திரைப்படம் தொடங்குமுன், பி ஆர் பந்துலு அவர்கள், காவியப் படமான – வீரபாண்டிய கட்டபொம்மன் , வெளிவந்தபோது, ஒரு சால்வையை போர்த்திகொண்டு, கலா ரசிகப் பெருமக்களே, என்று பேசுவார். அதேபோல, பின்னாட்களில, ஏ பி நாகராஜன், நவராத்திரி மற்றும் புராணபடங்களை , வெளியிடும்போது, பேரன்பு மிக்க ரசிகப் பெருமக்களே என்று தொடங்குவார். இரண்டு குரல்களும் அன்றைய தமிழ் ரசிகர்களை எதிர்பார்ப்பில் இருக்க வைத்தன.
அதற்குப்பின், எனக்குத் தெரிந்து, பாரதிராஜாவின், கரகரத்த, என் இனிய தமிழ் மக்களே என்னும் பாசக்குரலின் தாக்கம் தமிழ் சினிமாவின் புதிய ஆக்கம் என்றால் மிகை ஆகாது.
பாரதிராஜா – கிராமத்தைப் படமாக்கியவர் மட்டுமல்ல – பாடமும் ஆக்கியவர்.
அவரோடுபணியாற்றிய படங்களில் நான் நடிக்கவில்லை – என்னை நடிக்க வைத்தார் – இப்படிப்பட்ட வாழ்த்தை வழங்கியவர் வேறு யாருமில்லை – பார் போற்றும் கலை உலக சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி தான்.
கிராமங்களை நான் நேசிக்கிறேன் – அந்த அடையாளங்களை நான் காதலிக்கிறேன் என்பார். கிராமம் அவர் கைகளில் வீணை யானதால், ஒவ்வொரு மீட்டலும், புதிய ராகமாய் வெளிவந்தது.
16 வயதினிலே, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து, மண்வாசனை என பல கிராமியப் படங்கள் – அதைத் தவிர, பல வகைப் படங்கள்.
புதிய வார்ப்புகள், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை என எல்லாவற்றிலும ஒரு புதுமை – மண்ணின் இளமை – அது தான் பாரதிராஜா
அவரின் பெருவாரியான படங்கள் – புதுமை மற்றும், கூரான வசனங்கள் – கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு – கிராமத்தின் தத்ரூபம் – பாடல்களும் அவரின் படங்களுக்கு துணை போயின – இளையராஜா, தேவேந்திரன், ரஹ்மான் என அனைவரின துணை அவருக்கு இருந்த்து.
பல இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை கொண்டவர். இவரின் பல படங்கள் வெற்றி பெற்றதுடன், எல்லாவித ரசிகர்களையும் கவர்ந்தது.
பீம்சிங், ஶ்ரீதர், பாலச்சந்தர், கே எஸ் கோபாலகிருஷ்ணன் வரிசையில் இவருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. இவரின் படங்களில் எதை விட – எதைக் கூற ?
16ஆம் வயதின் பாத்திரப் படைப்பு – கமல், ரஜினி, ஶ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி என் ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு. ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா,ஆனா நாயி மட்டும் வழக்கல – இந்த சப்பாணியை வளத்தா என்று கூறும் வசனம் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது. சப்பாணியின் நேயத்தை காட்ட – பல்லியை கொல்லாதீங்கடா என்பான் சப்பாணி . இயக்குநர்கள் ஶ்ரீதர்,பாலச்சந்தர் போல directorial டச்.
கிராமத்தில் சந்தை கூடுதல் என்பது முக்கியமான ஒன்று. அவரின் பல படங்களில் இது இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, முதல் மரியாதை படத்தில்,சிவாஜி ராதா – ஆடு விட்டு கொடுப்பது, ஃபோட்டோ எடுப்பது, அதை ஒருவர் பார்த்து கண்அடிப்பது – அதைப் பார்த்த சிவாஜி அட! சீ! என்று துண்டை உதறிக்கொண்டு செல்வது என இப்படிப் பல – கிராமத்துக்கே உரித்தான காட்சி அமைப்பு; அந்த ஃபோட்டோ தான் பின்னாளில் குருவம்மாவின் கோபத்துக்கு விதை ஆகிறது. செருப்புத் தைக்கும் செங்கோடன் மகள் காதல் கூட, காதலிக்கும் பையனுக்கு பாண்ட் வாங்கித் தருவதில் தெரியப்படுத்துகிறார்.
அதேபோல, கிழக்கே போகும் ரயில் – கிராமத்து ராட்டினம் அவர்கள் காதலை உறுதி செய்யும். அவனை சந்திக்கும் இடம் திருவிழா சந்தை,
மண்வாசனை – நாயகன், நாயகி முத்துபேச்சி ஃபோட்டோ எடுக்க ஸ்டுடியோவில் இருக்கும்போது, ஸ்டுடியோக்காரன் அவளை வேறுமாதிரிப் பார்க்கும்போது, முறை மாமன் அடிப்பது, நாயகியை அடிப்பது – இது காதலை உறுதி செய்யும் சந்தைச் சூழ்நிலை.
பதினாறு வயதினிலே படத்திலும் கமல் – ஶ்ரீதேவி – குருவம்மா சந்திக்கும் இடம், சந்தை. இப்படி,இந்தச் சந்தையே, இவரின் படங்களில், கதை வளர்க்கும் பாத்திரமாக அமைந்து விடுகிறது..,
நிறம் மாறிய பூக்கள் படத்தில், மெட்ராஸ் கேர்ள் என்னும் வார்த்தை ரசிகர்களை ஈர்த்தது. சிகப்பு ரோஜாக்கள் அவரின் இன்னொரு பரிமாணம்.
இப்படிப் பல படங்கள் – பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல, பாரதிராஜா படங்கள் ஒவ்வொன்றும் ஒரு நேர்த்தி,
முதல் மரியாதை – இமயம் சிவாஜியின் அப்போதைய உடல்வாகுக்கேற்ப ஒரு தொட்டுக்கொள்ளாத காதல் கதை – உண்மையிலே அது ஒரு கிராமத்துக் காவியம் என்றால் மிகை ஆகாது.
நடிப்பின் இமயம் சிவாஜி நடிக்க வந்து 32 வருடங்கள் கழித்து வந்த படம். சிவாஜி வெகு இயல்பாக வாழ்ந்திருப்பார். மீன் குழம்பு சாப்பிடும் இடமும், இறக்கும் நிலையில் மூச்சு மேலும் கீழும் வாங்க, கைகளில் தலைமயிரில் கோர்த்த முத்துடன்,
ராதா வந்தவுடன் கண்கள் மேலே போய், மூச்சு சிவாஜிக்கு மட்டுமா நிற்கிறது – காட்சியைப் பார்க்கும் அனைவருக்கும் ஒரு நொடி அப்படியே மூச்சு நிற்கிறது – இயக்குனரின கைவண்ணம் அது.
வேதம் புதிது படத்தில், ஆரம்பத்தில் அவர் பேசுவார்.
நிலம் பேதம் பார்ப்பதில்லை – நீரும் – ஆகாயமும் – தீயும் – காற்றும் – ஐம்பூதங்களும் பேதம் பார்க்காதபோது, ஐம்பூதங்களால் ஆன மனிதா நீ ஏன் பேதம் பார்க்கிறாய் என்பார். இந்தப் படத்தில், கத்தி மேலே நடந்திருப்பார் – யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தாமல், மனித உணர்வுகளை, வாழ்வின் யதார்த்தத்தை மிக அழகாக ஒரு சிறுவன் மூலம் கையாண்ட விதம்
மிக அழகு.
ஆற்றுநீரின் பேதமற்ற தன்மை , வாழும் மக்களிடம் இல்லையே என்பதை கூறி இருப்பார். ஆச்சாரம் என்றால் ஒழுக்கம் என்பார்.
.
புறையோடிப்போன புத்துநோய் மாதிரி சாதி என்னும் பலுதேவரிடம், சிறுவன் சங்கரன் கேட்பான் – சாதி இல்லைனு சொல்ற நீங்க மூச்சுக்கு முன்நூறு தரம் பாலுதேவர் என்று சொல்லுறீங்க – அது நீங்க வாங்கின பட்டமா எனும் போது, சத்யராஜுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற நமக்கும் நெஞ்சில் ஒரு சுறுக் .
இந்தக் கேள்விகள் சென்ற தலைமுறையோடு போகட்டும் – புதிய தலைமுறை வாழட்டும் என்பார்.
அதேபோல – கருத்தம்மா – பெண் சிசு கொலை – மற்றும் கிராமத்து யதார்த்தம் – இதைக் காட்டுவதுடன் சற்றே கடுமையாகவும் கூறுவார் – இவள் உடலால் பெண் – உள்ளத்தால் ஆண் என்று.
அலைகள் ஓய்வதில்லை படத்தில், பேச்சு, இரண்டு மதம் பற்றி இல்லை – இரண்டு மனம் பற்றி என்பார். – மதம் மட்டும் இல்லை – பணமும் தான் காரணம் என்றும் கூறுவது இன்றைக்கும் பொருந்துகிறது.
பாரதியின் புதுமைப் பெண்ணை அப்படியே தந்தார். தென்றலாம் பெண்மை புயலாக மாறிய அழகு அவதாரம் இந்தப் படம்
என்னுயிர்த் தோழன் – வெளியில் அதிகம் தெரியாமல் போன படம் – மிக அருமையான படம். நிர்வாகம், தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் இவர்களின் உண்மை முகங்களைக் காட்டி இருப்பார்.
இப்படி, ஆற்றின் சலசலப்பு, கோயில்களின் கலைப்பரப்பு, மேகங்கள் சூழ்ந்த வானம்,பொன் விளையும் பூமி, வயல் வெளிகள், அருவிகள், பறவைகளின் சப்தங்கள் என இவற்றுடன், கிராமத்து யதார்த்தம், உண்மை வாழ்வு – பேதமற்ற வாழ்க்கை முறை – புரிதல் என – ஒரு ராக மாலிகையாகவே இவர் படங்களைத் தந்திருக்கிறார்.
வாலிபமே வா, கல்லுக்குள் ஈரம், கொடி பறக்குது, கேப்டன் மகள், போன்ற சில சுமாரான படங்களைத் தந்தாலும், பாரதிராஜாவின் பெரும்பான்மையான படங்கள் கலை நயம், மற்றும் யதார்த்தம் இவற்றைத் தான் தந்தது என்றால் மிகையாகாது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு எங்கள் அஞ்சலி.
(கட்டுரை: தென்காசி கணேசன்)

