மாபெரும் போருக்காக கிரேக்கப் படைகளும் டிரோஜன்களும் தயார் நிலையில் இருந்தனர். இரு படைகளும் தத்தம் எல்லையில் இருந்தனர். போர் எப்போது எப்படி வெடிக்கும் என்று அனைவரும் ஊசி முனையில் நிற்பதைப்போல் இருந்தனர்.
அது சமயம் டிராய் நாட்டு இளவரசன் பாரிஸ் தன் படையின் முன்னணிக்கு வந்தான். கிரேக்க நாட்டு அரசி ஹெலனைக் கடத்தி வந்து இந்தப் போருக்கே காரணமாக இருந்தவன் அவன். விருந்தினனாக கிரேக்க நாட்டிற்குச் சென்றபோது அந்த நாட்டு இளவரசி ஹெலனையே தன் அழகால் மயக்கி அவளைத் தன்னுடன் ஓடிவரச் செய்த மாபெரும் அழகன் அவன். வீரத்திலும் அவன் யாருக்கும் சளைத்தவனில்லை.
கடவுளரின் ஆசி பெற்ற அவனுக்குத் தன்னை யாரும் வெற்றி கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் இருந்தான். அந்த தைரியத்தில் தனக்கு முன்னால் அணிவகுத்திருக்கும் கிரேக்கப் படையைப் பார்த்து, “என்னுடன் வாழ்வா சாவா என்று மற்போர் புரியக் கிரேக்கத்தில் எந்த வீரன் இருந்தாலும் அவன் முன்வரட்டும்” என்று அறைகூவல் விடுத்தான்.
கிரேக்கப் படையின் முன்னணியில் இருந்த மெனிலியஸ் இதைக் கேட்டான். அவன் மனைவியாய் இருந்தவள்தான் ஹெலன். அவளை மயக்கிக் கடத்திச் சென்ற பாரிஸின் அங்கங்களைப் பிய்த்து எறியும் வெறியில் இருந்த அவன் சிங்கம் போலக் கர்ஜித்துக் கொண்டு முன்னால் வந்தான்.
“இந்தத் தருணத்திற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். அழகன் என்ற திமிரில் என மனைவியை மயக்கி இழுத்துச் சென்ற உன் உடம்பின் ஒவ்வொரு சதையையும் அறுத்து எறிந்து உன்னை நாய்க்கும் நரிக்கும் விருந்து படைக்க இதோ வந்துவிட்டேன்” என்ற வெறிக் கூச்சலுடன் மெனிலியஸ் முன்னே வந்தான்.
அவன் தோற்றத்தையும் வெறியையும் பார்த்த பாரிஸ் சற்று திகைத்துவிட்டான். உடனே தன் படைக்குள் புகுந்து மறைந்து கொண்டான்.
டிராய் நாட்டு மூத்த இளவரசனும் பாரிஸின் அண்ணனும் உலகத்தில் உள்ள மிகச் சிறந்த வீரர்களில் ஒருவனுமான ஹெக்டர் தன் தம்பியின் கோழைத்தனத்தைப் பார்த்துக் கடும் கோபம் கொண்டு அவனைச் சாடினான்.
“ அண்ணா! நான் மெனிலியசுக்குப் பயந்துகொண்டு திரும்பவில்லை. இப்போதும் நான் அவனுடன் மற்போர் புரியத் தயாராகத் தான் இருக்கிறேன். அதற்குத் தேவையான வீரமும் கடவுளரின் ஆசியும் என்னிடம் நிறைய இருக்கின்றன. அந்தப் போருக்கு ஏற்பாடு செய்யவே திரும்பினேன். ஹெலன் அவன் மனைவியாய் இருந்தவள். இப்போது என்னை விரும்பி என்னுடன் வந்தவள். ஹெலனைப் பணயப் பொருளாக வைக்க நான் தயார். என்னுடன் மற்போரில் மெனிலியஸ் வெற்றி பெற்றால் அவளை அவன் அழைத்துச் செல்லட்டும். நான் வெற்றி பெற்றால் கிரேக்கப்படை போரில் ஈடுபடாமல் தங்கள் நாட்டை நோக்கிப் பயணப்பட வேண்டும். என்னால் ஏற்பட்டு இந்த விளைவிற்காக இரு நாட்டு வீரர்களும் ஏன் மடியவேண்டும்? இது பற்றிய உறுதிமொழியை இரு நாட்டுப் படைகளும் ஏற்கச் செய்ய வேண்டியது உன் பொறுப்பு “ என்று மொழிந்தான்.
மாவீரன் ஹெக்டரும் தம்பியின் வீரத்தையும் தீரத்தையும் மெச்சி இரு படைகளுக்கும் நடுவே வந்து நின்றான். அவனது தீர்க்கமான உருவமும் கண்களில் தெறிக்கும் ஒளியும் அனைவரையும் அமைதியாக இருக்கச் செய்தது. அவன் கணீரென்ற குரலில் பேசினான்.
“ கிரேக்க வீரர்களே ! டிராஜன் வீரர்களே ! நடந்த ஒரு சரித்திர நிகழ்ச்சிக்கு இருநாட்டு வீரர்களும் ஏன் மடியவேண்டும்? பாரிஸ் சற்று முன் கூறியது போல பாரிஸ் மெனிலியஸ் இருவரும் மற்போர் புரியட்டும். வென்றவர் ஹெலனை அடையட்டும். மற்றவர் தங்கள் படைகளை அழைத்துக் கொண்டு தங்கள் நாடு திரும்பட்டும். இதற்கு உங்கள் பதில் என்ன? “ என்று வினவினான்.
மெனிலியஸ் முன் வந்து , எனக்கும் இது சம்மதம்தான். ஆனால் உங்கள் உறுதிமொழியை என்னால் ஏற்க முடியாது. உங்கள் தந்தை டிராய் நாட்டு மன்னர் பிரியம் இங்கு வந்து ஜீயஸ் கடவுள் மீது உறுதிமொழி எடுக்கவேண்டும். அதற்குப் பின் மற்போர் துவங்கும் ´என்றான்.
இருநாட்டுப் படைகளும் அமைதி காத்தனர்.
அருகே டிராய் நாட்டு எல்லைக்கோட்டையின் உச்சியிலிருந்து மன்னன் பிரியம், ஹெலன் மற்ற அரச குமாரிகள் அனைவரும் இரு படைகளும் தங்கள் ஆயுதங்களை ஓரமாக வைத்து விட்டு மற்போருக்குத் தயார் செய்வதைப் பார்த்தார்கள்.
வயதான மன்னன் பிரியம் கண்களில் சோகம் கவ்விக்கொண்டிருந்தது.
“மகளே ஹெலன்! என் அருகில் வா! இந்தப் போருக்குக் காரணம் நீ என்று நான் என்றைக்கும் கருதியதில்லை. இது கடவுளர்களின் சூழ்ச்சி! அதனால்தான் அன்புடன் இருந்த கிரேக்கர்களும் டிராய் நாட்டு வீரர்களும் இன்று கொலைவெறியுடன் இருக்கிறார்கள். உன் முன்னாள் கணவன் மெனிலியஸும் இந்நாள் கணவன் பாரிஸும் போரிடப் போகிறார்கள். வெற்றி பெற்றவன் உன்னை அழைத்துச் செல்வான்.”
“தந்தையை விட மதிப்பு வாய்ந்தவரே! நான் என் கணவரையும் குழந்தையையும் மற்ற உறவினர்களையும் விட்டு உங்கள் மகனோடு இங்குவந்து இருக்கும் என் நிலை எனக்கே வெறுப்பை அளிக்கிறது . நான் இறந்து போயிருந்தால் கூட நன்றாக இருக்கும். அதுவும் முடியாமல் நான் இப்படிக் கண்ணீரில் காலத்தைக் கழிக்கிறேன்.”
“ வருந்தாதே மகளே! கடவுளரின் பகடைக் காய்கள் நாம். கிரேக்கப் படையின் முன்னணியில் போர்க் கடவுளர் போல இருக்கும் அந்த மாவீரர்கள் யாவர்? “ என்று வினவினான்.
ஹெலன் தன் கணவரின் சகோதரன் அகமெம்னன், மற்றும் ஓடிசியஸ் அஜாக்ஸ் ஆகிய தளபதிகளின் பராக்கிரமங்களையும் கூறினாள்.
அதற்குப் பின் மன்னன் பிரியம் அங்குச் சென்று ஜீயஸ் கடவுளின் பெயரால் உறுதிமொழி அளித்தான். “என் பிரியமான மகன் பாரிஸ் கலந்து கொள்ளும் இந்த வாழ்வா சாவா போரைக் காணும் சக்தி இந்தக் கிழவனுக்கு இல்லை “ என்று கூறி மன்னன் பிரியம் இலியம் நகரை நோக்கிச் சென்றான்.
பாரிஸ் மெனிலியஸ் இருவரும் பூரணக் கவசத்துடன் மற்போருக்குத் தயாரானார்கள். முதலில் ஈட்டியால் இருவரும் தாக்கிக் கொண்டார்கள். பின்னர் வாட்களால் போரிட்டார்கள். தன்னுடைய ஒவ்வொரு தாக்குதலிலிருந்து பாரிஸ் தப்பிப்பதைப் பார்த்த மெனிலியஸுக்கு கடவுளரின் கடவுள் ஜீயஸ் தனக்கு எதிராக இருக்கிறாரோ என்ற ஐயம் வந்தது. தன் முழு பலத்தையும் பிரயோகித்து பாரிஸின் முகத்தைத் தன் கைகளால் பற்றி மூர்க்கமாக அவனை இழுக்க ஆரம்பித்தான் மெனிலியஸ். பாரிஸ் இனித் தப்பிக்கவே முடியாது . கிரேக்க டிராய் போர் முடிவிற்கு வந்தது என்று அனைவரும் கருதினார்கள்.
அப்போது நடந்தது ஒரு மாபெரும் அதிசயம்.
ஜீயசின் மகள் டிராய் பக்கம் இருப்பவள். பாரிஸைக் காப்பாற்ற ஒரு பெரிய பனிப் படலத்தை ஏற்படுத்தி அவனை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஹெலனின் படுக்கை அறைக் கட்டிலில் கிடத்தினாள்!
“போரில் வெற்றி அடையாமல் இப்படித் தப்பி வந்த நீயெல்லாம் ஒரு வீரனா?“ என்ற ஹெலனின் கோபக் கேள்விக்கு பாரிஸ் அமைதியாகப் பதில் சொன்னான்.
“அவனுடைய தேவதை என்னைக் கொல்லத் தூண்டியது. என் தேவதை என்னைக் காப்பாற்றியது! இதில் ஒரு தவறும் இல்லை. அடுத்த முறை நான் அவனைக் கொல்லாமல் விடமாட்டேன். இப்போது நாம் இருவரும் சல்லாபிக்கலாம்” என்று கூறி ஹெலனை இறுக்கத் தழுவினான் பாரிஸ்
(தொடரும்)