கண்ணதாசரின் நூற்றாண்டு கொண்டாடும் இந்த வருடத்தில் அவரைப் பற்றி நினைவு கூற அனேக பாடல்கள் பிறந்த நிகழ்வுகள் நம் முன்னே வந்து போகின்றன.அவரை ஈர்த்தவர் கவிச்சக்ரவர்த்தி மட்டும் அல்லர் ; வள்ளுவர் முதல் பாரதி வரை அனேகர்.
‘ அஸக்திர் அனபி ஷ்வங்க: புத்ர -தா-ர- க் ருஹாதி ஷூ
நித்யம் ச ஸம- சித்தத்வம் இஷ்டானிஷ்டோபபத்திஷூ. ( பகவத் கீதை. 13-9)
பகவத் கீதை நமக்கு உணர்த்தும் உண்மை அன்பும் , கடமையும் வாழ்வில் அத்யாவசியமான ஒன்று. ஆனால் இந்த உலகத்தில் உள்ள பொருள்கள், மகன், மகள் ,தாரம் எல்லாம் தனியான ‘ ஆத்மா’; சொந்தம் கொண்டாட முடியாது .நிலையானதும் இல்லை. கூடவும் வரப்போவதில்லை.
எனவே ஆண்டவனின் பாதத்தை சரணாகதி அடைவதே சிறந்தது என்று உணர்த்துகிறது.
இந்த கீதை வரிகள் ஆதிசங்கரரை ஈர்க்க,அவர் உபதேசங்கள் அப்பரை சென்றடைஅப்பர் வழியில் வந்த பட்டினத்தாரின் வரிகள் கவியரசை ஈர்த்தது.
அவருடைய தத்வார்த்தமான ஆழ்ந்த அர்த்தமுள்ள பல பாடல்கள் பட்டினத்தாரின் பல
பாடல்களுக்கு இணையாக சொல்லலாம்.
இந்த பாடலைப் பார்ப்போமா.
‘ அத்தமும் வாழ்வு மகத்துமட்டே விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மியிரு
கைத்தலம் மேல் வைத்தழ மைந்தருஞ்சுடு காடு மட்டே
பற்றித் தொடருவினைப் புண்ணியப் பாவமுமே’.
பட்டினத்தார் எழுதிய இந்த பாடல் திருவிடை மருதூர் ‘ மும்மணிக் கோவையில் ‘ இடம் பெற்றுள்ளது.
அத்தமும் ,வாழ்வும்…. நாம் சேர்த்து வைத்துள்ள செல்வமும் ,இந்த ஆடம்பர வாழ்க்கையும் நாம் வீட்டில் வசிக்கும் வரைதான் கூட இருக்கும்.நம் உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின் நம்முடன் வரப் போவதில்லை.
அதுபோல விம்மி விம்மி அழும் மனைவி, மக்கள் சுற்றம் இவர்களும் நம்முடன் வீதி வரை தான் ; அதன் பிறகு நாம் தனி தான் . கூட வரப் போவதில்லை..
நம்மை சுமப்பவர்களும், நம் பிள்ளைகளும் இடுகாடு மட்டும் தான் வருவார்கள்.
அப்படியென்றால் நம்முடன் கூட வருவது, இருப்பது எது?
‘ காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ ..
ஒரு சிறு காது இல்லா ஊசி கூட நம் கூட இறந்த பிறகு நம்முடன் வராது .
அப்படியென்றால் எது வரும்?
நம்முடன் என்றும் வருவது நாம் செய்த ,பாவ ,புண்ணியம் மட்டுமே .வேறு ஒன்றும் இல்லை.
என்று உணர்ந்து நல்லதே செய்து ,
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு ‘. குறள். 350
திருவள்ளுவர் சொன்னது போல் வீடு பேற்றை அடையலாம்.
என்று பட்டினத்தார் ஞானம் வந்து பாடி உள்ளார்.
பொருள் ஈட்டச் சென்ற மகன் திரும்ப வந்து அளித்த ஒரு சாக்கு பையில் இருந்த ஓலைச் சுவட்டில் இருந்த வார்த்தைகளே ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’.
பட்டினத்தாருக்கு ஞானம் வந்தது அவர் மகனாலே, அந்த ஓலைச் சுவடி உணர்த்திய உண்மை..
அந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு கவிஞர் எழுதுகிறார்.
‘ வீடு வரை உறவு ; வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை ; கடைசி வரை யாரோ!
பாதகாணிக்கை திரைப் படத்தில் வரும் இந்த தத்துவார்த்தமான பாடல் சொல்லாமல்
பட்டினத்தாரின் கூற்றை ஒட்டி எழுதப் பட்டுள்ளது.
பாட்டின் வரிகள் இருபாலருக்கும் பொருந்தும். அந்த படத்தின் கதைகேற்ப இந்த பாட்டு ஆணிற்கு ஏற்ப எழுதப்பட்டு இருந்தாலும்.
( பட்டினத்தாரும் ஆண் பாலருக்கே எழுதி உள்ளார்.அதன் தாக்கம் கவிஞருக்கும் இருந்திருக்கலாம்)
கடைசி வரை யாரோ என்று கேள்விக்குறி எழுப்பினாலும் அதனுள் பொதிந்த பொருள் , நம்முடன் கூட வருவது நாம் சொல்லும் இறை நாமாவும்,செய்யும் தான தருமங்களும்தான் என்று உணர்த்துகிறது. நாம் தனியாக பிறக்கிறோம்; தனியாகத்தான் போகப் போகிறோம் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் இருக்கும்வரை ‘ ஒன்று செய்; ஒன்றும் நன்றே செய்;
நன்றும் இன்றே செய்; இன்றும் இப்பொழுதே செய் என்ற பழமொழிக்கேற்ப நாம் வீடு,மனைவி,மக்கள், செல்வம் என்று பற்றுக் கொள்ளாமல் தார்மீக வழ்க்கை வாழ்ந்தால் வீடு பேறு பெறலாம் என்ற தத்துவத்தை நமக்கு நான்கு வரிகளில் சொல்லிச் சென்று விட்டார்.
கந்தர் அலங்காரத்திலும் ‘ வழிக்குத்துணை வடிவேலுஞ்செங் கோடன் மயூரமுமே ‘ என்று பாடியுள்ளார்.நமக்கு என்றும் வாழ்க்கைக்கு துணையாக கூட வருவது அந்த முருகனின் வேலும் ,மயிலுமே ,வேறு ஒன்றும் இல்லை;அதாவது இறைவனின் அருளே என்று அருணகிரினாதர் பாடி உள்ளார்.
கண்ணன் முதல் கண்ணதாசன் வரை அனைவரும் தன் பாட்டில் உலகுக்கு உணர்த்துவது
அந்த இறைவன் பாத சரணாகதியே வாழ்விற்கு உகந்தது ; மற்றெல்லாம் நிலையற்றது என்பதே.
கண்ணனைத் துதிப்போம்; கண்ணதாசனை அனுபவிப்போம்.
