Music show on Kannadasan’s songs. March 4 evening - MYLAPORE TIMESசுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: பாரதியின் இலக்கிய வீச்சுDangers of external religiosity and hypocrisy

நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை

என்று பாடிய கவியரசு, அடுத்த வரியில் யதார்த்தத்தைப் பாடுகிறான் –

நடந்ததையே நினைத்து இருந்தால்

அமைதி என்றுமில்லை

ஆம். 100 விழுக்காடு அமைதி, மகிழ்ச்சி, மன நிம்மதி என்று எவரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. அரசர்கள் முதல் அன்றாட வாழ்வுக்குக் கூட அல்லல்படும் ஒவ்வொருவருக்கும் இதே நிலைதான்.  அதுதான் உலகம். அதுதான் வாழ்க்கை.  இதில் எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட அதிக விருப்பங்கள், சுயநலம், நிராசை என சேரச் சேர, நிம்மதி இன்னும் மனங்களைவிட்டுத் தூரம் போகிறது.

அப்படி இருந்தால் மகிழ்ச்சியோ – அல்லது இப்படி இருந்தால் மகிழ்ச்சியோ – மாறி மாறி எண்ணங்கள் வரும் – போகும். கூகுள் இல்லாமல் போயிருந்தால் புத்தகங்களையும், பெரியவர்களையும் தேடிப் போயிருப்போம் என்றும் கூறலாம். நினைத்த மாத்திரத்தில் கைகளில் இப்போது  உலகமே தெரிகிறது என்று எழுத்தாளர் சுஜாதா கூறியதையும் மனம் நினைக்கலாம். .

புரிய வைப்பதற்காக போடப்படும் பல  சண்டைகள், பிரிவில் தான் முடிகின்றன.பணம் என்றுமே நிம்மதியை தருவதில்லை, ஆனால், நிம்மதி இல்லாமல் போவதற்கு பணமும் ஒரு முக்கிய காரணம் என்று எல்லாமே தெரிந்தும் நம்மால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வாழ்க்கை ஒரு வானவில். பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை.

மனிதனாகப் பிறந்தவன் ஒருநாள் இறப்பான் என்ற வாழ்வியலைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை கொஞ்சமாவது நிம்மதியைக் கொடுக்கும்.  கொராணா சமயத்தில் மரணங்கள் மனிதர்களை உலுக்கியபோது ஏற்பட்ட ஞானம் இப்போது இல்லை. காரணம், சுயநலமும் ஆசையும்.

பகவத் கீதையில் நான்காவது அத்தியாயத்தில் கண்ணன் கூறுகிறான் – நமது துன்பங்கள், கவலைகள் எல்லாமே நாம் செய்யும் செயல்களினால் வருவதல்ல – நமது எதிர்பார்ப்புகளினால்தான் வருகிறது.

உண்மைத் தெளிவு அதாவது ஞானம் என்பது நமது விருப்பங்களினால் வருவதில்லை.  சுயநலமற்ற எண்ணங்களினால்தான் இது வருகிறது, என்கிறான் கண்ணன்.

ச்ருங்கேரி  ஜகத்குருக்கள் மிக   அழகாகக் கூறுவார்கள்.  இந்த வாழ்க்கை என்பது இரயில் பயணம் போல. சென்னையில் ரயிலில் ஏறும் சிலர் விஜயவாடாவில் ,   சிலர்  சந்திரப்பூரில், இன்னும் சிலர் நாக்பூரில், சிலர் போபாலில் என்று இறங்கி

இறுதியில் எல்லாருமே  கடைசி இடமான டெல்லியில் இறங்குகிறார்கள். எவருமே ரெயிலில் எப்போதும் பயணிக்க முடியாது. ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்க வேண்டும். இதுதான் வாழ்க்கை.  அவரவர்கள் விதிப்படி, அந்தந்த வயதில் மனிதர்கள் மறைகிறார்கள்.

பகவத் கீதையில் சாங்க்ய யோகம்  அத்தியாயத்தில் ,

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச।

தஸ்மாத்  அபரிஹார்ய அ‌ர்தே ந த்வம் ஶோசிதும் அர்ஹஸி॥

என்கிறார். அதாவது,

பிறந்தவர் எல்லோரும் இறக்க வேண்டும். இறந்தவர்கள் மறு பிறப்பு எடுக்க வேண்டும். இது மாற்ற முடியாதது. எனவே இது பற்றிய கவலை கூடாது.

உடல் பல பகுதிகளால் இணைக்கப் பட்ட ஒரு கருவி. எல்லாக் கருவிகளும் ஏதோ ஒரு நாள் இறக்கும். அழிந்து போகும். சிதைந்து போகும். இது பற்றி விசனமோ கவலையோ கொள்வதில் விவேகம் இல்லை.

தமிழின்  சிறந்த கதாசிரியர் ஒருவர் எழுதுவார்.

மரணத்தை வெல்ல வேண்டும் என்ற மனிதனின் உத்வேகம்,  ஒரு ப்ரம்மாண்டமான மருத்துவச்சாலையை உருவாக்கி உள்ளது.

உலகின் பல சித்தாந்தங்கள் மரணத்திற்குப் பின்னான மறு பிறப்பை மறுப்பதில்லை.

கவியரசு கண்ணதாசன் பகவத் கீதையின் சாரமாக எழுதிய பாடல், மேற்சொன்ன ஸ்லோகத்தை எளிதாக விளக்குகின்றது.

மானிடர் ஆன்மா மரணம் எய்தாது,

மறுபடி பிறந்திருக்கும்.

மேனியைக் கொல்வாய்!

மேனியைக் கொல்வாய்!

நீ விட்டு விட்டாலும் அவர்கள் மேனி

சென்று தான் தீரும்

 

மேலும் இன்னொரு பாடலில்,

 

வந்தது தெரியும் போவது எங்கே

வாசல் நமக்கே தெரியாது

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்

இந்த மண்ணில் நமக்கே இடமேது?

 

வாழ்க்கை என்பது வியாபாரம்

வரும் ஜனனம் என்பது வரவாகும்,

அதில் மரணம் என்பது செலவாகும்,

ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தைத் தந்திருக்கும் நூல்தான் ஆதி சங்கரர் தந்த பஜ கோவிந்தம்.

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்

குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்

வித்தம் தேன வினோதய சித்தம்

 மூடனே!  பேராசையை (பணத்தாசை) விடு.  இந்த பேராசை ஒழிய மனதில் நல்ல் எண்ணங்களை வளர்த்து, உனது கர்மபலனை மிக சந்தோஷத்துடன் (மனத்ருப்தியுடன்) அனுபவி  என்கிறார்.

மனித சுபாவம், ஸுகம் பணத்தால்  வருகிறது என்ற தப்பான கருத்து கொண்டது..
பணத்தால் கிடைக்க கூடிய எல்லா ஸௌகரியங்களையும் சேரும். நாம் பணத்தாசை பிடித்து அதன்மூலம் வரும் ஸுகத்தை நாடுவது நம் பலஹீனம்.  அதனால் நம் மனம் ச்ஞ்சலப்படும்.  ஸுகம் கிடைக்கவில்லயேல் துக்கமும், நினைத்த ஸுகம் கிடைத்தால் ஸந்தோஷமும் கொள்ளும் நம் மன்ம்.  இந்த ஸுகங்களீலுள்ள பேராசையை விடு என கூறுகிறார்.  ஆனால் நமக்கு பொருள்  இல்லாமல் வாழ்முடியாதே.  அதெப்படி பணத்தாசையை விடுவது எனலாம். 

செயல் பண்ணுவது நமது கடமை.  அதுவும் அதில் கிடைக்கும் பலனை கருதாது செயல்  பண்ணவேண்டும் என கர்ம யோகத்தில் பார்த்தோம்.  அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக் கொள்ளவேண்டும்.

“கர்மன்யேவாSதிகாரஸ்தே மாபலேஷு கதாசன”

என்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் சொன்னதுபோல் “கர்மம் செய்வது உன் கையில, ஆனால் அதன் பலன் என் வசம்” என கூறியிருக்கிறார்.  அதாவது, கர்மம் பண்ண ந்மக்கு அதிகாரம் உண்டு.  என்ன கர்மம் பண்ணவேண்டும், எப்ப்டி பண்ணவேண்டும் என தீர்மானிப்பது நம் கையில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நம்க்கு கிடைப்பதில்லை.  இதிலிருந்து என்ன தெரிகிறது? 

கர்மபலன் நாம் செய்யும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது.  அது நம் வசம் இல்லை. ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ அவர் கூறவில்லை. 

கிடைப்பதில்  த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள் என பொருள் கொள்ள வேண்டும்..ஆனாலதான் மனச்சாந்தி ஏற்ப்படும். அப்போது வாழ்வில் இறப்பு என்பதின் உண்மையான பொருள் புரியும்.

மகாகவி பாரதியார் மரணத்தை ஒரு முடிவாகக் கருதாமல், அது உடலின் எல்லை மட்டுமே என்ற தத்துவார்த்தப் பார்வையை கொண்டிருந்தார். மரணத்தை வெல்லும் வழியைப் போதித்த அவர், மனிதனின் கோபம், அச்சம், கவலை ஆகியவையே மரணத்தை நெருங்கச் செய்யும் காரணிகள் என்று கூறியுள்ளார்.

அத்வைத ஞானத்தை உணர்ந்தவனுக்கு மரணம் இல்லை என்று உறுதியாக நம்பினார். “மாண்டதெல்லாம் மரணமில்லை” என்று கூறி, ஞானம் பெற்றவர் மரணத்தை வெல்லலாம் என முழங்கினார்.

உடலானது தற்காலிகமானது என்றாலும், ஆன்மாவுக்கு அழிவில்லை என்பதைத் தனது கவிதைகளில் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.

 சாவுக்கு அஞ்சாத வீரமே மனிதனை அமரனாக்கும் என்பதை அவரது படைப்புகள் உணரவைக்கிறது.  எனவேதான்,  37 வயதில்,  –

காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்

 என்றன் காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்

என்று பாடுகிறார்.  பிறப்பைப் போலவே, இறப்பும் இயற்கையே என்ற எண்ணத்தை மனதில் வைத்து, இருக்கும் நாட்களில் பிறருக்கு உதவியாக இருந்துகொண்டு, தானும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே சனாதனம் கூறும் வாழ்வியல்.