திரைக் கவிஞர்கள் – கவிஞர் கு மா பாலசுப்ரமணியம் – முனைவர் தென்காசி கணேசன்

பிளாஷ்பேக்: கு.மா.பாலசுப்பிரமணியம் நூற்றாண்டு இன்று | Dinamalar

குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடைய கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள், கு மா பா என்ற அழைக்கப்பட்டவர் . இவர் , நிலவுக் கவிஞர் என்றே அழைக்கப் படுகிறார். இவரின் பெரும்பான்மையான பாடல்கள நிலவைப் பொருள் கொண்டதாக இருக்கும்.

*அமுதை பொழியும் நிலவே…. – தங்கமலை ரகசியம்

*இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே – வீரபாண்டிய கட்டபொம்மன்

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு நானிலம் கொண்டாடுதே… -அம்பிகாபதி

*மலரும்… வான் நிலவும்… சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே… – மகாகவி காளிதாஸ், என பல நிலவுப் பாடல்கள்.

இது தவிர,

சிங்கார வேலனே தேவா,

வெற்றி வடிவேலனே சக்தி உமை பாலனே

மனம் கனிந்து அருள்வாய் வேல் முருகா

நெஞ்சினிலே நினைவு முகம்,

ஆடாத மனமும் ஆடுதே,

சித்திரம் பேசுதடி,

கனவெனும் மாயா லோகத்திலே ,

காணா இன்பம் கனிந்ததேனோ,

உன்னைக் கண் தேடுதே, என இவரின் சொற்கட்டு , அபார சுகம் அளிப்பவை.

மெல்லிசைப் பாடல்கள் மட்டுமின்றி துள்ளலான நடையை உடைய பாடல்களையும் எழுதி…தனது முத்திரையை பதித்தவர், கு மா பா.

*யாரடி நீ மோகினி – உத்தம புத்திரன்

*குங்குமப் பூவே.. கொஞ்சும் புறாவே – மரகதம்

*ஆடவாங்க அண்ணாத்தே… – சக்கரவர்த்தி திருமகள்

அஞ்சாத சிங்கம் என் காளை… – வீரபாண்டிய கட்டபொம்மன், எனப் பல.

தந்தையை 5 வயதில இழந்த இவருக்கு தாய் பாடிய தேவாரம் மற்றும் பக்திப்பாடலில் மனம் இசைந்தது. பள்ளிப் படிப்பை விட்டு, மளிகைக்கடை, விவசாயம் என வேலை பார்த்தபோது, தி ஜா, கு ப ரா கதைகளை படிக்க, தமிழ் மீது ஆசை வந்தது. அப்புறம் தனியாக இலக்கணம் கற்றுக்கொண்டார்.

இவரது முதற்பாடல் , ஓர் இரவு படத்தில் இடம் பெற்றது. அன்றைய நாயகர்களாக விளங்கிய, எம் கே டி, பி யூ சின்னப்பா, என் எஸ் கிருஷ்ணன், பாரதி தாசன், ஜி டி நாயுடு இவர்களைப் பேட்டி கண்டு எழுதியவர்.

ஜி.ராமநாதன்,

எஸ்.எம்.சுப்பையா நாயுடு,

சுதர்சனம்,

கே.வி.மஹாதேவன்,

வேதா

என்று நிறைய இசையமைப்பாளர்களிடம் பாடல் எழுதி இருந்தாலும்,

ஒரு கால கட்டத்தில் இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பாவின் ஆஸ்தான கவிஞராக இருந்திருக்கிறார்!

வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா போன்ற பல படங்களுக்கு எல்லா பாடல்களையும் எழுதியவர் இவர் தான்!

மஹாகவி காளிதாஸ்,

கொஞ்சும் சலங்கை , வேலைக்காரன், கோமதியின் காதலன் என பல படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதி இருந்தார்!

“சாந்தா… ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே… பாடு சாந்தா..பாடு!”

புகழ்பெற்ற இந்த வசனம் கு.மா.பா.வின் வரிகளே!

காருகுறிச்சி அருணாசலத்தோடு சேர்ந்து எஸ்.ஜானகி இசைத்த…”சிங்காரவேலனே தேவா…” பாடலை எழுதியதும் இவர் தான்! இந்தப் பாடல் அபார வெற்றி பெற்றதுடன், இசைத் தட்டு விற்பனையிலும சாதனை படைத்தது.

ஆரம்பத்தில் தமிழ் என்ற ஒன்றினால், அந்தக் கால கவிஞர்கள் போலவே இவரும் , திமுக மற்றும் கருணாநிதி உடன் இருந்தவர், அப்புறம், அவர்களிடமிருந்து விலகி, ம பொ சி யின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து, அதன் துணை பொதுச் செயலாளர என் அவருடன் இருந்தார், பின்னாட்களில, ம பொ சி, மேலவை தலைவர் ஆனபின், இவரும் மேலவை உறுப்பினர் என 6 வருடங்கள் இருந்தார்,

வேலோடு விளையாடும் முருகையா

என் வாழ்வோடு விளையாட வந்தனையா என்றும்,

வெற்றி வடி வேலனே

சக்தி உமை பாலனே

வீரம் விளைத்த குகனே என்றும்,

மனம் கனிந்து அருள் வேல்முருகா

புள்ளி மயில் ஏறும் மால் மருகா என்றும் திரையில் தெய்வீகப் பாடல்கள் எழுதினார்.

அதேபோல, காதல் பாடலில், என் மனம் நீ அறிவாய்

உந்தன் எண்ணமும் நான் அறிவேன்

இன்னமும் ஊமையைப் போல

மௌனம் ஏனடி தேன்மொழியே என்றும்

இக லோகமே இநிதாகமே

இசையோடு காவியம் போல – உள்ளம்

இணைந்தாடும் பேரன்பினாலே

என்றும் பாடி இருப்பார்.

கனவில் தோன்றி சிரித்துச் சிரித்து – நான்

காணும் இடம் எங்கும் இருக்கின்றாய்

கனியின் சுவையாய் இனித்து இனித்து – என்கையில் கிடைக்காமல் மறைகின்றாய் ,

என்றும்,

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியைப் பாராய்

புதுமலர் வீணே வாடி விடாமல்

புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராததேனோ

என்றும், இலக்கிய லட்சணங்களோடு பாடல்களை எழுதியவர் கு.மா.பா… தமிழின் இலக்கண விதி மாறாது எழுதினார்!

யாப்பிலக்கணம் முதல் அணியிலக்கணம் வரை அவரிடம் விளையாடின‌.

இவ்வளவுக்கும் அவர் படித்தது வெறும் 6ம் வகுப்பு மட்டுமே!

யாப்பு பிற்ழாது அவர் எழுதிய…மகாகவி காளிதாஸ் பட பாடல் இதோ! இது இன்னிசை வெண்பா என்பார்கள்.

சின்னையா என்றழைத்த செங்கனிவாய் மூடியதோ

உண்ணைய்யா என்றெடுத்து ஊட்டிய கை வாடியதோ

அன்னையாள் கொண்ட அவலமிதைக் காண்பதற்கோ

கண்ணை யான் பெற்றுள்ளேன் காளி?

இது நேரிசை வெண்பா

பூவில் இடம்கொள்ளப் போதாமல் என்னுடைய நாவில் இடம்கொண்ட நாயகியே – நோவில்

முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்து நடக்கத் தருவாய் நலம்!

இது தான் யாப்பிலக்கிய வெண்பா

அப்படத்தில் ‘கட்டளைக் கலித்துறையில்’ அழகாக பாடியிருபபார் கவிஞர் –

தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க,

குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க

பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்

பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே…

நீண்ட இடைவெளிக்கு பிறகு 1980 களின் தொடக்கத்தில் கு.மா.பா,

“தூரத்து இடிமுழக்கம்” என்ற படத்திற்கு, சலீல் சௌத்ரி இசையில மற்றும் கங்கை அமரன இசையில் கனவுகள் கற்பனைகள என்ற படத்திலும் பாடல் எழுதினார்.

பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா, இயல் இசை நாடக மன்ற செயலாளர, மேல் சபை உறுப்பிநர், சிலம்புசெல்வர் ம பொ சி அவர்களின் தமிழரசு கழக செயலாளர என பல பரிமாணங்களில் இயங்கியவர்.

காலத்தால் அழியாத பாடல்களை எழுதியதுடன்,

தமிழ் அறிந்த, இலக்கணம் அறிந்த, ஒவ்வொரு வரியிலும் யாப்பும் அணியும் காத்து நின்று, தங்கத் தமிழ் வரிகளை தரமாக தந்த கவிஞன், 1994ஆம் ஆண்டு மறைந்தார்.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.