சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜராஜன்- போர்க்கோலம்

பனித்துளி...: 2015வெற்றிகளால் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் சில மன்னர்கள்.
படைப்புகளால் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் சிலர்.
இரண்டும் சேர்ந்தால் அவர்கள் சரித்திரத்தில் ஒரு சிகரம் அமைப்பார்கள்.
ஒருவர் நரசிம்ம பல்லவன் – கடற்கரையில் அழியாத கோலங்களைக் கல்லால் எழுப்பினான்.

இன்றைய நாயகன் – கலையார்வமும், பக்தியும், செல்வமும், வீரமும் நிறைந்த நமது இராஜராஜன் – தஞ்சைப்பெரிய கோவில் எனும் அழியாத ஆலயத்தை உருவாக்கினான். அதைச் சொல்வதற்கு முன் அவனது வெற்றிகளை முழுவதுமாகச் சொல்வோம். நாம் இதுவரை காட்டியதெல்லாம் ஒரு சிறு கோடு தான். இன்று ஒரு ரோடு போடுவோம்.
அந்த ராஜபாட்டை இதோ.

கி பி: 991
போர்ப்பார்வையைத் தெற்கு நோக்கித்திருப்பினான்.
இலங்கை!

இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் – தனது சேர பாண்டியப் போரில், தனது எதிரிகளுக்கு உதவியதை இராஜராஜன் மறக்கவில்லை. ஈழம் தனக்கு வலுவான எதிரியாக இருக்கும் போது, சேர பாண்டியர்கள் ஈழத்தின் துணையுடன் மீண்டும் மீண்டும் துளிர்த்து வருவர் என்பதை நன்கறிந்திருந்த இராஜராஜன், இராஜேந்திரன் தலைமையில் ஈழப்படையெடுப்பைத் தொடங்கினான். தோல்வியுற்ற மகிந்தன், ஈழத்தின் தென் பகுதியில் மலைப்பிரதேசமான ரோகணத்துக்குச் சென்று ஒளிந்தான். இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் – அது வடபகுதியின் நகரம்.

‘இராஜேந்திரா! நரசிம்ம பல்லவனுக்கு ஒரு வாதாபி என்றால், இராஜராஜனுக்கு ஒரு அனுராதபுரம். நீ செய்து விடு” – என்று ஆணையிட்டான்.
அவ்வளவு தான்.
இராஜேந்திரன் செயதுவிட்டான். 
அனுராதபுரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
தீவின் மையப்பகுதியில் பொலன்னருவா என்ற இடத்தில் புதிய தலைநகரத்தை உருவாக்கினான். அதற்கு, சனநாதமங்கலம் என்று பெயரிட்டான்.தெற்கு ஆட்கொள்ளப்பட்டது.

மேற்கே, குடகு நாட்டில், பாணாசோகம் என்ற இடத்தில் கொங்காள்வ மரபு அரசனைப் போரில் முறியடித்துத் துரத்தினான். அந்தப் போரில் ‘மனிஜன்’ என்ற பெருவீரன் இராஜராஜனுக்குப் பேருதவியாக இருந்தான். அவனை அந்நாட்டுக்கு மன்னனாக்கி அவனை தனக்குக் கீழ் சிற்றரசானாக்கினான்.
பிறகு, இந்நாள் மைசூர், சேலம், பெல்லாரி பகுதிகளை அடக்கிய அந்நாள் கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி, துளுவம் பகுதிகளை இராஜேந்திரன் தலைமையில் சென்ற படைகள் வென்றது.இவ்வாறு, மேற்கும் வசப்பட்டது.

அடுத்த இலக்கு வடக்கு.
மேலைச்சாளுக்கிய நாடு.
மன்னன் இரண்டாம் தைலபன் மரணத்துக்குப் பின் அவன் மகன் சத்தியாசிரயன் அரசனானான். மேற்கே, கங்கவாடி ராஜ்யங்கள் சோழ ஆதிக்கத்தில் அடங்கியது, மற்றும் ஏதோ சில காரணங்களுக்காக சோழப்படையெடுப்பு நடந்தது.

இராஜேந்திரன் தலைமையில், ஒன்பது லட்சம் வீரர்கள் கொண்ட சோழர் படை புறப்பட்டது. பீஜப்பூர் ஜில்லாவின் தேனூர் அருகே பெரும்போர் நடந்தது.
சத்தியாசிரயன் யானை மேல் ஏறிப் போர் புரிந்தான்.
இராஜேந்திரன் அந்த யானையைக் குத்திக்கொல்ல ‘இராஜமல்லன் முத்தரையன்’ என்ற படைத்தலைவலனைப் பணித்தான். அந்த யானை அவனை மிதித்துக் கொன்றது। இராஜேந்திரன் சோகமடைந்தாலும் கடும் போர் புரிந்து சத்தியாசிரயனை போர்க்களத்தை விட்டு ஓட ஓடத் துரத்தினான். சோழர் படை பெருவெற்றிபெற்றது.

ஒரே போரைப்பற்றி இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக கல்வெட்டில் பதிவது அரசியலில் சகஜம்.

சாளுக்கியக் கல்வெட்டுகள்: “இராஜேந்திரன் படைகள் நாட்டைச் சூறையாடி, பாழ்படுத்தி, நகரங்களைக் கொளுத்தி, இளங்குழவிகள், மறையோர் என்று பாராமல் கொன்று குவித்து, கன்னியரைக் கைப்பற்றி மனைவியாராகக் கொண்டும், பெரும்பொருளை கவர்ந்தும் சென்றன” என்கிறது.
சோழக்கல்வெட்டுகள் தங்கள் அடைந்த வெற்றியை மட்டும்  கூறுகிறது.

உண்மை நிலவரம் யாரோ அறிவர்.

வேங்கிநாடு: கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கிடையே விரிந்த ராஜ்யம். கீழைச்சாளுக்கிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். இரு அரச சகோதரர்களில் மூத்தவன் அம்மராசன்- இளையவன் பாடபன். இருவருக்கும் ஆட்சியின்பால் தகராறு.
வேறு வேறு அரசியல் கூட்டணி அமைத்து – ராஜ்யத்தை பாதியாக்கி இருவரும் தனித்தனியே ஆண்டு வந்தனர். முப்பது வருடங்கள் வேங்கியில் குழப்பம் நிலவியது.

மூத்தவன் வழிமுறையில் வந்த இளவரசன் சக்திவர்மன், நாட்டைவிட்டு வந்து இராஜராஜனிடம் அடைக்கலம் புகுந்தான். வேங்கி நாட்டைக் கைப்பற்றும் நாளை எண்ணிக்கொண்டிருந்ததான். அவன் தம்பி விமலாதித்தன் அவனுடன் தஞ்சாவூர் வந்தான்.

அந்த நேரம், இராஜராஜன் சீட்புலி, பாகி நாடு இவற்றை (நெல்லூர் பகுதி) ஆண்ட தெலுங்குச் சோழன் வீமன் மீது படையெடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

சக்திவர்மனை அழைத்து, “சக்திவர்மா! இந்த சீட்புலி, பாகி நாடு இரண்டும் பராந்தக மகாராஜா காலத்தில் சோழவசமிருந்துப் பின்னர் இழக்கப்பட்டது. அதை மீட்பது எனது முதல் கடமை. பிறகு- வேங்கியை வென்று உனக்களிப்போம்” என்று கூறினான். சக்திவர்மன்: “மன்னர் மன்னா! இந்த யுத்ததிற்கு என்னை அனுப்புங்கள். உங்களுக்கு வெற்றி தரும் இந்த படையெடுப்பில் நான் பங்கு பெறவேண்டும்.

இராஜராஜன் மகிழ்ந்தான்.

“பரமன் மழபாடியானன் தலைமையில் செல்லும் பெரும் படையுடன் நீயும் செல்வாயாக! சென்று வா! வென்று வா!” என்றான்.

சக்திவர்மனின் பெருவீரம் காரணமாக அந்தப் படையெடுப்பில் சோழர்கள் வென்று அந்த நாடுகள் சோழ வசமாயின. சக்திவர்மன் மீது இராஜராஜன் பெருமகிழ்ச்சி கொண்டான்.

கி பி 999:

சிலவருடங்களில் பல மாற்றங்கள்.

இராஜராஜன் தன் மகளுக்கு குந்தவி என்று பெயர் வைத்திருந்தான். தன் அக்காவின் மீது அவன் கொண்ட பெருமதிப்புதான் காரணம்! சாளுக்கிய இளவரசன் விமலாதித்தன், வீரத்திலும் அழகிலும் சிறந்திருந்தான். இராஜேந்திரனும், விமலாதித்தனும் நெருங்கிய நண்பராயினர். வேங்கி இளவரசனும், சோழ இளவரசி குந்தவியும், தஞ்சாவூரில் ‘பழகினர்’.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:

ஒரு இளவரசனையும், இளவரசியையும் அருகில் வைத்தால் என்ன நடக்கும்.
நீங்கள் நினைத்தது தான் நடக்கும்.
அது வெகு சிறப்பாக நடந்தது.
காதல்!
காதல் இன்பத்தைக் கொடுப்பதோடு, ஏங்கவும் வைக்கும்.

விமலாதித்தன் ‘நானோ சோழரிடம் அடைக்கலம் புகுந்த ஏழை. அவளோ சக்கரவர்த்தித்திருமகள்’ என்று ஏங்கினான்.
‘ரோஜா மலரே ராஜகுமாரி’- என்று பாடினான்.

அப்புறம்:
‘ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ” என்று மேகத்திடம் தூது விட்டான்.
இராஜராஜன் கவனித்தான்.
பாடல்களை ரசித்தான்!
அவன் மனதுக்குள் மழை பொழிந்தது.
காதலை அங்கீகரித்தான்.
இந்த வேங்கி நாட்டு வேங்கைதான் தன் மகளுக்கு நல்ல மணவாளன் என்று முடிவு செய்தான்.
இருவருக்கும் மணமுடித்தான்.

“இத்துணூண்டு காதல் கதை! அதுக்கு இரண்டு பாட்டு வேற!” என்று வாசகர்கள் முணுமுணுப்பது தெளிவாகக் கேட்கிறது..

என்ன செய்வது? இது சரித்திரம் பேசுவதைச் சொல்லும் தொடர் – ரணகளத்தில் கிளுகிளுப்புக்காக எழுதப்படும் நவீனமல்லவே!

ஆனால், இந்தச் சிறிய காதல் கதை – தமிழகத்தின் சரித்திரத்தைப் பின்னாளில் புரட்டி, மாற்றி எழுதப்போவதை யாரும் அன்று அறியவில்லை. இராஜராஜனும் அறியவில்லை.

இராஜராஜனின் திக்விஜயங்கள் தொடரும். பெரியகோவில் வளரும்.

அக்கதைகள் விரைவில் வரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.