- “நண்பர்களே, நமது வாழ்வில் ஒளி அணைந்துவிட்டது, எங்கும் இருள் சூழ்ந்துள்ளது. நான் என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நம் நேசத்திற்குரிய தலைவர், தேசப்பிதா காந்திஜி இனி நம்முடன் இல்லை.”
- “பல ஆண்டுகளாக நாம் அவரை நாடிச் சென்றோம்; அவரிடம் ஆறுதல் பெற்றோம். இனி அவரை நாம் பார்க்க முடியாது, அவரிடம் அறிவுரை கேட்க முடியாது. இது எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கும் ஒரு கொடிய அடி.”
- “அந்த ஒளி அணைந்துவிட்டது என்று நான் சொன்னாலும், அது தவறு. இத்தனை காலம் அந்த ஒளி நம்மை வழிநடத்தியது. ஆனால், நம் நாட்டில், இந்த நாட்டிற்கு ஒளி கொடுக்கும் இன்னும் பல விளக்குகள் உள்ளன. அந்த ஒளி, காந்திஜி காட்டிய ஒளி, இன்றும், என்றும் இந்த நாட்டை வழிநடத்தும்.”
- “வெறித்தனமான வன்முறை, இந்த நாட்டின் மிகச் சிறந்த மனிதனின் உயிரைப் பறித்துவிட்டது. இந்த இருள் வேளையில், நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.”
- “தேசப்பிதாவுக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலி, அவர் வாழ்ந்த, அவர் உயிர் நீத்த உண்மையின் பாதையில் நம்மை அர்ப்பணிப்பதாக உறுதியளிப்பதாகும்.”

பூவிதழின் மென்மையினும் மென்மையான
புனித உள்ளம்- – அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்! – அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும்
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-!
விழிமலர்கள் வேலாகும் – வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;
ஆடிவரும் தென்றல்
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே – தினம்,
பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்
உனைக் காக்க எனைத் துறப்பேன்-என், –
முடுகிற் செறிந்த தமிழார்வம்
முதிரா இளைஞர் ஆருயிராய்ப்
பெருகச் செய்த செயல் மறவர்
சிறப்பைப் பாடக் கேண்மினோ!
தங்கு கண் வேல் செய்த புண்களை
அன்பெனும் வேது கொண்டொற்றியுஞ்
செங்கனி வாய் மருந்தூட்டுவார்
சீர்மையைப் பாடக் கேண்மினோ!
பொரு தடக்கை வாளெங்கே; மணிமார் பெங்கே;
போர் முகத்தின் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே யெங்கேயென்று
தம்பியரைக் கேட்டானைக் கேண்மின்! கேண்மின்!
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ என்று
மையல் கொண்ட மாதர் தமைத் துயில் எழுப்பச்
செயங்கொண்டார் பாடினார்,
களப்பரணி.. கலிங்கத்துப் பரணி –
அளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி — யான்
கவிப் பரணியேறி, காஞ்சிபுரப் பரணி பாடி நின்றேன்
அவலப் பரணி பாடுகின்றேன் இன்று…!
கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்
கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென
நிலவினில் குளிரென நிலமிசை வளமென
குலவிடும் அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையென
கலைமணங் கமழக் கூடிய கவிஞர்
தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ! வெள்ளம்! வெள்ளம்! மாபெரும் வெள்ளம்!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம்
தாயகத்தில் மொழிப்புரட்சி தோன்றுதற்கு
வித்திட்டார் சிலபேர் என்றால், ஈரோட்டு
நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்
எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சிபூண்டு!
இருமூன்று திங்கள் வரை சிறையில் வாடி,
தரும் ஊன்று கோலாகத் தமிழைத் தந்து
அருமூன்று எழுத்தாலே அண்ணா வானார்!
அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில்
சென்னையிலே சொன்னேனே நினைவுண்டா உங்களுக்கு?
மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு!
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முர சார்த்தவர் தமிழர் — அவர் வாழ்ந்த
தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து — அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..
அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து..
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து…
களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து அறிந்திடுவீர் எனச் சொன்னேன்!
திக்கெட்டும் தமிழ் முழக்கம்
திசையெங்கும் சொன் மாரி
வக்கற்றோர் வகையற்றோர்
வாழ்வதற்குத் திட்டம் கோரி
வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!
எழுதுகின்றார் அண்ணா ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ்
நாடெல்லாம்… புதுமை மணக்குதங்கே…
ஏடா தம்பி! எடுடா பேனா
எத்தனை உணர்ச்சி! எத்தனை எழுச்சி!
‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’
கருத்துப் பேழை–கற்பூரப் பெட்டகம்!
மரக்கிளையிலே பிணம் —
வெந்த புண்ணிலே வேல்!
மறந்திடப் போமோ; மனங்கவர் வாசகம்?
அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை?
அறிவு நடை?
கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது
தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ?
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
தம்பியுடையான் படைக்கஞ்சான்
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்
மனோன்மணீயம் எனினும் — –நம்
மனதில் பதித்தவர் அண்ணா வன்றோ!
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அரசியல் பண்பினை போதிக்கும் அழகே!
மறப்போம் — மன்னிப்போம்
மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே!
எவர் கற்றுத் தந்தார் இதனை?
சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல்போல்
நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்
நன்றென்றார் அண்ணா -அதை மறுத்து
நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்
அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா –
அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க
வயிறு தாங்காக் காரணத்தால்
தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே!
என அழைத்து கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டி
பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக்கொண்டார்;
ஈராண்டு முடியவில்லை எம் அண்ணா ஆட்சியேற்று –
சீரார்ந்த செயல் பலவும் செய்தலுற்றார்,
ஏராந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து
எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் — தமிழ்
அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்
அறநெறியே குறிக் கோளாய்த் திகழ்ந்திட்ட பெரு நிலத்தில்
பிறநெறிகள் பயிர் செய்தார் பிழை குவித்தார்.
மழையற்றுப் போன வயல் போல மாறிற்றுத் தமிழர் மனம்;
அழுக்காறு — அவா — வெகுளி — இன்னாச் சொல் நான்குமின்றி
நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்;
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- — இன்று
இருள் கவிந்து வாட்டம் கோடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை — சோகப் பாட்டுப்
பாடினாள் தமிழன்னை – அடு நெருப்பில்
ஆடினாள் தமிழன்னை
ஓடினாள் – ஓடினாள் – ஒரு வழியும் கிடைக்கவில்லை!
புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்
கவியூரின் பெருவேந்தன் குறளாசான்
ஆண்டு சென்று, அருமை மகனே
வேண்டுகோள் ஒன்று விடுத்தேன் என்றாள்.
என்னம்மா? என்றான் குறளோன்.
தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்
மீண்டும் நீ பிறந்திட வேண்டுமென்றாள்.
தங்கம் எடுக்கவா என்றான்
தமிழர் மனம் வாழ்வெல்லாம்
தங்கமாக ஆக்க என்றாள்
இன்றென்ன ஆயிற் றென்றான்.
குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;
சென்றடையக் குடிலில்லை ஏழைக்கென்றாள்;
கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல் கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்
கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்.
அழுதகண்ணைத் துடைத்தவாறு
அமுதமொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்?
தொழுத மகன் உச்சி மோந்து – ஆல
விழுதனைய கைகளாலே.. அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக
பொதிகை மலைத் தென்றலாய் போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்ப் பழந்தமிழர் புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன் — கீழ்
வானுதித்த கதிர் போல
புரியாதார்க்கு ஒரு புதிர் போல –
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை. –
தலைவரென்பார், தத்துவ மேதை என்பார்,
நடிகரென்பார், நாடக வேந்தரென்பார்
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்.
அன்னையென்பார், அருள் மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் — அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் -நெஞ்சத்து அன்பாலே
அண்ணா என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே — அவர் அன்னை
பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஔவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடி பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல் போப்புக்கும் சிலை கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்துச் சிலை வைத்ததினால் — அண்ணன் தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா… இதயமன்னா…
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப்போய் விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற் கரையில் உறங்குதியோ?…
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?
கவிஞர் வைரமுத்து எழுதிய இரங்கற்பா.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
ஈரோடு தமிழன்பன் பற்றி:
அழுகை வழியும் நேரங்களிலும்
நினைவுகள் மட்டும் மலர்கின்றன,
ஈரோடு தமிழன்பா.
உனது பெயர் பசுமைப் பருவமன்றி
கவிஞரின் காற்றும்,
காலத்தின் கீதமும்.
உலகம் முழுதும் தமிழின்
ஒவ்வொரு சுவாசத்திலும்
உன் பெயரின் ஒலி இன்னும்
காற்றாய்ப் பறக்கிறது.
நா முத்துகுமார் பற்றிய இரங்கற்பா :
முத்து முத்தான வரிகளால் திரையுலகில்
முத்திரை பதித்தவனே!
சத்தில்லாமல் சவலையாக கிடந்த
தமிழ்த் திரைப்பாடல்களை தரம் உயர்த்தியவனே!
எத்தனையோ கனவுகளோடு இத்திரைக்குவந்து
இத்தனைநாள் துயரத்திலிருந்து விடுபடுகையில்
எங்களை துயரத்தில் ஆழ்த்திச் சென்றாயே!
பாமாலைகள் பல படைத்து தமிழ் திரை உலகிற்கு
மணிமாலை சூட்டி மகிழ்ந்தவனே!
காமாலை கண்டு மரித்து உன்னுடல்
பூமாலை சூடப் படுத்துக் கிடக்கின்றாயே!
ஆனந்தயாழை மீட்டி எங்கள் பிள்ளைகளுக்கெல்லாமோர்
தந்தையின் தாலாட்டை பாடியவனே!- இன்று
உந்தன் பிள்ளைகளை தாலாட்டாமல் தவிக்கவிட்டு சென்றனயே!
காலனுக்கென்ன அவசரமோ உன் கவிதைகளை படிக்க?
காத்திருக்க பொறுமையின்றி கவர்ந்து சென்றான் நாங்கள் தவிக்க!
காற்றிலே கலந்துவிட்ட உன் வரிகள் ஒலிக்கும்போதெல்லாம்
காற்றிலே கலந்துவிட்ட உன்னை நினைத்து
இதயத்திலே வலி பிறக்கும்!
கவிஞர்கள் இறக்கலாம்! கவிதைகள் இறப்பதில்லை!
மறைந்து நின்று கொன்ற மஞ்சள்காமாலை
மறைத்துவிடுமோ உன் புகழை!
காலங்கள் ஓடும்! காவியங்கள் நிற்கும்!
காற்றில் கலந்திட்ட எங்கள் காவியமே!
நீங்காத நினைவுகளுடன் மங்காத புகழொளியுடன்
மனம் நிறைய வலியுடன் உன்னை வழிஅனுப்புகிறோம்!
ஆழ்ந்த இரங்கல்களுடன் சக கவிஞன்!
வாலி அவர்களுக்கு பா.விஜய்யின் இரங்கற் பாவில் இருந்து..
கடல்போல் பாட்டு இயற்றியும்
கடல் தாண்டா கவியே…..
உடல் தாண்டித்தான் போயிருக்கிறாய்
உயிர் எங்கள் வசமே!
புத்தனேரி ரா. சுப்பிரமணியனின் “ஹாஸ்ய ஜோதி” என்ற இரங்கற் கவிதை:
மாய்ந்ததே வசன மேதை!
மறைந்ததே ஹாஸ்ய ஜோதி!
காய்ந்ததே தமிழ்ப்ப்பூஞ் சோலை!
கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம்
உடைந்ததே, கண்ணீர் வெள்ளம்
பாய்ந்ததே கல்கி வைத்த
பயிரெலாம் செழிக்கு மாறே!
