தமிழ்த் திரைக் கவிஞர்கள் –  முனைவர் தென்காசி கணேசன்

 கவிதாயினி ரோஷனாரா பேகம்

தமிழ்த் திரைக் கவிஞர்கள் வரிசையில், இந்த மாதம்,  நாம் காணவிருப்பது, தமிழ்த் திரையின்  முதல் கவிதாயினி – பெண் கவிஞர். ஒரு அதிசய ஒற்றுமை என்னவென்றால், தமிழ் திரை உலகில் இரண்டு பெண் கவிஞர்கள் தான் வந்திருக்கிறார்கள். ஒருவர் இம்மாதம் நாம் காணவிருக்கும்  ரோஷனாரா பேகம். இன்னொருவர் கவிதாயினி தாமரை.  இரண்டு பேரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  கொங்கு நாட்டில் இருந்து, பொங்கும் தமிழில்
பாடல்கள் தந்தவர்கள்.

தமிழ் திரை உலகின் முதற் பெண் கவிஞர் என்ற பெருமையைக் கொண்டவர், ரோஷனாரா பேகம். இஸ்லாமிய பெண்கள் திரை உலகிற்கு வருவது எனபது இன்றையக் காலத்தில் கூட,  இல்லாத நிலையில் , 1968ல் இந்தப் பெண் வந்தது ஆச்சர்யமான விஷயம் தான். ஒரே ஒரு வருத்தம் – திரை உலகில் அவர் எழுதிய முதற் பாடலும் கடைசிப் பாடலும் இதுவே என அமைந்துவிட்டது. காலத்தின் சுவடுகளில் காணாமல் போய்விட்டார்.

ரோஷனாராவின் தந்தை ஒரு மோட்டார் நிறுவனம் வைத்திருந்தார். தாய், மருத்துவப் பணியில் இருந்தவர். கோவை உக்கடத்தில் வசித்து வந்த ரோஷனாராவிற்கு நல்ல குரல் வளம். படிக்கும்போதே அவரே எழுதி, பாடி பல பரிசுகள் வாங்கியவர். தந்தையின் நட்பு வட்டத்தில் இருந்த மெல்லிசை மன்னர் மூலம், கோவையைச் சேர்ந்த தயாரிப்பாளர் வேலுமணி தயாரித்த , குடியிருந்த கோயில் திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னைக்கு வந்து நான்கு நாட்கள் மட்டுமே தங்கி, இந்தப் பாடலை எழுதினார் என்பார்கள். பாடலின் பல்லவியாக,

குங்குமப்பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்

என்ற வரிகளைக் கேட்டவுடன், மன்னருக்கும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் ஆச்சர்யமான சந்தோஷம்.

காரணம், குடியிருந்த கோயில் படத்திற்கு ,முதலில் வைத்த பெயர் சங்கமம்.. படத்தின் பெயரையே, பாட்டின் முதல் வரிகளில் கொண்டு வந்ததால்,
பாடலில் சந்தம், அழகுணர்ச்சி இவற்றுடன் காதலும் சேர, கவிதாயினியின் வரிகள் மிக அழகு.

திரை உலகில் பல வருடங்கள் கோலோச்சி வரும் ஒரு கவிஞர் போல, அற்புதமான வரிகளைத் தந்தவர்.  இலக்கியத்  தரத்துடன் தந்திருப்பது மிக அழகு. அதற்கு ஏற்றாற்போல், மெல்லிசை மன்னரின் நளினமான இசையில், TMS  சுசீலா  இருவரின் குரல்களில்,  இந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ரசிக்கப்பட்டது.
 –
இதோ முழுப்பாடல், நமது ரசிப்புக்கு.. பாடலை பாடல் வரிகளுடன் கேட்டு மகிழுங்கள்!

குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும் –  இளமை
ஒன்றெனப் பாடும்

எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்

தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே  மான்தளிர் தேகம் 

மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

பெண்ணான பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி

 

தங்கம் மங்கும் நிறமான மங்கை

அங்கும் எங்கும் ஆனந்த கங்கை

ஜில் என்னும் குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு பேசும்

மெளனமே தான் அங்கு பேசும் பேசும் பேசும்

மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்

விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது
சென்றதே பூந்தென்றல் தூது

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.