஜன் மாறனிடமிருந்து செய்தி வரவில்லையே என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். செய்தி வந்தவுடன் – ராஜராஜன் கோபத்தின் உச்சத்தை அடைந்தான்.
அந்தக் கோபத்தை சிவாஜி கணேசனாலும் காட்டியிருக்க முடியாது!
“பஞ்சவன் மாறாயனை அழைத்து வாருங்கள்” என்றான்.
அது வேறு யாருமல்ல – ராஜராஜன் மகன் ராஜேந்திரன் தான்.
“ராஜேந்திரா! பாஸ்கரன், மாறனைக் கைதுசெய்து கட்டிவைத்து உதகைக் கோட்டையில் காவலில் வைத்திருக்கிறானாம். என் உடலெங்கும் தீ பரவியுள்ளதுபோல எரிகிறது. நாம் உடனே படையெடுத்து சென்று உதகையை அழித்து அதை முழுதும் தீக்கிரையாக்கி, மாறனை சிறை மீட்டு வரவேண்டும். நமது கடற்படை இன்றே குமரிமுனையைச் சுற்றி காந்தளூர்ச்சாலைத் துறைமுகம் நோக்கிப் பயணப்படட்டும். சேரன் கடற்படை அழிக்கப்பட வேண்டும். வழியில் பாண்டியன் அமர புயங்கனையும் ஒடுக்கவேண்டும். நீதான் இந்தப் படையெடுப்பின் தலைமை. நானும் வருகிறேன்” என்றான்.
ராஜேந்திரன் சொன்னான்: “தந்தையே! அவ்வண்ணமே செய்வோம். சேர நாடு செல்ல இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று கொங்குநாட்டு வழியாகச் சென்று – பாலக்காட்டுக் கணவாய் ஊடாகச் – சேர நாட்டிற்குள் புகுந்து திருச்சிவப்பேரூர் (திருச்சூர்) வழியாகவோ, பரதப்புழை ஆற்றங்கரையிலுள்ள திருநாவாய் வழியாகவோ செல்லலாம்.
மற்றொன்று, பாண்டியநாடு வழியாக நெல்வேலி கடந்து நாகர்கோயில் வழியாக சேர நாடு செல்லலாம். வழியில் பாண்டியர்களையும் வென்று – அமர புயங்கனையும் வென்று – சேர நாட்டுக்குச் செல்லலாம். அமர புயங்கனுக்கு அடங்கிய சில குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆளுகின்றனர். அவர்களையும் வெல்வது அவசியம்” என்றான்.
ராஜராஜன் – “நல்லது. பாண்டியனை வென்று பின் சேரநாடு செல்வதே உத்தமம்” என்றான்.
படை புறப்பட்டது.
சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். ராஜராஜ சோழன் எப்பொழுதும் போருக்கு செல்வதற்கு முன்பாக பட்டீஸ்வரன் துர்க்கை அம்மனை வணங்கிவிட்டுத்தான் தன் படையெடுப்பைத் துவங்குவான். அவ்வாறே இந்த முதல்படையெடுப்பையும் துவங்கினான்.
கோவிலில் துர்க்கை அம்மன் – ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் மலர் மாலை அணிந்து, எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் இருந்தாள். சாந்த சொரூபிணியாக புன்னகை தவழும் முகத்துடன், சிம்ம வாகன முகத்துடன் இருந்தாள்.
ராஜராஜன், அக்கா குந்தவை, வந்தியத்தேவர், ராஜேந்திரன் அனைவரும் துர்க்கையை வழிபட்டனர். படைகள் புறப்பட்டன. சோழப்படைகள் பாண்டியரைப் புறங்கண்டது. ராஜராஜன், பாண்டிய மன்னன் அமரபுஜங்கனைச் சிறைப்பிடித்தான். சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் ராஜராஜன், பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. இந்தப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது.
பாஸ்கர ரவிவர்மனின் ஆட்சி, சேரநாடு, குடமலைநாடு, வேணாடு, கொங்குநாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அதாவது இன்றைய கேரளத்தின் கோழிக்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள பகுதி. அதில் காந்தளூர்ச் சாலை ஒரு கடற்கரை நகரம். இங்கு, போர் கப்பற்படைகளுக்கு இடையில் நடந்தது. திருவனந்தபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் சோழப்படை சேரர்களின் கப்பல்களை வீழ்த்தின- எரியூட்டின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதயகிரி என வழங்கும் உதகை என்று சிலர் சொல்கின்றனர். உதகை என்னும் இடம் ஊட்டியும் அல்ல; உதயகிரியும் அல்ல; அவ்விடம் வடகேரளத்திலுள்ள மகோதயபுரம் என்றும் சிலர் சொல்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் உதகைக் கோட்டையின் அழகை வார்த்தைகளால் கூற இயலாது. மலையின் முகட்டில் – 18 காடுகள் சூழ்ந்து, கம்பீரமாக இருந்த கோட்டை அது. எதிரிகள் நெருங்க நினைக்கவே அஞ்சும் அந்த மலைக்கோட்டை, அழகுடன் பலமும் நிறைந்திருந்தது. 18 காடுகளை தாண்டி எதிரிகள் வந்தால் கோட்டையிலிருந்த விற்கூடங்களும், வேற்கூடங்களும் எதிரிகளை தாக்கி அழித்து விடும். இப்படி ஒரு கோட்டை இருக்கும் போது எந்த எதிரிக்கும் அஞ்சாமல் சோழனையும் பகைக்கத் துணிந்தான் சேரன் என்றே சொல்ல வேண்டும்.
உதகைக் கோட்டைக்கு வெளியே இருந்த அடர்ந்த காடுகள் உள்ள இந்தப் பகுதியில்தான், அதன் விளிம்பில் சோழர் படை முகாமிட்டிருந்தது. ராஜராஜன், “ராஜேந்திரா! உதகையைத் தாக்குவதில் நமது திட்டமென்ன?” என்றான்.
“தந்தையே! இந்தக் கோட்டையின் வலிமையை நாம் குறைவாக எடை போடக்கூடாது. நமது படையின் பெருவலிமை எதற்கும் குறைந்ததல்ல. ஆயினும் நேரடித் தாக்குதலில், நமது படைக்கு நிறைய சேதம் ஏற்படும். அதைத் தவிர்க்க, அக்னி பகவானை நமது படையில் சேர்த்துள்ளேன்” என்றான்.
ராஜராஜன் சிரித்துவிட்டான்: “அக்னி பகவான் என்ன செய்யப்போகிறார்?” என்றான். ராஜேந்திரனும் சிரித்துக்கொண்டே: “தந்தையே! பொதுவாக குதிரை, அல்லது யானைப் படையை முதலாக வைத்து போர் தொடங்குவோம். இந்தப்போரில், தீயை முதலில் வைத்து போரிடுவோம்” என்றான்.
ராஜராஜன் : “மேலும் சொல்” என்றான்.
ராஜேந்திரன்: “காடுகளை தீயால் எரித்து அழித்துக் கொண்டே நாம் முன்னேறுவோம். கோட்டை நெருங்கியவுடன், கோட்டை மதிலைத் தாண்டி உள்ளே பாயும் எரியம்புகளால் கோட்டைக்குள் தீ மூட்டுவோம். தீ முற்ற முற்ற, கோட்டை வீரர்கள் கோட்டையின் கதவைத் திறந்து சரணாகதிக்கு வருவர். அப்படி வராவிடில், நமது யானைகள் கோட்டைக் கதவை உடைக்கும். கோட்டைக்குள் நமது வேளக்காரப்படை முதலில் நுழையும். சிறைச்சாலையில் தவிக்கும் நமது மாறனை விடுவித்து நம்மிடம் கொண்டு வரும். அதன் பின்னர், உதகை முற்றிலும் எரிக்கப்படும். இது, தங்கள் தூதனை அவமதித்ததற்காக சேரனுக்கு நாம் வழங்கும் தண்டனை” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
‘நன்று. தீயனைத் தீய்த்திடவேண்டும். தொடங்கட்டும் நமது தாக்குதல்” என்றான் ராஜராஜன்.
திட்டமிட்டபடியே அனைத்தும் நடந்தது. பன்னிரண்டு மணிநேரத்தில் பதினெட்டுக் காடுகள் கடந்து சென்றனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட வேகம், வெறி கொண்ட சோழர் படை என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
வெந்து தணிந்த காடுகள் இடையே அந்த மலைக்கோட்டை – தங்கத்தட்டில் வைக்கப்பட்ட முத்துப்பேழை போல ஜொலித்தது. உதகையும் எரியூட்டப்பட்டு – மூன்று தினங்கள் எரிந்தது. கோட்டைக் கதவுகள் உடைக்கப்பட்டன.
ராஜராஜசோழன் குதிரையின் மீது ஏறி உதயகிரிக் கோட்டையின் (உதகை) உள்ளே நுழையும் காட்சியை உதயசூரியன் எழுவது போல் இருந்தது. (ஜெயங்கொண்டார் தமது கலிங்கத்துப்பரணியில் இதை அழகுபடக் கூறியுள்ளார்).
மாறன் விடுவிக்கப்பட்டான்.
கோட்டையில் இருந்த சேரமன்னன் பாஸ்கரன் – ரகசியப் பாதை வழியாக தப்பியோடி, குதிரைமீது பயணம் செய்து – கடற்கரையை அடைந்தான். அங்கு தயாராக இருந்த கப்பலில் ஏறித் தப்பித்து ஓடினான். உதகை அழிக்கப்பட்டது. சேரநாட்டு அதர்ம வேதபாடசாலைகள் அழிக்கப்பட்டன. மேலும் சேரமன்னனின் வலிமைமிக்க யானைப்படைகளைக் கவர்ந்து, உதகைக் கோட்டையை வெற்றிகொண்ட செய்தியுடன், இவ்வெற்றியின் நினைவாக ராஜராஜசோழன் தமது பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளன்று சேர மண்டலத்தில் விழாவெடுத்தான். (கலிங்கத்துப்பரணி இதைச் சிறப்பித்துக் குறிப்பிடுகின்றது). உதகைக் கோட்டையின் சிறப்பு, அது எரியூட்டி அழிக்கப்பட்ட நிகழ்ச்சி, சேர மன்னன் கடல் வழியே ஓடிய செய்தி இவற்றை திருக்கோயிலூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.
காந்தளூர்ச்சாலை, முன்பே சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வுக்குப் பிறகு ராஜராஜசோழன் மூவேந்தர்களின் முடியையும் தரித்தவர் என்ற பொருளில் மும்முடிச்சோழன் என்ற பட்டம் புனையத் தொடங்கினான். சேர நாட்டு அரசியல் நடைமுறைகளை மாற்றி அமைத்த நிகழ்வுதான் ராஜராஜன் மும்முடிச் சோழன் என்ற பட்டம் புனைவதற்கான முகாந்திரத்தை உருவாக்கித்தந்தது.
மாறன் கூறினான்:
“சக்கரவர்த்தி. இந்தக் காந்தளூர்ச்சாலைக் கழகம் நான் படித்த பாடசாலை. இதன் பெருமைகளை நாம் அனைவரும் அறிவோம். இதை மூடாமல்- இதை சோழநாட்டுப் பயிற்சிக்கு உபயோகப்படுத்தலாமே” என்றான் தயங்கி.
ராஜராஜன்: “மாறா! உனது கருத்துக்கு மாற்று உண்டா? அப்படியே ஆகட்டும்” என்றான்.
ஆக, காந்தளூர்ச்சாலை கலமறுத்து ராஜராஜசோழன் மும்முடிச்சோழனாக முடிசூடிய பின்னரும், காந்தளூர்ச்சாலைப் பயிற்சிக்கூடம் மூடப்படவில்லை. திருநாவாய்த் திருத்தலத்தில் நிகழ்ந்துவந்த மகாமக விழாவையும் அவ்விழாவின்போது நிகழ்ந்த போட்டிகளும் மீண்டும் தொடர்ந்தன.
மும்முடிச்சோழன் ராஜராஜன் பார்வையை வடக்கே உயர்த்தினான்.
சாளுக்கிய, இராட்டிரக்கூட, வெங்கி ராஜ்யங்கள் விரிந்து கிடந்தன.
பராந்தகன் ஆட்சியில் நிகழ்ந்ததற்குப் பாடம் சொல்லும் நேரம் வந்தது. மேலும் தென்னிந்தியாவிலேயே இன்னொரு ராஜ்யம் துள்ளிக்கொண்டிருந்தது.
ஈழம்.
அதற்கும் ஒரு பாடம் புகட்டவேண்டும்.
ராஜராஜனுக்கு நிறைய வேலைகள் காத்துக்கிடக்கிறது.
அவை விரைவில்…
திரைப்பாடலில் சித்திரை – கமலா முரளி
சித்திரை பற்றி திரைச்சித்திரப் பாடல்களில்…
புது வருடம் பிறக்கும் போது புத்துணர்வு பொங்குவது இயல்பு தானே !
திரையிசையை நினைக்காமல்… பாடாமல்…புத்துணர்வு பற்றிச் சொல்வது மாங்காய் பச்சடி வேப்பம்பூ ரசமில்லா புதுவருஷ விருந்து போல அல்லவா ?
சித்திரை பற்றிய திரையிசைப் பாடல்களைப் பற்றி சிந்திக்கும் போது
“சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் ….” பாடல் தான் முழுநிலவாய் மனதில் வியாபிக்கும்.
தண்டவாளத்தின் மேல் புகைவண்டி பயணிக்கும் சத்தம், ரயிலின் விசில்,கவியரசரின் வரிகளுக்கு, மெல்லிசை மன்னர் இசையில், பி.சுசீலாவின் இனிய குரலில் புன்னகையரசியின் காந்தப் புன்னகையுடன்….
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் ம்… ம்… ம்…
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்…..
“எஸ்..எஸ்… சொர்க்கத்துக்குப் போகும் உணர்வு தான் …. கேட்போருக்கு ..”
ராமன் எத்தனை ராமனடி படத்தில் வரும் அப்பாடலை எத்தனை முறை கேட்டாலும், சித்திரை நிலவாய் நம் மனம் பளிச்சிடும் !
“சித்திர…. சித்திரைப்பூ….” போன்ற சொற்களுடன் அநேக பாடல்கள் உண்டு என்றாலும் அது ஓவியத்தையோ அல்லது அழகிய பூக்களையோ குறிக்கக் கூடும்.
சித்திரை மாத அழகை வருணிக்கும் பாடல்களின் வரிசையில்
1963ஆம் ஆண்டு வெளியான ”துளசிமாடம்” படத்தில் இடம் பெற்ற
‘சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்”
பாடலைக் குறிப்பிட வேண்டும்.
கவிஞர்.கா.மு.ஷெரிஃப் அவர்களின் வரிகளை, மெல்லிசைத் திலகம் மகாதேவன் இசையமைப்பில் ,டி.எம்.எஸ் அவர்கள் பாடியிருப்பார். கண்ணியம் மிகுந்த பாடல் வரிகள் ( அத்தகைய திரைச்சூழலுக்கு, பிற்காலத்தில் முனகல்களே பாடல் வரிகளாக இருந்ததுண்டு ), ஏவி..எம்.ராஜனின் கம்பீரமும் கண்ணியமும் கலந்த முகபாவம் ! மிகச் சிறப்பான பாடல் அது !
மக்கள்திலகம் பற்றிக் குறிப்பிடாமல் திரையிசைப் பாடல் கட்டுரையா ?
சித்திரை வெயிலைப் பற்றி ஒரு பாடலின் இடையில் வருகிறது,”கணவன் ” திரைப்படத்தில் வாலி அவர்களின் வைர வரிகளில், மெல்லிசை மன்னர் இசையில் வரும் “என்னப் பொருத்தமடி” என்ற பாடலில் வரும்.
“உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்
சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்
எப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான்
இத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்
ஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் ..
பாருங்கடி ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி”
எனத் துள்ளலாக வரும் அப்பாடல் !
சித்திரை மாத வெயிலைப் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் “ஜோடி” திரைப்படத்தில் எழுதியிருப்பார்.
“வெள்ளி மலரே, வெள்ளி மலரே
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலர் நீ என்றே சொல்வாயோ ?”
என இலக்கிய நயத்துடன் மலரைக் கேட்டிருப்பார்.
“சிவப்பதிகாரம்” படத்தில், வித்யாசாகர் இசையில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள பாடல், “அப்படியோர் ஆணழகன்” எனத் துவங்கும் அப்பாடலில்,
“சித்திரையில் என்ன வரும்?
வெயில் சிந்துவதால் வெக்க வரும்.
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்.
கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்.”
இது மட்டுமல்ல ! கோடை மழை என்பது அனைவரும் அறிந்த இயற்கை நிகழ்வு என்றாலும், சித்திரை என்றால் வெயில் தான் என்பதை, ”அவர்கள்” திரைப்படத்தில், எம்.எஸ்,வி இசையில் வரும்
”ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்”
எனும் பாடலின் வரிகளும் சித்திரை நிலவு பற்றிய அழகிய கவிதைகள், பாடல் வரிகள் எத்தனையோ இருந்தாலும், சித்திரை மாதத்து வெயிலும் கவிஞர்கள் மனதை விட்டு அகலுவதில்லை போலும் !
சித்திரை மாதம் என்பது புதுவருஷத்தின் முதல் மாதம் !
முதல் மாதம் பற்றிய பாடல்களைப் பற்றி யோசிக்கும் போது, எல்லா மாதங்களையும் உள்ளடக்கிய பாடலைப் பற்றிக் குறிப்பிடாமல் கடந்து செல்ல முடியுமா ?
மிகப் பிரபலமான, வரலாற்றுப் பின்னணி கொண்ட “ராஜ ராஜ சோழன்” படத்திலிருந்து தான் அந்தப்பாடல் :
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்,டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.விஜயா ஆகியோர் பாடிய பாடல் :
”மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக
கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக
கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு
மார்கழி மாதத்து பனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் சொல்லழகு
தை மகளே அத்தை மகளே
என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே
மாசில்லாத என் மாமணியே
இந்த மணமகள் தேடிய மன்னவனே
பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ
சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வ புலவரின் வேதம் நீ
வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே
ஆனி மஞ்சனம் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே
ஆடி காவிரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே
புரட்டாசி திங்களில் ஒரு மனம்
ஐப்பசி மாதத்தில் திருமணம்
நம் திருமணம் ”
தமிழ்த் திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்
கவிதாயினி ரோஷனாரா பேகம்
தமிழ்த் திரைக் கவிஞர்கள் வரிசையில், இந்த மாதம், நாம் காணவிருப்பது, தமிழ்த் திரையின் முதல் கவிதாயினி – பெண் கவிஞர். ஒரு அதிசய ஒற்றுமை என்னவென்றால், தமிழ் திரை உலகில் இரண்டு பெண் கவிஞர்கள் தான் வந்திருக்கிறார்கள். ஒருவர் இம்மாதம் நாம் காணவிருக்கும் ரோஷனாரா பேகம். இன்னொருவர் கவிதாயினி தாமரை. இரண்டு பேரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கொங்கு நாட்டில் இருந்து, பொங்கும் தமிழில்
பாடல்கள் தந்தவர்கள்.
தமிழ் திரை உலகின் முதற் பெண் கவிஞர் என்ற பெருமையைக் கொண்டவர், ரோஷனாரா பேகம். இஸ்லாமிய பெண்கள் திரை உலகிற்கு வருவது எனபது இன்றையக் காலத்தில் கூட, இல்லாத நிலையில் , 1968ல் இந்தப் பெண் வந்தது ஆச்சர்யமான விஷயம் தான். ஒரே ஒரு வருத்தம் – திரை உலகில் அவர் எழுதிய முதற் பாடலும் கடைசிப் பாடலும் இதுவே என அமைந்துவிட்டது. காலத்தின் சுவடுகளில் காணாமல் போய்விட்டார்.
ரோஷனாராவின் தந்தை ஒரு மோட்டார் நிறுவனம் வைத்திருந்தார். தாய், மருத்துவப் பணியில் இருந்தவர். கோவை உக்கடத்தில் வசித்து வந்த ரோஷனாராவிற்கு நல்ல குரல் வளம். படிக்கும்போதே அவரே எழுதி, பாடி பல பரிசுகள் வாங்கியவர். தந்தையின் நட்பு வட்டத்தில் இருந்த மெல்லிசை மன்னர் மூலம், கோவையைச் சேர்ந்த தயாரிப்பாளர் வேலுமணி தயாரித்த , குடியிருந்த கோயில் திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
சென்னைக்கு வந்து நான்கு நாட்கள் மட்டுமே தங்கி, இந்தப் பாடலை எழுதினார் என்பார்கள். பாடலின் பல்லவியாக,
குங்குமப்பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
என்ற வரிகளைக் கேட்டவுடன், மன்னருக்கும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் ஆச்சர்யமான சந்தோஷம்.
காரணம், குடியிருந்த கோயில் படத்திற்கு ,முதலில் வைத்த பெயர் சங்கமம்.. படத்தின் பெயரையே, பாட்டின் முதல் வரிகளில் கொண்டு வந்ததால்,
பாடலில் சந்தம், அழகுணர்ச்சி இவற்றுடன் காதலும் சேர, கவிதாயினியின் வரிகள் மிக அழகு.
திரை உலகில் பல வருடங்கள் கோலோச்சி வரும் ஒரு கவிஞர் போல, அற்புதமான வரிகளைத் தந்தவர். இலக்கியத் தரத்துடன் தந்திருப்பது மிக அழகு. அதற்கு ஏற்றாற்போல், மெல்லிசை மன்னரின் நளினமான இசையில், TMS சுசீலா இருவரின் குரல்களில், இந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ரசிக்கப்பட்டது.
–
இதோ முழுப்பாடல், நமது ரசிப்புக்கு.. பாடலை பாடல் வரிகளுடன் கேட்டு மகிழுங்கள்!
குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும் – இளமை
ஒன்றெனப் பாடும்
எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்
தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான்தளிர் தேகம்
மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி
தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கும் எங்கும் ஆனந்த கங்கை
ஜில் என்னும் குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு பேசும்
மெளனமே தான் அங்கு பேசும் பேசும் பேசும்
மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது
சென்றதே பூந்தென்றல் தூது
பக்கோடா காக்கா – SL நாணு
“கா.. கா”
காலம்பர காக்கா கத்தினா நாங்க கடிகாரமே பார்க்க மாட்டோம்.. எங்களுக்குத் தெரியும்.. சரியா மணி ஏழரை..
எங்க பால்கனி க்ரில்ல உட்கார்ந்து கரெக்டா எதிர இருக்கிற சமையல் அறையை எட்டிப் பார்க்கும்..
அந்த சமயத்துல சாப்பாடு ரெடியாயிருக்காது.. அதனால மீனா.. அதான் என் சகதர்மணி ஒரு பிஸ்கட்டைக் கொண்டு வந்து பால்கனி திண்டுல வெப்பா.. அந்தக் காக்கா மறுபடியும் “கா.. கா”ன்னு கத்திட்டு பிஸ்கட்டைக் கவ்விண்டு பறந்து போயிரும்..
அப்புறம் சரியா ஒம்பது மணிக்கு மறுபடியும் “கா.. கா”..
இப்ப மீனா ஒரு கிண்ணத்துல சாதம் எடுத்து, பருப்பு போட்டு, நெய் விட்டு ரெடியா வெச்சிருப்பா.. அதை சுவாமி முன்னால வெச்சு நமஸ்காரம் பண்ணிட்டு பால்கனி திண்டுல கொட்டுவா. அந்தக் காக்காயும் “தேங்ஸ்”ன்னு சொல்ற மாதிரி அவளை ஒரு பார்வை பார்த்துட்டு சாதத்தை ருசிக்க ஆரம்பிச்சுரும்..
நான் கூட சில சமயம் கிண்டலாக் கேட்பேன்..
“தினம் எனக்கு சுடச் சுட சாதம் போடறயோ இல்லையோ.. காக்காய்க்குப் போட்டுடறே.. இது என்ன நியாயம்?”
உடனே மீனா சீரியஸா என்னை அடக்குவா..
“ஐயையோ.. இப்படியெல்லாம் பேச்சுக்குக் கூட கிண்டல் பண்ணாதேங்கோ.. காக்கா யாரு? நம்ம பித்ருக்கள்.. தினம் காக்காய்க்கு சாதம் போடறது.. நம்ம பித்ருக்களுக்கு சாப்பாடு போடறதுக்கு சமம்”
எனக்கு இதுலலாம் அதிகமா நம்பிக்கை இல்லைன்னாலும் அதுக்கு மேல நான் எதுவும் பேச மாட்டேன்.. ஏன்னா நான் ஒரு வார்த்தை சொன்னாக் கூட.. என்னைப் பேச விடாம..
“உங்களுக்குத் தான் எதுலயுமே நம்பிக்கை கிடையாதே.. பித்ரு காரியம் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க இதுலலாம் நம்பிக்கை வெக்காததுனால தான்.. ஆபீஸ்ல உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் தட்டிப் போயிண்டே இருக்கு”
அப்படின்னு அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சு போட்டு.. என்னைக் கிட்டத்தட்ட வீரமணி ரேஞ்சுக்கு நாஸ்திகன் ஆக்கிருவா..
காக்காய்க்கும் மீனாவுக்கும் ஆன உறவே அலாதி தான்..
திடீர்னு ஒரு நாள் “வாங்கோ.. வாங்கோ” அப்படின்னு வாய் நிறைய யாரையோ வெல்கம் பண்ணினா.. யாரோ விருந்தாளி வந்திருக்கான்னு ஹாலுக்குப் போனா.. அங்க மீனாவைத் தவிற வேற யாரும் இல்லை.. அப்புறம் பார்த்தா காக்காயைத் தான் “வாங்கோ வாங்கோ”ன்னு மீனா ஆசையா வரவேத்திருக்கா..
அது மட்டுமில்லை.. அப்பப்ப காக்காயோட அவ பேசற அழகே தனி..
”என்ன அவசரம்.. சூடா இருக்கு.. மெதுவாச் சாப்பிடுங்கோ..”
“இன்னிக்கு சாதம் கொஞ்சம் குழைஞ்சிருக்கு.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ”
“நாளைக்கு அமாவாசை.. மறக்காம வந்துருங்கோ”
அந்தக் காக்காயும் மீனா சொலறதெல்லாம் புரிஞ்ச மாதிரி அவளைப் பார்த்து ”கா கா”ன்னு குரல் கொடுத்துட்டுப் போயிரும்..
சத்தியமாச் சொல்றேன்.. கல்யாணமான இத்தனை வருஷத்துல ஒரு தடவைக் கூட மீனா எங்கிட்ட இப்படி அக்கறையா அனுசரணையாப் பேசினதே கிடையாது..
சரி அதை விடுங்க.. சொந்தக் கதை.. சோகக் கதை.. உங்களுக்கு எதுக்கு?
மறுபடியும் காக்காய்க்கு வருவோம்..
ஒரு நாள் காலம்பர மீனா கவலையோட வந்து..
“ஏன்னா.. பிஸ்கட் காலியாயிருத்து.. நேத்து வாங்க மறந்துட்டேன்” அப்படின்னு சொன்னா.. வழக்கமா ரெண்டாவது டோஸ் டீ உறிஞ்சும் போது நான் ரெண்டு பிஸ்கட் டீயில முக்கி சாப்பிடுவேன்.. அதை நினைச்சுத் தான் மீனா கரிசனப் படறான்னு நம்பினேன்.
”அதனால என்னம்மா.. இன்னிக்கு பிஸ்கட் இல்லாம டீ சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..”
ஆனா அடுத்த கணமே மீனா வாய் திறந்த உடனே என் நம்பிக்கை எவ்வளவு பெரிய அபத்தம்னு புரிஞ்சுண்டேன்.. என் சுய கௌரவம் அதள பாதாளத்துகுப் போய்.. அதுக்கும் கீழ போக முடியாம தத்தளிச்சிண்டிருந்தது..
”ஆமா.. சின்னக் குழந்தையாட்டுமா உங்களுக்கு பிஸ்கெட் ஒண்ணு தான் குறைச்சல்.. இப்ப காக்காய் வந்துரும்.. அதுக்குப் போட பிஸ்கட் இல்லையேன்னு நான் கவலைப் பட்டுண்டிருக்கேன்”
இதைக் கேட்ட அப்புறம் இனி வாழ்க்கைல பிஸ்கட்டே சாப்பிடறதில்லங்கற முடிவுக்கு நான் வந்துட்டேன்னு நீங்க நினைச்சா.. மன்னிக்கணும்.. அப்படியெல்லாம் அவசரப் பட்டு முடிவு எடுத்து மாட்டிக்கிற ஆள் நானில்லை.. “வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு கவுண்டமணி பாணில உதறித் தள்ளிட்டுப் போற ஆள்..
சரி.. என்னை விடுங்க.. கமிங் பேக் டு காக்காய்..
பிஸ்கட் இல்லாம காக்காயை எப்படி சமாளிக்கறதுன்னு மகனையும், மகளையும் கூப்பிட்டு வெச்சிண்டு கேபினட் ரேஞ்சுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தினா மீனா.. (நான் எப்பவுமே எதிர் கட்சிங்கறதுனால ஆலோசனைக் கூட்டத்துல எனக்கு இடம் கிடையாது). இறுதியா அவா ஒரு முடிவுக்கு வந்தாச்சுன்னு தெரிஞ்சுது.. ஆனா அது என்ன முடிவுன்னு காக்காய் வந்து வழக்கம் போல குரல் கொடுத்த அப்புறம் தான் தெரிஞ்சுது..
சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து வந்த உடனே காப்பியோட கொரிக்க வழக்கமா ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி வெச்சிருப்பேன்.. நேத்து தான் கடைக்காரர் ரொம்ப ரெகமெண்ட் பண்ணினாரேன்னு நாடா பக்கோடா வாங்கிண்டு வந்திருந்தேன். காக்கா கத்தின உடனே பிஸ்கட்டுக்கு பதிலா அந்த நாடா பகோடாவுலேர்ந்து கொஞ்சம் சர்வ் பண்ணினா மீனா.. வழக்கமான பிஸ்கட் இல்லாம மெனு மாறினதுல அந்த காக்காயோட கண்ணுலயே சர்ப்ரைஸ் தெரிஞ்சுது,, சந்தோஷத்துல “ஊ.. லல்லா” ரேஞ்சுக்கு “கா.. கா”வை ராகம் இழுத்துக் கத்திட்டு பகோடாவை ஒவ்வொண்ணா கவ்வி “நறுக் முறுக்”ன்னு சாப்பிட்டு.. ஏதோ பத்ம விபூஷனே கிடைச்ச மாதிரி சந்துஷ்டியாப் பறந்து போச்சு..
ஐ.நா. சபையே தீர்த்து வெக்க முடியாத பிரச்சனையை தான் தீர்த்து வெச்ச சந்தோஷம் மீனா முகத்துல..
மணி ஒம்பது.. வழக்கம் போல டாண்ணு காக்கா வந்தாச்சு..
மீனாவும் ரெடியா கிண்ணத்துல வெச்சிருந்த ஆவி பறக்கற சாதத்தை பால்கனி திண்டுல கொட்டினா,,
அதை உத்துப் பார்த்த காக்கா திரும்பி மீனாவை முறைச்சுப் பார்த்தது..
”என்ன பார்க்கறேள்? சாதம் போட்டிருக்கேனே.. சாப்பிடுங்கோ”
ஆனா காக்கா அதை லட்சியம் பண்ணலை.. மறுபடியும் மீனாவை முறைச்சுப் பார்த்தது..
”ஐயையோ.. ஏன் சாப்பிட மாட்டேங்கறேள்? உடம்பு சரியில்லையா? இல்லை ஏதாவது தப்பு நடந்துருத்தா?”
மீனாவோட குரல்ல இருந்த கவலையான கரிசனம்.. ஒரு தடவைக் கூட என் விஷயத்துல.. சரி விடுங்கோ.. இப்ப எதுக்கு அது?
மீனா கேட்ட உடனே காக்கா காலைல பகோடா போட்ட இடத்துல உட்கார்ந்தது.. அவளைப் பார்த்துத் தலையை ஆட்டி ஆட்டி குரல் கொடுத்தது..
“என்ன சொல்றேள்? புரியலையே..”
மீனா கவலையோட குழம்பினா..
இதைப் பார்த்துண்டிருந்த நான்..
“புரியலை? உன் விருந்தாளிக்கு சாதம் வேண்டாமாம்.. காலைல நீ போட்ட நாடா பகோடா தான் வேணுமாம்..”
நான் சொல்லி முடிச்ச உடனே “கா கா”ன்னு குரல் கொடுத்து காக்கா ஆமோதிச்சது..
மீனா நாடா பகோடாவைக் கொண்டு வந்து போட்டா.. உடனே காக்கா கண்ணுல ஆயிரம் வாட் பிரகாசம்.. லபக் லபக்னு ஒண்ணு விடாம சாப்டுட்டு ஜாலிலோ ஜிம்கானான்னு துள்ளலா(!) பறந்து போச்சு..
அதுலேர்ந்து தினம் காக்காய்க்கு சாதம் கிடையாது.. கார சாரமா நாடா பகோடா தான்.. வழக்கமா காலம்பர மட்டும் வந்துண்டிருந்த காக்கா இப்பலாம்.. காலம்பர, மத்தியானம், சாயங்காலம்னு மூணு வேளையும் கரெக்டா வந்து நாடா பக்கோடா சாப்பிட்டுப் போறது..
மாசாந்திர மளிகை லிஸ்டுல முதல் ரெண்டு இடத்துல இருந்த மஞ்சப் பொடி, கடுகு.. இப்ப ரெண்டாவது,, மூணாவது இடதுக்குப் போயிருத்து.. முதல் இடத்தைப் பிடிச்சிருக்கிறது ரெண்டு கிலோ நாடா பகோடா..
எனக்குத் தாங்கலை..
“என்னடி இது அநியாயம்.. மாசா மாசம் ரெண்டு கிலோ நாடா பக்கோடாவா? கட்டுப்படி ஆகுமா?”
நான் கேட்ட உடனே மீனா கறாரா சொல்லிட்டா..
“இதப் பாருங்கோ.. பித்ருக்கள் விஷயத்துல கணக்குப் பார்க்காதேங்கோ.. அது நல்லதில்லை.. யாரு கண்டா.. உங்க பரம்பரைல யாருக்காவது நாடா பக்கோடா பிடிக்குமோ என்னமோ.. அதான் காக்கா அதை விரும்பிச் சாப்பிடறது”
மீனா இதைச் சொன்னதும் யோசிச்சுப் பார்த்தேன்..
அட ஆமாம்.. எங்கப்பாவுக்கு நாடா பக்கோடா ரொம்பப் பிடிக்கும்..
குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும்.
பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன் கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
- அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
- எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
- பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
- ஜன கண மன ! – ஜனவரி 2021
- ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
- எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
- பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
- சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
- கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
- பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
- வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
- பஸ்ஸில் போகலாம் – மே 2021
- சிட்டுக் குருவி – மே 2021
- ஆகாய விமானம் – ஜூன் 2021
- எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
- பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
- வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
- தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
- விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
- மழையே வா ! – செப்டம்பர் 2021
- பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
- தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
- வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
- தமிழ் ! – நவம்பர் 2021
- பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
- கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
- ஓடுது பார் ! – டிசம்பர் 2021
- கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
- என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
- பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
- நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
- என்ன மரம் ! – மார்ச் 2022
- சைக்கிள் ! – மார்ச் 2022
- காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
- சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
தோட்டத்தில் காய்கறி !
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் –
எத்தனையோ காய்கள் பாருங்க !
வந்து பாரடி வசந்தி !
வரிசையாய் இருக்கு காய்கறி !
குண்டு குண்டாய் கத்தரிக்காய் !
வெடவெடவென்று வெண்டைக்காய் !
ஒல்லிப்பிச்சான் அவரைக்காய் !
பாம்பு போல புடலங்காய் !
தகதகதகவென தக்காளி !
பச்சைப் பசேலென பாகற்காய் !
குலையாய்த் தொங்குது வாழைக்காய் !
தரையில் படருது பரங்கிக்காய் !
பாத்தி பாத்தியாய் கீரைகள் !
பச்சை மிளகாய் பார் அங்கே !
பெருசு பெருசாய் பூசணிக்காய் !
பக்கத்திலே பார் கறிவேப்பிலை !
கிருஷ்ணா, கோபி, டேவிட்சன் !
ஜவஹர், சந்துரு, மந்திரா வா !
தோட்டத்துக் காய்கறி சாப்பிடலாம் !
நன்றாய் உடல்நலம் காத்திடலாம் !
இந்தியாவும் தமிழ்நாடும் !
இந்தியா எனது தாய்நாடு !
தமிழ்நாடே என் தாய்வீடு !
இந்தியன் என்றால் பெருமைதான் !
தமிழன் என்பதென் அடையாளம் !
எல்லா மொழியும் பேசிடுவோம் !
தமிழ்மொழி தாய்மொழி போற்றிடுவோம் !
உலகத்து மேடைகள் அனைத்திலுமே –
தங்கத் தமிழில் முழங்கிடுவோம் !
எத்தனை பெரிய பாரம்பரியம் –
கொண்டது எங்கள் பாரதமே !
தமிழரின் உயரிய பண்பாடு –
தரணி முழுவதும் தெரிந்ததுதான் !
பாரத நாடும் தமிழ்நாடும் –
இரண்டும் எந்தன் இரு கண்கள் !
ஒன்றை விட்டு மற்றொன்றை –
பிரித்துப் பார்த்தல் சரியாமோ ?
வந்தே மாதரம் என்றிடுவோம் !
தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடிடுவோம் !
இந்தியா என்பதே என் பேச்சு !
தமிழ்தான் எந்தன் உயிர் மூச்சு !
திரை ரசனை வாழ்க்கை 15 – எஸ் வி வேணுகோபாலன்

அரிதான நோயில்லை என்றதும் துடியாய்த் துடித்தேன்!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
மடாலென கதவைத் திறந்தவாறே முகவாய்க் கட்டை துடிதுடிக்க, “நீங்கதானே ஸைக்கெட்ரிக் ஸொஷியல் வர்கர்?” என வினவினான் அவன். தலையாட்டினேன். கண்ணீர்த் தளும்ப, தன் கையில் வைத்திருந்த அத்தனை பரிசோதனைத் தாள்களையும் என் முன்னால் இருந்த மேஜைமீது தடாலென வைத்து விட்டு உட்கார்ந்து என்னைப் பார்த்தான் இளம் வயதான பிராண்.
தழுதழுக்கும் குரலில், “நீங்களே சொல்லுங்கள், எனக்கு வந்த உபாதையைக் கூகிளில் (googleல்) முழுக்க ஆராய்ச்சி செய்தே வந்திருக்கிறேன். ஆனால் டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, எல்லாம் நார்மல் என்றார். அது எப்படி சாத்தியம்? உங்களைப் பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தார்” என்றான்.
பிராணைச் சமாதானம் செய்து, தாள்களைப் பிறகு பார்வையிடலாம் என்று தனக்கு நேர்ந்ததை விவரிக்கச் சொன்னேன். அனுபவத்தைக் கேட்டபின் இத்யாதியைப் பார்ப்பது என் பழக்கம். விவரித்தான்.
மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முதுகலைப் பட்டதாரி. முடித்த கையோடு கல்லூரியிலிருந்தே நேரடியாக எடுக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை அமைந்தது. சிறந்த வேலை, கைநிறைய சம்பளம்.
பிராண் ஆச்சரியப் படவில்லை. படிப்பில் இதுவரை இவனே முன்னோடி. எல்லாம் பிராணுக்கு மிகச் சிறந்தவையாகவே நடந்தது. இன்னாள் வரை தோல்வி, வருத்தம் இவன் அகராதியில் தென்பட்டதே இல்லை என்று கர்வம் பூசிய பெருமையுடன் சொன்னான்.
இந்த வர்ணனை முடிப்பதற்குச் சரியாக யாரோ கதவைத் தட்ட, திறந்தேன். பிராணின் தந்தை எனக் கூறி, உள்ளே வர அனுமதி கேட்டார். க்ளையன்டை முதல்முறையாகப் பார்க்கும் போது அவர்களுடன் வருவோரை நாங்கள் பார்ப்பதுண்டு. தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் தீனதயாள். சொந்தமான பண்ட சாலை வைத்திருப்பதை விவரித்து, பிராண் மிகப் புத்திசாலி, எப்போதும் முதல் மதிப்பெண் மட்டுமே வாங்குபவன் எனப் பெருமை பொங்கக் கூறினார்.
மகன் ஆராய்ச்சி செய்ததை டாக்டர் மறுப்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றதும் பிராண் அவர் கையை இருக்கப் பிடித்துக் கொண்டான். இவை அவர்களின் உறவை, சிந்தனையை வெளிப்படையாகக் காட்டியது.
பிராணுக்குப் பத்து நாட்களாகக் கண்கள் சுருங்கியது போல், பேசினால் வாய் வலி, எப்போதும் ஏதோ அனாயாசமாக இருப்பது போலத் தோன்றியதாம். தனக்கு என்னவென்று இணையதளத்தில் தேடினான். முதலில் ஏதேதோ பொதுவான பிரச்சினைகள் தென்பட்டன. அலசிப் பார்த்து, தனக்கு உள்ளது மிக அபூர்வமாக வரும் ஒரு தசை பிரச்சினை தான் என முடிவு செய்தான். இதற்குத் தீர்வு ஏதும் கிடையாது என்றது இணையதளம்.
தீனதயாள், தாயார் சுமதி, தன் பிள்ளை எப்போதும் அலாதியான ஒருவன் எனப் புகழ்வதைப் போல நோயிலும் அலாதியானது எனப் பிரமித்துப் போனார்கள்!
அன்றிலிருந்து பிராண் மருத்துவர்களைப் பார்த்தான். தனக்கு வந்திருப்பது இதுதான், அதனால் இன்னின்ன பரிசோதனைகள் செய்யலாமா எனக் கேட்க, அதன் முடிவுகளிலிருந்தாவது உண்மையைப் புரிந்து கொள்வான் என ஒப்புக்கொண்டார்கள். அதைப் பார்த்து அவர்கள் எல்லாம் நார்மலாக உள்ளதாகச் சொன்னதும் வேறொரு மருத்துவரிடம் போவான். அப்படித்தான் இங்கேயும் வந்தான். டாக்டர் அவன் நார்மல் எனச் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றான்.
கண்ணீர் கொட்ட, தன் வேலைகளைச் செய்து கொள்ளக் கடினமாக உள்ளது என்றான். தந்தை தாயிடம் அடிக்கடி தசைகள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றியதைச் சொல்ல, தாய் சாப்பாடு ஊட்டி, தந்தை ஷவரம் செய்தார். பிராண் தலையை வருடிக் கொடுத்து தீனதயாள் அவனுடையப் பரிதாப நிலையைப் பார்க்கக் கடினமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் சொன்னார். பிராண் அவர்களின் ஒரே பிள்ளை.
பிராண் வேலையைப் பற்றி விசாரிக்க, கடந்த இரு வாரங்களாக அவனை மீறி தவறுகள் நேர்வதே இந்த இன்னல்களால் தான் என்று தீர்மானித்ததைக் கூறினான். இதனால், இருமுறை பெரிய பொறுப்புகள் அவனுக்கு அளிக்கப் படவில்லை என்றான். தீனதயாள் இவனுடைய அருமை வேலை அதிகாரிகளுக்குப் புரியாததால்தான் எனக் கூறினார். இருவருக்கும் தனித்தனியாக ஸெஷன்கள் தேவை என உணர்ந்தேன்.
இருவரிடமும் சில ஸெஷன்கள் தேவை என்றதை எடுத்துக் கூறினேன். அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்களை, குழப்பங்களைத் தெளிவு செய்யவே என்றேன். ஒப்புக்கொண்டார்கள்.
பிராண் நேரத்தைக் குறித்துக் கொண்டு வர ஆரம்பித்தான். அவனை முதல் முதலில் வேலையைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். வேலையில் சேர்ந்ததும் படிப்பு போலவே வெற்றி பெற்று வந்தான். பெற்றோரும் அவனை உச்சி முகர்ந்தனர். தன் அலாதியான அறிவே முன்னேற்றத்திற்குக் காரணி என முடிவு செய்து கொண்டான்.
எல்லாம் நன்றாக இருந்த போது தான் ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு, பிராண் வரைபடத்தில் செய்த தவற்றை வாடிக்கையாளர் மீட்டிங்கில் வெளிப்படுத்தினார். பிராணால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தானாவது தவறு செய்வதாவது, சான்ஸே இல்லை. இந்த மனோபாவத்தை அறிந்த அவனுடைய மேலதிகாரி அவனிடம் பேசினார்.
இது, பிராண் வாழ்வில் புதிய முதல் அனுபவம். இதுவரை அவனை யாரும் திருத்தியதே இல்லை. மனதில் இதே ரீங்காரம் செய்தது. அன்றைய தினம் அடைந்த சோர்வைக் கவனித்தான். கண்களைப் பார்க்க, சின்னதாக விட்டதோ என நினைத்தான். வீட்டிற்குச் சென்றதும் உடைகளை அணியும் போது, தொளதொளவென இருப்பதாகத் தோன்றியது. “அடடா, என்னவாயிற்று?” என நினைத்தான். அன்றிலிருந்து உடல் அசைவுகளைக் கூர்ந்து கவனித்தான்.
வேலையில் நாட்டம் குறைந்தது. நேரம் அதிகம் மிஞ்சியது. கிடைத்த நேரத்தில் இணையதளத்தில் தேடி ஆராய்ந்தான். தேடத் தேட வெவ்வேறான நோய் இருக்குமோ என நினைத்தான். மேலும் தேடத் தேட இதெல்லாம் தனக்கு இல்லை என்றும், மிக அரிதான நோய் ஒன்றுதான் என முடிவு செய்து பெற்றோரை வரப்போகும் நிலைக்குத் தயார் செய்தான். மகனை முழுமையாக நம்பியதால் அவர்களைப் பயம் கவ்வியது.
இந்த விவரணை தர, இதைப்பற்றி சற்று ஆராயலாம் என பிராணிடம் சொன்னேன். அவனுடைய மனோபாவம், சமூக உறவு எனப் பல விஷயங்களை அலசி ஆராய வேண்டிய அவசியம் இருந்த பின்னும்,அவனுடைய தனக்கு இந்த நோய்தான் என்ற முடிவு, வேலையில் தற்போது நிகழும் சங்கடங்களை முதலில் ஆராயலாம் எனத் தேர்ந்தெடுத்தேன்.
பிராணின் அறிவு பலமடங்கு பலமாக இருந்ததால் அதையே உபயோகிக்க முடிவெடுத்தேன். இதுவரை விவரித்த அனைத்தையும் கணக்கு வடிவத்தில் எவை கூடின, எவை தொடராமல் கழிந்தது என வரிசையில் எழுதப் பரிந்துரை செய்தேன்.
ஒப்புக்கொண்டான். ஆரம்பித்தான். ஆரம்பித்ததும் தடுமாற்றம் கண்டான். தனக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது. நிறுத்தி வைக்கப்பட்டது. ஸெஷனுக்கு வந்தான். இதை எதிர்பார்த்தேன். பிராண் வாழ்வில் முதல் சரிவு அனுபவமாயிற்றே! இவனுக்குப் புதிது! குழப்பமான நிலை.
தனக்கு இது நடக்கின்றது என்றதை ஏற்றுக்கொள்ள பிராண் படும் அவஸ்தையை விலாவாரியாக விவரிக்கச் செய்தேன். பல கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தான். முக்கியமாக, கல்லூரியில் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகளில் பிராணைப் போல நல்ல மதிப்பெண் எடுப்போருடன் மட்டுமே கலந்துரையாடல் வைத்துக் கொள்வான். குறைந்த மதிப்பெண்கள் பெறுவோர் பேச முயன்றாலும் மறுப்பான்.
படித்த நான்கு வருடமும் அவனுடன் ப்ராஜெக்டுகளில் மீண்டும் மீண்டும் நான்கு நபர்கள் இருந்தார்கள். பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி விவரித்தான். பெயரைத் தவிர அவர்களுக்கும் கேம்பஸ் ப்ளேஸ்மேன்ட் கிடைத்தது என ஞாபகம்.
நான்கு ப்ராஜெக்டில் நடந்த ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பின் நோக்கி அந்த கடந்த காலத்தை ஃப்ளாஷ்பேக்காக முழுக்க ஞாபகப்படுத்திக் கொண்டு குறிக்கப்பட்டது. முதல்முதல் செய்தவற்றை நினைவு கூறுகையில் தானாக எல்லாவற்றையும் நடந்தபடி எடுத்து வைத்தான்.
இந்த பணியை பிராண் ஏற்றுக் கொண்டதும் அவர்கள் ப்ராஜெக்ட் செய்த முறையை படிப்படியாக எழுதச் சொன்னேன். இந்தமுறை திரைக்கதை போல. ஒவ்வொருவரின் பங்கேற்பு ஸெஷனில் மெதுவாகத் தென்பட்டது. நினைவில் நின்றதை எழுதும் போது ஞாபகங்களும் எழுந்தன. முதல் பாகத்தை எழுதுகையில் ஒரே ஒரு பெயர் எட்டிப் பார்த்தது, பரத் உள்ளே நுழைந்தான்.
காத்திருந்த நாழிகை வந்துவிட்டது. செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி, அந்த இன்னொருவர் பெயர் கூறியதை ஸெஷனில் எடுத்துக் கொண்டேன். அதை விவரிக்க, அலசி ஆராய்ந்ததில் பிராண் ப்ராஜெக்ட் முழுமையாகத் தான் மட்டும் செய்யவில்லை, தான் செய்யாததும் உண்டு என்பதை உணர்ந்தான். அப்படி உணருவது இதுவே முதல் தடவை. வியந்தான். “எப்படிச் சாத்தியமாகும்?” என நினைக்க, மேற்கொண்டு செய்தால் விளக்கம் வரலாம் எனத் தொடர்ந்தான்.
நடுநடுவே அவன் தன் உடலில் கவனித்து வந்த மாற்றத்தைப் பற்றியும் எடுத்துக் கொண்டோம். இப்போதைக்கு அவனுடைய சிந்தனை, உணர்வுகள் செய்து கொண்டிருந்த செயலின் மீது இருந்ததால் கண்களில், தசைகள், மாற்றம் ஏதும் தெரியாததைக் கவனிக்க வைத்தேன். இது மிக முக்கியமான ஒன்று. பிராணுக்கு பிரச்சினைகளைச் சந்திக்க, அவற்றை எதிர் கொள்ளத் தெரியாததால் உள்ளூர பாதிக்கப்பட்டு, அதன் விளைவான உடலின் அசைவுகளை வேறு விதமாகச் சித்தரிக்க, அது நோய் எனத் தான் நினைத்து விட்டோம் என்று புரிய ஆரம்பமானது. இதன் இன்னொரு விளைவாக, ப்ராஜெக்டில் நடந்ததை மேலும் நினைவு செய்ய, சுபா, முரளி, அப்துல் பங்கைக் கூற ஆரம்பித்தான்.
பரத், சுபா, முரளி, அப்துல் எதைச் செய்தார் என ஒவ்வொரு பாகத்திலும் ஓர் வரியில் எழுதி வரச் சொன்னேன்.
நால்வரின் குணாதிசயங்கள், நடத்தை தீனதயாள், சுமதி புகழ்வது போல் இல்லை என்றதும் பெற்றோரை ஸெஷனுக்கு அழைத்தேன். என் சார்பில், செயல்திட்டம் உருவாகும் விதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள நான்கு ஐந்து நிறுவனங்களில் அனுமதி கேட்டு, சில ப்ராஜெக்ட் மீட்டிங்கில் நான் பங்குகொள்ள ஏற்பாடு செய்து கொண்டேன். மேலாளர்களுடன் கலந்துரையாடி இவற்றிலிருந்து அறிந்த செயல்திட்டங்களின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டேன்.
பிராண் நால்வர் பிராஜெக்டில் செய்ததைக் குறித்து வந்தான். அவர்கள் தத்தளித்ததும் அதில் இடம் பெற்றிருந்தது. அவர்கள் எவ்வாறு தத்தளிப்பிலிருந்து மீண்டு வந்தார்கள் எனக் கேட்டதற்குப் பிராணால் பதில் தர முடியவில்லை. அவர்களிடமே கேட்டால் தெரியும் என அவன் நக்கலாகச் சொல்ல, அவ்வாறே அழைத்து வரப் பரிந்துரைத்தேன். அவர்கள் எதிர்ப்புகளைக் கையாளும் விதத்தை இவன் கேட்டு, உபயோகிக்கவே.
அவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்து வர சில நாட்கள் தேவைப் பட்டதால் தீனதயாள்-சுமதியைப் பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் பிராணிடம் மாற்றங்களைப் பார்த்ததாகச் சொன்னார்கள். முன்னைவிட உடலைப் பற்றிய கவலை குறைந்தது என்றும் சொன்னார்கள். அவர்களுக்குப் புரிய வைக்க, பிராணின் பிரச்சினைகள், காரணியை அலசினோம்.
இரு பெற்றோரும் பிராண் செய்வதைச் சிறுவயதிலிருந்து புகழாரம் போற்றுவார்கள். செய்யும் போது அக்கம் பக்கத்தில் உள்ள அவன் ஈடு குழந்தைகளை ஒப்பிட்டுப் பிராண் மட்டுமே சிறந்தவன் என்பார்களாம். இதை மேற்கொண்டு விவரிக்க, இப்போது இருவருக்கும் புரிய வந்தது, இதனால் அவனுக்கு இன்று வேலையில் டீம்முடன் இணைய முடியாமல் போகிறது என்று. ஏற்பட்ட மனப்பான்மையினால், தான் செய்ததை நிராகரிக்கப்பட்டதும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதை மேலும் ஆராய்ந்து பார்த்ததில் தீனதயாள்-சுமதியும் இப்போது தான் சிறுவயதிலிருந்து அவனிடம் சொன்னதை நினைவு கூறினார்கள். பிராணைப் போல இல்லாதவர்களிடம் பேசவோ பழகவோ கூடாது என்றதை வலியுறுத்தி இருந்தார்கள். பிராண் இதைக் கடைப்பிடித்தான். பிராணின் சமூகத் திறன் (மற்றவரோடு பழகும் திறன்) பற்றிய விவரணை செய்யச் செய்ய, இதனால் எந்த அளவிற்கு அது தடைப் பட்டது என்றதை உணர்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் இந்தத் திறன்களின் பயன்பாட்டை விவரிக்கச் செய்தேன். மகனுக்கும் தேவை என உணர ஆரம்பித்தார்கள்.
இவற்றைப் புகட்டப் பல வழிமுறைகளைப் பட்டியலிட்டோம். பிராண் ஒரே பிள்ளை கவனம் முழுவதும் அவன் மேல் இருப்பதால் எந்த சூழ்நிலையிலும் அவனைப் பாதுகாக்கச் செய்தார்கள். பிரச்சினைகள் அவன் சந்திக்க நேராமல் போனது. அளவுக்கதிகமான பாசம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழி போல ஆனது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். தீனதயாள், சுமதி அதைச் செய்ய முயன்றார்கள். கடினமான மாற்றம் என்றாலும் விளைவைக் கண் எதிரிலேயே தங்களுக்கு பிரியமானப் பிள்ளையின் மீது பாதிப்பு காட்டுவதால், மாற்றம் செய்ய அது அங்குசம் ஆனது.
தானாக பரத், சுபா, முரளி, அப்துல் அழைத்துக் கொண்டு பிராண் வந்தான். எதையும் சொல்லவில்லை என்றான். பிராணிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, வந்ததற்கு நன்றி தெரிவித்து அவர்கள் வகுப்புத் தோழன் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதைக் கூறி அவர்களின் பங்கேற்பு, ஒத்துழைப்பை வழங்க வேண்டுகோள் செய்தேன். தயக்கம் இல்லாமல் தங்களால் முடிந்த வரை உதவுவது முடியும் என்றார்கள். அவர்களால் சனிக்கிழமை வரமுடியும் என்று நேரம் குறித்து வைத்தோம். இதைக் கேட்டதும் பிராண் அவர்களைத் திடுக்கிட்டுப் பார்த்தான்.
வந்தவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளச் சற்று நேரம் எடுத்துக் கொண்டேன். ஒவ்வொருவரும் எளிமையான நிலையில் வளர்ந்தவர்கள், அதிக பொறுப்புடன்.அதனால்தானோ அவர்களிடம் மனோ முதிர்ச்சி தூக்கலாக இருந்தது? ஊக்குவிக்கும் விதத்தில் பிராணிடம் பேச, அவன் அவர்களை ஏறெடுத்துப் பார்த்துத் தலை அசைத்தது மனதிற்குச் சந்தோஷமானது.
அடுத்த சில ஸெஷ்ன்களில் அவர்கள் பிரச்சினைகளோடு எதிர்நீச்சல் போட்ட சூழலை, எதிர்கொண்ட பாதையை விவரிக்கப் பரிந்துரை செய்தேன். ஒருவருக்கொருவர் ஆதரவு காட்ட இவர்கள் இடையே பிணைப்பு அதிகரித்தது. வேலையிடத்தில், வீட்டில், எவ்வாறு செய்தார்கள் என மேலும் சொல்ல, பிராண் தனக்கு நேர்ந்ததை ஒரு வாரத்திற்குப் பிறகு பகிர்ந்தான்.
இந்த தருணத்தில் நான் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அவர்களாக இயங்க விட்டேன். மெதுவாக ஒவ்வொருவரும் பிராணை அவன் சிந்தனை, பிரச்சினைகள் பற்றிப் பேச ஊக்குவித்தார்கள். தோல்வியடைந்த நிலையில் நிலைக் முனிந்து இருப்பதைப் பற்றிப் பேசும் போது, அவர்கள் தங்களது வாழ்நாளில் நடந்த அவமானத்தைப் பற்றிப் பேசி அவற்றிலிருந்து மீளச் செய்த விடாமுயற்சி, பரிபூரணமான உணர்வுகள், தடைகள், விவரித்ததில், பிராண் பூரண கவனமாக அவர்களுடன் மெய்மறந்து மனம் திறந்து உரையாடினான்.
இந்த நால்வரும் அவர்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள எளிய இடங்களில் வசிக்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதை அறிந்ததும், பிராண் சேர்ந்து கொண்டான்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் நெருங்கிய நிலையில் சுபா, பரத் இருவரும் பிராணை அவன் தவறு செய்த ப்ராஜெக்டில் மறுபடியும் அவனாகப் பார்த்து எங்கு, எதை விட்டான் என பரிசோதிக்கப் பரிந்துரைத்தார்கள். பிராண் அவ்வாறே செய்தான். என் பங்கை மேலும் குறைத்துக் கொண்டேன். பியர் க்ரூப் அதாவது அதே வயதினரை உரையாட வைத்தால் அதனால் வரும் தெளிவு, ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இங்கேயும் தென்பட்டது!
பிராண் மற்றவர்கள் தந்த சில குறிப்புகளைத் தவிர்க்க விட்டதை ஒப்புக் கொண்டான். இதைப் பற்றி அவனுடைய டீம்முடன் பேசியதைச் சொன்னதுடன் அறையில் கைதட்டல். அப்துல் மெதுவாகக் கேட்டான் “இப்போ உன் உடலில் எந்த விதமான நோய் இல்லை என்றதை நம்புகிறாயா?” என. முரளி, பரத், சுபா மூவரும் அவனுடன் சேர்ந்து பிராண் உடல் நலத்தைப் பற்றி அவர்கள் கவனித்ததைச் சொல்ல, பிராண் தானும் அவ்வாறே எண்ணுவதைக் கூறினான்.
ஒற்றையாக வந்த பிராண் முடித்துக் கிளம்பும் போது பாசம் பற்றுடைய கூட்டமாகக் கிளம்பினான்.
கண்ணன் கதையமுது -7 – தில்லைவேந்தன்
. ( தேவகிக்குக் குழந்தை பிறந்த செய்தியைக் காவலர் கம்சனிடம் தெரிவித்தனர். தன்னைக் கொல்லப் பிறந்த குழந்தையைக் கொல்வதற்குக் கம்சன் விரைந்தான்)
குழந்தை பிறந்த சேதி கேட்ட கம்சன் நிலை
வீரரும் சேதி சொல்ல,
வெடுக்கெனத் துள்ளிக் கம்சன்
ஆரஞர் உற்றான்; ஓங்கும்
ஆத்திரம் மிஞ்சிக் கெட்டான்;
சாரமே விட்டு வெற்றுச்
சக்கையைக் கொள்ளும் மூடன்,
ஈரமே நெஞ்சில் இல்லான்,
இடியென முழங்க லானான்:
( ஆரஞர் – பெருந்துன்பம்)
“முடிவினைத் தருவ தற்கு
மூண்டதோ வேளை? பிள்ளை
வடிவமோ? உயிரைக் கொள்ள
வந்தவோர் கூற்றம் தானோ?
நெடியதோர் பகையை நானே
நேரினில் சென்று கண்டு,
நொடியினில் கொன்று தீர்ப்பேன்;
நோய்வரும் முன்னே காப்பேன்!”
தலைமுடிக் கற்றை, காற்றில்
தாவிடும் அரவாய் மாற,
உலைக்களத் துருத்தி யாக
உள்ளெழு சினமே மேவ,
நிலைகுலை கம்சன் மூச்சு
நெருப்பென வெம்மை வீசக்
கொலைபுரி நெஞ்சம் கொண்டு
குறுகினான் மிகவெ குண்டு
( அரவு – பாம்பு)
கவிக்கூற்று
மனத்தினில் எரியும் தீயின்
வளரொளி முகத்தில் நீளும்;
வனத்துறு புலியாய்ச் சீறும்
வஞ்சகம் அறிவை மீறும்;
சினத்தினைப் பொருளாய்க் கொள்ளும்
தீமையைப் பயனாய் அள்ளும்
வினைப்பயன் விதியாய்த் துள்ளும்
வீணனை ஒருநாள் கொல்லும்
தேவகி வேண்டுகோள்
புயலெனச் சிறைக்குள் சென்றான்
பூங்கொடி நடுங்கி நின்றாள்
கயலெனும் கண்ணும் நீரைக்
காரெனப் பொழியச் சொன்னாள்,
“செயலினை எண்ணிச் செய்வாய்
சிறியபெண் மகவைப் பாராய்,
அயலவர் இகழ்வர் அன்றோ
அருமரு மகளைக் கொன்றால்”
கம்சனின் கொலை முயற்சி
கதறினாள் தங்கை, கம்சன்
காதிலே கொள்ள வில்லை.
உதறினான் வலிய கையை,
உற்றபெண் மகவின் கால்கள்
மதியிலான் பற்றிக் கொண்டான்
மாய்த்திட எண்ணிக் கல்லில்
சிதறியே போவ தற்குச்
சீறியே ஓங்கி னானே!
மாயை துர்க்கையாய்த் தோன்றுதல்
ஓங்கிய கையை நீங்கி,
உயரமே குழந்தை ஏகி,
ஆங்கொரு துர்க்கை யாக
ஆயுதம் பலவும் ஏந்தித்
தாங்கிய எட்டுக் கைகள்
தாருடன் அணிகள் பூண்டு,
வீங்கிய ஒளியைச் சிந்தி,
விண்ணிலே சிரிக்கக் கண்டான்!
( தார் – மாலை)
( வீங்கிய – மிகுந்த)
( தொடரும்)
நடுப்பக்கம் – சந்திரமோகன்
திருப்புகழ் கிடைத்த கதை
அதிகாலை நான்கு மணிக்கு எழும் இந்திய (மனித) பறவைகளுக்கு திருப்புகழ் வகுப்புகளை குவிகம் ஆசிரியர் திரு. சுந்தர் சிபாரிசு செய்திருந்தார்.
அவரது வழக்கமான குசும்பாக அல்லாது நல்ல எண்ணத்தில்தான் கூறியிருப்பார். ஆனால் என் உள்மனது அதற்கு வாய்பே இல்லையே ராஜா என பறையறிவித்தது. அது எனக்கு நடு ஜாமம் ஆயிற்றே.
இருந்தாலும் மனது கிடந்து அடித்துக் கொண்டது. திருப்புகழை கேட்கத் துவங்குமுன், பாடத் துவங்குமுன், தேடத் துவங்கினேன். என் தேடலில் எனக்குத் தெரிந்தது திருப்புகழை தேடித் தேடி நமக்களித்தவர் 1846-1909 ஆண்டுகளில் வாழ்ந்த திரு. வ.சு. சுப்பிரமணிய பிள்ளை என.

எதிர் வரும் சந்ததியருக்கும் நாம் தேடி விட்டுச்செல்லும் பொருட் செல்வம் பயன் தருகிறத்தோ இல்லையோ அறமும் கல்வியும் அவர்களை என்றும் கை விடாது. அது போலவே இலக்கியமும், அருட் பாக்களும் பல தலைமுறை கடந்தும் எந்த மண்ணில் வசித்தாலும் நம்மை இணைக்கும் என உணர்ந்து அழிவிலிருந்து அவைகளை காப்பாற்றி நமக்கு விட்டுச் சென்ற சான்றோரும் வணங்கப்பட வேண்டிய கடவுளரே.
இராச இராச சோழன் நம்பியாண்டார் நம்பியை வேண்டினார். நம்பி தான் வணங்கும் தோழன் திரு நாரையூர் பொல்லாப் பிள்ளையாரை வேண்டினார். பிள்ளையார் வழிகாட்ட நம்பி நமக்குத் தேடிக் கொடுத்தது மூவர் தேவாரம். தேடியிருக்க இல்லையெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவில்களில் பாடப்பட்டு வந்த பாடல்களுடன் தேவாரத் திரட்டு முடிவடைந்திருக்கும்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் தேடிக் கொடுத்திரா விடின் இன்று நம்மை இணைக்கும், நாம் மகிழும் சங்க இலக்கியங்கள் பல காவிரி ஆற்றிலோ தாமிரபரணி ஆற்றிலோ மிதந்து கடலில் கலந்திருக்கும்.
அதுபோலவே தமிழ்த் தாத்தா காலத்தில் வாழ்ந்த திரு. வ.த. சுப்பிரமணிய பிள்ளை தமிழகமெங்கும் தேடித் தொகுத்திரா விடின் அருணகிரியார் எழுதிய 16000 பாடல்களில் நமக்கு கிடைத்த 1307 பாடல்கள் கூட கிடைத்திராது. படை வீடுகளிலும், வயலூர், விராலிமலை போன்ற கோவில்களிலும் பாடப்பட்ட ஒரு சில பாடல்களுடன் தொகுப்பு முடிந்திருக்கும்.
பிள்ளையவர்கள் தமிழ்த் தாத்தாவின் சம காலத்தவர் என்றேன். இருவருக்கும் உள்ள மற்றுமொரு ஒற்றுமை, இருவரும் இளவயதில் வறுமையில் வாடியவர்கள். பசியோ, பட்டிணியோ, பல மைல் தூர நடையோ இருவரும் சலிக்காமல் தேடியது, பல நூறு ஆண்டுகளில் உதிக்கப் போகும் சந்ததியருக்கு அவைகளை கொண்டு சேர்க்க வேண்டுமென்ற வைராக்கியமே.
சுப்ரமணிய பிள்ளை செங்கல் பட்டில் வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் தன் பதினோராவது வயதில்தான் பள்ளிக்கூடத்தை மிதிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். அந்த மிஷன் பள்ளியிலும் ஆறு ஆண்டுகளே கல்வி. வயதான பெற்றோர், வேலையில்லாத அண்ணன், படித்த பள்ளியிலேயே மாதம் ஆறு ரூபாய் சம்பளத்தில் பணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் கல்வியில் ஆர்வம் குறைய வில்லை.
சென்னையிலிருந்து பள்ளி ஆய்விற்கு வந்த Dr. மில்லர், இவரின் திறமையையும் ஆர்வத்தையும் கண்டு எட்டு ரூபாய் ஸ்காலர்சிப்பில் சென்னை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். மாதம் நான்கு ரூபாயை தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் அளித்துவிட்டு தன் செலவு போக மூன்று ரூபாய்களை பெற்றோருக்கு அனுப்புகிறார். விடுமுறைக்கு பையை தலையில் சுமந்து சென்னையிலிருந்து செங்கல் பட்டு பொடி நடையாக சென்று வருகிறார். தான் சென்னை செல்ல நண்பரிடம் வாங்கிய அரை அணா கடனையும் திருப்பிக் கொடுக்கிறார்.
பள்ளிக் கல்வியை சிறப்புற முடித்து அன்றைய FA ஐயும் முடிக்கிறார். மேலே BA படிக்க வழியில்லை. படித்த பள்ளியிலேயே மாதம் 40 ரூபாயில் பணி. ஆசிரியர் பணியில் ஈடுபாடில்லை. நீதித்துறையில் அடிப்படை ஊழியராய் நுழைந்து நீதிபதி பதவி வரை உச்சம் தொடுகிறார். அந்தக் கால கட்டத்தில்தான் திருப்புகழில் மயங்கி பாடல்களை தேடத்துவங்குகிறார்.
தமிழ் நாட்டின் பல் வேறு ஊர்களில் பணி புரியும் வாய்ப்பை திருப்புகழ் தேடலில் பயன் படுத்திக் கொள்கிறார்.
இவ்வளவு சிரமங்களுக்கும் இடையில் தினசரி தணிகை முருகன் மேல் ஒரு பாசுரம் எழுதுவதையும், ஒரு தேவார பதிகம் படிப்பதையும் நிறுத்த வில்லை.
தேடலில் அவருக்கு கிடைத்த 1307 பாடல்களை அச்சாக்கி பார்த்து மன நிறைவடைந்தார். 1909 ம் ஆண்டு தனது 63 வது வயதில் இரண்டாம் பதிப்பை அச்சிட்டு புத்தகக் கட்டுகளை அடுக்கி வைத்து பார்த்த வண்ணம் மன நினைவோடு தணிகை முருகனை சென்றடைந்தார்.
பல சிரமங்களுக்கிடையே வறுமையிலும் பிந்தைய தலை முறைக்கு, நம் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை தேடிக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களை நம் மனதில் இன்று வரை நிறுத்தி வைத்துள்ளது.
தேடல் அவர்களோடு நின்று விடவில்லை. இன்றும் தொடர்கிறது. நாம் கூட பார்க்கிறோமே அவர்களை!
சுட்டெரிக்கும் கோடையிலும் சென்னையில் இன்று கனத்த மழை!
மேலே கூறிய அனைவரும்தான் காரணமோ?
சின்னஞ்சிறு பாலகன் ஒருவன் கடினமான திருப்புகழின் ஒன்றான ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ பாடலைப் பாடுவதைக் கேளுங்கள்!
ஆண்டவனே ! என்னை நாத்திகனாகவே இருக்கவிடு !

“ஆண்டவனே என்னை நாத்தினாகவே இருக்க விடு. கண்ணில் நீர்மல்க வேண்டிக்கொண்டான் ” என்று முடியும் சொற்றொடரில் எழுதும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தோம்.
அடேயப்பா மொத்தம் 75 கதைகள் !
பரிசு பெற்ற கதைகள் கீழே தரப்பட்டுள்ளன!
முதல் பரிசு – நாத்திகன் – அருணா கதிர்
“அவனும் நம்ம சாதிக்காரன் தாம்ல. கோவில் விசேஷமின்னு கெஞ்சறேன். ஆனாலும் கூட அனுமதி தரமாட்டானோ?” என்று ஆத்திரமாக வினவினான் மணி.
“அந்தாள பத்தி தான் தெரியும்ல. சாமியாவது, பூதமாவதுண்ணு திரிவான். சரியான இம்சை புடிச்சவன். விடுங்க பங்காளி” எனச் சமாதானம் செய்தான் செந்தில்.
“அவனுக்கும் அது குல தெய்வம்ல. திருவிழாக்கு பர்மிஷன் தந்தா என்னவாம் இப்போ? அந்த மாரியாத்தா இவனுக்கு நல்லா கூலி குடுக்கணும்” என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே சென்றான் மணி.
இருவரும் சென்றதும், பெருமூச்சு விட்டு, சற்றே ஆயாசமாக இருக்கையில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் மாரியப்பன், ” ஊரெல்லாம் கொரானா கோர தாண்டவம் ஆடுது. இதுல திருவிழான்னு கூட்டம் சேர்த்து இன்னும் பத்து பேர்த்துக்கு பரப்புவானுக. ஆண்டவனே! இந்த கொரானா முடியற வரைக்கும் என்னை நாத்திகனாவே இருக்கவிடு!” என்று கண்ணில் நீர் மல்க மானசீகமாக வேண்டிக் கொண்டான்.
இரண்டாம் பரிசு – மக்கள் சேவை மகேசன் சேவை. சாந்தி ரசவாதி
“காக்க காக்க கனகவேல் காக்க”
“எல்லோரும் சாமியை வேரோடு பிடித்து இழுக்க நமக்கு மட்டும் லயிப்பு இல்லை?” நீலாவின் சுயபரிசோதனை. அலுவலகம் ,வீடு ஓடி, பணி ஓய்வு தான்.
.” அம்மா ஜீ எச் போய் மருந்து வாங்கி வீட்டுக்குப்போகணும்”- முனியம்மா. “இரு தோசை தரேன் கையில் கொண்டு போ” தண்ணீர் பாட்டிலுடன் டப்பா வந்தது. “காக்க காக்க ” தொடர் முயற்சி. ” மாடில கட்டிட வேலை பாக்குறவங்க ,தண்ணீர் வேணுமாம்” சபேசன் குரல். ” நீர் மோர் பானகம் கரைச்சி வைச்சிருக்கேன் குடுங்க நல்ல வெயில்””. “காக்க காக்க” “நந்தினி ஃபோன் ” சுரேஷ். அறிவிப்பு. தெரிந்தவர் மகள். குடிகாரக் கணவன் குழந்தைகள். ” ரெசுயூம் மெயில் அனுப்பியாச்சு. இண்டர்வீயு நல்லா பண்ணு. வாழ்த்துக்கள்”. மீண்டும்
” சஷ்டியை நோக்க ” ஆரம்பிக்க வேதனையும் திருப்தியும் கலந்த உணர்வு. மக்கள் பாசம் நிரம்பிய உள்ளத்தில் மகேசனை வரவழைப்பது கடினமோ? “ஆண்டவனே என்னை நாத்திகனாகவே இருக்க விடு ” கண்ணீர் மல்க வேண்டினாள்”
(2nd prize)
மூன்றாம் பரிசு – நான் ஆத்திகனா? நாத்திகனா? – கோவில்பட்டி மாரியப்பன்
பண்ணையார் வீட்டுக்கு வந்ததிலிருந்து இராஜ உபசாரம் தான். மாலை நேரத்தில் ஊர் மந்தையில் நடைப்பயிற்சி . பண்ணையார் கவனிப்பில் ஒரு சுற்றுப் பெருத்துவிட்டதுபோல் உணர்வு. எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்வு? புரியவில்லை. ஊரில் கோவில் கொடை விழா ஆரம்பமாயிற்று.
தெருவில் வேப்பம் கொத்து வைத்து வைக்கோலால் தோரணங்கள் கட்டி இருந்தார்கள். பண்ணையார் வீட்டில் சொந்தக்காரர்கள் கூட்டம் வந்தவண்ணம் இருந்தது. காப்பு கட்டிய நாளிலிருந்து விரதமிருந்து மத்தியானம் மட்டும் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகுதான் எனக்கு சாப்பாடு. கோவில் கொடை விழா நாள். பண்ணையார் பக்கத்தில் வர ஊர் மக்கள் புடைசூழ கோவிலுக்கு வந்தோம்.
பூசாரி வந்து பண்ணையாருக்கும் எனக்கும் கற்பூரம் காட்டி விபூதி பூசினார். நான் மட்டும் பூசாரி உடன் அனுப்பப்பட்டேன்.மலங்க மலங்க விழித்துக் திரும்பிப்பார்த்தேன். பண்ணையார் வரவில்லை. மனம் திகில் அடைந்தது. மஞ்சள் தண்ணீர் ஊற்றி மாலை போட்டார்கள். என் முன் நின்ற பூசாரி கையில் தீட்டப்பட்ட அரிவாள். பெண்கள் குலவைச்சத்தம் கூட்டத்தை அதிரவைத்தது. கிடாய் நல்ல வளர்ப்புதான் என்று யாரோ பேசிக் கொண்டார்கள். முடிவு தெரிந்தது. ம்மேய்… ம்மேய்.. அலறினேன். மரண பயம். காட்டிலே ஆட்டோடு ஆடாகச் சுற்றித்திரிந்து இருந்தால் இந்த கதிக்கு ஆளாகி இருப்பேனா? என்னைக் கொன்று சாமிக்கு படைப்பது தான் ஆத்திகம் என்றால் விரத சாப்பாடு போட்டு வளர்த்தது இதற்குத்தானா? குலவை சத்தம் தொடர்ந்தது. திடீரென்று மின்சாரம் நின்றது. ஒரு வினாடிதான். பிடியில் இருந்து தப்பித்து சிட்டாய் பறந்தேன். “ஆண்டவனே என்னை நாத்தினாகவே இருக்க விடு. கண்ணில் நீர்மல்க வேண்டிக்கொண்டேன்”. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது.
(3rd prize)
மாமழை கொண்டுவரும் மண்வாசம்! – மீனாக்ஷி பாலகணேஷ்
பழந்தமிழ் நாட்டில், சங்ககாலக் கவிதைகளில் தலைவன் பொருள் தேடப் பிரிந்து செல்வதும், அன்பு மனையாள் அவன் பிரிவையும் அவன் சொன்னவாறு திரும்ப வாராததையும் குறித்து வருந்துதலும் வழக்கு. பொருள் தேடுவதென்பது அவன் தனது பணி நிமித்தம் மன்னனுடன் போருக்கோ, அல்லது அரச தூதுவனாக அயல்நாட்டுக்கோ, வாணிபம் செய்யவோ, இன்னபிற காரணங்களுக்காகவோ இருக்கலாம்.
அகநானூற்றில் காணும் பல பாடல்கள் தலைவியின் பிரிவாற்றாமையைப் பற்றிக் கூறுவதாக அமைந்த பாடல்களே! அப்படி ஓர் பாடலைப் பார்ப்போம்.
பிரிந்து சென்ற தலைவன் சொன்ன நாளில் திரும்பி வரவில்லை என வருந்துகிறாள் தலைவி. தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்: “தோழி! இருண்ட கார்கால மேகங்கள் விண்ணதிர முழங்குகின்றன. துள்ளிவிழும் கடுமையான பெருமழையையும் பெய்தன. அந்த மழைக்காலம் கழிந்தபின்னர் புகைபோன்ற பனித்துளிகள் பூக்களின் உள்ளே நிறையும்வண்ணம் பனிபெய்யும் பனிக்காலமும் வந்துவிட்டது.
“அவரைப்பூக்கள் பூத்துள்ளன. வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலைசாய்த்துக் கிடப்பது காண இனிமையாக உள்ளது. வண்டுகள் மரக்கிளைகளில் அசைந்து கொண்டுள்ளன. இந்த முன்பனிக்காலத்தின் நள்ளிரவிலே என் தலைவரானவர் சினம்கொண்ட தம் வேந்தனின் பாசறையில் நீண்டகாலம் தங்கியுள்ளார்; எனது பிரிவின் வருத்தத்தை அறியாதவராக இருக்கிறார். என் இந்த நிலையினைப் போக்க அவர் விரைவில் வருவாரோ?” என்கிறாள்.
முல்லைத்திணையில் அமைந்த இப்பாடலைப் பாடியவர் கழர்க்கிழான் எயிற்றியார் என்னும் புலவர்.
மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித்
துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகையுற
காய்சின வேந்தன் பாசறை நீடி
நம்நோய் அறியா அறனிலாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்? என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமை யானே!
அழகான கருத்துச் செறிந்த பாடல். இலக்கிய நயம், வாழ்வியல் எனப்பல நயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கும் பாடல். இக்காலத்தவருக்கு, இன்னும் பல சிந்தனைகளை எழுப்பும் பாடலும் கூட!
இலக்கிய நயமாவது: முல்லைத்திணையில் முன்பனி வந்தது கூறப்படுகிறது. இங்கு நிலமும் கருவும் மயங்கி வந்ததனால் இது திணை மயக்கம் எனும் கருத்தைக் கொண்டு அமைந்தது.
வாழ்வியல் வகையில் பார்த்தால், போர் பற்றிய சிந்தனைகள் கொண்டு அரசனுடன் பாசறையில் இருப்போர் தம் குடும்பம், மனைவி, மக்கள் பற்றிய சிந்தனைகளைப் புறந்தள்ளி இருப்பர் என்ற நியதி.
மழையைப் பற்றிப் படித்தபோது எனது சிந்தனை வேறொரு இலக்கில் பயணித்தது.
மழை வாசனையை உணர்ந்திருக்கிறோம் அல்லவா?
புதுமழை பெய்யத் தொடங்கும்போது மண்ணிலிருந்து ஒரு தனி வாசம் எழுமே! என்னவென்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? மண்வாசம், மழைவாசம் என்று தள்ளிவிட்டுப் போய் விடுவோம். ஆனால் அதில் எத்தனை அறிவியல் செய்திகள் பொதிந்துள்ளன தெரியுமா?
^^^^^^^^^^^^^^^^^^
The smell of the wet earth in the rain
rises like a great chant of praise from the
voiceless multitude of the insignificant.
Tagore in Stray Birds – 311.
மழைக்காலத்து ஈரமண்ணின் வாசனை
அற்பமான, குரலற்ற ஒரு பெரும் கூட்டம் பாடும்
சிறந்த புகழுரை போல எழுகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தாகூர் ஒரு தீர்க்கதரிசிதானோ என்னவோ; குரலற்ற பெருங்கூட்டம் பாடும் புகழுரைதான் மண்வாசம்! அந்தப் பெருங்கூட்டம் என்பதே இவற்றை உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் கூட்டம்! தாகூரின் காலத்தில் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் சுத்தமாக இல்லை!! எது அவரை இவ்வாறு எழுதத் தூண்டிற்று என வியக்கிறேன்.
ஆம், நம் கண்களால் காணவியலாத சின்னஞ்சிறு நுண்ணுயிரிகள்தாம் (Microbes) இந்த வாசனைக்குக் காரணம் என்றால் நம்புவீர்களா? ஸ்ட்ரெப்டோமைசீட் (Streptomycetes) எனும் ஒருவிதமான நுண்ணுயிரிதான் ‘பெட்ரிகார்’ (Petrichor) எனும் இவ்வாசனைக்குக் காரணம். ஜியோஸ்மின் (Geosmin) எனும் ஒரு வேதிப்பொருளை அவை மண்ணில் உண்டுபண்ணுகின்றன. மழைநீர் பட்டதும் உடனே எழும் இந்த வாசனைதான் நாம் அறிவது!! இந்த மண்வாசனை காலகாலங்களாக 440,000,000 வருஷங்களுக்கு முன்பிருந்தே மற்ற உயிரினங்களால் அறியப்பட்டுள்ளது. மண்ணில் இருந்து வருவது. ஜியோஸ்மினைத் தயாரிக்கும் இந்த நுண்ணுயிரிகள் அறிவியல் மருத்துவ மேடையில் பெரியதோர் இடத்தை வகிக்கின்றன. என்ன தெரியுமா? இந்த நுண்ணுயிரிகள்தான் பலவிதமான ஆன்டிபயாடிக்குகளை உற்பத்தி செய்கின்றன. ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin) நாமனைவரும் அறிந்தது. ஸ்பைராமைசின் (Spiramycin) இன்னொன்று. இன்னும் பல உண்டு!!
ஸ்ட்ரெப்டோமைஸிஸைத் தவிர இன்னும் சிலவகை நுண்ணுயிரிகளின் – மிக்ஸோபாக்டீரியா (Myxobacteria), பெனிசில்லியம் (Penicillium), ஏன் நாமுண்ணும் பீட்ரூட்டின் லேசான சுவையான மண்வாசனைகூட இந்த ஜியோஸ்மினால்தான்!
மிக்ஸோபாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகள் வெவ்வேறு வேதிப்பொருட்களை (Chemicals) உற்பத்தி செய்கின்றன. எபிதிலோன் (Epithelon) என்ற ஒருவகை வேதிப்பொருள் புற்றுநோய் வைத்தியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் இக்சாபேபிலோன் (Ixobabilon) எனும் மருந்திற்கு மார்பகப் புற்றுநோய் வைத்தியத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் பல.
எனது ஆராய்ச்சிக்காலத்தில், மிக்ஸோபாக்டீரியா பற்றிய ஆராய்ச்சியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு ஜெர்மன் விஞ்ஞானியை எங்கள் ஆராய்ச்சிக்கூடத்திற்கு அழைத்து, எங்களில் சிலருக்கு இந்த பாக்டீரியாக்களை வளர்த்து அவற்றிலிருந்து வேதிப்பொருட்களைத் தயாரிக்கப் பயிற்சிதர வேண்டினோம். அவருடனான மூன்றுவாரப் பயிற்சிக் காலத்தில் அவர் எங்களை நுண்ணுயிரிகளின் புதியதொரு உலகிற்கே அழைத்துச் சென்று விட்டார்.
தாவரங்கள், காளான்கள் (Fungus), நுண்ணுயிரிகள் இவற்றிலிருந்து கிடைக்கும் இயற்கையான வேதிப்பொருள்கள் மருந்து கண்டுபிடிப்புத் துறையில் கடந்த நூற்றாண்டிலிருந்து பெரும்பங்கு வகிக்கின்றன. கடந்த சிலவாண்டுகளில் மிக்ஸோபாக்டீரியாக்களும் இதில் சேர்த்தி!! தொற்றுநோய்கள் (Infectious diseases), தொற்றல்லாத புற்றுநோய் போன்றவைகளுக்கும் இவை பயன்படுகின்றன எனக் கண்டோம். இவை மண்ணில் இருப்பவை! ஆனால் கூட்டங்களாகச் சேர்ந்து வாழ்பவை! என்ன? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை வழுவழுப்பான ஈரப்படலங்களாக கூட்டமாக இரைதேடி நகரும். இரைகிட்டாதபோது, ஒரு கூடு (Fruiting body) போன்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டு அதனுள் பாதுகாப்பாக (Spores) இருக்கும்! இதையெல்லாம் செய்வதற்காக இந்த அமைப்பு பலவகைப்பட்ட புரதங்களையும் வேதிப்பொருட்களையும் உண்டுபண்ணிக் கொள்கின்றது. அது பெரியதோர் ஆராய்ச்சி! இந்தப் புரதங்களும் வேதிப்பொருள்களும்தான் நமக்கு பலவகை நோய்களுக்கும் மருந்தாக அமைகின்றன! இது எப்படி இருக்கு? அற்புதம் இல்லை?
நாங்கள் இந்த நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப் மூலமாக ‘செல் செல்’லாகக் கண்டு களித்து, கண்படைத்த பயனைக் கொண்டாடினோம்! பல நிறங்களிலும் வண்ணங்களிலும் அவை வலம் வரும் அதிசயத்தைக் கண்டு ரசித்தோம். சில படங்களை உங்கள் பார்வைக்கு விருந்தாக அளித்திருக்கிறேன். இவை வளருவதையும், முதிர்வதையும், கண்டு அவற்றிலிருந்து சரியான சமயத்தில் வேதிப்பொருட்களை எடுப்பதுமாக எங்கள் நாட்கள் இனிதே கழிந்தன.
இதிலிருந்து விளங்கியது ஒரு பேருண்மை! இயற்கை, தொற்றுகள் மூலமும் நோய்கள் மூலமும் தொல்லைகள் தந்தாலும், தானே அதற்கு மருந்துகளையும் நிவாரணிகளையும் எங்காவது எதிலாவது வைத்திருக்கிறது. அவற்றைக் கண்டறிவதே நம் சமர்த்து!
***************************************************************************************************
அடுத்து நமது தத்துவக் கதைகளுக்குள் புகலாம். இடிக்கும், மழைக்கும் கடவுள் இந்திரன்! ரிக் வேதப்படி அவனே மிகப்பெரிய கடவுள். மிகுந்த பலசாலி. மும்மூர்த்திகளுக்கும் முற்பட்ட கடவுளாம்!
வாழ்விற்கு ஆதாரமான கடவுளாதலால் மழையோடும், அமிர்தத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறான். வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமிர்தத்தைத் தன் ஆட்களுக்காக சாமர்த்தியமாகக் கவர்ந்து செல்கிறான்.
மற்றபடி இந்திரனைப்பற்றிய பல கதைகளை நாமறிவோம். பெண்கள் மீதான சபலம் அவனுடைய அற்பகுணம் என்கிறார்கள்! அவன் கௌதம முனிவரின் அழகிய மனைவியான அகலிகைமீது தவறான எண்ணம் கொண்டு சாபம் பெற்றது நம் அனைவருக்குமே தெரியும். கோவர்த்தன கிரியைக் குடையாய்த் தூக்கிய கிருஷ்ணன் மீதும், இடையர்கள் மீதும் பெருமழை பொழிந்து பின் தவறை உணர்ந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டதையும் நாமறிவோம்.
எது எப்படியானால் என்ன? இனி மழைபெய்யும்போது, நாம் மண்வாசனையை உணரும்போது கட்டாயம் மிக்ஸோபாக்டீரியா பற்றிச் சிந்திப்போம். பெருமழை பெய்யும்போது (சங்ககாலத் தலைவிபோல) பணிக்குச் சென்ற நாம் மட்டுமின்றி கணவர், மகன், மகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்று கவலைப்படுவோம். குழந்தைகள் பள்ளியிலிருந்து வரவேண்டுமே, அவர்கள் வரும் சமயம் நாமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப வேண்டுமே என்றெல்லாம் நம் எண்ணங்கள் மழைநீரில் அலை மோதும். மழைக்காலம் தொடங்கி விட்டதே!…….
விரைவில் மீண்டும் சந்திப்போம்.