வீடு பெறச் செல் – ஒரு அரிசோனன்

சென்ற இதழில் வந்த ‘வீடு பெற நில்’  என்ற கதையின் தொடர்ச்சி : 

IMD issues thunderstorm, heavy rain warning in 13 states today - BusinessToday

“வீடுபெற நில்” கதையின் முடிவு:

“ஏன்?  நாமளும் அந்தக் கூட்டத்தோட சேந்துக்கினு போய்ப்பாத்தாத்தான் இன்னா கொறஞ்சா பூடும்?”  முனியாண்டியின் குரல் காதில் விழுந்த அடுத்தகணமே சுரேஷின் குரல் பெரிதாகக் கேட்டது.

   “பை, பை, அம்மா, மாமா, மாமி, எல்லோருக்கும், பை, பை.  நான் வரேன்.  உங்க எல்லோரோட வீடுகளும் இடிஞ்சுபோயிடுத்து.  பை, பை!”  உற்சாகமாகக் கையை ஆட்டிவிட்டு ஒடி மறைந்தான் சுரேஷ்.

   முனியாண்டி மட்டும் மலையில் ஏறும் கும்பலில் இருந்தான்.  மற்றவர்கள் வீடில்லாமல் கூச்சலிடும் கும்பலில் தாங்கள் இருக்கக் கண்டார்கள்…

…“டாக்டர்!  ஆக்சிடென்ட்லேந்து கொண்டுவந்தவங்கள்ல இந்தப் பையன் சுரேஷ் மட்டும்தான் பிழைச்சுக்கிட்டான்.  அவனுக்கு வைட்டல் சைன்ஸ் போயிட்டுபோயிட்டு வந்துட்டே இருந்திச்சு. நினைவும் வந்துவந்து போயிட்டே இருந்துது.  கண்ணைத் திறந்துட்டான்.  இப்ப அவனது சைன்ஸ் எல்லாம் ஸ்டெடியாக ஆயிடுச்சு.  இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாம் நார்மல்.” என்று நர்ஸ் டாக்டரிடம் தொலைபேசியில் சொன்னாள்.

   “மத்தவங்க.?…”

   “ஆக்சிடென்ட் ஆன மினிபஸ்லேந்து கொண்டுவந்த அத்தனை பெரும்….  பேரைப் படிக்கறேன், டாக்டர் – ஸ்ரீநிவாஸ், காமாட்சி, அப்துல்லா, தேவநாயகம், அம்புஜம், முனியாண்டி, சரஸ்வதி, கல்யாணராமன், வரதராஜுலு, சிங்காரவேலர் – இவங்க யாரும் பிழைக்கலை.  ஒரு நிமிஷம் முன்னாலேதான் ஒருத்தருக்கு அப்பரம் ஒருத்தரா சில செகண்ட்ஸிலேயே போயிட்டாங்க. . .”

*               *               *

கதை தொடர்கிறது:

. . . அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தாங்கள் பார்த்துப் பார்த்துக் கட்டிப் பராமரித்த வீடுகள் இடிந்துபோயினவா?  இனி எங்கே இருப்பது?  எங்கு செல்வது?  தங்கள் குடும்பம் என்ன ஆகும்?

ஒருவருக்கும் பேச்சே எழவில்லை.

முனியாண்டி என்ன ஆனான்? அவன் தன் குடிசையைப் பற்றிக் கவலைப்படவே இல்லையே? அவன் ஒருவன்தான் மலையேறிச் சென்றான்.  அவனுக்கு என்ன ஆயிற்று? அவன் திரும்ப மற்றவர்போல் சறுக்கிவிழுவானா?  அல்லாது, மலை உச்சியை அடைந்துவிடுவானா?  அங்கு என்னதான் இருக்கிறது?

முன்பு பதினோருபேர்தான் தனியாக நின்று பேசி, விவாதம்செய்தனர். சுரேஷைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே முடியாது.  அவனும் அவர்களுக்குப் பைபை, டாட்டா சொல்லிச் சென்றுவிட்டான். 

“பாவம், குழந்தை சுரேஷ்!  அவன் தனியா எப்படி வீட்டை வச்சுக் காப்பாத்திப்பானோ?” என்று கவலைப்பட்டாள் அவனது தாய், சரஸ்வதி. “அவனை இனிமே என்னால பார்க்கமுடியுமோ, முடியாதோ?” அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

“என்ன நாம இப்பிடி வந்து நன்னா மாட்டின்ட்டோம்?  எப்படி மீளறது?  நமக்கு யாரு இனிமே வீடு கட்டித் தருவா?” என்று புலம்பினாள் அம்புஜம்.

“அதை விடுங்க, மாமி.  கர்த்தர் அருள்செய்வார்.  நாம் எங்க வந்து மாட்டிக்கிட்டுருக்கோம்னு பாருங்க.” என்று சுற்றுமுற்றும் பார்த்தபடி கூறினார் தேவநாயகம்.

“இன்ஷா அல்லா, இது குரான்ல சொல்ற நரகம்தானா?  ஏன் அல்லாரும் இப்படிக் கூச்சல் போடறாங்க?” என்று கத்தியபடியே அவர்கள் அருகில் வந்தார் அப்துல்லா.  அவர் உடல் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தது.

“அடியாத்தி!  எனக்குப் பைத்தியமே புடிச்சுடும்போலல்ல இருக்கு.  என்னா இப்படிக் கவிச்ச நாத்தம் அடிக்குது?” என்று மூக்கைப் பிடித்துக்கொண்டாள் காமாட்சி.

“வாங்க, நாம தள்ளிப் போவோம்.  கொஞ்சம் நல்ல இடமாப் பார்த்து நின்னு யோசிப்போம்.” என்று அவர்களுக்கு யோசனை சொன்னார், ஸ்ரீநிவாஸ்.

“தலையெழுத்துன்னு ஒண்ணு இருக்கே, அதை யாரால மாத்தமுடியும்?  அனுபவிக்கணூம்னு நம்ம தலைல எழுதி வச்சுருக்கு, வந்து மாட்டிக்கிட்டோம்!”  என்று தத்துவம் பேசினார், கல்யாணராமன்.

“தலையெழுத்தாவது, ஒண்ணாவாது?  இதெல்லாம் மக்களிடம் பணம் பறிக்க, மூடநம்பிக்கையை வளர்த்துத் துட்டுச் சம்பாதிக்க, உங்களைப் போன்றோர் செய்யும் மூளைச் சலவை!” என்று வழக்கப்படி முழங்கினார், சிங்காரவேலன்.

அதைக்கேட்டவுடன் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டு சூள்கொட்டினாள் அம்புஜம். “நன்னாயிருக்கே, நீங்க சொல்றது?  இப்படி இக்கட்டிலே நம்ம எல்லோரும் மாட்டிண்டு இருக்கறச்ச பகவான் பேரை பத்துத் தடவை சொன்னா, வழியாவது பொறக்கும்.  அதை விட்டுட்டு, நாஸ்திகவாதம் பண்றது நன்னாவா இருக்கு?” என்று சரஸ்வதி, காமாட்சி இவர்களின் காதைக் கடித்தாள்.

“அதோ, அந்த எடம் கொஞ்சம் பரவாயில்லை, வாங்க அங்கே போவோம்.” என்று மீண்டும் அழைத்தார் ஸ்ரீநிவாஸ்.  அவர்களைப் பின்தொடர்ந்தனர் மற்றவர்கள்.  அதற்குள் அவர்களைப் பலரும் இடித்துத் தள்ளிக்கொண்டே இருந்தார்கள். 

அதனல், கால்தடுக்கிக் கீழே விழுந்தார், சிங்காரவேலன்.. 

“என்னைத் தூக்கிவிடுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்.”  என்று கத்தினார், சிங்காரவேலன்.

“உங்க தலையெழுத்து அது.”  என்ற பதில் கல்யாணராமனிடமிந்து வந்தது.

“சுயநலமிகளே, நீங்கள் நல்லாயிருக்க மாட்டீர்கள்!” என்று சபித்தார், சிங்காரவேலர்.  அவரை யாரும் கவனிக்கவில்லை.  ஏனோ, அவரைத் தூக்கிவிட மற்றவருக்கு மனமோ, இரக்கமோ வரவில்லை. அந்தக் கூட்டத்தில் அவரைக் குனிந்து தூக்கினால் தம்மை மற்றவர்கள் மிதித்துத் தள்ளிவிட்டால் என்ன ஆகும் என்ற எண்ணமே அவர்கள் மனதில் தோன்றித் தடுத்தது.

சிங்காரவேலன் கீழே கிடப்பதைக் கவனிக்காமல் அவரை மிதித்துத் தள்ளியவாறே பலரும் செல்லக் கண்டனர்.  அதைப் பார்க்கச் சகிக்காமல் மற்றவர் ஸ்ரீநிவாஸைப் பின்தொடர்ந்தனர்.

“பாவம்.” என்று முணுமுணுத்தாள் அம்புஜம்.

“விடுங்க, மாமி.  யாரு என்ன சொன்னாலும் அதுக்கு எதிராவே பேசி அந்த ஆளு தொல்லைகொடுத்தாரு.” என்று சமாதானப்படுத்தினார், அப்துல்லா.

“எல்லோருக்கும் கருணைகாட்டவேண்டும், இது கர்த்தர்மகன் ஏசுவின் வார்த்தை.” என்றார் தேவநாயகம்.

“தனக்கு மிஞ்சித்தான் தானமண்டி.”  என்று பதில்கொடுத்தார், வரதராஜுலு.

பெரிதாக மழைபெய்வதுபோல அவர்கள்மீது ஒரு திரவம் கொட்ட ஆரம்பித்தது. 

“என்னது இது?  பிசின்மாதிரி வழவழ கொழன்னு கொட்டுது?  தரையெல்லாம் வழுக்குதே?” என்று கவலைப்பட்டாள் காமாட்சி.

“விழாமல் இருக்கணும்னா, நாம எல்லோரும் ஒருத்தர் கையை இன்னொருத்தர் பிடிச்சால்தான் முடியும்.” என்றார் ஸ்ரீநிவாஸ்.

“அதெப்படி பழக்கமில்லாத புருஷா கையைப் பிடிக்கறது?” என்று கூச்சப்பட்டாள், அம்புஜம்.

“ஆபத்துக்குப் பாவமில்லை, மாமி, நாங்க ரெண்டுபேரும் வேணும்னா உங்க கையைப் பிடிச்சுக்கறோம்.  எங்க கையை மத்தவங்க பிடிச்சுக்கட்டும்.” என்றனர், காமாட்சியும், சரஸ்வதியும்.

“ஏதோ, நாம இந்த கஷ்டகாலத்தில ஒண்ணாச் சேர்ந்திருக்கோம்.  கூடப் பிறந்தவாளா நினச்சுக்குவோம்.”  என்று அம்புஜம் அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

அப்துல்லாவும், தேவநாயகமும் காமாட்சி, சரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டனர்.  அவர்கள் மெல்ல மெல்ல நடந்துசென்றனர்.

கொஞ்ச நேரத்தில் திரவம் கொட்டுவது நின்றது.  ஆனால், தரையில் நீர்மட்டம் உயர்த் தொடங்கியது.  கால்கள் மேலே அடியெடுத்து வைக்கமுடியாமல் வழுக்கின.

அவர்கள் முன்னால் சென்ற ஸ்ரீநிவாஸ், வரதராஜுலு வேகமாகச் சென்றதால் இவர்களால் அவர்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை.

“கொஞ்சம் மெதுவாகப் போங்க,” என்று இவர்கள் கத்தினர்.  அவர்கள் காதில் அது விழவே இல்லை.  நடுவில் மற்றவர் கூட்டம் வந்துகொண்டே இருந்தது.  திருவிழாவில் பிரிந்துசெல்வதுபோல அவர்கள் பிரிந்துசென்று காணாமல் போய்விட்டார்கள்.

“நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்,” என்று ஒரு குரல் கேட்டது. 

திரும்பிப்பார்த்தால், கல்யாணராமன் நின்றுகொண்டிருந்தார்.

அவருடன் சேர்ந்துகொள்ளலாம் என்று இந்த நால்வரும் செல்வதற்குள், அவரை இடித்துத் தள்ளியது ஒரு கூட்டம்.  தடுக்கிக் கீழேவிழப்போனார், கல்யாணராமன்.

அவரைப் பிடிக்கைக் கையை நீட்டினார், தேவநாயகம்.  இருவர் கைகளிலும் வழவழப்பான திரவம் பட்டிருந்ததால், பிடி வழுக்கியது.

கல்யாணராமன் கீழே விழுந்தார்.  அவர்மேல் மிதித்துக்கொண்டு முன்சென்றது அங்கிருந்த கூட்டம்.

தீனமான குரலில் அவர் முனகுவது இந்த ஐவரின் காதிலும் விழுந்தது.

அவர்களைத் தள்ளியது, கூட்டம்.

பிரிந்துபோகாமலிக்கக் கைப்பிடியைத் தளர்த்தாமல் முன்னேறினர் நால்வரும்.

“எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு?  புது வீடு கிடைக்கறது ஒருபக்கம் இருக்கட்டும், நாம பிழைப்போமா?” என்று கலங்கி அழுதாள், அம்புஜம்.

“நம்ப கண் முன்னாடியே விழுந்தவங்க ரெண்டு பேருங்க கதி என்ன ஆச்சுதுன்னு தெரியலே!  இந்தக் கூட்டத்தப் பார்த்தா, எங்கே போறதுன்னே தெரியலையே?” புலம்பினாள் காமாட்சி.

“பை-பைன்னு சொல்லிட்டுப் போயிட்டானே, என் கண்ணு!  அவன் என்ன பண்றானோ?  குழந்தை பாவம், அவனாவது நல்லா இருந்தா சரி.”  என்று பரிதவித்தாள், சரஸ்வதி.

அவர்களுக்குள் திடுமென ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது.  அவர்களின் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு ஒன்றாயின.  கைகள் சிறுத்துக்கொண்டே வந்தன. தோளிலிருந்து கால்வரை உடல் ஒன்றாகி நெளியத் தொடங்கியது.  பாம்பின் உடல் மாதிரி நெளிந்தது.

“நமக்கு என்ன ஆறது?  எனக்கு ரொம்ப பயம்மா….”  எனத் துடித்தாள் அம்புஜம். அதற்குமேல் அவளுக்குப் பேச்சு வராமல் நின்றுபோய்விட்டது.

யாரும் அவளுக்குப் பதில் சொல்வதற்குள் அவர்கள் கைகளும் நூலாகச் சிறுத்தன.  அப்துல்லா, காமாட்சி, சரஸ்வதி இவர்களின் தலைகள் உருண்ட கூம்புகளாய் மாறின.  கண்கள் மட்டும் பெரிதாய்த் தெரிந்தன.  வாய், மூக்கு, காது — இவை காணாமல் போயின.

தேவநாயகத்தின் தலையும், தன் தலையும் உருண்டையாக மாறியதை அம்புஜத்தால் உணர முடிந்தது.  அவர்களின் சிறுத்த கைகளும் நூலாகி, உதிர்ந்து காணாமலே போய்விட்டன.  அவர்கள் தலைப்பிரட்டை போல தலை, வால் இரண்டுடன்தான் இருந்தார்கள். 

அவர்களின் உடலும் சிறுக்கவே, அந்தத் திரவத்தில் மூழ்கினர்.  மூக்கு, வாய் இல்லாததால் அவர்களுக்கு மூச்சுத் திணறவில்லை.  உடல் சிறுத்திருந்ததால் கூட்டத்தினர் இடையில் இடைவெளி அதிகம் இருந்தது.  அவர்களால் மிதிபடுவோம் என்ற அச்சமும் இல்லை.  அவர்களால், தங்களது வால்போன்ற உடலை நெளித்து ஆட்டியாட்டி மேலும், கீழும் நீந்தமுடிந்தது.

ஏதோ ஒரு மனப் பிணைப்பின் காரணத்தினால் ஐவரும் அதிக இடைவெளியின்றி அந்த வழவழப்பான திரவத்தில் ஒன்றாக நீந்தத் தொடங்கினர். எத்தனை காலம், எத்தனை தூரம் நீத்தினோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. வீடுபெறச் செல்லவேண்டும் என்ற உந்துதல்தான் பெரிதாதத் தோன்றியது.

தூரத்தில் ஒரு விளக்கு அவர்கள் நீந்தும் திரவத்திற்கு மேலே தெரிந்தது.  அதை நோக்கிச் சென்றால் தங்களுக்கு வீடு கிடைக்கும் என்று அவர்கள் உள்ளம் எடுத்துரைத்தது.

இனம் தெரியாத உற்சாகம் அவர்களைத் தொற்றிக்கொண்டது.

அவர்கள் அந்தக் விளக்கு வெளிச்சத்தை நோக்கி நீந்திச் சென்றனர்.

‘உஷ்’ஷென்று ஒரு சுழல் அவர்களைத் தடுத்து இழுத்தது.

“என் கண்ணே, சுரேஷ்!” என்ற ஒலியற்ற அலறல் கேட்பதுபோல அவர்கள் உணர்ந்தார்கள்.  சரஸ்வதியை ஏதொ ஒன்று இழுத்துச் சென்றது.  அந்த பயத்தில் — தாங்கள் தப்பிக்கவேண்டும் என்ற ஒரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் மற்ற நால்வரும் விளக்கு வெளிச்சத்தைக் குறிவைத்து நீந்திச் சென்றார்கள்.

ஊமை வலியில் அவர்களால் உள்ளுக்குள் அழத்தான் முடிந்தது.  சரஸ்வதியைச் சேர்த்து அவர்களுடன் வந்த எழுவர் பிரிந்துபோய்விட்டனர்.  அவர்களுக்கு வீடு கிடைக்குமா, கிடைக்காதா, அவர்கள் என்ன ஆனார்கள், அவர்கள் கதி என்ன என்று எண்ணக்கூட அவர்களுக்கு அவகாசமில்லை.

தாங்கள் சிக்கித்தவிக்கும் நிலையிலிருந்து தப்பவேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

ஒருவழியாக திரவத்தின் மெல்பரப்பிற்கு அவர்கள் வந்துசேரவும், அந்த ஒளிவிளக்கை மறைத்துக்கொண்டு, ஒரு குழாய் அவர்களை உறிஞ்சுவதற்கும் சரியாக இருந்தது.

நால்வரும் அந்தக் குழாயின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு தொங்கினார்கள்.

அந்தக் குழாய் அவர்களை எங்கோ எடுத்துச் சென்றது. 

குழாயிலிருந்து வந்த பலத்த காற்று அவர்கள் நால்வரையும் ஒரு திரவத்தில் தள்ளியது. அவர்களால் அவர்கள் கண்களை நம்பமுடியவில்லை. 

அத்திரவத்தில் ஒரு வீடு மிதந்துகொண்டிருந்தது. 

காண்பதோ ஒரு வீடு, இருப்பதோ நால்வர்.  நால்வரும் ஒரே விதமாகச் சிந்தித்தனர். 

வீட்டுக்குள் நுழைந்தால், அது நம்முடையது, வீடுபெறச் செல்லவேண்டும். வீடுபெறச் செல்லவேன்டும்.

வேகமாக நால்வருமே அவ்வீட்டினில் புகுந்தனர்.  புகுந்த வேகத்தில் நால்வரின் வால்களும் அறுந்து வீழ்ந்தன.  வீடுபெற்ற நிம்மதியில் இனம்தெரியாக உறக்கம் அந்த நால்வரையும் ஆட்கொண்டது . . .

. . . ”என்னங்க, இப்படி மிஸ்டேக் ஆயிச்சு?  ஒரு எக்கிலே (கருப்பை முட்டையில்) நாலா?”

“பேசாம இரு.  இதுக்கு மேல நாம செய்ய ஒண்ணும் இல்லை.  ஃபீட்டஸும் (கருவும்) டெவலப் ஆக ஆரம்பிச்சுடுச்சு.  இவங்க ரொம்ப காம்ளிகேட்டட் கேஸ்.  ஒரு எக்தான் கிடைச்சுது.  இதுக்குமேல ஒண்ணும் செய்யமுடியாது. நடக்கறது நடக்கட்டும்.  ஃபெர்ட்டிலைஸ்ட் ஃபீட்டஸை கருப்பைலே சேர்க்கறதத் தவிர வேற வழியில்லே”.

“அதிசயம்! அதிசயம்! செயற்கை முறையில் கருத்தரித்தவருக்கு நான்கு குழந்தைகள் பிறப்பு!  தாயும், சேய்களும் நலம்”

எல்லாப் பத்திரிகைகளும், ஊடகங்களும் அல்லோலகல்லோலப்பட்டன.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.