பாகம் 7 – நைல் நதியைக் காணோம்

சென்ற மாதம் :

அதிசய அபுசிம்பல் வளாகம் மற்றும் நைல் நதியில் கப்பல் பயணம்.

 

இனி :

அதிகாலை கப்பல் மேல் டெக்கிற்குச் சென்று காஃபியுடன் அமர்ந்தோம். தென்றல் மெதுவாக வீச, நைல் நதி அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. புதிதாய் எழுந்த சூரிய கிரணங்கள் நதியின் இருபுறமும் இருந்த பாலைவன மணலுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தன. சகபயணியர் ஒவ்வொருவராக வந்தனர்.

வெங்கட் மாமா இன்னும் மேலே வரவில்லை. ஜானு மாமி கையில் காஃபி கோப்பையுடன் வந்தார். அனைவரும் சுற்றி அமர்ந்தோம்.

எங்களுடன் இருந்த பயணி ஒருவர் அவசரமாக,

“தெரியுமா மாமி? நேற்று இரவு பெல்லி டான்ஸ் நடந்தது. வெங்கட் எங்களுடன் இறுதிவரை இருந்து ரசித்துப் பார்த்தார்”

ஜானு மாமி அவரைப் பார்த்தார். பிறகு,

“எனக்குத் தெரியும். நேற்று இரவே அவர் என்னிடம் சொல்லிவிட்டார். எங்களுக்குள் எந்த சீக்ரெட்டும் இல்லை. ஹி இஸ் எ பெர்பெக்ட் ஜென்டில்மென். ஒரே ஒரு விஷயம். அவரும் இங்கு வந்த பிறகு, அவரை வைத்துக் கொண்டு நீங்கள் இதைச் சொல்லி இருந்தால், நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்” என்றார் அமைதியாக.

அமுன் வர, இன்னைக்கு என்ன பிளான்? என்று அவரை மொய்க்க ஆரம்பித்தோம்.

“இப்பொழுது நாம் எட்ஃபு துறைமுகத்தில் இருக்கிறோம். இங்குள்ள புகழ் பெற்ற பழைய ஆலயக் கட்டுமானத்தைப் பார்க்கப் போகிறோம்.

கெய்ரோவில் கிசா பிரமிட் வளாகத்தைப் பார்த்தபொழுது, குதிரை வண்டி சவாரி செய்ய ஆசைப்பட்டு உங்களில் பலர் கேட்டார்கள் ; அங்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. அதனால் இந்தத் துறைமுக வாசலிலிருந்து எட்ஃபு கோயில் வரை செல்வதற்காக அனைவருக்கும் குதிரை வண்டிகள் ஏற்பாடு செய்துள்ளோம். போகும் வழியில் இந்தப் புராதனமான ஊரையும் காணலாம். அப்படியே குதிரை வண்டியில் பயணம் செய்த திருப்தியும் கிடைக்கும்” என்றார் அமுன்.

“மாடு மேச்ச மாதிரியும் ஆச்சு, அப்படியே அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு, அதானே?” என்று சொல்லியபடி வெங்கட் மாமா வர, ஒரே சிரிப்பு.

“எட்ஃபு கோயிலை பற்றி சொல்லுங்கள்” என்று கேட்டோம்.

“நாம் போக இருப்பது டெம்பிள் ஆஃப் ஹோரஸ் (TEMPLE OF HORUS) அதாவது ஃபால்கன் கழுகுக்கான கோயில். இது கிரேக்க ரோமானிய காலத்தில் 237 – 57 BC யில் கட்டப்பட்டது. கோயிலை மிக மெதுவாகத்தான் கட்டியிருக்கிறார்கள். அதாவது சுமார் 180 வருடங்கள். அப்போலோ என்கிற கிரேக்கக் கடவுளுக்கு ஒப்பானதாக இந்த ஹோரஸ் ஐ கருதினார்கள். சில காலங்களுக்கு இந்த எட்ஃபு நகரின் பெயர் கூட அபோலினோ பொலீஸ்மேக்னா என்று இருந்ததாம்.

“பல கோயில்களைப் போல இதுவும் மணலில் புதைந்து இருந்ததா?”

“ஆமாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அகஸ்டி மாரியட் அவர்களால் மணற் குன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. ஆனால் மற்ற கோயில்களைப் போல அல்லாமல் பெரிய சேதம் ஏதும் இன்றி இருந்தது.

காலை உணவை முடித்துவிட்டு எட்ஃபு துறைமுகத்திற்கு வெளியே வந்து நாங்கள், ஜோடி குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஏறி கோயிலை அடைந்தோம்.

பிரம்மாண்டமான கழுகு வடிவங்களுடன் பெரிய திரையரங்கு போலிருந்தது கோயில் நுழைவாயில்.

ரோமாபுரியை ஞாபகப்படுத்தும் தடிமனானத் தூண்கள். பழமையான கொத்தளங்கள். உள் அறைகள் எங்கும் செதுக்கப்பட்ட உருவங்கள். அதில் பாய்மரக் கப்பல்களின் வடிவங்கள். அந்த பாய்மரத்தை இயக்கும் பெண் உருவங்கள். நிறைய எகிப்திய எழுத்து வடிவ ஓவியங்கள். முற்றத்திலும் பெரிய கழுகு உருவம். மன்னர், ராணிகள் போன்றோரின் சிற்பங்கள்.

பெரிய வேலைப்பாடுகள் கொண்ட விதானங்கள். அடிமட்டத்தில் பாதாள அறைகள். கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் ஓவியர்களுக்கு இந்த இடத்தை விட்டு வெளியேற மனமே வராது.

ஹேரஸ் வளமான நிலங்களின் கடவுள். அவர் பாலைவனக் கடவுளான சேத் உடன் சண்டையிடும் காட்சி, எனப் பல கதைகள் சொல்லும் ஓவியங்களும் செதுக்கப்பட்டிருந்தன.

அமுன் அருகில் வந்து, “பார்த்து விட்டீர்களா? கிளம்புங்கள். நாம் கப்பலுக்குத் திரும்ப வேண்டும். இன்னும் சில நிமிடங்களில், லக்ஸர் நகரை நோக்கி நம் கப்பல் பயணம் தொடரும்” என்றார்.

மீண்டும் ஹேரஸ் கோயிலிலிருந்து எட்ஃபு துறைமுகம் நோக்கி திறந்தவெளி குதிரை வண்டியில் பயணம் செய்தோம்.

“என்ன, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் இல்லாமல் ரோட்டைப் பார்த்தபடி இருக்கிறது?” என்றபடி டாக்டர், வெங்கு மாமாவை வம்புக்கு இழுத்தார்.

“இந்த குதிரை வண்டிப் பயணம்தான் எத்தனை சொகுசாக இருக்கிறது. இதையெல்லாம் இந்த தலைமுறையினர் தவற விட்டார்களோ?” என்றார் ஜானு மாமி.

துறைமுகம் திரும்பினோம்.

‘பூம்’ என்ற ஒலியுடன், க்ரூஸ் கப்பல் மீண்டும் கிளம்பியது. உணவகத்தில் பிளாக் டீ கெட்டிலுடன் பிஸ்கட்களும், உலர்பேரீச்சம் பழங்களும் இருந்தன. தேநீர் அருந்திக்கொண்டு, டாக்டர் ராம்நாத் ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என்று ஆரம்பிக்க. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நபர்கள் பாட ஆரம்பித்தார்கள். ஜானு மாமியும், லட்சுமியும் பழைய பாடல்களைப் பாடி அசத்தினார்கள்.

“என்ன ஒரு கை குறைகிறதே, எங்கே வெங்கட்?”

“அவர் அப்பர்டெக் போயிருக்கிறார்”

இதற்கிடையே அமுன் வந்தார்.

“நாளை காலை லக்சர் நகரில், யாரெல்லாம் ஹாட் ஏர் பலூனில் பறக்க விரும்புகிறீர்கள்?”

பலர் நான் நீ என்று போட்டி போட, “ஹலோ, அதற்காகத் தனியாகத் தொகை கட்ட வேண்டும்” என்றார் அமுன். இப்பொழுது நீங்கள் சொன்னால்தான் நாளைக்கு புக் செய்ய முடியும்”

சிலர் ஒதுங்க, வேறு சிலர் “காஸ் பலூனா, எத்தனை அடி உயரம் பறக்கும்?”

“எப்படியும் 750 அடிக்கும் மேல்”

“ஆஹா பிரமாதமா இருக்கும்” என்று டாக்டரின் மனைவி லக்ஷ்மி கூற அவ்ளோ உயரமா? அதெல்லாம் எனக்கு வேண்டாம். குட்டியாக 100 அடிகள் பறக்கும்படி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார் கூட வந்த பயணி ஒருவர்.

அதற்கு அமுன், “25 அடி உயரத்திற்கு மேல் நீங்கள் போனாலே, உங்களுக்கு நீங்கள்தான் காரண்டி. 750 அடிக்கும் 75 அடிக்கும் என்ன வித்தியாசம்?” என்றார் சிரிப்புடன்

“அச்சச்சோ பறக்கும்போது எதாவது ஆயிடுச்சின்னா?” என்று சிலர் தயங்க,

“அரை மணி நேரம் கழித்து வருகிறேன். அதற்குள் முடிவு செய்து லிஸ்டைக் கொடுங்கள்” என்று அமுன் கிளம்பினார்.

நான் போகிறேன், நான் வரவில்லை, அமுன் கூட வருவாரா? என்று சிலர் கேட்க, அமுன் வருவதற்கும் உங்கள் உயிருக்கும் என்ன சம்பந்தம்? என்று டாக்டர் சிரிக்க, இப்படி பலவிதமான விவாதங்கள் தொடர்ந்தன.

வெங்கிட்டு மாமா அவசரமாகக் கீழே இறங்கி வந்தார்.

“ஜானு, நைல் நதியைக் காணோம்!!” என்றார் பரபரப்பாக.

டாக்டர் சிரித்தபடி, “என்ன வெங்கட் சார், நடுவிலே சில பக்கத்தை காணோம்..கிற மாதிரி சொல்றீங்களே?”

“அதானே, என்ன சொல்லறேள்? நைல் நதியாவது, காணாமப் போறதாவது? நதி மேலத்தானே நம்ம போயிட்டு இருக்கோம் என்றார் ஜானு மாமி.

பக்கத்தில் இருந்த பயணி ஒருவர், எதற்கும் ஒரு முறை பார்த்திடுவோம் என்பது போல, கப்பல் ஜன்னலின் திரைச்சீலையைத் தள்ளி,

“ஆமாம், நதியில்தான் இருக்கிறோம். ஆனா, கப்பல் நகராமல் நிற்கிறது” என்றார்.

“நான் சொல்றதை நம்பலைன்னா மேல்டெக் வந்து பாருங்கள்”

“உண்மையிலேயே மேல் டெக்கில் நிறைய கூட்டமிருந்தது. விலக்கிக்கொண்டு கப்பலின் முன் முனைக்குச் சென்று பார்த்தோம்”

அதிசயம் ஆனால் உண்மை!

எதிரில் நீரோட்டம் தெரியவில்லை.

எகிப்திய பழமொழி : “நைல் ஒவ்வொரு ஆண்டும் திரும்பும்; வாய்ப்பும் திரும்பலாம்”

(தொடரும்..)