அமெரிக்காவெல்லம் சுற்றிவிட்டு சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். மூன்று மாதம் போய் வந்ததற்கே வித்தியாசம் தெரிகிறது. சத்தம் ஆகவில்லை. இடம் மாறி இருப்பது உடலுக்குத் தெரிகிறது. நேரம் மாறியிருப்பது தூக்கத்திற்குத் தெரிகிறது. செட்டில் ஆவதற்கு ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம்.

இது மட்டுமல்ல சூழல் மாறி இருப்பதும் செயல்பாடுகளை மாற்றுகிறது. அங்கிருந்த தினசரி செயல்பாடுகள் வேறு. இங்கே வந்தால் மாறக் கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது. அதென்ன சூழல் ? வீட்டிற்குள்ளா ? வீட்டிற்குள் மட்டுமல்ல சுற்றிலும் நடப்பது, நாம் பழகும் மக்கள், செய்யும் வேலை எல்லாம் சேர்ந்தது தான் சூழல்.

 சமஸ்கிருதத்தில் ‘வாதாவரணம்’ ( वातावरणम् ) என்று ஒரு வார்த்தை உண்டு. மேலோட்டமாக பார்த்தால், நம்மை சுற்றி இருக்கும்  சூழல் என்பதுதான் அதன் பொருள். பொதுவாக அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து கவனித்துப் பார்க்க மாட்டோம். ஆனால் அந்தச் சூழல்தான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதுதான் ஆச்சரியமான உண்மை.

 பகவத் கீதையின் கடைசி ஸ்லோகம் இப்படி சொல்கிறது

அத்தியாயம் 18 ஸ்லோகம் 78

यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः।
तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम॥

உச்சரிப்பு (தமிழில்):

யத்ர யோகேஸ்வரஃ க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தரஃ ।
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம ॥

இதன் பொருள் “எங்கு யோகத்தின் நாயகனான ஸ்ரீகிருஷ்ணரும், வில்லை ஏந்திய வீரனான அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அங்கே செல்வமும், வெற்றியும், வளமும், நிலையான தர்மமும் நிச்சயமாக இருக்கும். இதுவே என் உறுதியான கருத்து” என்று சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் கூறி முடிக்கிறார்.

 இதன் நேரடி பொருள் கிருஷ்ணரும் அர்ஜுனனும் இருக்கும் இடத்தில் தெய்வம் வெற்றி செழிப்பு நிலையான தர்மம் எல்லாம் நிச்சயம் இருக்கும் என்று என்பதுதான்.

 இது ஏதோ போர்க்களத்தில் சொன்னது என்று நினைக்கக் கூடாது.  இன்றைய தேதிக்கு இது எப்படி பொருந்தும் என்று ஒரு கேள்வி வரும்

 கிருஷ்ணர் என்பது ஞானம் தர்மம் வழிகாட்டுதல் என்று எடுத்துக் கொள்ளலாம் அர்ஜுனன் என்பது நாம் ஒவ்வொருவரும். அந்த ஞானத்தை வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு சரியாக செயல்படுதல்.

 இப்படி ஒரு கிருஷ்ணர் அமைய, நல்ல தெய்வீக ஞான

சிந்தனை வர, வழிகாட்டுதல் அமைய, வாதாவரணம் முக்கியம். அதாவது சூழல் ரொம்ப முக்கியம்.

ஒரு சூழலுக்கு இத்தனை முக்கியத்துவமா என்று தோன்றலாம்.முதலில் நம்  சூழலை எவையெல்லாம் உருவாக்குகின்றன என்று பார்க்கலாம். நாம் இருக்கும் இடம் ,பழகும் மக்கள், நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், பேச்சு, உணவு, நாம் நடந்து கொள்ளும் விதம், அதோடு நம் கடவுள் நம்பிக்கை, தர்மநெறி இவையெல்லாம் சேர்ந்துதான் நம்முடைய சூழலை உருவாக்குகிறது

 சரி இதெல்லாம் எப்படி ஏற்படும்?  தானாக ஏற்படாது. நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.எப்படி என்று பார்க்கலாம்.

இடம் – நாம் இருக்கும் இடம் தூய்மையாகவும், புனிதமாகவும், மன அமைதியைத் தருவதாகவும் இருக்க வேண்டும்.

  • மக்கள் / சகவாசம் – நல்ல குணமுடைய, நம்மை உயர்த்தும் மனிதர்களின் நட்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எண்ணங்கள் – மனதை அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் வளர்க்க வேண்டும்.
  • பேச்சு – உண்மையான, இனிமையான, பிறருக்கு நன்மை பயக்கும் சொற்களையே பேச வேண்டும்.
  • உணவு – உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் தெளிவையும் அளிக்கும் உணவை உட்கொள்ள வேண்டும்.
  • குணங்கள் – தூய்மை, நல்லிணக்கம், ஞானம், கருணை போன்ற சாத்வீக குணங்களை வளர்க்க வேண்டும்.
  • நடந்து கொள்ளும் விதம்  – பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து, நம்மைச் சுற்றியுள்ள சூழலை நல்ல திசையில் மாற்ற வேண்டும்.
  • பக்தி – தர்மத்தை மையமாகக் கொண்ட இறைநம்பிக்கையும் இறைவனின் வழிகாட்டுதலும் நிறைந்த சூழலில் இருக்க வேண்டும்.

இப்படி ஒரு சூழல் அமைந்து விட்டால் அந்த வாதாவரணம் நமக்கு அமைதி தரும்.மகிழ்ச்சி தரும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

 ஒரு ஜெட்லாகை பற்றிப் பேசவா இத்தனை வியாக்கியானம் என்று கேட்கலாம்.

எனக்கு சூழல் அங்கும் இங்கும் எப்படி அதற்கு நான் எப்படி பழக்கப் படுத்திக் கொள்கிறென் என்று பகிர்ந்து கொள்ளவே இத்தனையும். அமெரிக்காவில் ஸ்ரீராமுடன் இருக்கும் போது அந்தச் சூழல் ஸம்ஸ்கிருதம்,ராமாயணம்,மகாபாரதம் என்று இருக்கும்.தினமும் பகவத் கீதை கற்றுக் கொண்டேன். மாலையில் மூன்று பேரும் உட்கார்ந்து பகவத் கீதை படிப்போம். இந்த முறை மூக பஞ்சஷதி வகுப்பில் ஆன்லைனில் இணைந்து படித்தேன். அது மட்டுமல்ல ஸ்ரீராமின் குருகுலாவில் இணைந்து பணியாற்றுபவர்களை அடிக்கடி சந்திப்பதும் அவர்களுடன் ராமாயணம் மகாபாரதம் என்று பேசுவதும் கதைகள் சொல்லுவதுமாக பொழுது போனது. பொதுவாகவே அங்கே அமைதியான சூழல். நிறைய ஆரோக்கிய சிந்தனைகள், பயிற்சிகள் என்று இருந்தன. வீட்டில் குழந்தைகளுக்கு சமைப்பதில் ஒரு விதமான உற்சாகம் இருந்தது.அது அமெரிக்க வாசம்.அமெரிக்க வாதாவரணம்.

 அதற்காக அந்த சூழலை இங்கே கொண்டு வர முடியுமா? இங்கே வந்தபின் இங்கு உண்டான பொறுப்புகள்! நண்பர் ரகுநாதனுடன் இணைந்து புதிய மகளிர் நல மையம் அமைப்பது ,கல்லூரியில் சேரக் காத்திருக்கும் சில குழந்தைகளுக்கு அறிவுரை, பண உதவி, ரோட்டரிப் பணிகள் மூலம் சில சேவைகள் அடுத்தடுத்த விழாக்கள் பேச்சு நட்பு என்று நம்ப ஊர் சூழலும் வேலைகளும்!! என்னுடைய நம்ம ஊர் வாதாவரணம் !!

சொல்ல வந்தது இதுதான்.நம்மைச் சுற்றி நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்வோம். அது நம்மை நல்லபடியாக இயங்க வைக்கும்.