அவங்களை நான் சேர்த்துக்க மாட்டேன்

குமுதம் இணை ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் ஒரு Unsung hero. தமிழில் சொல்வதானால் குடத்திலிட்ட அண்ணாமலை தீபம். உச்ச பட்ச விருதுகள் எதற்கும் அவர் தகுதியானவர்தான்.

 குமுதத்தில் எல்லோருமே கிட்டத்தட்ட அப்படித்தான். நானும் என் கணவரும் ஃப்ரீலான்ஸர்கள் என்பதால் மற்றப் பத்திரிகைகளில் எழுத முடிந்தது. அதனால் எங்களை நாலுபேருக்குத் தெரிந்தது.

திரைக்கதை விஷயத்தில் பாக்கியராஜ் எப்படியோ அப்படித்தான் திரு ரா.கி.ர.

குமுதம் முகவரிக்கு தினசரி நிறை…யக் கதைகள் வரும். கடைசிப் பக்கத்தில் தெளிவாகத் தபால் பெட்டி எண்ணுள்ள முகவரி தந்திருப்பார்கள் என்பதால் யார் வேண்டுமானாலும் அனுப்ப முடியும். 

மொக்கையாய் மொண்ணையாய் ஒரு கதை வந்திருக்கும். ஆனால் அதற்குள் ஒரு நல்ல கதைக்கான பொறி இருப்பது ரங்கராஜனின் கண்ணுக்கு மட்டும் எப்படியோ தெரிந்துவிடும்.

அதைச் செப்பனிட்டு, ‘பட்டி’ டிங்கரிங் பார்த்து வெளியிடும்போது அந்த எழுத்தாளர், தன் கதைக்குழந்தையை இப்படி ஒருவர் சீவிச்சிங்காரித்து அலங்கரிக்க  முடியுமா என்று அமகழிந்து போவார்கள். எனக்கும் இப்படி அனுபவம் நேர்ந்திருக்கிறது. கதையின் கடைசியில் ஒரே ஒரு வரி சேர்த்திருப்பார். அப்படியே கதை ஜொலிக்கும்.

இதையெல்லாம் அவர் நொடிக்கணக்கில் அநாயாசமாகச் செய்வாராம். சில சமயங்களில் எடிட்டர் எஸ்.ஏ.பியே தன் கதையை ரா.கி.ர. விடம் கொடுத்து, “சரியாய் இருக்கிறதா? மாற்றம் ஏதும் தேவையா? மேம்படுத்த முடியுமா?” என்று கேட்பாராம்.

இப்படி ஒரு உதவி ஆசிரியரிடம் கேட்டால் எவ்வளவு கர்வம் ஏற்பட வேண்டும்?

ஆனால் ரங்கராஜன் ஐயாவுக்கு அப்படி ஏற்படாது. மாறாகப் பதற்றம் ஏற்படும். “ஐயோ.. என்ன நீங்க விளையாடறீங்களா? சும்மாவானும் எனக்கு ஏதாவது திறமை கிறமை இருக்கான்னு டெஸ்ட்தானே பண்றீங்க? டெஸ்ட் எழுதுவதான் நினைச்சு நீங்க சொன்னதைச் செய்யறேன்.” என்றவாறு அந்தக் கதையைத் திருத்தியோ மேம்படுத்தியோ தருவாராம்.

ஒரு சமயம் ஸ்வாமி சின்மயானந்தாவுடன் எஸ்.ஏ.பி. வட இந்தியச் சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அந்த வாரம் அவருடைய தொடர்கதைக்கான அத்தியாயம் அச்சேறியாகவேண்டும். ஆனால் அதை அவர் எழுதிக் கொடுக்காமலேயே போய்விட்டார்.

பொதுவாக, எக்காரணத்தைக் கொண்டும் அவரை போன் செய்து தொந்தரவு செய்யும் வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் தொடர்கதையைப் படிக்க வாசகர்கள் ஆவருடன் காத்திருப்பார்கள் என்பதோடு.. அப்படியெல்லாம் தகுந்த காரணமின்றித்  தொடர்களுக்கு ஒரு வாரம் மட்டும் கமா போட முடியாதே.

எனவே, வேறு வழியின்றி ரா கி ர, துணிந்து போன் செய்தார். (அப்போதெல்லாம் மொபைல்  கிடையாது,) லாண்ட் லைன்தான். அதிலும் சின்மயா மடத்தின் போன்! அங்கு சிப்பந்தியாக உள்ள சிஷ்யர்கள் போனை எடுத்து விஷயத்தைக் கேட்டு, அவரை அழைத்திருக்கிறார்கள்.

குருஜியின் அனுமதியைப்   பணிவாய்ப் பெற்று போனில் பேசியிருக்கிறார் எடிட்டர்.

“வந்து இந்த வாரம்.. தொடர் .. சாப்டர்..எழுதணுமே” என்றார் ரா.கி.ர.

“எழுதிடுங்களேன்..” என்றாராம் எடிட்டர்.

பகீரென்று ஆனது ரங்கராஜருக்கு. “உங்க தொடர்கதை பற்றிக் கேட்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இப்படியெல்லாம் விளக்கமளிக்கும் அளவுக்கு எடிட்டர் பேச மாட்டார் என்றுதெரிந்தும்கூட..

இரண்டே வரியில் அந்த அத்தியாயத்தின் சுருக்கத்தைச் சொல்லி அதை முழு அத்தியாயமாக எழுதும்படி சொல்லிவிட்டார்.

இது ஆர்.கே.ஆர் அவர்களுக்கு எத்தனை பெரிய அவார்ட். யாரேனும் தன் தொடர்கதையை மற்றவர்களை நம்பி எழுத அனுமதிப்பார்களா? அதை எப்படித் தன் கையால் செதுக்கிச் செதுக்கி மெருகேற்றுவது என்றல்லவா பார்ப்பார்கள்? 

தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை இரட்டிப்பு கவனத்துடன் செய்து முடித்தார் ரா.கி.ர. மறுவாரம் பிரசுரமானது. அதன் பிறகு அதைப் பற்றி இருவருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அவர் ஏதும் சொல்லவில்லை என்பதே பெரிய பாராட்டு என்பது ரங்கராஜன் அவர்களுக்கும் தெரியும்.

வாசகர்கள் எந்த வகையிலும் வித்தியாசம் உணர்ந்திருக்க மாட்டார்கள். கதையின்போக்கும், அத்தியாயத்தின் சுருக்கமும், எடிட்டரின் பாணியும் தெரிந்த ஜாம்பவான் எழுதியதில் குறை இருக்குமா என்ன?

இது ஒன்றும் பெரிய ரகசியமாக் காப்பாற்றப்படவில்லை. அலுவலகத்தில் எல்லோருக்குமே தெரியும். அதிசயங்களுக்குப் பழக்கப்பட்டுப்போன அலுவலகம் அது.

சில சமயங்களில் தொடர் எழுதுவதற்கு முன்பாக முழுக்கதையையும் எடிட்டர் அவரிடம் டிஸ்கஸ் செய்வதுண்டாம்.

அதையும் தலைக்கேற்றிக் கொள்ள மாட்டார் ஆர்.கே.ஆர். “ஒருவராய் யோசிப்பதைவிட இரண்டு பேராய் யோசித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்கும் என்று நினைத்திருப்பார். அவர் கண்ணாடியைப் பார்த்து தன்னிடமே டிஸ்கஸ் செய்திருந்தால்கூடப் பிரமாதமான ஐடியாக்கள் அவருக்குத் தோன்றுமே” என்று அடக்கமாய்ச் சொல்வார்.

ஒரு சமயம் எஸ்.ஏ.பி-க்கு ஒரு எண்ணம் தோன்றியது. “ஏன் ஓய் நீர் ‘கதை எழுதுவது எப்படி?’ … என்று ஒரு தொடர் ஆரம்பியுங்களேன்.” என்று ரா.கி.ர. வைக் கேட்டிருக்கிறார்.

இவருக்கு அதிர்ச்சி. “என்ன சொல்றீங்க? நானா? கதைஎழுதச் சொல்லித் தர்றதா?” என்று கேட்டு வியந்திருக்கிறார்.

ஆனால் எடிட்டர் ஒன்று சொல்லிவிட்டால் அது லக்ஷ்மண் ரேகாதான். யாரும் தாண்டுவது பற்றிக் கனவிலும் நினைக்க மாட்டார்கள்.

எடிட்டர் எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும்… ஏன் உள்ளூரிலேலே எங்காவது போனாலும்கூட.. எங்கே என்ன புத்தகம் கிடைக்கும் என்பதில்தான் கவனமாக இருப்பார்.

தன் போட்டோக்கள் எதிலும் பிரசுரமாகக்கூடாது என்பது பற்றி அவர் உறுதியாக இருந்ததால் அவரைப் பொது இடங்களில் யாருக்கும் அடையாளம் தெரியாது. சர்வசகஜமாக பஸ்களிலும் ரயிலிலும் போவார். கடைகளில் புகுந்து புறப்படுவார். சாதாரண ஹோட்டல்களில் கூடச் சாப்பிடுவார். மனிதர்களைக் கவனித்து, தன் அனுபவங்களைச் சுவைபடக் கதைகளிலும் அரசு பதில்களிலும் எழுதிவிடுவார்.

மூர்மார்க்கெட் போன்ற இடங்களிலும்கூட நிறையப் புத்தகங்கள் வாங்கி வைத்து அதற்காக ஒரு பங்களாவே வாங்கியதும், அதற்குக் ‘குமுதம் லைப்ரரி பங்களா’ என்று பெயர் வைத்ததும் ஏற்கனவே உங்களுக்குத் தெரியும்.

அவற்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகப் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய “எப்படிக் கதை எழுதுவது” பாணி புத்தகங்கள் ஏராளம். அவற்றைக் குமுதம் அலுவலகத்தில் எல்லோருமே படித்து ‘தரோவாக’ இருந்தார்கள்.

எனவே இப்படி ஒரு தொடர் எழுதுவது ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை.

அவர் ஆரம்பித்த தொடரினால் பல புதிய எழுத்தாளர்கள் உருவானார்கள்.

ஒவ்வொரு வாரமும் தொடர் பிரசுரமானவுடனேயே ஏராளமானவர்கள் கடிதம் எழுதினார்கள். அவர்களில் சந்தேகம் கேட்டவர்கள், கேள்வி கேட்டவர்கள் ஆகியோருக்கு அடுத்த அத்தியாயத்தில் பதில் அளித்தார். கேள்வி கேட்டவர் பெயரைக்கூடக் குறிப்பிட்டு பதில்  சொன்னார்.

வாசகர் பங்களிப்பு இருந்தால் எதுவும் பாப்புலராகும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது.

இது எட்டுப் பத்து வாரங்களுக்கு ஒரு குறுந்தொடராகத்தான் வந்தது.

பட்…

எடிட்டருக்கு இந்த ஐடியாவின் அடுத்த பகுதி மனதில் உதித்தத்து. “நீங்க ஏன் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்று கோர்ஸ் ஆரம்பிக்கக்கூடாது?” என்று கேட்டிருக்கிறார்.

அதெல்லாம் தனக்குச் சரிப்பட்டு வராது என்று மறுத்துப் பார்த்தார் ஆர் கே ஆர். எடிட்டரை எதிர்த்து எதுவும் பேச அங்கு யாருக்கும் குரல் எழும்பாது என்பதால் எழுந்த வேகத்தில் அந்தக் குரல் பலவீனமாகக் கரைந்து போனது.

குமுதத்திலேயே பிரமாதமாக விளம்பரம் கொடுத்தார்கள் என்று நினைவு.

அதுவல்ல பெரிய விஷயம் “முதல் மாணவனாக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று பெரிய தொகை ஒன்றைக் கொடுத்தார் எடிட்டர்.

நெகிழ்ந்து போய்விட்டார் ஆர்.கே.ஆர்.

பாடங்கள் அழகாக அச்சடிக்கப்பட்டன. ஆரம்பம், நடு, முடிவு, உரையாடல், எண்ணங்கள், கேரக்டர், நடை, தலைப்பு மோதல், சஸ்பென்ஸ், கிளைமாக்ஸ் (முடிவு) என்று தனித்தனியாகப் பாடங்கள் அச்சடிக்கப்பட்டன.

யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பணம் கட்டி மடமடவென்று மாணவர்கள் சேர ஆரம்பித்துவிட்டனர். நம்ப மாட்டீர்கள். நல்ல அனுபவசாலியான பல எழுத்தாளர்கள்கூட அதில் மாணவர்கள்தான்.

இதற்கு முன்பே என் கணவர் (பாமா) கோபாலன் கொண்டு போய்ப் பணத்தைக் கொடுத்தார். “சார் என் ஒய்ப் உங்க மாணவியாய்ச் சேர விரும்பறா” என்றார்.

“முடியாது. அவங்களை நான் சேர்த்துக்க மாட்டேன்.”என்ற கட் அண்ட் ரைட்டாகச் சொன்னார் ரா.கி.ர.

அதிர்ச்சிதான். “ஏ..ஏன் சார்..” என்று கேட்ட என் கணவரிடம், “போன் போடுங்க. காரணத்தை அவங்க கிட்டதான் சொல்லுவேன்” என்று சொன்னார்.

போன் போட்டுக் கொடுத்தார். “இன்று முதல் எ க எ ‘வில் உங்களை உதவியாளராக அப்பாயின்ட் செய்திருக்கேன்” என்றாரே பார்க்கணும்.

வேலை என்றால் உங்கள் வீட்டு வேலை என் வீட்டு வேலையெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட எழுநூறு மாணவர்கள் சேர்ந்தார்கள் என்று நினைவு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பயிற்சிகள் இருக்கும்.

அதில் என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை வைத்து மாணவர் ஒரு கதை எழுதி அனுப்ப வேண்டும். (பத்துப்பாடங்கள்…. எழுநூறு மாணவர்கள் பெருக்கல் வாய்ப்பாடு உங்களுக்கும் தெரியும்).

அதை மாணவர்கள் எழுதி அனுப்பி பாஸ் செய்தபிறகே அடுத்த பாடம் அனுப்பப்படும். மாணவ மாணவியரின் கதைகளைப் படித்து அவற்றிற்கு மார்க் போட்டு, அதை எப்படி மாற்றலாம் என்று எழுதி, ஆர் கே ஆரிடம் அனுப்ப வேண்டும். கூடவே அந்தக் கதையின் சுருக்கத்தைப் பத்து வரிகளுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும்.

திருத்தி அனுப்புவதற்குள் அடுத்த பாடத்துக்கான விடைகள் வந்துவிடும். இதில் போஸ்ட்மேன் போல் கதைகளை என்னிடம் கொண்டு வந்து கொடுப்பதும் திருத்தியபிறகு திரும்பக் கொடுப்பதும் பாமாஜியின் வேலை.

சத்தியமாய்ச் சொல்கிறேன். இப்படி ஒரு பயிற்சி அப்படி ஒரு ஜாம்பவானிடம் எந்த மாணவிக்கும் கிடைத்திருக்காது.

பிற்பாடு இதைத் தொலைக்காட்சித் தொடராக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். 13 வாரத்  தொடர். அத்தனை பாடங்களையும் இணைக்கும் சங்கிலியாக ஒரு குடும்பத்தின் கதையை வைத்து, ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு எழுத்தாளர் ஒரு மாணவிக்கு விளக்குவது போல் காட்சிகளை அமைத்து, அவர் விளக்கும் காட்சியைக் கொண்டு ஒரு சிறுகதையாக அந்த வாரம் சுவைபடச் சொல்லப்படும். கூடவே காட்சியாக (நடிகர்கள் நடித்து) வரும். அதாவது இன்றைக்கு நாம் பார்க்கும் ஆடியோ வீடியோக்கதையை அப்போதே யோசித்தோம்.

ஆரம்பத்தில் என்னை ஸ்க்ரிப்ட் எழுதச் சொன்னார். கிட்டத்தட்ட அத்தனை வரிகளையும் அடித்து எழுதிச் செப்பனிட்டுப் பொலிவேற்றினார்.

இந்தத் திட்டம் பாதியில் இருக்கும்ப்போதே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்.. அத்தனையும் அப்படியே நின்று போனதுதான் பெரும் சோகம்.

இன்றைக்கும் அந்த சீரியலிஸ் ஸ்கிரிப்டை ஒரு ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறேன்.

(பாடங்களையும் ஸ்க்ரிப்டின் இரண்டு பக்கங்களையும் உங்கள் பார்வைக்கு போட்டோ பிடித்து இணைத்திருக்கிறேன்.)