ஓவிடின் மெட்டமார்போசிஸ் – உருமாற்றம் – புத்தகம் 2

மாற்றங்களின் மாய உலகம்

முதல் புத்தகத்தின் 5 உருமாற்றங்களைச் சந்தித்தோம். மெட்டமார்போசிஸ் இரண்டாம் புத்தகம் இன்னும் வியப்பூட்டும் கதைகளுடன் நம்மை அழைத்துச் செல்கிறது. இதில் தந்தை–மகன் பாசம், இளமைத் துடுக்கு, பொறாமை, தியாகம், காதல், தெய்வங்களின் கருணை, மனிதர்களின் அகந்தை—எல்லாமே ஒன்றாகக் கலக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு மாற்றத்தில் முடிகிறது.

 

1. சூரியனின் மகன்

எத்தியோப்பிய நாட்டில் வாழ்ந்த இளைஞன் பேதோன் (Phaethon). அவனுடைய தாய் எப்போதும் அவனிடம்  ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“உன் தந்தை . உலகிற்கு ஒளி தரும் சூரியதேவன் தான் .”

ஆனால் ஊரிலிருந்த நண்பர்கள் அதை நம்பவில்லை. “உன் அம்மா கதை விடுகிறாள்!” என்று கிண்டல் செய்தார்கள்.

அவமானப்பட்ட பேதோன் நேராக சூரியனின் பொற்கோட்டைக்கே சென்றான்.

அங்கே எல்லாம் ஒளி. தங்கத் தூண்கள். வைரங்கள் பதித்த சுவர்கள். கண்களைக் கூச வைக்கும் பிரகாசம்.

சூரியதேவன் அவனைப் பார்த்தவுடன் அன்புடன் அணைத்துக் கொண்டார்.

“மகனே! என்ன வேண்டும்? எதைக் கேட்டாலும் தருகிறேன்.” 

அந்த ஒரு வாக்குறுதிதான் பெரும் விபத்துக்குக் காரணமானது.

“ஒரே ஒரு நாள் உங்கள் சூரியத் தேரை நான் ஓட்ட வேண்டும்!”

சூரியதேவன் அதிர்ந்தார்.

“வேறு எதைக் கேட்டாலும் தருகிறேன். இது மட்டும் வேண்டாம். இந்தக் குதிரைகளை அடக்க யாராலும்  முடியாது.”

ஆனால் பேதோன் பிடிவாதம் பிடித்தான்.

வாக்குறுதியை மீற முடியாத சூரியதேவன் கண்ணீருடன் தேரை அவனிடம் ஒப்படைத்தார்.

விடியற்காலையில் தேர்ப் புறப்பட்டது.

முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

ஆனால் சில நிமிடங்களிலேயே குதிரைகள் புதிய சாரதியை உணர்ந்துகொண்டன. அவை கட்டுப்பாட்டை மீறி பாய்ந்தன.

ஒரு நேரத்தில் தேர்  வானத்தின் உச்சிக்குப் பறந்தது.

மறுநேரம் பூமிக்கு மிக அருகில் இறங்கியது.

பூமி வெப்பத்தில் கருக ஆரம்பித்தது.

காடுகள் தீப்பிடித்தன. ஆறுகள் வற்றின. மலைகள் வெடித்தன.

ஆப்பிரிக்காவின் கருப்பின மக்கள் சூரிய வெப்பத்தால் கருமை அடைந்தார்கள் என்று அக்கால புராணம் கூறுகிறது. சஹாரா பாலைவனமும் அப்போது உருவானதாக ஓவிட் கற்பனை செய்கிறார்.

“எங்களைக் காப்பாற்றுங்கள்!” என்று பூமித்தாய் வானத்தை நோக்கி அலறினாள்.

வேறு வழியில்லாமல் ஜூபிடர் தனது இடியை எறிந்தார்.

அது  பேதோனைத் தாக்கியது.

வானிலிருந்து அவன் எரிந்து   ஆற்றில்  விழுந்து உயிரிழந்தான்.

பேதோனின் சகோதரிகள் அந்த ஆற்றங்கரையில் தினமும் அழுதுகொண்டே இருந்தார்கள்.

நாட்கள் சென்றன.

அவர்களுடைய கால்கள் நிலத்தில் பதிய ஆரம்பித்தன.

கைகள் கிளைகளாகின. முடி இலைகளாக மாறியது.

அவர்கள் நெட்டிலிங்க மரங்களாக  மாறிவிட்டார்கள்.

அவர்களுடைய கண்ணீர் அம்பர்  என்ற பொன்னிறப் பிசினாக மாறி மரத்திலிருந்து வழிந்தது.

இயற்கையில் காணப்படும் அம்பருக்கு ஓவிட் தந்த கவிதை விளக்கம் இது.

பேதோனின் நெருங்கிய நண்பன் ஒருவன் நண்பனின் மரணத்தைத் தாங்க முடியாமல் நாள் முழுவதும் ஆற்றங்கரையில் துக்கம் அனுசரித்தான்.

அவனுடைய குரல் மெலிந்தது. உடல் இலகுவானது. கழுத்து நீண்டது.

இறுதியில் அவன் ஒரு அன்னப்பறவையாக மாறினான்.

இன்றும் அன்னப்பறவை அமைதியாக நீரில் மிதப்பதைப் பார்த்தால், அது தன் நண்பனை நினைத்து வருந்துவதாக ஓவிட் கற்பனை செய்கிறார்.

2. காகமும் காகிதமும்

அப்போதெல்லாம் காகங்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் இருந்த காலம்,

ஒரு காகம் அப்போலோவிடம் ஓர் இரகசியத்தைச் சொல்ல ஓடிக்கொண்டிருந்தது.

வழியில் ஒரு காகம் அதைத் தடுத்தது.

“மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாதே. உண்மையைச் சொல்லி நான் ஏற்கெனவே என் வாழ்க்கையை இழந்தவன்,” என்றது.

ஆனால் காகம் கேட்கவில்லை.

அப்போலோவிடம் சென்று அவரது காதலி  வேறொருவரைக் காதலிப்பதாகச் சொன்னது.

கோபத்தில் அப்போலோ காதலியைக்  கொன்றார்.

பிறகு தன் கோபத்தை எண்ணி வருந்தினார்.

அந்தக் கோபத்திற்குக் காரணமாக இருந்த காகத்தை அவர் சபித்தார்.

வெண்மையான அதன் இறகுகள் நிரந்தரமாகக் கருப்பாக மாறின.

அதன் பிறகே காகங்கள் கருப்பு நிறமாயின என்று இந்தப் புராணம் கூறுகிறது.

இறப்பதற்கு முன் காதலியின் வயிற்றிலிருந்த குழந்தையை அப்போலோ காப்பாற்றினார்.

அந்தக் குழந்தைதான் பின்னர் உலகப் புகழ்பெற்ற மருத்துவத் தெய்வமான அஸ்கிலேபியஸ்.

மரணத்தின் மத்தியில் கூட ஒரு புதிய உயிர் பிறக்க முடியும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.

3. மெர்க்குரியும் ஹெர்சியும்

ஒருநாள் தெய்வங்களின் தூதரான மெர்க்குரி பூமிக்கு வந்தார்.

அப்போது ஒரு மாளிகையின் மேல்மாடியில் நின்று நெசவு செய்துகொண்டிருந்த அழகான இளம்பெண்ணைப் பார்த்தார்.

அவளை மணக்க விரும்பினார்.

ஆனால் அவளின்  சகோதரி பொறாமை கொண்டாள்.

அவள் இந்தத் திருமணத்தைத் தடுக்க முடிவு செய்தாள்.

அவள்  வீட்டு வாசலில் அமர்ந்து மெர்க்குரியை  வழி மறித்தாள்.

மெர்க்குரி எச்சரித்தார். அவள் அசையவில்லை.

“அப்படியே உட்கார்ந்து கொண்டிரு!” என்றார்.

அடுத்த நொடியே அவளுடைய உடல் கல்லாக உறைந்தது.

பொறாமை மனிதனை உயிரோடு கல்லாக்கிவிடும் என்பதற்கான அழகான உவமை இது.

4. ஐரோப்பாவைக் கடத்திய காளை

புத்தகத்தின் இறுதியில் மிகவும் புகழ்பெற்ற கிரேக்கக் கதைகளில் ஒன்று வருகிறது.

அழகிய இளவரசி ஐரோப்பா கடற்கரையில் தோழிகளுடன் பூப்பறித்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த ஜூபிடர் காதலில் விழுந்தார்.

நேராகச் சென்றால் அவள் பயந்துவிடுவாள். என்று அவர்  ஒரு வெண்மையான காளையாக உருவம் மாறினார்.

அந்தக் காளை மிகவும் அமைதியாக இருந்தது.

ஐரோப்பாவும் சிரித்துக்கொண்டே அதன் முதுகில் ஏறினாள்.

அடுத்த கணம் காளை கடலுக்குள் பாய்ந்தது.

அலைகளை வெட்டிக்கொண்டு வேகமாக நீந்தியது.

பயத்தில் ஐரோப்பா அதன் கொம்புகளை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

இறுதியில் அவர்கள் ஒரு  தீவை அடைந்தனர்.

அங்கே ஜூபிடர் தனது உண்மையான உருவத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர் ஐரோப்பா அந்த நாட்டின் அரசியாக உயர்ந்தாள்.

பின்னாளில் முழு கண்டத்திற்கே “ஐரோப்பா” என்ற பெயர் வந்ததாக இந்தப் புராணம் கூறுகிறது.

இரண்டாம் புத்தகத்தில் ஓவிட் சொல்லும் கதைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல. கட்டுப்பாடற்ற ஆசை அழிவைத் தரும் என்பதை பேதோனின் கதை உணர்த்துகிறது. துக்கம் இயற்கையின் ஒரு பகுதியாக மாறலாம் என்பதை அவனுடைய சகோதரிகள் காட்டுகின்றனர். உண்மையைச் சொன்னாலும் அதன் விளைவுகளை எண்ண வேண்டும் என்பதை காகத்தின் கதை நினைவூட்டுகிறது. பொறாமை மனிதனைக்  கல்லாக்கிவிடும் என்பதையும் உணர்த்துகிறது . இறுதியாக, தெய்வங்கள்கூட தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற உருவம் மாற வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதை ஐரோப்பாவின் கதை வெளிப்படுத்துகிறது.

மாற்றம்தான் இந்தக் காவியத்தின் இதயத் துடிப்பு.

அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் மெட்டமார்போசிஸ் இன்று வரை புதியதாகவும், சுவாரஸ்யமாகவும் வாசகர்களை வசீகரித்துக் கொண்டிருக்கிறது.