மனித இனத்தைப் பலப்பல நோய்கள் காலந்தோறும் வாட்டி வதைத்துப் படுகொலையும் செய்திருக்கின்றன. கோவிட் (Covid-19) எனப்படும் கொரோனா தொற்றின் தாக்கம் நம்மை இன்னும் விட்டபாடில்லை. இதனைக் கண்ணுற்ற பின்பே பலர் ஒரு தொற்றின் (infection) தாக்கத்தை, அதன் தீவிரத்தை உணர்ந்துள்ளனர் என்பதும் உண்மை.
சென்ற இதழ்க்கட்டுரையில் கூறியவாறு, நோய் என்பது உள்ளம் தொடர்பானது மட்டுமல்ல, உடல் தொடர்பானதும் கூட என்று விளக்கத்தான் இந்தக் கட்டுரை! அது மட்டுமின்றி, சில தொற்றுநோய்களைப் பற்றியும், அவற்றிலிருந்து காத்துக்கொள்வது பற்றியும், அவை மனித சமுதாயத்திற்குச் செய்த பல துன்பங்களை விளக்குவதற்காகவும் இதனை எழுத முற்பட்டேன். அவ்வப்போது சங்க இலக்கியக் கட்டுரைகளுக்கு இடைச்செருகலாக இவற்றை எழுத எண்ணம்!!
சரி! தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இல்லாமல் இப்படியொரு தலைப்பைக் கொடுப்பேனா?
இது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி. என் தாயாரும் கூடப் பிறக்கவில்லையாம். அவளுடைய அண்ணனான என் மாமா ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போது அவருக்குப் பெரிய அம்மை வந்த கதை இது! என்னுடைய பாட்டியார் அம்மாவிற்குக் கூறிய கதை. அம்மைத் தடுப்பூசி (Smallpox vaccination) போடுவது பிரபலமாகாத காலகட்டம். ஒருவயது கூட நிரம்பாத குழந்தைக்கு உடலெங்கும் அம்மை (smallpox) வார்த்துவிட்டது. வேப்பிலையைக் கொத்தாகக் கட்டி அதனால் உடலை வருடுவது வழக்கம். பாட்டியும் செய்தார். ஆனால் குழந்தை படும் அவஸ்தை காணச் சகிக்கவில்லை. உடம்பெங்கும் ஒரு இண்டு இடுக்கு இல்லாமல் அம்மைக் கொப்புளங்கள் பூக்களாக உடலெங்கும், முகமெங்கும், கைகால்களெங்கும் பூத்திருந்தன. பாட்டி பரபரவென்று ஒரு நுனி வாழையிலையை அறுத்துவந்து பூஜையறையில் ஸ்வாமி படத்தின் முன்பு விரித்து வைத்தார். அதில் விளக்கெண்ணையைத் தளும்பத் தளும்பப் பூசினார். குழந்தையின் உடலிலும் தடவிவிட்டு (இது கொப்புளங்கள் காயமாகி வலிக்காமல் இருப்பதற்காக!) குழந்தையை அந்த இலையில் போட்டுவிட்டு, “ஆண்டவனே! நீயே தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என் குழந்தையை,” எனப் பிரார்த்தித்தாராம்.
அதிசயம்! அம்மை வந்து பெரிதாக ஆடிவிட்டாலும். தழும்புகளுடன் மட்டுமே பெரிய பாதிப்பின்றி தப்பிப் பிழைத்த வெகுசிலரில் என் மாமாவும் ஒருவர்.
சரி. பெரியம்மை எனும் தொற்றுநோயைப் பற்றி சிறிது அறிந்து கொள்ளலாமா?
இது ஒரு வைரஸ். காலங்காலமாக இருந்து வரும் தொற்று. கி.மு. 10,000 லேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய மம்மிகள் சிலர் பெரியம்மையினால் இறந்தவர்கள் என அறிகிறோம். மிக நீண்ட காலங்களுக்கு முன்பு அமெரிக்க, ஆஸ்திரேலிய ஜனத்தொகை அம்மைத்தொற்றால், அதன் தொடர்பான இறப்புகளால் மிகவும் குறைந்து விட்டது. ஆண்டுக்கு 4 இலட்சம் பேர்கள் இறந்தனர்.
20ம் நூற்றாண்டில் மட்டுமே 30-50 கோடிப்பேர் இறந்துள்ளனர். அம்மைத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபின், அது உலகம் முழுவதிலும் நடைமுறைக்கு வந்த பின்பு 2011ம் ஆண்டில் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. இதனால் இப்போது அம்மைத் தடுப்பூசி போடுவதும் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
பல உலக நாடுகளிலும் அவ்வப்போது பெரியம்மை தனது வீரியத்தைக்காட்டி ஜனத்தொகையைக் குறைத்துள்ளது. ரோம் இதில் முக்கியமானது. 15 ஆண்டுகள் கோர தாண்டவம் ஆடிய அம்மைத்தொற்று, மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையைக் குறைத்த பின்பே ஒருவழியாக நிலைக்கு வந்தது!
கி.பி. 400ல் ஒரு இந்திய மருத்துவ நூலில் இந்தத் தொற்றின் அறிகுறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிவப்பும் பழுப்புமான சிறிய கொப்புளங்கள் (Pustules) இடைவெளியே இல்லாமல் உடலெங்கும் நெருக்கமாக மலர்ந்த சிறு காட்டுப்பூக்களைப்போல அரிசிஅரிசியாகப் படர்ந்திருக்கும். வலியும், அரிப்பும், எரிச்சலும் ஜுரத்துடன் சேர்ந்து நோயாளிகளை வாட்டி எடுக்கும். இது தெய்வத்தால் கொடுக்கப்படும் தண்டனை எனச் சில நாடுகளில் நம்பப்பட்டது. சீதளாதேவி எனும் பெண்கடவுள் இதற்குத் தெய்வம் என இந்துக்களால் நம்பப்பட்டாள். இவளே இந்த நோயையும் குணமாக்குபவளாக வழிபடப் பட்டாள். ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பெரியம்மையின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. மக்கள் தொகையின் மிகுதியான இழப்புக்கும் காரணமாக இருந்துள்ளது.
இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். உலகெங்கிலும் ஆண்டுதோறும் பெரியம்மையால் எண்ணற்ற ஜனங்கள் பரிதாபமாக இறந்தனர்.
இது இப்படி இருக்க, ஒருமுறை பெரியம்மை வந்து பிழைத்தவர்கள் மறுமுறை இந்தத் தொற்றுநோய்க்கு ஆளாகவில்லை என்பது நிதர்சனமானது. இதனால் உலர்ந்த பெரியம்மைப் பொருக்குகளைப் (scabs) பொடிசெய்து மற்றவர்களுக்குத் தடுப்பூசியாகப் போடப்பட்டது. இதனால் 1-3% பேர்கள் மட்டுமே தீவிரமான பெரியம்மை பாதிப்புக்கு உள்ளாகி இறந்தனர். மற்றவர்கள் லேசான பாதிப்புடன் குணமடைந்தனர். பெரியம்மைக்கான எதிர்ப்புச் சக்தியும் இவர்களுக்கு இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் 15-20% இறப்பு விகிதம் காணப்பட்டது.
1799-ல் அமெரிக்காவில்தான் முதல் பெரியம்மைத் தடுப்பூசி போடப்பட்டது. எட்வர்டு ஜென்னெர் (Edward Jenner) எனும் மருத்துவர் / ஆராய்ச்சியாளர் முதல் தடுப்பூசியைத் தயாரித்து வழங்கினார். 1800-ல் அமெரிக்காவில் நாடு முழுவதும் ஏழைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. ஏனெனில், ஏழைப்பணியாளர்கள் மிகவும் அழுக்கான இடங்களில் சுகாதாரமின்றி வசிப்பதனால் இந்தத் தொற்று அவர்களை மட்டுமே பாதிப்பதாக எண்ணப்பட்டது. அவர்களால் பரப்பப்படுவதாகவும் நம்பப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டது. போட்டுக்கொள்ளாவிட்டால் அபராதம், சிறைவாசம் ஆகியன அறிவிக்கப்பட்டன.
ஜென்னெர் முதலில் தன் ஆராய்ச்சியின்போது மாடுகளுக்கு வரும் அம்மைநோய்க் கொப்புளங்களிலிருந்து நீர் (இது மனிதர்களையும் பாதிக்கும்) மனிதர்களுக்கு செலுத்தப்பட்டால் பெரியம்மையிலிருந்து அது அவர்களைக் காக்கும் என அறிந்தார். பின்பு மாட்டு அம்மை (Cow pox) வந்த ஒரு பெண்ணிடமிருந்து அதனை எடுத்து ஒரு சிறுவனுக்குத் தடுப்பூசியாகச் செலுத்தினார். பின்னர் திரும்பத் திரும்ப அவனை பெரியம்மைத் தொற்றுக்கு உள்ளாக்கிப் பார்த்தார்; ஆனால் அவனுக்கு பெரியம்மைக் கொப்புளங்கள் வரவுமில்லை; அவன் நன்றாகவே இருந்தான். அன்றிலிருந்து ஜென்னெரின் கண்டுபிடிப்பால் பலர் பெரியம்மையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்பட்டது தெரியுமா? அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்பட்ட சீழ் நீர், அதனால் ஈரப்படுத்தப்பட்ட ஒரு சிறு கூரான கருவியால் தடுப்பூசி போடப்படும் மனிதரின் தோலைச் சிறிது கீறி அதில் செலுத்தப்படும். இதனை ஜென்னெர் தனது நண்பர்களான மருத்துவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் கொடுத்துப் பலரையும் பெரியம்மையிலிருந்து காப்பாற்றினார். மாட்டு அம்மைச் சீழ்நீர் பெரியம்மையிலிருந்து ஜனங்களைக் காத்தது.
இரண்டாவது வகைத் தடுப்பூசி முட்டையில் வளரும் கோழிக்குஞ்சின் சவ்வினுள் செலுத்தி வளர்க்கப்பட்டு, பின்பு அறுவடை செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் முட்டையின் புரதங்கள் பலருக்கு ஒவ்வாமையை (Allergy) உண்டுபண்ணின.
மூன்றாம் வகையில் பெரியம்மை ஒரு வைரஸால் வரும் தொற்று என அறிந்தபின்பு, அந்த வைரஸை அதன் வீரியத்தைக் குறைத்து, மாற்றங்களைச் செய்து, உபயோகிக்கலானோம். அறிவியல் வளர்ச்சியின் துணையால் இந்த வைரஸ்களை நன்கு பாதுகாப்பாக வளர்க்கும் முறையையும் பற்றி அறிந்தோம். பக்கவிளைவுகளும் மிகவும் குறைந்தன.
ஜென்னரின் தடுப்பூசி முறை 20ம் நூற்றாண்டுவரை, புதியமுறையில் தடுப்பூசி தயாரிக்கப் படும்வரை புழக்கத்திலிருந்தது. 1958ல் இருந்து 1977 வரை புதிய அம்மைத் தடுப்பூசியை உலகளவில் அனைவருக்கும் செலுத்தி, பெரியம்மையைத் தடுத்த உலக ஆராய்ச்சி நிறுவனம், 1979ல் பெரியம்மையை உலக அளவில் அறவே ஒழித்து விட்டதாக அறிவித்தது. ஆனால் இந்தத் தடுப்பூசி இன்னும் தயார் செய்யப்படுகிறது. எதற்காக?
இத்தகைய தொற்றுக்களால் மனிதனால்
மனித குலத்துக்கே ஏற்படுத்தப்படும் சேதங்கள், (Biological warfare)
மனிதகுல அழிவுக்குக் காரணமான செயல்கள், (Bio-terrorism)
இன்னும் குரங்கு அம்மை (Monkey Pox) போன்ற தொற்றுக்கள்
இவற்றிலிருந்து மனிதர்களைக் காக்க இது பயன்படுத்தப் படலாம்.
சமீபத்தில் கொரோனாவிற்குபின், தற்போது ‘குரங்கு அம்மை’ (Monkey pox) என ஒரு வைரஸ் தொற்று உலகை வலம்வர ஆரம்பித்திருக்கிறது. இது குரங்கிலிருந்து மனிதனுக்கும், மனிதனிடமிருந்து மனிதனுக்கும் பரவும் தொற்றாகும். பெரியம்மை, மாட்டு அம்மை, குரங்கம்மை அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்த வைரஸ்கள் தாம்.
குரங்கம்மைத் தொற்றினால் ஜுரம், கடுமையான தலைவலி, உடல்வலி, உடலில், தோலில் கொப்புளங்கள் முதலியன வரலாம். இது 2 – 4 வாரங்கள் இருக்கலாம். பெரும்பாலானவர்கள் குணமடைந்து விடுவார்கள். சிலர் மிகவும் அவதிப்படக்கூடும். சில இறப்புகளும் நேரலாம்.
இதற்கும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. பெரியம்மைத் தடுப்பூசி இந்தக் குரங்கம்மையிலிருந்தும் ஒருவரைக் காக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால், பெரியம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டது நம் தலைமுறைதான் கடைசி. 1980க்குப் பின் பெரியம்மைத் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் 2010 வாக்கில் நடந்த ஆராய்ச்சிகளில் இருந்து குரங்கு அம்மையிலிருந்து பெரியம்மை தடுப்பூசி காப்பதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இதிலிருந்து என்னவெல்லாம் அறிந்து கொள்கிறோம்?
தொற்றுநோய்களைப் பரப்பும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், மற்ற நுண்ணுயிரிகள் நம் கண்ணுக்குப் புலப்படாவிடினும், உலகில் எங்கெல்லாமோ உள்ளன. சமயம் வாய்க்கும்போது உலகை வலமும் வருகின்றன. நம் முன்னோர்களும் பெற்றோர்களும் சொல்லித்தந்த சில அடிப்படை சுகாதார வழிகளைக் கடைப்பிடிப்பதனால் இவற்றை ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொள்வது வருமுன் காத்தலுக்காகத்தான். வந்தபின் காத்தல் தான் கொரோனாவில் பெரும்பாலான மக்களை அந்தத் தொற்றுக்கு இழந்தபின், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபின், அதனைப் போட்டுக்கொண்டு மற்றவர்கள் தம்மைக் காத்துக் கொண்டது! எத்தனையோபேர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுத்துள்ளனர்.
இன்றைக்கும் ‘தடுப்பூசியை மறுப்பவர்கள்’ (Vaccine deniers) என உலகில் ஒரு சாரார் உள்ளனர். தடுப்பூசியை மறுப்பவர்கள் அது தயாரிக்கப்படும் முறைகள், (பெரியம்மைத் தடுப்பூசி மாடு, மனிதர்களின் சீழ்க் கொப்புளங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது – ஆகவே அருவருக்கப்பட்டது!), அது போடப்படும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பினைத் தருமா என்பதுவரை பல காரணங்களுக்காக, தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தமது சுதந்திரம், உரிமை என்று வாதிட்டவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களைக் கொண்டது. இவர்கள் தமக்கும், தமது குழந்தைகளுக்கும் எந்தவிதமான தடுப்பூசியையும் செலுத்தாமல் வாழ்கின்றனர். இது மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இவர்கள் ஏன் உணரவில்லை என்று வியப்பாகவும், மலைப்பாகவுமுள்ளது.
மீண்டும் பேசுவோம்.
———————