“ஓய் சிரௌதிகளே! போயும் போயும் உமக்கு சதாசிவ கனபாடிகள்தான் கெடச்சாரா? இது அமெரிக்காக்காரா கல்யாணம், ஒய்! கனபாடிகள்பாட்டுக்கு அது சரியில்லை, இது சரியில்லைனு ஏதாவது தகராறுன்னா பண்ணுவார்? யாராவது ஓணானை மடியில் கட்டிண்டா கல்யாணத்துக்குப் போவா?” என்று அலுத்துக்கொண்டார், சிவராம சாஸ்திரி.
“ஏண்ணா இப்படி அலுத்துக்கறேள்? உதகசாந்திக்குத்தானே அவர் ஜபம் பண்ண வரப்போறார்? கொஞ்சம் நிறுத்தி, ஸ்வரத்தோட ஜபிக்கச் சொல்வார்.. மத்தபடி என்னண்ணா செய்யப்போறார்? வந்து ஒக்காந்து உரக்க ஜபிச்சார்னா சபையே அதிரும்! அப்படியே அமெரிக்காக்காரா சொக்கிப் போயிடமாட்டாளா? உதகசாந்தி முடிஞ்சவுடனேயே அவருக்கு தட்சிணையும், வேஷ்டியும் கொடுத்து அனுப்பிச்சா, சந்தோஷமா போயிடப் போறார். சாப்பிடக்கூட ஒக்காரமாட்டார். சுயம்பாக்கி வேற.” என்று சமாதானப் படுத்தினார், சுப்பிரமணிய சிரௌதிகள்.
அவர் சிவராம சாஸ்திரியைவிட வயதில் பெரியவரானாலும், எல்லோரையும் அண்ணா என்றுதான் அழைப்பார். தனக்கு வரவேண்டிய கமிஷன் – அதுதான் உதகசாந்தி ஜபிக்க பிராமணர்களைக் கூப்பிட்டுவரக் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் போய்விடக்கூடாதே என்ற அச்சம்…
…சுபமுகூர்த்த நாள். அதனால் ஏகப்பட்ட முகூர்த்தங்கள். உதகசாந்திக்கு வரவேண்டிய ஒரு பிராமணருக்கு ஜுரம் வந்து படுத்துவிட்டதால், ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.
எழுபது வயதான சதாசிவ கனபாடிகள் அறுபது வயதானதும் எங்கும் உபாத்யாயத்துக்கு (சடங்குகள்) ஆச்சாரியராகப் போவதை நிறுத்திவிட்டார். அவருக்கு எல்லாம் சரியாக நடக்கவேண்டும். மந்திரத்தைச் சரியாகச் ஜபிக்கவேண்டும். இல்லாவிட்டால் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவார். எஜமானர்கள் — அதாவது அவரை உபாத்யாயத்திற்கு அழைப்பவர்கள் — என்ன கொடுப்பார்களோ, அதை முகம் சுளிக்காமல் வாங்கிக்கொள்வார். உடன் வரும் யாரையும் அதிகமாகக் கேட்க விடமாட்டார். கேட்டால், “பிராமணனுக்குப் பணத்தாசை கூடாது. நாம தட்சிணைதான் வாங்கறோம். கூலியில்லை. அதுனால, எஜமானன் என்ன மனமுவந்து கொடுக்கறானோ அதைச் சந்தோஷமா வாங்கிண்டு, முழுமனசோட ஆசீர்வாதம் பண்ணனும். அப்பத்தாண்டா பிராமணனுக்கு மதிப்பு இருக்கும், அவன் பண்ற ஆசீர்வாதத்துக்குப் பலன் இருக்கும்,” என்று அடக்கிவிடுவார்.
அதனால்தான், அவருடன் சேர்ந்து உபாத்யாயம் செய்பவர்கள், ஒருவர்பின் ஒருவராக அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகளாக விலகிப் போனார்கள். அதில் முதலாவதும், முக்கியமானவரும்தான் சிவராம சாஸ்திரி. அதனாலேயே, அவருக்கு சதாசிவ கனபாடிகளை அழைத்தது பிடிக்கவில்லை.
சுப்பிரமணிய சிரௌதிகளுக்கு அந்தமாதிரிச் சிக்கல் எதுவும் இல்லை. வெளியூரிலிருந்து வந்தவர். சதாசிவ கனபாடிகளைவிட வயதில் மிகவும் சிறியவர். ஆகவே, அவரை அப்பப்பொழுது எங்காவது அழைத்துச் சென்று வரும் பணத்தில் தனக்குக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு — அதாவது முப்பதிலிருந்து ஐம்பது சதவீதம் – இடத்தையும், கிடைக்கும் தட்சிணையையும் பொறுத்துத்தான் – கனபாடிகளுக்குக் கொடுத்துவிடுவார். கனபாடிகளுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும், சிரௌதிகள் ஐந்து பெண்ணைகளைப் பெற்றவர், பணத்தேவை இருக்கத்தானே செய்யும் என்று முகமலர்ச்சியுடன் விட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.
அதனாலேயே, எங்கு தேவைப்பட்டாலும், சிரௌதிகள் கனபாடிகளை அழைப்பார். சிவராம சாஸ்திரி என்று தெரிந்தவுடனேயே முதலில் கனபாடிகள் மறுத்தார்.
“அவன் ஒருமாதிரி, சுப்புடு! எல்லாத்தையும் ஓட்டுஓட்டுனு ஓட்டுவான். அவனுக்குப் பணம்தான் பிரதானம். மந்திரங்களை எதுக்காக, என்ன பலனுக்காகச் சொல்றோம்னு தெரியாது. சுருங்கச்சொன்னா இவன்மாதிரி ஆளுங்க இருக்கறதுனாலதான் பிராம்மணாளுக்கே கெட்டபேர்.”
“அண்ணா, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. பொதுவா, சிவராம சாஸ்திரின்னா உங்களை நான் அழைக்கவே மாட்டேன். இப்ப வேற வழியே இல்லைண்ணா. மூணு நாளிலே கல்யாணம். திடும்னு ராமனுக்கு ஜுரம் வந்துடுத்து. எனக்கும் கடைசிப் பொண்ணு கல்யாணத்தை நடத்தறத்துக்குப் பணம் சேர்க்கணும், அண்ணா. நீங்கதான் தயவு பண்ணனும்,” என்று கெஞ்சவே, கனபாடிகள் சம்மதித்தார்.. .
…“தொலையட்டும் சிரௌதிகளே! உங்களுக்காகச் ஒத்துக்கறேன்,“ என்ற சிவராம சாஸ்திரியின் குரல் சிரௌதிகளின் கவனத்தைத் திருப்பியது.
“வர்றவர், உதகசாந்தி ஜபிச்சோமா, தட்சிணை வாங்கிண்டோமா, போனோமான்னு இருக்கணும். அவரை மேய்க்கறது உம்ம பொறுப்பு. ஏதாவது ஏடாகூடமாப் பேசினா, எனக்கு மூக்குக்கு மேலக் கோபம் வந்துடும். லட்ச ரூபாய்க்கும் மேலே தட்சிணை கொடுக்கறதாச் சொல்லியிருக்கா,,” என்று எச்சரித்தார், சிவராம சாஸ்திரி.
“அப்படியே செஞ்சுடறேண்ணா. அதுபோகட்டும். அமெரிக்கக்காரான்னு சொன்னேளே! அது யாரு?” என்று வினவினார் சிரௌதிகள்.
“நம்ம கார்த்தியோட பொண்ணுக்குத்தான் கல்யாணம், சிரௌதிகளே! பீச் பக்கத்துலே, அஞ்சு கிரவுண்டுலே, தனியாக் கட்டியிருந்த பெரிய பங்களாவுக்குப் போன வருஷம் நாம கிரகப் பிரவேசம் பண்ணப் போனோமே, அவாதான்.”
“அந்தக் கார்த்தியா? நல்ல மனுஷன். அமெரிக்கான்னாலும், துளிக்கூட கர்வம் இல்லை. ஒரே ஒரு பொண்ணுதானே, அவாளுக்கு? அதுவும் பொடவையெல்லாம் கட்டிண்டு வளைய வந்துதே! பிரமிச்சுன்னா போயிட்டேன். தமிழ்லகூட நன்னாப் பேசித்தே!” என்று புகழ்ந்தார்.
“அதே பொண்ணுக்குத்தான் கல்யாணம்.”
“மாப்பிள்ளை யாராம்?”
“யாரோ போலீஸ்காரனாம்.”
“என்னது? போலீஸ்காரனா? அந்தப் பொண்கொழந்தை அமெரிக்கால படிச்ச படிப்புக்கு போயும் போயும் ஒரு போலீஸ்காரனுக்கா கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா? போக்கத்தவன்தானே போலீஸ் உத்யோகத்துக்குப் போவான்?”
“சிரௌதிகளே! வாயை அடக்கிப் பேசும்யா? இதேமாதிரி நாளைக்குப் பேசினா, உம்மை அடிச்சு வெரட்டிடப் போறா! யாரு யாரைக் கல்யாணம் பண்ணிண்டா உமக்கு என்னையா ஆச்சு? இப்போதான் காதல், கத்திரிக்கான்னு அலையறாளே! அந்தப் பொண்ணுக்கு போலீஸ்காரனைப் பிடிச்சிருக்கு. பண்ணி வைன்னு கேட்டிருக்கா. அவளோட அப்பா, அம்மா சரீன்னுட்டா. உமக்கு ஏன்ய்யா காய்ச்சுத் தொங்கறது? உம்ம பொண்ணைப் போலீஸ்காரனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கற மாதிரின்னா துடிக்கறீர்! நம்ம தொழில் எதுவோ, அதைப் பார்த்துண்டு போகணும். உளறாம வாயை மூடிண்டு வேலையப் பாரும்.” என்று விரட்டினார், சிவராம சாஸ்திரி.
தலையாட்டியவாறு அங்கிருந்து நடந்தார், சுப்பிரமணிய சிரௌதிகள்.
* * *
திருமண நாளும் வந்தது. காலை. உதகசாந்திக்குப் பிராமணர்கள் வந்துவிட்டனர் — சதாசிவ கனபாடிகளைத் தவிர. சிவராம சாஸ்திரிக்கு மூக்குக்குமேல் கோபம்; சிரௌதிகளை எரிச்சலாக அதட்டினார்.
“என்ன ஆச்சு ஓய்? இன்னும் உம்ம கனபாடிகளைக் காணோமே?”
“வந்துடுவார் அண்ணா. ஸ்நானம் பண்ணிட்டு மூணு கிலோமீட்டர்னா ஆத்துலேந்து நடந்து வரணும். சைக்கிள், ஸ்கூட்டர் விட்டுண்டு வர வயசா? ஆனா, கண்டிப்பா டயத்துக்கு வந்து சேர்ந்துடுவார்,” என்று சமாதானப் படுத்தினார்.
“ஏன், ஆட்டோல வர முடியாதோ?”
“மடி போயிடுமாம்.”
“இந்தக் காலத்திலயும், இந்தமாதிரிப் பிரகிருதிகள்!” என்று அலுத்துக்கொண்ட சிவராம சாஸ்திரி, “கார்த்திக் வர்றார். கூட வர்றது மாப்பிள்ளையாத்துக்காரா போல இருக்கு,” என்று பரபரத்தார்.
அவர்களை உற்றுப்பார்த்த சிரௌதிகள், “என்னண்ணா இது? நீங்க மாப்பிள்ளை போலீஸ்காரர்னு சொன்னேள். அவர் வெள்ளைக்காரர் மாதிரின்னா இருக்கார்? கூட வர்றவாளும் அப்படித்தானே இருக்கா? ஒருவேளை இவா கார்த்தியோட சிநேகிதாளோ? கல்யாணத்தைப் பார்க்க அமெரிக்காவுலேந்து வந்திருக்காளோ?” என்று இழுத்தார்.
“ஓய், நீர் வாயை மூடிண்டு சும்மா இரும். மத்த பிராமணா காதில விழுந்து, அவா என்ன ஏதுன்னு கேக்கறதுக்குள்ளே நானே கார்த்திகிட்ட விசாரிச்சுடறேன்,” என்று எழுந்திருக்கவும், கார்த்தியே அவர்களுடன் இவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது.
“என்ன கார்த்தி சார், சௌக்கியமா?” என்ற சிவராம சாஸ்திரிக்கு, அவர்களை மாப்பிள்ளை வீட்டார் என்று அறிமுகப் படுத்திவைத்தார், கார்த்தி.
இவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
“மாப்பிள்ளை போலீஸ் உத்யோகம்னு போன்ல சொன்னேளே?” என்று தயங்கியவாறு கேட்டதும், கடகடவென்று சிரித்தார், கார்த்தி.
“அடாடா, நீங்க மாப்பிள்ளை யாருன்னு கேட்டதுக்கு, நான் போலிஷ்காரர், அதாவது போலந்து நாடு பூர்வீகம்னு சொன்னேன். போலீஸ்காரர்னு நீங்க தப்பா அன்டர்ஸ்டான்ட் செஞ்சுட்டீங்க போலிருக்கு,” என்று பெரிதாகச் சிரித்தார்.
“அப்ப இவா, நம்ம சாஸ்திர சம்பிரதாயத்துக்கு ஒத்துண்டாளா?” என்று வினவினார், சிவராம சாஸ்திரி.
“ஏதோ ஒரு வழியா எம் பொண்ணுதான் பேசி சம்மதிக்க வைச்சிருக்கா. இவா ஜூயிஷ்காரா (யூதர்கள்). அதுனால ரொம்பத் தகராறு பண்ணல. இங்கே நம்ப சம்பிரதாயப் படியும், அங்கே அவா சம்பிரதாயப்படியும் பண்ணுங்கோன்னு ஒர்த்தொர்த்தர் மாதிரி கம்ப்பெல் பண்ணல. அதுனால நீங்க எல்லாத்தையும் நன்னாப் பண்ணிடுங்கோ. என்னைவிட, என் வொய்ஃபைவிட, என் பொண்ணுக்குத்தான் இதிலே ரொம்ப இன்ட்ரஸ்ட்.. மாப்பிள்ளைக்கு பஞ்சகச்ச வேஷ்டி இதல்லாம் கட்டணும். ரெடிமேடா வாங்க டயம் இல்லே. சம்பந்திகளுக்கு சம்மணம் கூட்டி உட்கார முடியாது. பாண்ட்டோடயும், ஸ்கர்ட்டோடயும்தான் சேர்லதான் ஒக்காந்துப்பா. மாப்பிள்ளையாலகூட ரொம்பநேரம் சப்ளாம்கூட்டி ஒக்காரமுடியாது. அப்பப்ப அவரும் சேர்ல உக்காரவேண்டியிருக்கும். நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கோ. இவாளை நான் மத்தவாளுக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணிட்டு வரேன்.” என்று அங்கிருந்து கார்த்தி அகலவும், சதாசிவ கனபாடிகள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
விஷயம் தெரிந்தால் கனபாடிகள் என்ன கலாட்டா பண்ணுவாரோ என்ற கவலை சிரௌதிகளைப் பிடுங்கித் தின்றது.
“சுப்புடு, சொன்ன டயத்துக்குச் சரியா வந்துட்டேனா? எல்லாம் ரெடியா?” என்று சுப்பிரமணிய சிரௌதிகளை விசாரித்தபடி அங்கு வந்தார், சதாசிவ கனபாடிகள். அவர் பொதுவாக சிவராம சாஸ்திரியுடன் நேரடியாகப் பேசுவதில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
“ஏண்டா, உங்க மூஞ்சிகள் இஞ்சிதின்ன கொரங்குகள் மாதிரி இருக்கு. அனுக்ஞாவை ஆரம்பிக்கணும். பிராமணாள், கல்யாணாப் பையன், பொண்ணு ஆத்துக்காராள் எல்லாரும் ரெடியா இருக்காளா? லேட்டா ஆரம்பிச்சுப்பிட்டு, ஓட்டு ஓட்டுன்னு சொன்னா எனக்கு ரொம்பக் கோபம் வரும். வேகுவேகுன்னு நடந்து வந்திருக்கேன். என்ன வெயில், என்ன வெயில்?” என்று அங்கவஸ்திரத் தலைப்பால் விசிறிக்கொண்டபடி அவர்கள் முகத்தை உற்று நோக்கினார்.
“அண்ணா, வந்து, வந்து.. மாப்பிள்ளை ஆத்துக்காரா வெள்ளைக்காரப் போலீஸ்காராளாம். நாம்ப கொஞ்சம் அனுசரிச்சு..” என்று இழுத்தார் சிரௌதிகள்.
“என்னது?” கனபாடிகள் குரல் சிறிது உயர்ந்தது.
“அண்ணா, பொண்ணாத்துக்காரா நம்ப சம்பிரதாயப்படி செய்யணும்னு ஆசைப்படறா. அதுலேயயும் கல்யாணப் பொண்ணு அமெரிக்காலேயே வளர்ந்திருந்தாலும், நன்னா சம்பிரதாயத்தை அனுசரிச்சுச் சாஸ்த்ரோக்தமாக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறது. மாப்பிள்ளை ஆத்துலேயும் சம்மதிச்சுட்டாளாம். நீங்க கொஞ்சம் பெரிசுபண்ணாம..,”
“சுப்புடு, நான் என்னடா பெரிசு பண்ணறது? இந்தக் கல்யாணத்தைப் பண்ணிவைக்க ஒத்துண்டது நானாடா? என் தாடையை எதுக்குடா பிடிக்கறே?”
கனபாடிகள் என்ன முடிவு செய்யப்போகிறார், உதகசாந்திக்கு உட்காருவாரா, இல்லை, ரசாபாசம் செய்வாரா என்று இருவருக்கும் பிடிபடவில்லை.
“சிரௌதிகளே! எனக்கே இப்பதான் விஷயம் தெரியும்னு அவாகிட்டச் சொல்லுங்கோ. மாப்பிள்ளையாத்துக்காரா குழாய் மாட்டிண்டு நாக்காலிலே உக்காந்துப்பாளாம். நாம மாப்பிள்ளைக்குப் பஞ்சகச்சம் கட்டிவிட்டு, தரைலே உக்காந்து சம்பிரதாயப்படி அனுசரிச்சு நடத்தணூமாம். எல்லாம் தலையெழுத்து; கூத்து ஏதோ காமாசோமான்னு பண்ணினாப் போறும். ! கைநீட்டி அட்வான்ஸ் வாங்கியாச்சு. சினிமாவிலே காட்றாளோன்னோ, அப்படித்தான் இந்தக் கல்யாணம். கனபாடிகளை விறைச்சுண்டு போயிடச் சொல்லாதீங்கோ. அப்பறம் எம்பாடுதான் திண்டாட்டம். மந்திரம் சொல்ல இஷ்டமில்லேன்னா, சும்மா ஒக்காந்திருந்தாப் போதும். தட்சணை கண்டிப்பாக் கிடைக்கும்,” என்று பொரிந்து தள்ளிய சிவராம சாஸ்திரி, விசும்பல் சத்தம் கேட்டுத் திரும்பினார்.
அங்கே மணப்பெண்ணுடன் கார்த்தியும், அவர் மனைவியும்; பின்னால் மாப்பிள்ளை வீட்டார்!!
“என்ன சொல்றீங்க, காமாசோமான்னு கல்யாணத்தை நடத்தப் போறேளா?” கார்த்தியின் கேள்வி இது.
“இதுக்குத்தான் அமெரிக்கவிலேயே முடிச்சுடலாம்னு சொன்னேன், நீதான் ரேஷ்மி கேட்கலே!” மணப்பெண் ரேஷ்மியைப் பார்த்து அவளது தாயார் எரிச்சலுடன் கடிந்தாள்,
“வந்து, வந்து..,” இழுத்தார், சிவராம சாஸ்திரி.
“வாட் ஈஸ் ஹேப்பனிங் (என்ன நடக்குது)?” என்று மாப்பிள்ளைடமிருந்து கேள்வி பிறந்தது.
“நான் நம்ம டிரடிஷன்படி மாரேஜ் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன். இது சினிமாக் கல்யாணம்னு ப்ரீஸ்ட் சொல்றார்.” ஆங்கிலத்தில் விளக்கினாள், ரேஷ்மி.
“வாட் (என்னது)?”
யாரும் எதிர்பார்க்காதவாறு சதாசிவ கனபாடிகள் ரேஷ்மியை அணுகினார்.
“அம்மா, உனக்கு நம்ப சம்பிரதாயப்படி, சாஸ்த்ரோக்தமாக் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கற லட்சியம் ரொம்ப எனக்குப் பிடிச்சிருக்கும்மா. சிரேஷ்டமான ஆசை. நீ ஆசைப்பட்டபடி, சம்பிரதாயப்படி சரியா நடக்கணும்னா, நான் சொல்றதைக் கேட்பியா?”
இப்படி ஒரு கேள்வி கனபாடிகளிடமிருந்து வரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவர் சொன்னது முழுவதும் புரியாமல் விழித்த மாப்பிள்ளைக்கு மொழிபெயர்த்தாள், ரேஷ்மி.
“சிரௌதிகளே! குட்டையைக் குழப்பவேண்டாம்னு கனபாடிகள்கிட்டக் திட்டவட்டமாச் சொல்லிடுங்கோ. கைநீட்டிக் காசு வாங்கிட்டோம்; பொண்ணாத்துக்காரா இஷ்டம்போல அட்ஜஸ்ட்பண்ணிக் கல்யாணம் நடத்திடுவோம். யாரும் வருத்தப்படவேண்டாம்.”
சிவராம சாஸ்திரியிடமிருந்து காரமாகப் பதில் வந்தது.
“டாடி, இந்த ப்ரீஸ்ட் எனக்குக் கல்யாணம் செய்து வைக்கவேண்டாம். ஐ டோன்ட லைக் ஹிஸ் ஆட்டிட்யூட் (இவர் நடப்பு எனக்குப் பிடிக்கலை)!”
தன்னைக் காட்டி ரேஷ்மி சொன்னதும், சிவராம சாஸ்திரி அதிர்ந்து போனார்.
சதாசிவ கனபாடிகளைக் காட்டி, “இந்த ஆளையா நம்பறே! இவர் இழுக்கப்போற இழுப்புக்கு உன்னால ஆடமுடியாது,” என்று ரேஷ்மியை எச்சரித்தார், சிவராம சாஸ்திரி.
“என்னடா சொல்றே?” என்று சிவராம சாஸ்திரியிடம் பாய்ந்த சதாசிவ கனபாடிகளைத் தடுத்த ரேஷ்மி, “அங்க்கிள், ப்லீஸ்! சொல்லுங்கோ. என்ன செய்யணும்?” என்றதும், அங்கு ஒரு அமைதி நிலவியது.
சிரௌதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. கனபாடிகள் என்ன சொல்வாரோ?
“அம்மா, குழந்தே! நம்ம தர்மப்படி கல்யாணம் நடக்கணும்னு சொல்றே. ரொம்ப சரி. நீ பிராமணப் பொண்ணு. உனக்குப் பார்த்திருக்கற மாப்பிள்ளை விதேசம், ஜாதியை விடு, அவர் நம்ப இந்து தர்மம்கூட இல்லை. பரவாயில்லை. ஆனாலும் அதுக்கு வழி இருக்கு. உங்க அப்பா சொல்றமாதிரி எந்த அட்ஜஸ்ட்மென்ட்டும் நான் பண்ணமாட்டேன், பண்ணவும் கூடாது. காமாசோமான்னு செய்யவும் மாட்டேன். எல்லாத்தையும் சரியாத்தான் செய்வேன். ஆனா, அதுக்கு நீ, உன்னைப் பெத்தவா, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கபோறவர், அவரைப் பெத்தவா சம்மதிச்சாத்தான் நடத்தமுடியும். என்ன சொல்றே! முடியாதுன்னா, உன் தோப்பனார் பார்த்த புரோகிதர் பண்ணிவைக்கப்போற காமாசோமா கல்யாணத்தைப் பண்ணிக்கோ!”
கனபாடிகள் கனிவாகப் பேசினாலும், கறாராகப் பேசியது அனைவருக்கும் புரிந்தது.
“ப்லீஸ், சொல்லுங்கோ அங்க்கிள், நான் எல்லோரையும் அக்ரீ பண்ண வைப்பேன்!” ரேஷ்மியின் குரலில் இருந்த உறுதி கனபாடிகளின் முகத்தை மலரவைத்தது.
“அம்பாள் மாதிரித்தான் குழந்தே, நீ பேசறே! உன் கல்யாணம் நடக்க வழி இருக்கு. உனக்கு ஆத்துக்காரரா வரப்போறவரை ஒரு பிராமண தம்பதிகள் சுவீகாரம் எடுத்துக்கணும், அப்படிச் செஞ்சவுடன் அவருக்கு உபநயனம் செய்யணும். அதுக்கப்பறம் அவரோட சுவீகார அப்பா, அம்மா இந்தக் கல்யாணத்தை முறைப்படி நடத்தணும். அதுக்கு எல்லோரும் ஒத்துப்பாளா?” கனபாடியின் அமைதியான விளக்கமும், கேள்வியும் அனைவரையும் தூக்கிவாரிப் போட்டது!
“கார்த்தி, இந்த மனுஷன் ரொம்பக் கூத்தடிச்சு, உன் பொண்ணு மனசைக் கலைச்சுக் குழப்பறார். சுவீகாரமாம், இரவல் அப்பா, அம்மாவாம்? இதென்ன சர்க்கஸ் கொட்டகைனு நெனச்சுண்டிருக்காரா, இவர்? சினிமாக் கல்யாணத்தைவிடன்னா இது பெரியா கூத்தா இருக்கு? சபைல இருக்கறவா அத்தனை பேரும் வழிச்சுண்டுதான் சிரிப்பா..” என்ற சிவராம சாஸ்திரியை, “ஷட் அப் யுவர் ட்ராப் (வாயை மூடு)” என்ற ரேஷ்மியின் குரல் அடக்கியது.
“கல்யாணம் எனக்கு; இதில் டிசிஷன் எடுக்கவேண்டியது நானும், என் உட்-பீயும்தான். கமென்ட் சொல்ல உங்களுக்கு எந்த ரைட்டும் இல்லை. நான் கேட்டதுக்கு இந்த ப்ரீஸ்ட் பதில் சொல்லியாச்சு. இவருக்கு ஒரு கொஸ்டின்,” என்று கனபாடிகள் பக்கம் திரும்பினாள், ரேஷ்மி.
“சொல்லும்மா?” என்று கனிவுடன் கேட்டார், சதாசிவ கனபாடிகள்.
“என் உட்-பீயை நீங்க சுவீகாரம் எடுத்து எங்க கல்யாணத்தை நடத்தி வைப்பீங்களா?”
“என் பொண்டாட்டி உயிரோட இருந்திருந்தா கண்டிப்பா செய்வேன். அவ காலமாயிட்டா. அதுனால, நான் மனைல ஒக்கார்ந்து சுபகாரியம் செய்யக்கூடாது. ஆனா ஒண்ணும் கெட்டுபோகலை,” என்றவர், சிரௌதிகள் பக்கம் திரும்பி, “சுப்புடு, உனக்கு அஞ்சு பொண்ணுங்கள்னு அலுத்துப்பியே, மாப்பிள்ளைப் பிள்ளையை சுவீகாரம் எடுத்துக்கோ. நான் சிரேஷ்டமாக் கல்யாணம் பண்ணி வைக்கறேன். உன் ஆத்துக்காரிகூட இங்கே வந்திருக்கா இல்லையா, அவ என் சொல்லுக்கு மதிப்பு வைச்சுக் கேட்பா! என்ன சொல்றே!” என்று சிரௌதிகளின் கையைக் கெஞ்சுவதுபோலப் பிடித்தார்.
“அண்ணா, உங்க சொல்லை நான் தட்டமாட்டேன். எல்லோரும் சம்மதிச்சா, எனக்கும் சம்மதம். போலீஸ்காரப் பிள்ளை சுவீகாரமாக் கெடச்சு, ஒரு மாட்டுப்பொண்ணும் வர நான் ரொம்பக் கொடுத்துவச்சிருக்கணும்,”
சிரௌதிகளின் கண்கள் கலங்கின, குரல் தழுதழுத்தது.
ரேஷ்மி மாப்பிள்ளை வீட்டாரிடம் பத்துப் பதினைந்து நிமிடங்கள் நிலைமையை விளக்கிக் கெஞ்சினாள். மாப்பிள்ளையின் பெற்றோர் தங்கள் மகனின் மகிழ்ச்சியே முக்கியம் என்று சம்மதித்தனர்.
“ஓய் சிரௌதி, இந்த மனுஷன் வேண்டாம்னு தலைதலையா அடிச்சிண்டேனே, கேட்டியா, கடைசிலே பிடிவாதமாக் கொண்டுவந்து என் பொழப்பையே கெடுத்திட்டியே! எனக்கு தட்சினையாவது மண்ணாவது? ஒண்ணும் கெடைக்கப் பொறதில்லை! அதுதான் நீ எனக்குச் செய்யற கைம்மாறா?” என்று பொருமினார், சிவராம சாஸ்திரி.
“டேய் சிவராமா!” சிங்கமாகக் கர்ஜித்தார், சதாசிவ கனபாடிகள்.
“அடேய்1 உன்னை மாதிரிக் கச்சடாப் பயல்னா என்னை எடைபோட்டே? இவாள்ட்ட நான் ஒரு பைசா வாங்கமாட்டேன்டா! உனக்கு இவா கொடுக்கறேன்னு சொன்ன பணத்தை வாங்கிண்டு நடையைக் கட்டுடா! சுப்புடுவுக்குப் பிள்ளையும், மாட்டுப்பொண்ணும் வரப்போறா. அந்த சந்தோஷத்தோட, நம்ப சாஸ்திர சம்பிரதாயப்படி நடக்கணும்னு ஆசைப்பட்ட பொண்கொழந்தை — அவளுக்காகச் சுவீகாரம் போகச் சம்மதிச்ச வெள்ளைக்காரப் போலீஸ்காரர் — அவரைப் பெத்தவா — இவாளோட சந்தோஷம் போறும்டா எனக்கு., சாஸ்திரம், சம்ப்பிரதாயம்னா என்னnனு தெரிஞ்சு, அதை அனுசரிக்க ஆசைப்படறவாளுக்குச் சரியானபடி சொல்லிக் கொடுத்து, லோகஷேமத்துக்காகத் தன்னலமில்லாமச் செஞ்சு, மத்தவா மனசைக் குளிரவைக்கறவன்தான்டா, பிராமணன்.
“வேத அத்யயனம் பண்றது; அதைச் சொல்லிக் கொடுக்கறது; ஆத்துல தனக்கு விதிச்ச ஹோமங்களையும், சாஸ்ததிர சம்ஸ்காரங்களைப் பண்றது — அப்படிப் பண்ணனும்னு விரும்பறவாளுக்குப் பண்ணிவைக்கறது. அவா முழுமனசோட கொடுக்கறது எதுவானாலும் அதை நிறைவோட ஏத்துண்டு, அவாளை ஆசீர்வாதம் பண்றது – தன் செலவுக்குப் போதுமானதை வச்சுண்டு, மத்ததை ஏழைஎளியவாளுக்குத் தானம் பண்றது – இந்த ஆறும்தாண்டா பிராமணணுக்கு விதிச்சது. நமக்கு எஜமானன் சந்தோஷமாக் கொடுக்கறதுதான் தட்சணை,. நாம கேட்டு வாங்கறதுக்குப் பேரு தட்சிணை இல்லேடா, கூலி. பணத்தாசை பிடிச்சு, கன்னத்துல அடிச்சு, பணக்காராகிட்ட லட்ச லட்சமா வாங்கி, காமாசோமானு காரியம் பண்ணறவன் பிராமணனே இல்லேடா — வழிப்பறித் திருடன்.
“போடா, போ, நீயும், உன் பிச்சைக்காரப் பொழப்பும்,” என்று இரைந்தவர், ரேஷ்மி பக்கம் திரும்பி, “இந்தாம்மா குழந்தே! உன் தோப்பனார் கிட்டச் சொல்லி, என்ன தரணுமோ, அதை இந்தப் பயலுக்குக் கொடுத்து அனுப்பி, வெளியே போகச் சொல்லு. கல்யாணக் காரியங்களை ஆரம்பிக்கணும்,” என்று தனக்கே உரிய கறாரான கனிவுடன் செல்லமாகக் கடிந்துகொண்டார், சதாசிவ கனபாடிகள்.