ஜப்பானிய மொழி சிறுகதை
மூலம் : யாசுநாரி காவபட்டா[Yasunari Kawabata ] – நோபல் பரிசு பெற்றவர்
ஆங்கிலம் :எட்வர்ட் ஜி.ஸ்டெயின்ஸ்டிகர் [Edward G. Seidensticker ]
தமிழில் :தி.இரா.மீனா
அன்றிரவு வீசிய பலமான காற்றில் மாதுள மரத்தின் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விட்டன.
அடிப்பகுதியைச் சுற்றி வட்டமாக இலைகள் விழுந்திருந்தன.
மரத்தின் நிர்வாண நிலையையும், வட்டம் குறையின்றி முழுமையாக இருந்ததையும் காலையில் பார்த்த கிமிகோ திடுக்கிட்டுப் போனதோடு, ஆச்சர்யமும் அடைந்தாள். காற்று அதைக் கலைத்திருக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக் கலாம்..
மரத்தில் ஒரு நேர்த்தியான மாதுளங்கனி மட்டுமிருந்தது.
“இங்கே வந்து பாருங்களேன் ”அம்மாவை அழைத்தாள்
“நான் மறந்து போய்விட்டேன்”என்று சொன்னபடி அம்மா வந்து மரத்தைப் பார்ததுவிட்டுத் திரும்பவும் சமையலறைக்குள் போய்விட்டாள்.
அது அவர்களின் தனிமையை கிமிகோ நினைத்துப் பார்க்கத் தூண்டியது. வராந்தாவின் ஓரத்திலிருந்த மாதுளையும் மறக்கப்பட்டது போல தனியாக நின்றது..
இரண்டு வாரங்களுக்கோ அல்லது அதற்கு முன்போ அவர்களின் வீட்டிற்கு அவளுடைய ஏழுவயது மருமகன் வந்திருந்தான். வரும்போதே அந்த மாதுளம் பழங்களைப் பார்த்தவன் உடனே மரத்தின் மீது ஏறிவிட்டான். வாழ்வின் உயிர்த்துடிப்பை அத்தருணத்தில் கிமிகோ உணர்ந்தாள்.
“மேலே மிகப் பெரியபழம் ஒன்றிருக்கிறது” அவள் வராந்தாவிலிருந்தபடி சொன்னாள்.
“ஆனால் நான் அதைப் பறிக்கப்போனால் என்னால் கீழே இறங்கமுடியாது”
அது உண்மைதான்.இரண்டு கைகளிலும் மாதுளம் பழங்களோடு இறங்குவது எளிதல்ல. அவன் கெட்டிக்காரன் .கிமிகோ புன்னகை செய்தாள்.
அவன் அங்கு வரும்வரை வீட்டில் எல்லோரும் மாதுளையை மறந்திருந்தனர். இப்போது வரைக்கும் அதை அவர்கள் மீண்டும் மறந்து விட்டிருந்தனர்.
அதற்குப் பிறகு அந்தப்பழம் இலைகளினூடே மறைந்திருந்தது.இப்போது அது வானத்திற்கு எதிராக மறைவின்றி தெளிவாக நின்றது.
அடியில் இலைகளின் வட்டமும் பழமும் உறுதியாக இருந்தன.கீழே விழும் படியாக கிமிகோ அதை மூங்கில் கம்பால் தட்டினாள்.
அது மிகவும் கனிந்திருந்ததால் தானாகவே பிளந்து அதன்முத்துக்கள் வெளி வந்தன.அதை அவள் வராந்தாவில் வைத்தபோது சூரியஒளியில் அவை மினுமினுக்க .சூரியன் அவற்றினூடே செல்வது போலிருந்தது.
ஏனோ அவள் வருத்தமாக உணர்ந்தாள்.
பத்துமணியளவில் அவள் மாடியில் தைத்துக்கொண்டிருந்த போது கிகிசியின் குரல் கேட்டது.கதவு திறந்திருந்த போதும் அவன் தோட்டத்தைச் சுற்றிவந்து கொண்டிருந்தான். அவன் குரலில் அவசரம் தெரிந்தது.
“கிமிகோ ,கிமிகோ ! கிகிச்சி வந்திருக்கிறான்”அவள் அம்மா கூப்பிட்டுச் சொன்னாள்.
கிமிகோ ஊசியை நூலிலிருந்து பிரித்து அதை டப்பாவில் வைத்தாள்.
“நீ புறப்படுவதற்கு முன்னால் எப்படியும் உன்னைப் பார்த்து விடவேண்டும் என்று கிமிகோ சொல்லிக் கொண்டேயிருந்தாள். அழைப்பு வராமல் உன்னை எப்படி வந்து பார்ப்பது என்று தெரியவில்லை.நீயும் வரவில்லை.இன்று நீ வந்தது நல்லதாகப் போயிற்று” கிக்கிசி போருக்குப் போகிறான்.
அவனை மதிய உணவு சாப்பிட்டுப் போகும்படி அம்மா சொன்னாள்.ஆனால் அவன் அவசரமாகப் போகவேண்டுமென்றான்.
“சரி.ஒரு மாதுளம்பழமாவது சாப்பிட்டு விட்டுப்போ. இது வீட்டில் பழுத்தது.” சொல்லிவிட்டு அவள் கிமிகோவை மீண்டும் கூப்பிட்டாள்.
அவள் கீழே இறங்கி வந்தால் செய்வதற்கு நிறைய இருப்பது போல அவன் கண்களால் அவளை வரவேற்றான். அவள் படியிலேயே நின்றாள்.
அவன் கண்களிலிருந்து ஒரு வாத்சல்யம் வெளிப்படுவது போலிருக்க, அவன் கையிலிருந்து மாதுளம்பழம் விழுந்தது.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.
தான் சிரிக்கிறோம் என்று உணர்ந்த நேரத்தில் அவள் முகம் செம்மையானது. கிகிச்சி வராந்தாவிலிருந்து எழுந்தான்.
’கவனமாகப் பார்த்துக்கொள் ,கிமிகோ”
’நீங்களும்தான்.”
அதற்குள் அவன் திரும்பிப் பார்த்து விடை பெற்றுக் கொண்டான்.
அவன் புறப்பட்டுச் சென்ற பிறகு கிமிகோ தோட்டத்தின் கதவைப் பார்த்தாள்.
“அப்படி ஓர் அவசரம் அவனுக்கு.அது மிக இனிய மாதுளம்பழம் ”என்று அம்மா சொன்னாள்.
அவன் அதை வராந்தாவில் வைத்துவிட்டுப் போய்விட்டான்.
அவன் மாதுளையைப் இரண்டாகப் பிளக்க முயன்றபோது அவன் கண்ணில் வெளிப்பட்ட வாத்சல்யம் அதை கீழே விழவைத்து விட்டது.அதை இரண்டாக அவன் பிளக்கவில்லை.அதன் முத்துக்கள் வெளியே வந்துவிட்டன..
அவளுடைய அம்மா அதைச் சமையலறைக்கு எடுத்துக் கொண்டு போய் கழுவிவிட்டு கிமிகோவிடம் கொடுத்தாள்.
கிமிகோ சிறிது தயங்கி, பிறகு மீண்டும் செம்மையாகி குழப்பத்தோடு அதை வாங்கிக் கொண்டாள்.
கிகிச்சி ஓரப்பகுதியிலிருந்து சில முத்துக்களை எடுத்திருக்க வேண்டும்.
அம்மா அவளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது அதைச் சாப்பிட மறுப்பது கிமிகோவுக்கு விசித்திரமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதைக் கடித்தாள்.துவர்ப்பு வாய்முழுவதும் பரவியது. ஒரு விதவருத்தம் ஏற்பட்டு ஆழமாக அது ஊடுருவது போல அவள் உணர்ந்தாள்.
ஆர்வமின்றி அம்மா எழுந்தாள்
அவள் கண்ணாடி அருகே போய் உட்காந்தாள்.”என் தலைமுடியைப் பார்த் தாயா?இந்த பரட்டைத் தலையோடு நான் கிகிச்சியை வழி அனுப்பியிருக் கிறேன்”
சீப்பின் சத்தத்தை கிமிகோவால் கேட்க முடிந்தது.
“உன் அப்பா இறந்தபிறகு எனக்கு தலை சீவுவதற்கு பயமாகிவிட்டது.தலை சீவும் போதுநான் என்ன செய்கிறேன் என்பதையே மறந்து விடுவேன் .எனக்கு நினைவு வரும்போது நான் சீவி முடிப்பதற்காக உன் அப்பா காத்திருப்பது போன்றிருக்கும்.”என்று அம்மா மென்மையாகச் சொன்னாள்.
அப்பா தன் தட்டில் மிச்சம் வைத்திருப்பதைச் சாப்பிடும் அம்மாவின் பழக்கம் கிமிகோவிற்கு ஞாபகம் வந்த்து.
அந்த உணர்வுகள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்த அவளுக்கு அழவேண் டும் போலிருந்தது.
அந்த மாதுளம் பழத்தை தூக்கி எறிய மனமில்லாததால் அம்மா அவளுக்கு அதைக் கொடுத்திருக்க வேண்டும்.ஆமாம்.அதுதான்.எதையும் தூக்கி எறியக் கூடாது என்ற பழக்கம் வரக்காரணம்.
அம்மா முன்பு வெட்கப்பட்ட கிமிகோவிற்கு அந்தரங்கமாக இருந்த போது/ தனியாக இருந்த போது மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவன் திரும்பிவர எவ்வளவு காலமானாலும் அவள் காத்திருப்பாள் என்பது தான் கிகிச்சிக்கு அவள் உணர்த்தியிருக்கிற பிரியாவிடையாக இருந்திருக் கும் என்று நினைத்தாள்.
அம்மாவை நோக்கினாள். கதவு வழியாக அவள் உட்கார்ந்திருக்கும் கண்ணாடி அருகே சூரியன் படர்ந்திருந்தான்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட ஏனோ அவளுக்கு பயமாக இருந்தது.
—————————–
மொழிபெயர்ப்பு : ஜப்பானிய மொழி சிறுகதைகள்:
மூலம் : யாசுநாரி காவபட்டா [ Yasunari Kawabata ]
ஆங்கிலம் : எட்வர்ட் ஜி.ஸ்டெயின்ஸ்டிகர் [Edward G. Seidensticker ]
தமிழில் : தி.இரா.மீனா
அருமையான கதை. அழகான மொழியாக்கம்.👏
LikeLike