என்.சி.மோகன்தாஸ்

இலக்கிய உலா-பா.முத்துக்குமரன்கண் என்பது பொதுவாக எல்லோருக்கும் அத்தியாவசியமானது. அதிலும் எழுத்தாளர்களுக்கு சொல்லவே வேண்டாம். எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் 1991-இல் சென்னை தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது பைப் ஒன்று பிய்த்துக் கொண்டு பத்து கிலோ பிரஷரிலும் அதிக டெம்பரேச்சரிலும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு (சுண்ணாம்பு நீர்) திரவம் கண்களில் அடித்து விட்டது. இரண்டு கண்களுமே அவ்வளவுதான் என்ற நிலைமையிலும் தளராது அதிலிருந்து மீண்டு வந்தார். வெளிநாட்டு வேலை, எழுத்து-சேவை என தொடர்ந்தார்.

இரு நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 3000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். தினமலர்- வாரமலர் இதழில் என்.சி.எம். எழுதிய ‘இனியவளே’ உண்மைத் தொடர் பெரும் வரவேற்பினைப் பெற்ற நாவல். சர்ச்சைக்குள்ளான ‘கன்னி பூஜை’ தொடர்கதை இதயம் பேசுகிறது இதழில் வெளியானது. எழுத்துலக ஜாம்பவான் சாவிக்கு நெருக்கமானவராக இருந்தார். ‘எழுத்து-சேவை என்.சி.எம்.’ என்ற பெயரில் மோகன்தாஸின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவந்துள்ளது. எழுதியவர் எழுத்தாளர் ராணி மைந்தன்.

குவைத் ‘இந்தியன் ஃப்ரன்ட் லைனர்ஸ்’ சேவை அமைப்பின் நிறுவனரான என்.சி.எம். பணி ஓய்வுக்குப் பின் சென்னை திரும்பி ‘பேனாக்கள் பேரவை’ அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.ஆளுமைகளை அழைத்து மாதம்தோறும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி அவர்களது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளச் செய்கிறார்.

ஜாவர் சீதாராமன்

சட்டம் படித்த இவர் எழுத்தாளர், நடிகர், திரைப்பட வசனகர்த்தா என்று பன்முக ஆளுமை கொண்டவர்.’மிஸ் மாலினி’ படத்தில் அறிமுகமானார் சீதாராமன். கே.ராம்நாத் இயக்கிய ‘ஏழைபடும் பாடு’ படத்தில் ‘ஜாவர்’ என்ற முரட்டு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்து கவனம் பெற்று ஜாவர் சீதாராமன் ஆனார்.

‘குழந்தையும் தெய்வமும்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘அந்த நாள்’, ‘ராமு’ படங்களுக்கு திரைக் கதை வசனம் எழுதினார். இவர் நடித்த ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

 குமுதம் இதழில் இவர் எழுதிய ‘மின்னல் மழை மோகினி, ’உடல் பொருள் ஆனந்தி’, ‘பணம் பெண் பாசம்’, ‘நானே நான்’ வாசகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இன்றைக்கும் இந்த நாவல்களை மறுவாசிப்பு செய்யும் வாசகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

திருலோக சீதாராம்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்று பல்துறை வித்தகராக வாழ்ந்து மறைந்தவர். திருலோக சீதாராம் (திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன்).பாரதியின் மகனாக தன்னை சுவீகரித்துக் கொண்டு அவருக்கு காரியங்கள் செய்த பாரதி பித்தர். பாரதி மனைவி செல்லம்மாளுக்கு பணிவிடை செய்தவர். இவரது மடியில்தான் செல்லம்மாள் உயிரிழந்தார்.

பாரதி பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். ஊர் ஊராகச் சென்று பாரதி பாடல்களைப் பாடி அவர் புகழ் பரப்பியவர். பாரதி பற்றி ஆனந்த விகடனில் இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘புதுயுக கவிஞர்’ என்ற தலைப்பில் நூலாக வந்துள்ளது. ‘சிவாஜி’ இதழின் ஆசிரியராக 40 ஆண்டுகள் இருந்தார்.

 சிவாஜி இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் ‘இலக்கியப் படகு’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றது.திருலோக சீதாராமின் ‘கந்தருவ கானம்’ ஆகச் சிறந்த படைப்பு. ‘மனுதர்ம சாஸ்திரம்’ நூலை தமிழில் தந்துள்ளார். நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’ நாவலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.பொற்காசுப் புலவர் என்றும் அழைக்கப்பட்டார்.

 அரு.ராமநாதன்

அருணாசலம் ராமநாதன் எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா என்று பன்முக ஆளுமை மிக்கவர். ‘காதல்’ இதழின் ஆசிரியராக இருந்தார். சினிமா செய்திகளுக்காக ‘கலைமணி’, மர்மக் கதைகளை வெளியிட ‘மர்மக்கதை’ இதழையும் நடத்தினார்.

‘ சம்சார சாகரம்’ இவர் எழுதிய முதல் படைப்பு. அரு.ராமநாதனின் ‘ராஜராஜ சோழன்’ நாடகம் பரிசு வென்றது. ஆயிரம் முறைக்கு மேல் மேடையேறியது. பின்னர் திரைப்படமாகவும் வந்தது. கல்கி இதழில் வெளியான ‘கோழிப் பந்தயம்’ இவரது முதல் சிறுகதை. ‘குண்டு மல்லிகை’ தொடரும் கல்கியில் வெளியானது.

‘காதல்’ இதழில் ‘அசோகனின் காதலி’, ‘வீரபாண்டியன் மனைவி’ சரித்திரத் தொடர்கள் வெளியாகி வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘வெற்றிவேல் வீரத்தேவன்’ இவர் எழுதிய மற்றொரு சிறந்த வரலாற்று படைப்பு. ‘பூலோக ரம்பை’, ‘தங்கப்பதுமை’, ‘ஆரவல்லி’ படங்கள் இவரது வசனத்தில் வெளிவந்தன.

விந்தன்

எழுத்தாளர் விந்தனுக்கு இப்பெயரைச் சூட்டியவர் கல்கி. இயற்பெயர் கோவிந்தன். இவரது இலக்கியப் பயணம் கவிதைகள் மூலம் தொடங்கியது. கல்கியில் எழுதிய ‘பாலும் பாவையும்’ தொடர் கதை மூலம் கவனம் பெற்றார். ‘அன்பு அலறுகிறது’, ‘மனிதன் மாறவில்லை’, ‘கனவிலே வந்த கன்னி’, ‘மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ இவரது குறிப்பிடத்தக்க பிற படைப்புகள்.

 ‘முல்லைக் கொடியாள்’ சிறுகதைத் தொகுப்பு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்றது. வறுமையில் உழலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக எழுத்தில் கொண்டுவந்தவர். ‘மவராசர்கள்’ என்ற சிறுகதையை வாசித்தால் இதை உணரமுடியும். தினமணி கதிரில் மகாபாரக் கதையை ‘பாட்டில் பாரதம்’ என்ற பெயரில் மரபுக் கவிதைத் தொடராக எழுதினார். எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

ஜெயகாந்தனுடன் இணைந்து ‘மனிதன்’ என்ற மாத இதழையும் கொண்டு வந்தார். ராஜாஜியின் பஜகோவிந்தத்தை பகடி செய்து ‘பசிகோவிந்தம்’ என்ற நூலை எழுதினார். பெரியாரின் கொள்கை, சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் இவரது படைப்பு ‘பெரியார் அறிவுச்சுவடி’.

எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளிக்கு வசனமும் மூன்று பாடல்களும் எழுதியுள்ளார் விந்தன். ‘குலேபகாவலி’ படத்தில் வரும் பிரபலமான ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!’ பாடலை எழுதியவரும் இவர்தான்.

 ராஜேந்திர குமார்

வணக்கத்துக்குரிய காதலியே‘வால்கள் சிறுகதைகள்’ மூலம் குமுதம் இதழில்1963-இல் அறிமுகமான எழுத்தாளர் ராஜேந்திர குமார். விறுவிறுப்பு, கலகலப்பு, சிரிப்பு, புலனாய்வு கதைகள் எழுதியவர். ஒரே மாதத்தில் ஆறு நாவல்கள் எழுதி அசத்தியவர். இவரது படைப்புகளில் வரும் ‘ஙே’ என்ற சிணுங்கல் வாசகர்களிடம் பிரபலம்.

முன்னணி தமிழ் இதழ்கள் அனைத்திலும் ராஜேந்திர குமாரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது ‘வணக்கத்துக்குரிய காதலியே’, ‘மூடுபனி’, ‘கண்ணாமூச்சி’, ‘கெளரி’ நாவல்கள் திரைப்படங்களாகியுள்ளன.

 

 

நாஞ்சில் நாடன்

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என எழுத்தின் பல்வேறு தளங்களிலும் தனி முத்திரை பதித்தவர். இயற்பெயர் சுப்பிரமணியம். ‘தலைகீழ் விகிதங்கள்’ இவரது முதல் நாவல். தங்கர் பச்சன் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்க ‘சொல்ல மறந்த கதை ‘என்ற பெயரில் திரைப்படமானது.

‘எட்டுத்திக்கும் மதயானை’ நாவல் மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்க குதிரை’ இவரது பிற நாவல்கள். பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளாக இவரது சிறுகதைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது.

நாஞ்சில் நாடனின் பலகதைகளில் மையக் கதாபாத்திரமாக வருபவர் கும்பமுனி. கம்பராமாயணம், மரபிலக்கியம் சார்ந்த சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். கட்டுரை இலக்கியத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.