தாமஸ் மணமுடிந்து நான்கு வருடங்களுக்குப் பின்னர் சமீபத்தில் தந்தையானார்! முப்பது வயதில் தந்தையான ஸ்தானத்தால் மகிழ்ந்து குழந்தையைக் காண விரும்பினார்.
தனது சுயமரியாதைத் தடுமாற்றம் இதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறினார். மனைவி ஹெலனுடன் வாழ்க்கையை ரசிக்க இயலாததையும் வியப்புடன் கூறினார்.
ஹெலனுடைய குடும்பத்தினருடன் சிக்கல்கள் உள்ளதைப் பகிர்ந்தார். மணவாழ்வில் இணைப்பின்மையை (Lack of harmony) சுதாரித்துக்கொள்ளவே என்னை அணுகியதாகத் தாமஸ் விளக்கினார்.
தம்பதி இருவருடனும் இரண்டு வருடங்களுக்கு ஸெஷன்கள் சென்றன. உங்களுடன் ஓரிரு அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஹெலன் முதலில் கவனித்ததே தாமஸ் தமது நரைமுடியை இயற்கையாகவே விட்டுவிட்டதை. தோழிகளிடமும் மனதிற்குள்ளும் பாராட்டிக் கொண்டாள். அவரின் சுயாட்சியைக் கண்டாள். அந்த குணம் தனக்கும் ஆதரவாக இருப்பார் என்று நம்ப வைத்தது.
எங்கள் துறையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இத்தகையாக நடத்தை வெளிப்புற அழுத்தங்களை விட தமது தனிப்பட்ட மதிப்புகளின் (values) அடிப்படையில் முடிவெடுப்பதைக் காண்பிக்கிறது! நரைமுடிக்கு வண்ணம் பூசாமல் இருப்பவர்கள் “மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்றதில் மூழ்கிவிடுவதில்லை. அதற்குப் பதிலாக “எனக்கு எது சரியானது?” என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். சமீபகால ஆராய்ச்சியாளர்களான டீசீ ரையன் (Deci-Ryan) இதைச் சமூக எதிர்பார்ப்பிலிருந்து தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறுவதாக, மனோதைரியத்தைக் காட்டுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்!
நட்பாக ஆரம்பித்த தாமஸ்-ஹெலனுடைய உறவு வலுவானது. மாதங்கள் ஓடின. நாளடைவில் மணந்து கொள்ள முடிவு செய்தார்கள்.
ஹெலன் எப்போதுமே தம் பெற்றோரின் சொற்படிச் செய்வது வழக்கம். மணந்து கொள்ளப் பெற்றோரின் அனுமதி பெறவே தாமஸை அவர்களிடம் அறிமுகம் செய்தாள்.
ஹெலனின் பெற்றோர் முதல் சந்திப்பிலிருந்தே தாமஸை அங்கீகரிக்கவில்லை. தன்னை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணத்தை என்னிடம் விளக்க முடியாமல் தாமஸ் தவித்தார்.
பெற்றோரின் கடுமையான எதிர்வினை உறவினால் ஹெலன் தாமஸுடன் உறவைத் தொடரத் தயங்கினாலும் அவரை ரகசியமாகச் சந்தித்தாள். தாமஸும் ஹெலனை மணமுடிந்து கொள்ள விரும்பி, எப்படியாவது ஹெலனின் பெற்றோர் மனதை மாற்றுவதற்காகவே அவர்கள் எதைச் சொன்னாலும் அப்படியே செய்தார். இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ஹெலன் பெற்றோரைத் தடுக்க முன்வரவில்லை. மாறாக, ஹெலன் தன்னைக் கோபித்துக் கொள்வதை விளக்கினார் தாமஸ். இது ஹெலனுக்குத் தன்மேல் எத்தனை அன்பு உள்ளது என நினைக்கத் தூண்டியதாகக் கூறினார். இதுவே மேலும் அவள் பெற்றோரின் விண்ணப்பங்களைச் செய்யத் தூண்டியதாகத் தாமஸ் கூறினார். ஹெலனை நேசிப்பது போலவே பெற்றோர் தன்னையும் நேசிப்பார்கள் என எண்ணினார். ஹெலனின் சலிப்பும் அதிகரித்தது என்றார்.
பெற்றோரின் ஆட்சேபனைகளை உதறிவிட்டு தாம் விரும்பும் தாமஸை மணந்து கொள்ள ஹெலன் முடிவெடுத்தாள்.
சமீபகாலமாக ஹெலன் குடும்பத்தினரின் தலையீடு முக்கிய பிரச்சனையாகத் தோன்றியதை தாமஸ் பகிர்ந்தார்.
மாமனார்-மாமியார் ஆதரவைப் பெறுவதற்காக தாமஸ் முடிந்த வரை இருவரையும் சந்தோஷப் படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். அவர்கள் ஒப்புதல் வாங்கிய பிறகே கல்யாணமானதும் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறினார்கள்.
ஹெலனின் பெற்றோர் அவர்களை வாரத்தில் நான்கு முறையாவது வீட்டிற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையைப் போன்ற பல கட்டளைகளைக் கடைப்பிடித்தார்கள்.
இவற்றை ஸெஷனில் ஆழ்ந்து பார்வையிட்டார் தாமஸ். அவர்களை நெகிழ வைக்க வேண்டும் என்ற முடிவெடுத்தபின் அவர்களின் சொற்களும் செயல்பாட்டையும் ஏற்றுக் கொண்டு, மறுக்காமல் தொடர்ந்து செய்தார்கள்.
மாமனார்-மாமியார் குறையை மட்டும் பார்த்தது தாமஸை ஏற்றுக்கொள்ளாததை மறைமுகமாகக் காட்டியது. தாமஸ் ஹெலன் சலசலப்பு துவங்கியது. அலுப்பு தட்ட ஆரம்பித்தது!
மேலும் அலசி ஆராயச் செய்தேன். தாமஸ் “இவ்வாறு செய்வேன், வெற்றி பெறுவேன்” என நினைத்தது பலன் அளிக்கவில்லை. அவர்களுடைய மறுப்பினால் துன்பம் அதிகரித்தது ஒரு பக்கம். புறக்கணிப்பை உணர்ந்தார். அவர்களின் பாசம் பெறாதது வருத்தத்தை உணரச் செய்தது. மற்றொரு பக்கம் ஹெலன் இதைப் பற்றிக் கோபித்துக்கொள்வதும் இதை ஊர்ஜிதப் படுத்தியது. இதுகூட முடியவில்லை என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வலம் வர, வேறு வழியைத் தேடாமல் தோல்வி என நினைக்கையில் மனம் தளர்ந்ததை அடையாளம் கண்டுகொண்டார்! மனவலி புரிந்தது.
தாமஸ் தன் வாழ்வின் பல உதாரணங்களைப் பார்வையிட்டார். ஹெலன் பெற்றோரின் மனதைக் கவரச் செய்ததுபோல் முன்பு என்றைக்கும் செய்யாததை உணர்ந்தார். இந்த யுக்தி மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தியது. பலன் கிட்டவில்லை. இவற்றையெல்லாம் முழுதாகக் கணித்ததுமே அதன் பிரதிபலிப்பே சோர்வு எனப் புரிந்து கொண்டார்.
இதிலிருந்து தாமஸ் மற்றொன்றும் தெளிவு பெற்றார். மாமனார்-மாமியார் அன்பைப் பெறச் சொல்வதெல்லாம் செய்தாலும் எண்ணியபடி நடக்கவில்லை. உறவு வலிவு பெறவில்லை. தன்னை எவ்வளவு தாழ்த்தியும் தாம் பதிலளிக்கவில்லை. இச்சமயங்களில் நம்முடைய எண்ண ஓட்டங்கள் பல கேள்விகளை எழுப்பும். அவற்றைச் சந்திக்க மனம் வராத நிலையில் மனவலியாகும். இந்த நிலை நீடித்தால் உடல்வலி மூலமாக வெளிப்படும். அச்சு அசலாக இப்படியே தனக்கும் நேர்ந்ததைத் தாமஸ் புரிந்து கொண்டார். இப்படி தன்னறியாமலே நம் சுய உரை நம்மைக் கேள்வி கேட்கும்.
பிரச்சினைகளுக்கு நாம் செவி சாய்க்காமல் விட்டுவிட்டால் அந்த பாவனையை ஏற்றுக்கொள்ளாது நம் மனம். உடலில் உபாதையாகும். கவனிப்போம்! மனதிற்குப் பிரியமானவள் தம்மைச் செயலற்றவனாகக் கண்டதும் வேதனை தந்தது. அவள் தம் போக்கை மாற்றிக் கொள்ளாதது தவிப்பூட்டியது. இவற்றை தாமஸ் ஸெஷனில் மையமாக வைத்துப் பகிர்ந்ததில் ஹெலனின் சமாளிக்கும் முறையைப் பிரதிபலிப்பதால் அவளுடன் ஸெஷனில் இதை எடுத்துக் கொண்டோம்.
தன் போக்கை மாற்றத் தன்னிலிருந்து தொடங்க தாமஸ் முடிவெடுத்தார். முதல் கட்டமாகச் சுயமரியாதையை மேம்படுத்த முயலத் தொடங்கினார். செய்யச் செய்ய, தன்னைத் தாழ்த்திக்கொண்டு மற்றவரைத் தூக்கி விடுவது அர்த்தமற்றது எனத் தெளிவானது.
செஷனின் மூலம் அடிக்கடிச் சோர்வாக இருப்பதின் காரணமும் இதுவே எனப் புரிந்தது. எந்தச் செயல்பாட்டிலும் வேறுவழி உண்டு என்ற எண்ணம் கொண்டு நம்பிக்கை வைத்துச் சென்றால், மனக்கதவு பல ஜன்னல்களைத் திறக்கும், பாதைகள் வகுக்கும்!
இதிலிருந்து இன்னொரு புரிதலும் பிறந்தது. நல்ல மருமகன் என்ற பெயரைப் பெறாவிட்டால் ஹெலனும் மதிக்க மாட்டாள் என்ற அச்சம் கொண்டோம் என தாமஸ் உணர்ந்தார். உளவியல் தத்துவத்தின்படி, ஒருவர் இது ஒன்றே சரி என உறுதியாக இருக்கையில் அவர்களுக்கு அந்த நம்பிக்கை மட்டுமே தெரியும் தவறாக இருந்தாலும் அதன்படியே செயல்படுவோம். தாமஸின் நடவடிக்கை இதற்கு உதாரணமாகும்.
அச்சத்தை ஹெலனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. தவறான அபிப்பிராயங்கள் உருவானது.
ஸெஷனில் புரிந்தது, வாழ்வின் முட்டுச் சந்துகளில், பல்வேறு வழிமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்ற எண்ண ஓட்டங்கள் வழிகாட்டியாகும். தாமஸ் இந்த நிதர்சனத்தை அனுபவித்தார்!
கணவன்-மனைவிக்குச் சேர்ந்து ஸெஷன் அமைத்த போது இதை மையமாக வைத்துப் பகிர்ந்து கொள்ளச் செய்தேன். நீண்ட செஷன்களுக்குப் பிறகு, மருமகனாக இருக்கும் குணாதிசயங்களை தாமஸிடம் ஹெலன் காண்கிறாள் என்பதை அவள் பகிர்ந்து கொண்டதும் உறவு மேம்பட்டு தெளிவு பிறந்தது. மாற்றத்தின் வழிமுறையைத் தேடினார்கள்.
மாமனார்-மாமியாரின் கோரிக்கைகளை தாமஸ் மரியாதை காத்து நிறைவேற்றுவதை ஹெலனுடன் ஆராய்வது ஆரம்பமானது. விருப்பங்களுக்குக் கீழ்ப்படிவதின் எல்லைக்கோடு எவை என்றதையும் ஆராய்ந்தோம். கூடவே, ஹெலன் தான் விரும்பிய தாமஸை மணந்ததை எடுத்துக் கொண்டோம். அதிலிருந்து மகளாக, மனைவியாக, தாயாகச் செயல்பாடுகளைக் கூர்ந்து பார்வையிடுவது துவங்கியது. தொடர்ச்சியாகக் கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் வழிமுறை பற்றிய தெளிவு பிறந்தது!
விளைவு, இருவராலும் கடந்த மாதங்களில் தம்முடைய பகுத்தறிவற்ற எண்ணங்களை வரிசைப் படுத்தி பகிர்ந்து கொள்ள முடிந்தது. மனோதிடம் பெறுவதற்கு முக்கியமானவை!
தாமஸை வாட்டிய கேள்விக்குப் பதில் கிடைத்தது. மனைவியின் குடும்பத்தை மதிக்க வேண்டியது கடமை. ஆனால் தம்முடைய மகிழ்ச்சியைத் தியாகம் செய்யும் அளவுக்கு இல்லை என.
தாமஸ்-ஹெலன் தாம்பத்தியத்தின் முக்கியப் பொருளைப் புரிந்து கொண்டார்கள். வாழ்க்கையில் பரிந்துரையைக் கேட்டுக் கொள்ளலாம், அதில் எவற்றை உபயோகிப்பது, எவ்வாறு ஈடுபட வேண்டும் என்ற தீர்மானிப்பின் உரிமை அவரவரிடமே.
தாமஸ்-ஹெலன் உறவைப் பலப்படுத்தப் பல மாலை நேரங்களில் குழந்தையுடன் ஒன்றாக நேரத்தைக் கழித்தார்கள். மாமனார்-மாமியாரை வார இறுதி நாட்களில் தங்கள் வீட்டிற்கு அழைத்தார் தாமஸ். வரும்போதெல்லாம் அன்போடு அக்கறையாக அவர்களைக் கவனித்துக் கொண்டதை ஹெலன் பகிர்ந்தாள்.
இருவரின் புரிதல் மேம்பட ஸெஷனில் இன்னொரு பொருளும் கூடியது. பெற்றோரிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஹெலனும் தாமஸும் தனிப்பட்ட முறையில் விவாதிப்பதே! இருவரும் இதில் உடன்பாடுகளை அறிய, எல்லைகளை அமைத்தார்கள். தனது பெற்றோரிடம் ஹெலன் இதைத் தெளிவு படுத்தினாள். தயக்கத்துடன் ஆரம்பித்தாலும் தாமஸ் மீதான காதலும் மரியாதையும் ஊக்குவித்ததாகப் பகிர்ந்தாள்.
தாமஸ் மனோதிடம் சரிந்ததை அடையாளம் கண்டுகொண்டதே மாற்றத்தின் முதல் பங்கு! அனுபவிக்கும் விளைவுகளின் காரணங்களை ஆராய்ந்து விடுபடுவதற்குப் பயிற்சி பெற்ற நிபுணர்களை அணுகியது அதற்கு உதவும் யுக்தி. நம்பிக்கை, மாறுவதற்கு தாமஸ்-ஹெலனின் விடாமுயற்சி, ஸெஷன்களுக்குத் தொடர்ச்சியாக வந்தது, இவற்றினால் பலன் கிட்டியது!
அவமானத்தால்
கீழ்ப் படிவது ஓர்வகை!
சூழல் புரிதல்
சுய உரையை மேம்படுத்தும்!
மனக்கதவுகளைத் திறக்கும்!
********************

