குறும்படம் – “நவம்” – இண்டஸ் கிரியேஷன்ஸ்

சியேட்டல் இண்டஸ் கிரியேஷன்ஸ் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது.

நாடக  மக்கள் அவர்கள்.

அவர்களுடைய குறும்படம் இது  நவம்.

வித்தியாசமாக இருக்கிறது

குட்டீஸ் லூட்டீஸ்:——- சிவமால்

என்ன சொல்லிப் புரிய வைக்க….!
ஸிக்னலை நெருங்கியதும் கரெக்டாக சிகப்பு விளக்கு
எரிந்தது. அலுப்போடு காரை நிறுத்தினேன்.

கோடை வெய்யில் சுட்டெரிக்க, ‘ரமா, கொஞ்சம் தண்ணி
கொடு’ என்றேன் மனைவியிடம்.

மனைவி நீட்டிய பாட்டிலிலிருந்து நீர் அருந்தி முடிக்கவும்
ஆம்பர் லைட் வரவும் சரியாக இருந்தது. காரை ஸ்டார்ட்
செய்தேன்.

‘அப்பா.. வெயிட்..வெயிட்.. நீங்க இப்போ வண்டி ஓட்டக்
கூடாது’ என்று தடா போட்டாள் என் அருகில் அமர்ந்திருந்த
என் பெண் மிதிலா.

‘ஏம்மா…”

‘அங்கே பாருங்க.. அந்த போர்டைப் பாருங்க.’ என்று
ரோட்டின் ஒரு புறத்தில் இருந்த போர்டைக் காட்டினாள்.

‘டோன்ட் டிரிங்க்.. அன்டு டிரைவ்’ என்று ஆங்கிலத்தில்
எழுதப்பட்டிருந்தது.

அட.., பகவானே… இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன
சொல்லி புரிய வைப்பேன்..!

 

ராமானுஜர் 1000

 

பாரததேசத்தில்  சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, முக்கிய குருமார்கள் மூவர். 

அத்வைத சித்தாந்தத்தின் மூலவர் ஆதி சங்கரர் 

விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடி ராமானுஜர் 

துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர் 

பூஜ்யகுரு ராமானுஜரின் (1017-1137)  1000 வது ஜெயந்தி அடுத்த ஆண்டு 2017ல் வருகிறது. 

பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றியவர்.

ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர். 

தாழ்த்தப்பட்டவர்களை அன்றைக்கே கோயிலுக்குள் அழைத்துச் சென்ற புரட்சியாளர். 

மதத்தில்  புரட்சி செய்த மகான்.

தனது குருவான  திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை “எவருக்கும் வெளியிடக்கூடாது” என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார்.

ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார்.

இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி, இது குருவின் சொல்லுக்குத் துரோகமிழைப்பதாகும் என்றும், இதற்கு நரகம் புக நேரிடும் என்றார்.

இராமானுஜரோ,  எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கு செல்வதும் பாக்கியமே என்றார்.

முடிவில்  தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டுத் திவ்ய மந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார்.

இப்போதும் உடையவர் ராமானுஜரின்  திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.

ராமானுஜரைப் பற்றி விஜய் டிவியில் வந்த ஒரு பாடல் காட்சியைப் பார்த்துப் பரவசம் அடையுங்கள். ( நன்றி  யூ டியூப் )

 

வாசகர் பக்கம்

வாசகர்  எண்ணம்

[வாசகர்களைத் துருவி துருவிக் கேட்டதில் கிடைத்த எண்ணங்கள் இவை.

பெயரைப் போடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் போடவில்லை.] 

சந்திரகுப்தரும் சாணக்கியரும் எக்கேடோ கெட்டுப் போகட்டும். இந்திய கிளியோபாட்ரா அமராப்பள்ளியைப் பற்றி சொல்லுங்கள் !

 குட்டீஸ் சுட்டீஸ் நன்றாக இருக்கிறது !

சரித்திரம் பேசுகிறது எழுதுவது யாரோ? அட்டகாசமா இருக்கு. அதுவும் சந்திரகுப்தர் கதை டாப் டக்கர்.

இலக்கியவாசலைப் பத்தியே எழுதி மூணு பக்கத்தை ரொப்பீட்டீங்களே !

குமுதத்திலே கடல்புறா நாடகம் சூப்பர்னு எழுதியிருக்காங்க, நீர் என்னவோ காமாசோமான்னு எழுதியிருக்கிறீரே?

ஏன் ஸ்வாமி? சினிமா பாக்க காசில்லையா? ஒரு பட விமர்சனம் கூட குவிகத்தில வர மாட்டேங்குது?

அலாரம் கதை மணியாக இருந்தது.

‘எதற்காக எழுதுகிறேன்?’ பகுதி சுயவிமர்சனமோ என்று நினைத்தேன்.

குறும்படங்கள் எல்லாம் கலக்கலாக இருக்கின்றன.

தலையங்கங்களில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிவதேயில்லை !

 

தேர்தல் நையாண்டிகள் – தமிழ்த்தேனீ

cartoon3

விரலிலே மையிட்டு அழகு பார்க்கிறார்; பதவி வந்தவுடன் துரோணர் போல  விரலைக் கேட்கிறார்

வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள்.வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் என்று சொல்லலாமே! இறுதி வாக்காளர் என்று சொன்னால் பயமாக இருக்கிறது

கோடி கோடியாய் பணம் சேர்த்து வைத்திருப்போர் கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருப்போர் வேட்பாளர்களாய். கோடி கோடியாய் வாக்காளர்கள் ஏழைகளாய்

அசோகர்   சாலை இரு மருங்கிலும் மரங்களை நட்டார்  ஆறுகள் குளங்கள் வெட்டினார். ஆட்சியாளர்கள்  சாலை இரு மருங்கிலும்   மக்களை  நடுகிறார்கள்.

இதுவரை நானே உங்களை ஆண்டேன், இனியும் நான்தான் ஆளுவேன் . நான் ஆளுகின்ற காலத்திலே உங்களுக்கு என்ன செய்தேன், என்பது முக்கியமல்ல. இனி ஆளப்போகும் காலங்களில் நான் என்ன செய்யப் போகிறேன், என்பதும் முக்கியமல்ல. என்னைத் தவிர யார் கேட்டாலும் ஆளும் பொறுப்பைத் தராதீர்கள் . ஏனென்றால் நாட்டை ஆண்டு ஆண்டே பழக்கப்பட்டுவிட்டேன். என்னால் இந்த நாட்டை ஆளாமல் இருக்க முடியாது என்பதுதான் முக்கியம். அது மட்டுமல்ல பொதுமக்களே ஒரு ரகசியத்தையும் சொல்கிறேன் எனக்கு நாட்டை ஆள்வதைத் தவிர வேறு தொழில்களே எதுவும் தெரியாது . ஆகவே நான் உயிரோடு இருக்கும் வரையில் தயவு செய்து எனக்கே ஆளும் பொறுப்பினைத் தாருங்கள்

கற்பனையைச் சொன்னேன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது உண்மையைச் சொன்னேன்  கரங்கள் என்னைப் பிளந்தன

யார்  ஜெயிப்பார் இந்த தேர்தலில்  நமக்கு நிச்சயமாகத் தெரியும்  கதாநாயகன்தான் ஜெயிப்பான் என்று. மக்கள் கண்ணுக்கு  எல்லோருமே  வில்லனாகத் தெரிகிறார்கள்.யார் ஜெயித்தாலும்   அவர்களே   வில்லன்  அவர்களே கதாநாயகன்   என்னும் முடிவுக்கு  மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்கள்

மேலிடத்திலே இருந்து வரும் தலைவர்கள் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் இந்தி மொழியிலே பேசுகிறார்கள் தமிழ் மக்களுக்கு எப்படி புரியும் என்பது விவாதிக்கப்படுகிறது. எனக்கு ஒரு சந்தேகம் – தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் தமிழிலே பேசுகிறார்கள் பல தலைவர்கள். அதெல்லாம் மட்டும் மக்களுக்குப் புரிகிறதா என்ன ?

கப்பலை  நிலை நிறுத்தப் பயன்படும்  நங்கூரமும்  கப்பலிலேயே  பயணிக்கிறது.   வாகனங்களை நிறுத்த பயன் படும்  ஓட்டத் தடை  எனப்படும்   Break   வாகனத்தோடே  பயணிக்கிறது. ஊழலைத் தடுக்க  மட்டும்  எதாலும் முடிவதில்லை.cartoon 1

வேட்பாளரை மாற்றக் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் மக்களின் விழிப்புணர்வைக் காட்டினாலும் அறிவித்த வேட்பாளரின் எதிர்ப்பாளர்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டமோ எனும் சந்தேகமும் வருகிறது. பாவம் வாக்காளர்கள் அவர்களுக்கு எப்போதும் குழப்பமே
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நலத் திட்டங்களை செயல் படுத்துவோம்  என்று வாக்குறுதி அளிப்போரே!  ஏற்கெனவே ஆட்சியில் இருந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீகளா? இன்னும் இல்லையா !ஓ ! அவைகளையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நிறைவேற்று வீர்களா?   இப்போதுதான் புரிகிறது

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று எல்லோருமே பேசுகிறார்கள். ஆக மொத்தம் யாருக்குமே நம்பிக்கை இல்லை ஆட்சிக்கு வருவோம் என்று.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் இலவச கணினி எல்லாம் கொடுக்கிறீர்களே. படிக்க இயலாத பிள்ளைகளுக்கு இலவச படிப்பைக் கொடுப்பீர்களா ?

ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்கிறார்களே! குழந்தைகள் மேல் பாசமே இல்லாதவர்கள். பெற்ற தாயே குழந்தையைக் கொல்லலாமா?  பெற்றவர்களே இப்படிச் செய்தால் அந்த ஊழல் குழந்தை பாவம் எங்குதான் போகும் ? குழந்தையை அனாதையாக விடலாமா?

நாட்டிலே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அதிகமாகிவிட்டனர் எங்கு குற்றம் நடந்தாலும் அடையாளம் தெரியாத சிலரால் நடத்தப்பட்டது என்கிறார்கள்.. ஒரு வேளை வேற்றுக் கிரகவாசிகளாக இருப்பரோ ?. இந்த நாட்டில் உள்ளோரையே அடையாளம் தெரியவில்லை என்றால் வேற்று கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும் ? அதனால் வேற்று கிரக வாசிகளைக் கண்டு பிடித்து முதலில் அவர்களுக்காவது அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வாக்களிக்கும் தலைவர்களை, அப்படி நிறைவேற்றாவிட்டால் உங்களை என்ன செய்யலாம் என்று வாக்காளர்கள் யாரும் கேட்டுவிடாதீர்கள். எங்களை அடுத்த முறை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று எந்தத் தலைவராலும் சொல்லவும் முடியாது, சொல்லவும் மாட்டார்கள். அதையும் தவிர இந்தக் கேள்விக்கு இன்னமும் யாருக்குமே பதில் தெரியாது .

நுகர்வோர்  பயன் படுத்தும்  மின்சாரக்  கட்டணத்தைக் குறைக்க எளிதான பல வழிகள் உள்ளன . அவற்றில் சிறந்த வழி மின்சாரம் அளிப்பதைக் குறைப்பது ஒன்று. அப்போது மின் கட்டணம் அதிகமாகக் கட்டவேண்டிய அவசியம் இராது.

ஊழல் நாடுகள் பட்டியலில் எழுவத்தி ஆறாவது  இடத்தில் இந்தியா உள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஓ அதிலும் முதல் இடம் இல்லையா வருத்தமாகத்தான் இருக்கிறது இன்னும் முன்னேறினால்தான் முதல் இடத்தைப் பிடிக்க முடியும்

ஒரு வேட்பாளர் வீட்டிற்கு வந்தார் அவருடன் கூட வந்தவர்கள் ஐயா வணக்கம் நீங்க நம்மளுக்குதான் ஓட்டு போடுவீங்கன்னு தெரியும் இருந்தாலும் வீடு தேடி வந்து கேக்கறதுதானே முறை  என்றார் சாமர்த்தியமாக நான் மிருதுவான குரலில் உங்களுக்குதான் ஓட்டு போடணும்னு நீங்க கேக்கறதுக்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கா அப்படீன்னு கேட்டேன். உடனே அவர் சார் நீங்க போடுவீங்கன்னு நம்பிக்கையா வந்தோம் என்றார். நான் ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போடமாட்டேன்னு சொல்லவே இல்லே உங்களுக்குத்தான் போடணும்கிறதுக்கு ஏதாவது வலுவான காரனம் இருக்கானுதான் கேட்டேன் என்றேன் . உடனே மற்றவர்கள் இவரு நமக்கு ஓட்டு போடமாட்டாரம் வாங்க அடுத்த வீட்டுக்கு போகலாம் என்றார். வீட்டுக்கு வீடு கட்சிக்குக் கட்சி மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் வலுவான காரணம் மட்டும் சொல்ல முடியவில்லை ஒருவராலும்.

ஏய்யா உனக்கெல்லாம் எதுக்கு கௌன்சிலர் ஆகணும் எம் எல் ஏ ஆகணும் மந்திரி ஆகணும்னு இந்த வேண்டாத ஆசை ? என்னண்ணே அப்பிடிக் கேட்டுட்டீங்க மக்கள் மேலே எனக்கு மட்டும் அக்கறை இல்லையா? நானும் நாலு எழுத்து படிச்சவன்தானே ! நானும் ஒரு முறையாவது சட்டசபைக்கு , பார்லிமெண்டு்க்கு எல்லாம் போயி அந்த மைக்கு நாற்காலி எல்லாத்தையும் தூக்கி அடிச்சு அன்-பார்லிமென்ட் வார்த்தையெல்லாம் பேசணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?

பட்டு வாடா, செல்லமே வாடா,  கண்ணே வாடா, முத்தே வாடா, பவழமே வாடான்னு கொஞ்சுவாங்க அந்தக் காலத்திலே ! இப்போ என்னடான்னா பட்டுவாடாவையே தடை செய்யறாங்களாமே ?

ஒரு தேர்தலை நடத்தி அதில் பங்கு கொண்டு மக்கள் மனதில் ஆசைவிதைகளைத் தூவி வருங்காலத்தில் நறுமணம் கமழும் ஒரு பூந்தோட்டத்திலே அவர்களை குடியேற வைப்பது போன்ற கனவுகளை அவர்கள் மனதில் ஏற்படுத்தி அவர்களை மயக்கி அவர்கள் மனதை வசியம் செய்து வாக்களிக்கச் செய்து வெற்றி பெறுவது என்பது உண்மையிலேயே கடினமான செயல்தான்

“ஏண்டா நாம தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டம் போட்ட போதெல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வந்து கையைத் தட்டி ஆரவாரம் செஞ்சு மகிழ்ந்தாங்களே ! எதிர்க்கட்சியைப் பத்தி நாம் சொன்ன புள்ளி விவரமெல்லாம் கேட்டு ஆமா ஆமா ன்னு கோஷம் போட்டாங்களே. அப்புறம் ஏண்டா நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட ஓட்டே போடலே மக்களுக்கு நாம பேசினதெல்லாம் புரியலையா?” “அவங்களுக்கு நாம பேசினது மொத்தம் புரிஞ்சு போச்சுண்ணே, அதான் ஓட்டு போடலே”

மதுவிலக்கு கொண்டுவருவோம் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று எல்லாத் தலைவர்களுமே சூளுரைக்கிறார்கள் பொது மக்களே நன்றாக உற்றுக் கவனித்துக் கேளுங்கள் , மது விலைக்கு கொண்டு வருவோம் என்றுதான் சொல்கிறார்கள்!

வாக்களிப்பது மக்கள் கடமை அளித்த வாக்கை காப்பாற்றுவது வேட்பாளர்கள் கடமை அல்லவா? அவற்றை நிறைவேற்றாத வேட்பாளர்களை என்ன செய்யலாம் ?

ஜெயிக்கிற குதிரைமேல் பணம் கட்டியே பழக்கப்பட்டுவிட்டோம் நாம்.   இல்லையென்றால்  நம் பணமும் பறி போய்விடுமே என்கிற பயத்தில். ஆனால் அரசியல் அப்படியல்ல.  ஜெயிக்கிற கட்சிக்கு  வாக்களித்தால் ஏற்கெனவே  பறி போன   நம் பணமும், இனி வருங்காலங்களில்  நாம் ஈட்டும் பணமும் இரண்டும் சேர்ந்து  போய்விடும் . ஆகவே ஜெயிக்கிற கட்சி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு  வாக்களிக்காமல்  ஜெயிக்க வேண்டிய  கட்சிக்கு வாக்களியுங்கள்

நாட்டின் முதுகெலும்பு தொழிலாளிகள். அந்தத் தொழிலாளிகளுள் முக்கியமான தொழிலாளி விவசாயி. அப்படிப்பட்ட விவசாயியைக் கடன் வாங்க வைத்து வட்டி கட்ட வைத்து விட்டு இப்போதென்ன திடீர் அக்கறை விவசாயிகளின் கடனை முழுவதுமாக நீக்க? தேர்தல் காலத்தில் மட்டுமே வருகிறதா விவசாயிகளின் நினைவு ?

“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்னும் ஔவையின் மொழியிலே குடி உயரக் கோன் உயர்வான் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டுதான் குடியை உயர்த்துகிறார்களோ ?

பால் கூட வாங்க முடியலே படிக்கவும் முடியலே மின்சாரமும் இல்லே , படிச்சும் வேலை கிடைக்கலே என்றெல்லாம் யாரையோ நடிக்க வைத்து அவர்களைப் பேசவைத்து அதை வெளியிடுகிறார்களே.  உண்மையான மக்களை சந்தித்தாலே நடிக்க வைக்க வேண்டும் எனும் அவசியம் இல்லாமலே மக்களே உண்மையை் பேசுவார்களே. எதற்கையா இந்த நடிப்பும் வேஷமும்? எல்லாவற்றையுமே நடிப்பால்தான் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்துவிட்டீர்களா.? ஆமாம் நடித்தால்தானே நம்புகிறார்கள் மக்கள்

ஸ்கூட்டர் விலையிலே பாதி தருவதை விட ஒண்ணு செய்யலாம் பாதி ஸ்கூட்டர் இந்த தேர்தலிலேயும் மீதி ஸ்கூட்டர் அடுத்த தேர்தலிலேயும் தரலாம். முழுக் கிணறு ஆகிவிடும். ஏற்கெனவே கிணறுகளாகப் பார்த்து பார்த்துதான் ஸ்கூட்டரெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது

கணக்கிலே கடன் வாங்கிக் கழிக்கலாம்  கூட்டலாம்  கணக்கில்லாமல் கடன் வாங்கக் கூடாது. அதே போல் கணக்கில்லாமல்  இலவசங்களை வழங்கக் கூடாது

முன்பெல்லாம் வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை மரியாதையாக காரிலே அழைத்துச் சென்று வாக்களிக்க வைப்பார்கள். வாக்களித்தவுடன் மறந்துவிடுவார்கள் வீட்டுக்கு நடந்துதான் வரவேண்டும் . இப்போது வாக்களிக்கச் சென்று பாதுகாப்புடன் வீட்டுக்குத் திரும்ப முடிகிறது என்பது மனதுக்கு ஆறுதலான விஷயம். ஆனாலும் இப்போதும் வாக்களித்த மறுகணமே வாக்காளர்களை மறந்துவிடுகிறார்களே வேட்பாளர்கள் என்பதுதான் வருத்தப்படுத்தும் விஷயம்

இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஜோதிட நம்பிக்கை மட்டும் யாரையுமே விடுவதில்லை. ஜோதிடர்களும் இறையை விட அவர்கள் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு ஏதேனும் சொல்லிவைக்கிறார்கள். அதை நம்பி எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்னும் ஆர்வமுள்ளவர்கள் கெட்ட கிரகங்களின் பார்வையிலிருந்து விடுபடவேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு கோயிலிலே கொள்ளையடித்தாகிலும் அந்தப் பணத்திலே கொஞ்சம் ஜோதிடருக்கும் அள்ளிக் கொடுத்துவிட்டு அவர் சொல்படியெல்லாம் ஆடுகிறார்கள் வெள்ளைத் துண்டு, மஞ்சள் துண்டு பச்சைத் துண்டு என்றெல்லாம் கலர் கலராக துண்டுகளை போர்த்திக் கொண்டும் தலையில் கட்டிக் கொண்டும் ரவிக்கையாகத் தைத்துப் போட்டுக்கொண்டும் பிரசாரம் செய்கிறார்கள். கலர்க் கனவுகள் நிறைந்த தேர்தலப்பா இது!  துண்டுப் பிரசாரம் கேள்விப்பட்டிருக்கிறேன் சிறு சிறு காகிதத்திலே அச்சிட்டு அதைக் கொடுப்பார்கள். இது வித்தியாசமான துண்டுப் பிரசாரமாக இருக்கிறது

எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது உங்கள் உரிமை. உங்கள் விருப்பம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பது உண்மைதான். வீடு தேடி வந்து வாக்களிக்கக் கோரும் வேட்பாளர்களின் ஆட்களும் மனிதர்களே , வேட்பாளரும் மனிதரே. ஆகவே வருபவர் யாராக இருந்தாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று அன்போடு உபசரித்து மரியாதையாக வழி அனுப்புங்கள். அதற்குப் பிறகு நன்கு ஆலோசித்து உங்கள் மனசாட்சிப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். மதம் கட்சிகள் எதிர்கட்சி நம் கட்சி எதுவுமே முக்கியம் இல்லை. மனிதம் முக்கியம். ஆகவே மனிதம் காப்போம்

வேட்பாளர்களே தேர்தல் நேரத்தில் நீங்கள் பேசுவதையெல்லாம் உற்றுக் கவனிக்கிறார்கள் பொது மக்கள் . மற்ற நேரங்களில் நீங்கள் பேசுவதே இல்லையே என்னும் ஏக்கத்தில். ஆனால் எப்போது மக்களைப் பேசவிட்டு நீங்கள் கேட்கப் போகிறீர்கள் அந்த ஏக்கம் உங்களுக்கு வராதா?

இந்தியாவின் தண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இதோ !

தேசிய தண்ணீர் விநியோக அமைப்பு (National Water Grid)

மின்சாரத்தை இந்தியா முழுவதும் விநியோகிக்க ஒரு மின்சார விநியோக அமைப்பு இருக்கிறது.  அதைப் போல இந்திய நதிகளில் ஓடும் தண்ணீரை நதிகள் இணைப்பின் மூலம் ஒரு தண்ணீர் கட்டத்தை ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தினால் உபரியாகக் கடலில் கலக்கும் தண்ணீர் தேவையான மக்களுக்குப் பயன்படச் செய்ய முடியும்.

இதைப்பற்றி விவரம் அறிந்துகொள்வதற்காக குவிகம் ஆசிரியரும் அவர் நண்பர்  ஜே ராமன் அவர்களும்  பிரபல நீர்வள ஆராய்ச்சியாளர் டாக்டர் கல்யாணராமன் அவர்களைச் சந்தித்தனர்.

டாக்டர் கல்யாணராமனின் ஆணித்தரமான இரு மாபெரும் கருத்துக்கள்:

கங்கா , யமுனா சரஸ்வதி என்ற வரிசையில் வரும் சரஸ்வதி ஆறு கற்பனை ஆறு அல்ல.  சரஸ்வதி சமவெளி நாகரீகம் என்று சொல்லத்தக்க அளவில் இருந்த ஒரு உண்மையான ஆறு தான். செயற்கைக் கோள் படங்கள் மூலமாக இந்தத் தண்ணீர்த் தடம் ராஜஸ்தானில் இருக்கிறது என்று  நிரூபித்ததுடன், ஆழ் துளை சோதனை மூலம்   அந்தத் தடத்தில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது என்றும் நிரூபித்துள்ளனர். (இதைப் பற்றிய விவரங்களை அடுத்த குவிகம் இதழில் பார்ப்போம். )

இரண்டாவது,  தேசியத்  தண்ணீர் விநியோக அமைப்பு என்ற நதி நீர் இணைப்புத் திட்டம். இதைப் பற்றி டாக்டர் கல்யாணராமன் கூறிய கருத்துக்களை  விவரமாகப் பார்ப்போம்.

தேசியத்  தண்ணீர் விநியோக அமைப்பு

தேசிய தண்ணீர் விநியோக அமைப்பு 100 சதவீத சாத்தியமே.

பிரும்மபுத்திராவில் பிப்ரவரி -மார்ச் மாதம் உபரியாக – வெள்ளமாக ஓடிக் கடலில் கலக்கும் தண்ணீரை மட்டும் தென்னிந்தியாவிற்குக் கொண்டுவந்தால் இங்கிருக்கும் கோதாவரி,கிருஷ்ணா ,காவேரி போன்ற நதிகளில் வருடம் முழுவதும் வரும் தண்ணீரைப் போல இன்னொரு மடங்கு  தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும். இதனால் பிரும்மபுத்ரா நதிநீர் கன்யாகுமரிக்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியம்.    இது அனைவரும் கூறிவரும் நதிநீர் இணைப்பின் மூலம் தான் சாத்தியமாகும்

இதைவிட,  டாக்டர் கல்யாணராமனின் மகத்தான கருத்து என்னவென்றால் நமது இந்தியாவிற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீர் நமது வசம் இருக்கும் இமயமலையில் 1500 பனிப்பாறை ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இந்தியாவில் எல்லா நிலங்களிலும் மூன்று போகம் உணவு தானியங்கள் விளைவிக்கலாம். மேலும் தரிசாக இருக்கும் 9 கோடி  ஏக்கர் நிலங்கள் விளைச்சலுக்கு உபயோகமாக்கலாம்.  இதன் மூலம் நாம் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுவது உறுதி.

டாக்டர் கல்யாணமானின் வலைப்பூவில் (bharatkalyan97.blogspot.in) இந்தத் தேசிய தண்ணீர் விநியோக அமைப்பைப் பற்றி விரிவான  விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

இதைப் பற்றி அவர் கூறியதின் சாரம்:

இந்த நதிநீர்த் திட்டம் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சி பி ராமஸ்வாமி அய்யர், விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் கே எல் ராவ் , தஸ்தூர் போன்றவர்களும் இதில் ஆர்வம் காட்டினார்.   அப்போது இத் திட்டம் தேசிய தண்ணீர் வளர்ச்சி செயலாண்மை ( National Water Development Agency) என்று அழைக்கப்பட்டது. அது தான் கங்கா-காவிரி திட்டம்  மாலைக் கால்வாய்த்திட்டம்  (Garland Canal)  என்றும்   பிரபலமாயின .

ஆனால் கங்கையில் தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் இத் திட்டம் செயல் படுவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியது. மேலும் விந்திய மலைகளைத் தாண்டித் தண்ணீரைக் கொண்டுவருவது நடைமுறையில் முடியாத செயலாக இருந்தது. அதைப்போலவே 300 மீட்டர் அகல மாலை போன்ற கால்வாயில் இருவழியாகத் தண்ணீர் போக வழியும் (Head) இல்லாமல் இருந்தது.

அதற்கு மாற்றாக ஒரு திட்டத்தை நமது நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

அதன்படி, பிரும்மபுத்ராவிலிருக்கும் தண்ணீரை  சங்கோஷ், டிஸ்டா, மேச்சி , கோசி, கக்கர் ,சாரதா போன்ற நதிகள் மூலமாக கங்கையில் கலக்கச்  செய்ய வேண்டும் .

பிறகு கங்காவை பரக்கா பாரேஜ் வழியாக சுபர்ணரேகாவில் இணைக்க வேண்டும்.

சுபர்ணரேகாவை மகாநதி-கோதாவரி- கிருஷ்ணா – பெண்ணார்-பாலார்-காவேரி -வைப்பார்-குண்டார் -வைகை – தாமிரபரணி- கன்யாகுமரி என்று இணைத்து பிரும்மபுத்ரா தண்ணீரை இந்தியாவின் கீழ்க்கோடிக்குக் கொண்டுவரலாம்.

விந்திய மலைகளில் தண்ணீரை நீரேற்றுவதற்குப் பதிலாக தண்ணீர் மலைகளைச்  சுற்றி ஒரு பிரதக்ஷிணமாக வந்தால் சுலபமாகக் கொண்டுவரலாம்.

பங்களாதேஷின் உதவி நமக்குத் தேவை தான். அந்த நாடு வெள்ளத்தில் வருடாவருடம் அவதிப் படுவதைத் தடுக்க அவர்கள் கட்டாயம் இத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்வர். இரு நாட்டினருக்கும் win-win திட்டம்தான்.  அவர்களுக்குத்  தண்ணீர் இழப்பு ஏதுமில்லாமல் ஒப்பந்தம் செய்யலாம்.

 

மேலும் நேபாலில் சாரதா நீர்மின் திட்டதை இந்தியா செயல் படுத்தினால், இந்தியாவிற்குத் தண்ணீரும் நேபாளுக்கு அதிக அளவு மின்சாரமும் கிடைக்கும்.

இந்த நதிநீர் இணைப்பின் திட்டத்தை 3D ரேடார் டோபாகிராபி  மூலம் ஆறு ஆண்டுகளில் தயாரிக்கலாம்.

தேசிய நீர் விநியோக அமைப்பை அமைக்க உச்சநீதி மன்றம் 2014ல் உத்தவரவு பிறப்பித்துள்ளது..

இது நமது பொருளாதாரத்தை உலக வல்லரசுகளுக்கு மேலாக உயர்த்தும்.

இதில் வேறு எந்தவித வெளிநாட்டுத் தொழில்நுட்பமும் தேவையில்லை. அணைகளும் கால்வாய்களும் கட்டும் தொழில் நமக்கு ஆயிர வருடங்களாகப் பழகிய ஒன்று.

முக்கியமாக , இதற்குத் தேவையான மூலதனம் – பணம் எப்படித் திரட்டுவது? 9 கோடி ஏக்கர் தரிசு நிலங்களை விலை நிலமாக மாற்றுவதால் முதலீட்டுக்குத் தக்க வருமானம் கிடைக்கும் என்பது உறுதி. இதனால் உலக வங்கியும் மற்ற நிறுவனங்களும் இந்திய மக்களும் (பத்திரங்கள் மூலமாக ) இதில்  பங்கேற்று இதற்குத் தேவையான முதலீட்டைத் திரட்ட முடியும்.

இவற்றால் காடு  வளம் அதிகரிக்கும்.

சுற்றுபுரச்சூழல் பாதுகாக்கப்படும்.

நதிநீர்ப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.

அணைகள், கால்வாய்கள் கட்டுவதால் புலம்பெயரும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இது அடிகோலும்.

இத் திட்டம் இமய மலையிலிருந்து கன்யாகுமரி வரை இருக்கும் அனைத்துத் தர மக்களையும் கலாசாரம் – பாரம்பரியம் என்ற இணை கோட்டில் இணைக்கும்.

நமது உச்ச நீதி மன்றமும் இத் திட்டத்தை மேலும் கால தாமதப் படுத்தாமல் உடனே நிறைவேற்றத் தொடங்கும்படி 2012ல் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தான் பாரதியார் அன்றே சொன்னார்:  ‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்… மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’  என்று. தீர்க்கதரிசி அவர்.

இது கனவல்ல. 100 சதவீதம் சாத்தியமானதே.

நமக்குத் தேவை – நம்மால் முடியும் என்ற ஒருமித்த எண்ணம் மட்டும்தான்.

செயலாற்றுவோம்.

அவளைக் கொன்று விட்டேன் ( சு ரா )

ஏனோ புரியவில்லை ஏன் அவளை நான் வெறுக்கவில்லை என்று !
காரணம் தெரியவில்லை ஏன் அவள் மீது இன்னும் பரிவு என்று !

ஒன்று மட்டும் புரிகிறது  அவள் முழுக்க முழுக்க நல்லவள் அல்ல 
எனக்கும் அவளைப் பிடிப்பதில்லை  என்னிடமே நடிக்கிறாள்

அப்பாவி போல என்னிடம் கொஞ்சிச் சிணுங்கிச் சிரிக்கிறாள் 
வேஷம் போட்டு மோசம் செய்வதில் அவள் கைதேர்ந்த கைகாரி

அவள் மனதின் சாக்கடை உடம்பில் முத்துமுத்தாய் வேர்க்கிறது 
அழகான தோல் என்று அளவுக்கு மீறி கர்வம் திமிர் அகங்காரம்

பாசம் உறவு நட்பு எல்லாம் அவளுக்குக் காறித்துப்பும் எச்சில்
கண்மூடித்தனமான என் பரிவு பரிதாபம் நேற்றோடு முடிந்துவிட்டது.

நான் யாரென்று காட்டவேண்டும், தண்டித்தேயாக வேண்டும்!
எப்படி ?  எப்படி ? கத்தியா? கடப்பாறையா ? கடுவிஷமா ? 

பொல்லாதவள்  அவள் சாகசக்காரி என்னை ஏமாற்றிவிடுவாள் 
பொறுத்தது போதுமென பொங்கி  முடிவுகட்ட முடிவு செய்தேன் 

நினைத்ததை முடித்து விட்டேன் அவளைக் கொன்று விட்டேன் 
ஒன்று புரியவில்லை  ஏன் அதைத் தற்கொலை என்கிறார்கள் ?