சையது வம்சம்

முன்கதை: தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்து நாட்டைச் சூறையாடிய பிறகு, டெல்லி சுல்தானியம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

1398-ல் தைமூரின் தாக்குதலால் சிதைந்த டெல்லியை, அவனது பிரதிநிதியான கிசிர்கான் கைப்பற்றி, சையது வம்சத்தின் ஆட்சியை 1414-ல் நிறுவினான்..தைமூருக்குப் பிந்தைய இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள்:

சையது வம்சம் (1414 – 1451): தைமூரின் அடிவருடியாகவே கிசிர்கான் தன்னை அறிவித்துக் கொண்டு ஆட்சி செய்தான். அவனுக்குப் பின் வந்த முபாரக் ஷா, முகம்மது ஷா, ஆலம் ஷா ஆகியோரின் ஆட்சியின் கீழ் டெல்லி சுல்தானியம் தனது வலிமையை இழந்து சுருங்கியது.

கிசிர் கான் ‘இறை தூதர்’ முகம்மது நபியின் ஒரு வழித்தோன்றல் என்று குறிப்பிடப்படுகிறான். முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழியாக தாங்கள் தோன்றியவர்கள் என்ற வாதத்தின் அடிப்படையில் சையிது என்ற தங்களது பட்டத்தை இந்த அரசமரபின் உறுப்பினர்கள் பெற்றனர். கிஸிர் கான் தன்னை சுல்தான் என்று அழைத்துக் கொள்ளாமல், தைமூரின் பிரதிநிதியாகவே ஆட்சி செய்தான்.

முபாரக் ஷா (1421 – 1434): இவன் கிஸிர் கானின் மகன். தில்லி அரசவையில் இந்து பிரபுக்களை நியமித்த முதல் சுல்தான்.

மேலும், யமுனா நதிக்கரையில் ‘முபாரக்பாத்’ என்ற புதிய நகரத்தை உருவாக்கினான்.

அதற்குப் பின் வந்த முகமது ஷா (1434 – 1445): பலவீனமான ஆட்சியாளராக இருந்தான். லாகூர் ஆளுநரான பஹ்லுல் லோடியின் உதவியால் மால்வா மன்னரை தோற்கடித்தான்.

அடுத்தவன் அலாவுதீன் ஆலம் ஷா (1445 – 1451): இந்த வம்சத்தின் கடைசி ஆட்சியாளன். திறமையற்றவராக இருந்தான். சையிதுகளின் கடைசி ஆட்சியாளரான அலாவுதீன் 19 ஏப்ரல் 1451 அன்று பக்லுல் கான் லௌதிக்கு வழி விடுவதற்காக தில்லி சுல்தானகத்தின் அரியணையிலிருந்து தானாகவே விலகிக் கொண்டான். பின்னர், பதாவுனுக்கு சென்றான். அங்கு 1478ஆம் ஆண்டு இறந்தான். பிறகு லோடி வம்சம் தொடங்கியது. அதை சற்றே விரைவில் காணலாம்.

அட, ஒரு நூறு வரிகளுக்குள் இந்த அத்தியாயம் முடிந்து விடும் போலிருக்கிறதே! சரி… இந்தக் காலக் கட்டத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடந்தது என்ன என்று பார்க்கலாம்.

குஜராத்: சுல்தான் அஹமத் ஷா, தன் பேரில் தலைநகர் கட்டினான். அது தான் இன்றும் அஹமதாபாத் என்று உள்ளது. அவன் ஆட்சியில் வாணிபம் சிறந்தது.

மால்வா: மாண்டு நகரிலிருந்து, ஹோஷங் ஷா என்ற மன்னன் சுல்தானாக ஆண்டு, அருகிருந்த குஜராத், மேவார் நாட்டுடன் சண்டையிட்டான்.

மேவார்: இங்கு, ராணா கும்பா என்ற ராஜபுத்திர மன்னன் ஆண்டான். பெரிய ராணுவப் பலம் கொண்டும், கலாசார உயர்வு கொண்டும் வாழ்ந்தான். தற்காப்புக்குப் பல கோட்டைகளை நிர்மாணித்தான்.

வங்கம்: டெல்லி சுல்தானத்திலிருந்து விடுதலை கொண்டு சுயேச்சையாக ஆளப்பட்டது.

கலிங்கம்: ஒரு ஹிந்து ராஜ்யத்தை அமைத்து, கஜபதி வம்சம் ஆண்டது.

தக்காணம்: ‘பாமினி சுல்தான்கள் – விஜயநகரப் பேரரசு’ இரண்டும் ஆண்டனர். அடிக்கடி சண்டையிட்டனர். விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் தேவராயா-2, மல்லிகார்ஜுன ராயா இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஆண்டனர். அது பற்றிப் பின்னர் விலாவாரியாகப் பேசுவோம்.

தமிழ்நாடு: பல நூற்றாண்டுகளாக, சேர, சோழ, பாண்டியர்கள் பெருமையுடன் ஆண்ட நாடு, அந்நாளில் தனக்கென்ற தலைவனில்லாமல் இருந்தது. குறுநில மன்னர்கள், விஜயநகர ஆட்சியின் ஆதிக்கத்தில் இருந்தது. சம்புவராய, பாண்டிய சிற்றரசர்கள் விஜயநகரத்திற்கு அடங்கி இருந்தனர்.

இப்படி, சையதுகள் டில்லியில் வலிமையற்ற ஆட்சி செலுத்திய போது மற்ற மாநிலங்களில், பிராந்திய ஆட்சிகள் தொடர்ந்தன.

இன்னும் நூறு வருடத்தில், இந்தியாவை ஒரு பெரிய புயல் தாக்கப்போகிறது. மீண்டும் மேற்கிலிருந்து அந்த முரட்டுப் புயல் வரப்போகிறது. அதனால், நாட்டின் கலையும், வாழ்வும் மாறப்போகிறது. அதற்கு முன் சில முக்கிய நிகழ்வுகள் சொல்லப்படவேண்டும். அவை விரைவில் சொல்லப்படும்.