ராஜேந்திரன் – கங்கை கொண்டான்
இராஜேந்திரன் அன்று கோதாவரிக்கரையில் முகாமிட்டிருந்தான்.
சாளுக்கியர்களை வென்ற சோழத்தளபதி விக்கிரமனிடம், தன் கனவைப் பற்றிப் பேசினான்.
“விக்கிரமா! தஞ்சையை என் முன்னோர்கள் தலைநகராக்கினர். என் தந்தை, அதில் வானளாவிய பெருவுடையார் கோவிலைக் கட்டி புனிதமாக்கினார். இந்த தஞ்சையை நாம் ஆலய நகராகவே வைப்பது ஒன்றே நாம் அந்தத் திருக்கோவிலுக்குச் செய்யும் வழிபாடு ஆகும். அரசியல், மற்றும் ராணுவத் தலைநகர் ஒன்றைப் புதிதாக நாம் படைப்போம். அந்தத் திருநகரை, சோழபுரத்தை, புனித கங்கைநீரால் குளிப்பாட்டி, அங்கும் நாம் ஒரு பெரும் சிவன் ஆலயத்தை நிறுவுவோம். நீ, நமது சிறந்த சோழப்படையைக் கொண்டு, வடதிசையில், வேந்தர்களை வென்று அவர்கள் செல்வத்தைக் கொண்டு வருவாய்! கங்கை நதியிலிருந்து, புனித வெள்ளத்தை தங்கக்குடங்களில் கொணர்வாய்! அந்த புனித கங்கை வெள்ளம், நமது புதிய சோழபுரத்தைப் புனிதமாக்கட்டும். அது, கங்கை கொண்ட சோழபுரமாகட்டும். நீ இந்த வெற்றிகளுடன் திரும்ப வரும் நாளில், இதே கோதாவரிக்கரையில், உன்னை வரவேற்க நானே காத்திருப்பேன்!” என்றான்.
விக்கிரமன் தன் குரல் தழுதழுக்க “சக்கரவர்த்தி! உங்கள் எண்ணம் ஈடேறும் வண்ணம் இந்தச் செயலை செய்து முடிப்பேன். கங்கை மணாளனின் ஆசியுடன் கங்கை வெள்ளத்துடன் வெற்றியோடு வருவேன்” என்றான்.
விக்கிரமன் மேலும், “மன்னர் மன்னா! வட நாட்டில் ஒரு பெரிய அராபியக் கொள்ளைக்காரன் உலவுகிறான். வடமேற்கு பகுதியில், அவன் சில கோவில்களைக் கொள்ளையிட்டு வருகிறான். அவன் பெயர் முகம்மது. கஜினி என்ற நாட்டிலிருந்து வந்தவன். அது பற்றித் தாங்கள் அறியாததில்லை” என்றான்.
ராஜேந்திரன் சொன்னான்: ”விக்கிரமா! தெரியாததல்ல! நமது படை சற்றுக் கிழக்கே, கலிங்கம், மகதம், வங்கம் இப்பகுதிகளையும், கங்கைப் பகுதியையும் வென்று திரும்புவது மட்டுமே நமது திட்டம். முஹம்மது பல முறை மேற்குஇந்தியாவில் கொள்ளைத்தாக்குதல் செய்கிறான். நமது படையெடுப்பின் போது, அவன் கிழக்கு நோக்கி வருவானேயானால், அவனை முழுவதும் அழித்துவிடு. அவன் கொள்ளைக்காரன். அவனைத் தேடி நாம் போனால், நாம் காந்தாரப் பகுதிக்குப் போகவேண்டியிருக்கும். அல்லது அரபுநாட்டுக்கே போகவேண்டியிருக்கும். அது நமது கங்கை படையெடுப்புக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடும். மேலும், முகம்மதுவுக்கும் நமது பராக்கிரமும், நமது வட இந்தியப்படையெடுப்பும் தெரிந்தேயிருக்கும். ஆகவே, நமது வட நாட்டுத் திக்விஜயத்து சமயம், அவன் அரபு நாடு ஓடவும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை நாம் படையெடுக்கும் சமயம் அவன் மேற்குஇந்தியாவைத் தாக்க வந்தால்- அவனை ‘மோதி மிதித்து விடு. அவன் முகத்தில் உமிழ்ந்து விடு’” என்றான்.
“தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்ற விக்கிரமன், மறுநாள் காலை ராஜேந்திரனிடம் விடைபெற்றுக்கொண்டு பெரும்படையுடன் புறப்பட்டான்.
சக்கரக் கோட்டப் போர்:
இராமாயணக் காலத்தில் வந்த ‘சித்திரக்கூடம்’ தான் இந்த சக்கரக் கோட்டம். இந்நாள் விசாகப்பட்டினத்திற்கு வடமேற்கே கலிங்கத்திலிருந்தது இந்த இடம். அதைப் போரில் வென்றான் விக்கிரமன். ஒட்டர தேசமும் (இன்றைய ஒடிஸ்ஸா), கோசலமும் கைப்பற்றப்பட்டன. கோசலமென்பது, கங்கைக்குத் தெற்கில் ஒட்டர நாட்டில் இருந்த பகுதி. அங்கு ஆண்ட மன்னன் இந்திரரதன். அவனை விக்கிரமன் தோற்கடித்தான்.
வங்க நாட்டில், தண்டபுத்தி (இந்நாள் மிதுனபுரி) என்ற நாடு. அது கங்கையாற்றுக்கு வடக்கே இருந்தது. அதைத் தர்மபாலன் ஆண்டு வந்தான். அவன், பலம் பொருந்தியவன். விக்கிரமன் தனது பெரும் யானைப்படையை, அணிவகுத்துச் சென்றான். கங்கை நதியைக் கடக்க – யானைகளாலேயே ஒரு பாலம் கட்டி , கங்கைநதியைக் கடந்தான் என்று கல்வெட்டுகள் சொல்கிறது. தர்மபாலன் தோற்றான். பிறகு கங்கைக்குத் தெற்குப் பகுதியில், தக்கணலாடம் என்ற பகுதியின் மன்னன் இரணசூரன் விக்கிரமனை எதிர்த்தான். அவனும் சோழரிடம் தோற்று ஓடினான்.
வங்கதேசத்தில், உத்திரலாடம் என்ற ராஜ்யம் இருந்தது. மகிபாலன் அந்நாட்டுப் பேரரசன். இதுவரை விக்கிரமனிடம் தோற்றவர்கள் சிற்றரசர்கள். மகிபாலனின் சேனை பெரிது. மகிபாலனை விக்கிரமன் வென்றதை செப்பேடுகள் சிலாகித்துச் சொல்கிறது.
வெற்றி பெற்ற மன்னர்களிடமிருந்து கப்பம் வசூலித்தான். பெரும் செல்வமும், தங்கமும், வெற்றிச்சின்னங்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
கங்கைநதி வெள்ளமடங்கிய பொற்குடங்களை அந்தச் சிற்றரசர்களின் தலை மீதே ஏற்றி, அவர்களுடன், தென்னிந்தியா புறப்படத் திட்டமிட்டான். கஜினி முஹம்மது எங்குள்ளான் என்று ஒற்றர்களை வைத்துத் தேடினான். தென்படவில்லை.
மகிபாலனிடம் விக்கிரமன் சென்றான்.
“மகிபாலா! எங்களுடன் நீ தோற்றாலும், உனது வீரம் போற்றற்குறியது. உனது ஆட்சியும் வங்காளத்திலிருந்து, கன்னோசி வரை பரவியுள்ளது. உனது ராஜ்யங்களை சோழர்கள் ஆள நினைக்கவில்லை. நீயே திறம்பட ஆள். சோழருக்கு கப்பம் மட்டும் செலுத்தி வா! கஜினி முகம்மது பதினெட்டு முறை வடமேற்கு, மாளவ, கூர்ச்சர பகுதிகளில் கோவில்களைக் கொள்ளையடித்து செல்வங்களை அரபு நாட்டு கஜினிக்குக் கொண்டு சென்றிருக்கிறான். கடைசியாக சோமநாத ஆலயத்தில் பெருங்கொள்ளை செய்திருக்கிறான். எங்கள் வட நாட்டு படையெடுப்பின் போது அவன் இந்தியாவில் இல்லாது அரேபியா ஓடிவிட்டான். எங்களிடமிருந்து தப்பிவிட்டான். ஆனால், நாங்கள் சோழநாடு சென்ற பின், அவன் மீண்டும் கொள்ளையடிக்க வரக்கூடும். சோமநாத ஆலயத்தை விட காசி விஸ்வநாதர் ஆலயம் செல்வத்தில் குறைந்ததல்ல! இது முஹம்மதுக்கும் தெரியும். ஆக, அவன் மீண்டும் வர வாய்ப்புள்ளது. அப்படி வருவதானால், உன் நாட்டு எல்லையான கன்னோசி வழியாகத் தான் வருவான். அப்படி வர நேர்ந்தால், காசி மற்றும் கோவில்களை நீதான் காக்கவேண்டும். ” என்றான்.
அப்போதே துவங்கி விட்டது காசி தமிழ்ச் சங்கமம்!
மகிபாலன்:
“விக்கிரமரே! அது என் தலையாய கடமை. முஹம்மது, கன்னோசியைத் தாண்ட விடமாட்டேன். காசியையும் காப்பேன்” என்று உறுதி கூறினான்.
மகிபாலனுக்கு நன்றி கூறி, விக்கிரமன் சோழநாட்டுக்கு திரும்பும் பயணத்தில் ஈடுபட்டான்.
விக்கிரமன் கோதாவரிக்கரை அடையும்போது, மாலை மயங்கியிருந்தது. அந்நேரம் அந்த ஆற்றங்கரையில், அருகிலிருந்த காட்டிலிருந்து பல தீப்பந்தங்கள் தோன்றின. வானத்தில் வாண வேடிக்கைகள் நடந்தது. குதிரையில் ராஜேந்திரன் தோன்றினான். விக்கிரமனுக்கு, தான் அளித்த வாக்குப்படி, தானே அவனை வரவேற்க அங்கு வந்து காத்திருந்தான்.
விக்கிரமனுக்கு அளவு கடந்த ஆனந்தம்!
சக்கரவர்த்தியே, தன்னை வரவேற்க இவ்வளவு தூரம் வந்துள்ளாரா? என்னே எனது பாக்கியம்!
தான் அடைந்த வெற்றிகளைக் கூறி, கொணர்ந்த செல்வங்களையும், கங்கை வெள்ளமடங்கிய பொற்குடங்களையும் மன்னனுக்குக் காணிக்கையாக்கினான்! பொற்குடங்களைச் சுமந்து வரும் சிற்றரசர்களையும் அறிமுகம் செய்து வைத்தான்.
விக்கிரமன், தஞ்சை வந்த அதே நாள், கஜினி முஹம்மது, கிழக்குப் பகுதியில் கொள்ளையடிக்க முயன்றான். காசியின் செல்வங்கள் அவன் மனதில் இருந்தது. மகிபாலன் அவனைத் துரத்திவிட்டான். அலெக்சாண்டர் போல, அவனும் கங்கை நதிக்கு கிழக்கே வர இயலவில்லை.
ஆயினும், மெல்ல மெல்ல.. வட இந்தியாவில் அராபியர்கள் ஆதிக்கம் துவங்கத் தொடங்கியது. அந்தக்கதைகளையும் நாம் ஒருநாள் காண்போம்.
ஆனால் இப்பொழுது சோழரின் பொற்காலத்தில் இளைப்பாறுவோம்.
(தொடரும்)