அவர்களுக்குத் தெரியுமா?
கற்பகத்திற்கு வயது இருபத்தி நான்கு. திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகின்றன. என்னைப் பார்க்க வந்தபோது இரண்டு மாத கர்ப்பிணி. நரம்பியல் மருத்துவரிடம் கர்ப்பிணிக்கு என்ன வேலை என்பவர்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்!
திருமணத்திற்கு முன்னமேயே கற்பகத்திற்கு வலிப்பு நோய், ஒரு வருடமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்துகள் உட்கொள்ளும்போது, கர்ப்பமானால், அது பிறக்கும் குழந்தையைப் பாதிக்குமா? இப்போது என்ன செய்ய வேண்டும்? கேள்விகளுடன் என் எதிரில் அமர்ந்திருக்கும் கற்பகத்தின் தாயிடம் நான் கேட்ட கேள்வி:
“கற்பகம் மருந்துகள் எடுத்துக்கொள்வது ‘அவர்களுக்கு’த் தெரியுமா?”
சில வினாடிகள் மெளனத்திற்குப் பிறகு, “தெரியாது. நாங்க சொல்லவில்லை”
“ஏன் சொல்லவில்லை? இதையே அவர்கள் செய்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?” இது நான்.
“………………”
“நிச்சயமாக நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். தேவையில்லாமல் ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்”
“உண்மையச் சொன்னா, யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டாங்கன்னு பயம் டாக்டர்”. குரலில் குற்ற உணர்வோடு, ‘வேறென்ன செய்வது?’ என்ற இயலாமை.
“அப்படி இல்லம்மா. விபரம் அறிந்தவர்கள், நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். தினந்தோறும் என்ன ஆகுமோ என்று பயத்துடன் வாழ முடியுமா? தெரியாமல் எத்தனை நாட்கள் மாத்திரைகளை முழுங்க முடியும்?”
“இப்பொ என்ன செய்யறது டாக்டர்? மாத்திரைகளை நிறுத்தி விடலாமா?”
“இரண்டு மாதங்கள் மாத்திரைகள் எடுத்துக்கொண்டாகி விட்டது. குழந்தையை பாதித்திருக்குமா என்று இப்போது சொல்வது கொஞ்சம் கடினம். மருந்துகளை நிறுத்தினால், வலிப்பு வரும் அபாயமும், அதனால் கருச்சிதைவு மற்றும் தாய்க்கு ஏதேனும் சிக்கல்கள் வரும் வாய்ப்புகளும் உள்ளன”.
“இந்த இரண்டு மாதத்தில் மருந்துகளினால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா?”
“நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஸ்கான் – சிலவகை சிறப்பு ஸ்கான்கள் – மற்றும் கருப்பையிலிருக்கும் நீர்ப் பரிசோதனை எல்லாம் செய்து பார்க்கலாம். ஓரளவுக்கு அவை உதவலாம். நிச்சயமாக உடனே சொல்ல முடியாது. மாதாமாதம் மிகவும் கவனமாக ஸ்கான் செய்து பார்த்தபடி இருப்பது அவசியம்”.
கற்பகத்திற்கு எப்படி உதவலாம் என்பதற்கு முன்……
மூன்று வருடங்கள் வலிப்புகள் இல்லையென்றால், வலிப்பு நோய் மருந்துகளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, ஆறு மாத இடைவெளியில் முழுதுமாக நிறுத்தி விடலாம் என்பது பொதுவான மருத்துவ விதி. சிலருக்குத் திரும்பவும் வலிப்புகள் வரும் வாய்ப்புகள் உண்டு, என்றாலும் அது ஒரு அரிதான நிகழ்வே. திருமண வயதில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படும். இருந்தாலும், திருமணத்தைத் தள்ளிப் போடுவது நல்லது. அதற்குள் நல்ல வரன் கிடைக்கிறது என்றால், பையன் வீட்டில் (இன்னும் நிச்சயமாகாததால், ‘மணமகன்’ என்ற சொல் தவிர்க்கப்படுகிறது!) பெண்ணைப் பற்றிய உண்மையை (இந்த விதி பையனுக்கு வலிப்புகள் இருந்தாலும் பொருந்தும் – பெண் ஆர்வலர்கள் ஆசுவாசம் கொள்க!) கூறிவிடுதல் நலம். பின்னால் வரக்கூடிய மருத்துவம் சாராத பிரச்சனைகளை ஓரளவுக்கு தவிர்க்க இது உதவும்!
வலிப்பை மறைத்துத் திருமணம் செய்வது, பல சமயங்களில், விவாக ரத்து வரை சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. Hindu Marriage Act 1955, 1999 ல் அரசால் திருத்தி அமைக்கப்பட்டு, வலிப்பு நோயை விவாகரத்துக்குக் காரணமாகக் காட்டக்கூடாது என்று அறிவித்தது. சட்டம் ஒருபுறம் இருந்தாலும், வலிப்பு நோய் உள்ளவர்களின் வாழ்க்கை மிகவும் அனுதாபத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அணுகப்படவேண்டிய ஒன்று. திருமணத்திற்கோ, குழந்தை பிறப்பதற்கோ தடை ஏதும் இல்லை என்றாலும், வலிப்பு நோய்க்கு சமூகத்தில் இருக்கும் களங்கம் (Social stigma) இன்னும் முற்றிலும் மாறவில்லை என்பது பெரிய சோகம்.
உறவில் திருமணம் செய்துகொள்ளலாமா? பரம்பரையில் வரக்கூடிய வாய்ப்புகள் அரிதே ஆனாலும், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனாலும் திருமணம் சார்ந்த மன வேற்றுமைகளையும், வெறுப்புகளையும் நிச்சயம் இதனால் குறைக்க முடியும்.
என்ன செய்யலாம்?
முதலில் கற்பகத்தின் கணவர் மற்றும் அவர் பெற்றோரிடம் உண்மையைச் சொல்லி, அவர்களுக்குப் புரிய வைப்பது – வேண்டுமானால் மருத்துவர் பிரச்சனைகளை அவர்களிடம் விளக்கலாம். கற்பகத்தின் மன உளைச்சலையும், குற்ற உணர்வையும் இது வெகுவாகக் குறைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், குழந்தையை அதிகம் பாதிக்காத ஒரு மருந்தாகத் தேர்வு செய்து கொடுப்பது நல்லது. இதனை ஒரு மருத்துவக் கண்காணிப்புடன் – மருத்துவ மனையில் சேர்த்து -செய்ய வேண்டும். மருந்து தேர்வும், மருந்தின் அளவும் முக்கியமானவை. தேவையானால், ரத்தத்தில், மருந்தின் அளவை அவ்வப்போது சரி பார்த்து, தேவைக்கேற்ப ‘டோஸ் அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்யலாம்.
எந்த நிலையிலும், மருந்துகளைக் குறைக்கவோ, நிறுத்தவோ கூடாது. வலிப்புகள், மருந்துகளை விட குழந்தைக்கும், தாய்க்கும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.
குழந்தையின் வளர்ச்சி, மற்றும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பிரசவ காலம் முழுவதும் ஸ்கான், மற்றும் சில ஸ்பெஷல் பரிசோதனைகள் மூலம் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு, வைட்டமின்கள், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள், தேவையான அளவு நல்ல தூக்கம், கஃபீன், சிகரெட், ஆல்கஹால் தவிர்த்தல் (நம்ம ஊருக்கும் இது பொருந்தும்!) ஆகியவை முக்கியமானவை.
பொதுவாக, வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் எல்லோரையும்போல ‘நார்மல் டெலிவரி’ அல்லது ‘சிசேரியன் டெலிவரி’ மூலம் குழந்தை பிறக்கும். நூற்றுக்கு 95 – 99 சதவிகிதம் குழந்தைகள் பெரிய குறைகள் ஏதுமின்றி பிறக்கின்ற வாய்ப்புகள் உள்ளன.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன் மகளுக்கு வலிப்பு நோய் இருந்து, மருந்துகள் கொடுத்த விபரத்தைச் சொல்லாமல் திருமணம் நிச்சயித்தார். ஆனால், பெண், தன் வருங்காலக் கணவனிடம், உண்மையைச் சொல்ல, அவர் அவளது நேர்மையைப் பாராட்டி, ‘இப்போதும் சொல்ல வேண்டாம். நாம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஆறுதல் கூறி திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தையுடன் நலமாக வாழ்க்கை நடத்திவருகிறார்.
வலிப்பு நோயால் வருகின்ற பிரச்சனைகளை விட, அதை மறைத்துத் திருமணம் செய்வதால் வரும் குழப்பங்களும், மன உளைச்சல்களும் அதிகம் என்பதால், மிகுந்த கவனமுடன் இந்த சிக்கலைக் கையாளவேண்டும்.
ம்.. சொல்ல மறந்து விட்டேனே, கற்பகத்திற்கு அழகான பெண்குழந்தை, சுகப் பிரசவம் – தாயும் சேயும் நலம்!
டாக்டரின் ஆலோசனையும், கருத்தும் தெளிவாக வாசகரைச் சேரும் வண்ணம் அமைந்த மிகவும் பயனுள்ள கட்டுரை.
LikeLike
மிக்க நன்றி சார்!
LikeLike
வழக்கமாக எழுதி வந்த வகைப்பட்டது அல்லாது தனது மருத்துவத் துறை சார்ந்த ஒரு முக்கிய செய்தியை, நேரடி உண்மை எடுத்துக்காட்டோடு எடுத்துச் சொல்லி இருப்பது அருமை. மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் டாக்டர்.
நன்றியும் பாராட்டும்
எஸ் வி வேணுகோபாலன்
LikeLike
மிக்க நன்றி எஸ் வி வி!
LikeLike