‘என்னங்க, இன்னைக்கு ஆபீஸ்லேருந்து இவ்ளோ லேட்டா வரீங்க?!’

      ‘ஒரு சர்ப்ரைஸ்’

      ‘சர்ப்ரைஸா? என்னது?’

      ‘சர்ப்ரைஸ், அது எப்படி போட்டு உடைக்க முடியும்?’

‘என்கிட்ட சொல்றதுல என்ன இருக்குங்க? சும்மா சொல்லுங்க’

‘உன்கிட்ட தான் சர்ப்ரைஸ்’

‘அட சொல்லுங்க, ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க’

‘நான் ஸ்கூலுக்குப் போகப் போறேன்’

‘ஸ்கூலுக்கா?! அதத்தான் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் படிங்க படிங்க என்று’

‘இல்ல, இது அந்த ஸ்கூல் இல்ல’

‘அது இல்லயா?!’

  ‘இல்லை, இது குக்கிங் ஸ்கூல்’

  ‘என்னது, எனக்கு சரியா கேட்கல’

  ‘ஆமா’

  ‘அப்படின்னா இந்த சமைக்கிறதா?!’

  ‘அதேதான்’

  ‘ஏங்க உங்களுக்கு நம்ம வீட்ல சமையல் அறை எங்க இருக்குன்னு கூட தெரியாது, சாப்ட்ட தட்ட கூட அது என்னமோ டைனிங் டேபிள்ளே ஒட்டிக் கொண்ட மாதிரி வச்சுட்டு போயிடுவீங்க, நீங்க குக்கிங் பண்ணப் போறீங்களா?!’

  ‘நிஜமாவே குக்கிங் கிளாஸ்தான், நீ மட்டும் ஆர்ட் கிளாஸ், தையல் கிளாஸ் எல்லாம் போலையா? நான் ஏதாவது சொல்லியிருக்கேனா?’

 ‘ஓ, அப்ப என்னோடு போட்டியா?’

 ‘ஆமாம், ஆனால் நான் உன்ன மாதிரி ரெண்டே நாள்ல, இல்ல இல்ல, நான் குக்கிங், பேக்கிங் பண்ணி அசத்தப்போறேன்’

 ‘நீங்க?! நம்பிட்டேன், பார்க்கிறேன்’

‘பார்க்கலாம், ம்ஹூம், பார்க்க வேண்டாம், சாப்பிடலாம்னு சொல்லு, சரி சரி, அதுக்கு எனக்கு சில சாமான்கள் வாங்கணும், கடைக்குப் போலாம் வரியா?”

‘இதெல்லாம் வேஸ்ட்ங்க’

‘ஏன் நீ ஆர்ட் கிளாஸ் போகும் போது 5000 ரூபாய்க்கு பொருள் வாங்கின, ஒரு பேக் கூட’

‘போட்டிக்கு போட்டியா’

‘இல்ல இல்ல, எனக்கு ஓர் ஆர்வம் வந்திருக்கு, அதனால போறேன்’

‘சரிங்க, வாங்க கடைக்குப் போகலாம்’

‘ஏப்ரன், ஸ்பாட்டுலா, அப்புறம் கொஞ்சம் பேக்கிங் பொருள்கள், இது போதும், தேவைப்பட்டால் நாளைக்கு வந்து வாங்கிக்கலாம், பணத்தை வேஸ்ட் பண்ண மாட்டேன்’

‘இதுவரைக்கும் ஆறதே வேஸ்ட் தான்’

xxxxxxxxxxxxx

‘ஆரம்பிக்கலாமா?, முதல்ல இந்த பருப்பு எடுத்துக்கோங்க, இது துவரம் பருப்பு, தனியா வேக வைக்கணும், தனியா, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய் வத்தல், வெந்தயம், பெருங்காயம் இது எல்லாத்தையும் எண்ணெய் இல்லாமல் தனித்தனியா வறுத்துட்டு, தேங்காயுடன் அரைக்கணும், புளித்தண்ணிய கொதிக்க விட்டு, அதுல காயை நல்லா  அலம்பி போடணும், மஞ்சப் பொடி காய் சிறிது வெந்தவுடன் உப்பு போட்டு, வேக வைத்த பருப்பைப் போட்டு, அரைச்சு வச்ச மசாலாவையும் அதுல கலந்து, கொஞ்சம் நெய் கொஞ்சம் எண்ணெய், நெய் மட்டும் போட்டால் கெட்டியாக விடும், அதனால் கொஞ்சம் எண்ணெய், கடுகு, வெந்தயம், மிளகாய் வத்தல், கருவேப்பிலை போட்டு, கடுகு வெடித்தவுடன், சாம்பார் தலையில் கொட்டி, கொத்தமல்லி தழையை மேலாகத் தூவினால், ஆஹா மணக்கும் சாம்பார், இப்படி தான் இருக்கும், இதுதான் சாம்பார், எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருங்க’

xxxxxxxxxxxxx

‘இன்னைக்கு சண்டே, நான் கத்துக்கொண்ட சாம்பார் பண்ணfcப் போறேன், உனக்கு ரெஸ்ட்’

‘அப்பா எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு, சாப்பாட்டுக்கு வெயிட் பண்ண வேண்டாம்’ இது பிரவீன்

‘அம்மா நாங்க ஃபிரண்ட்ஸ் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ண போறோம்’ சுனிதா

‘என்னங்கடா தப்பிக்கப் பாக்கறீங்களா, முடியவே முடியாது, சாயந்திரம் தோசைக்கு அந்த சாம்பார் தான்’

‘புவனா அந்தக் காய்களை வெட்டு’

‘ஏங்க நித்தமும் எனக்கு யாராவது ஏதாவது ஹெல்ப் பண்றீங்களா? சரி சரி முறைக்காதீங்க’

‘அப்படியே புளியை மட்டும் ஊற வைத்து விடு’

‘அப்புறம், நீங்கள் என்ன பண்ணுவீர்கள்?

   ‘என்னது, சமையல் ரூம் இவ்வளவு அமர்க்களமா இருக்கு, பருப்பு  கொட்டி, புளித்தண்ணி சிந்தி, இதை சரி பண்ணவே எனக்கு அரை நாள் ஆகிடும் போலிருக்கே, இதுக்கு நான் சமைத்தே இருப்பேனே, ஏங்க உங்க ஃப்ரெண்ட் நாகேந்திரபாரதி எவ்ளோ நல்லா சமைக்கிறார், அன்னைக்கு சுந்தரராஜன் அவர்கள் பண்ணின தயிர் சேமியா பிரமாதம், பேசாம நீங்க அவாகிட்டாயே கத்துக்கலாம்’

‘சாப்பிட வா, சாம்பார் ரெடி, ரொம்ப பசிக்குது’

‘என்னது இது, சாதம் வேகவே இல்லையே’

‘இல்லையே, ஒத்த ஒத்தையா என்ன அழகா இருக்கு’

‘அழகா இருந்தா போதுமா, வேக வேண்டாமா? சரி சாம்பார் ஊத்துங்க’

‘பருப்பு முழிச்சிட்டு இருக்கு, என்ன பருப்பு போட்டீங்க?’

‘துவரம் பருப்பு தான்’

‘எந்த டப்பாவில் இருந்து?’

‘அந்த பச்சை கலர் முடி போட்ட டப்பா’

‘அது கடலை பருப்புங்க’

‘இல்லையே, மஞ்சளா தானே இருந்தது’

‘கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மூணும் மஞ்சளா தான் இருக்கும்’

‘சரி சாம்பார் எப்படி இருக்கிறது?’

‘என்ன சாம்பார் இனிக்கிறது?!”

‘அது ஒரு டாப் சீக்ரெட், கொஞ்சூண்டு வெல்லம் போட்டா நல்லா இருக்கும்னு டீச்சர் தான் சொன்னாங்க’

‘அதுக்கு பாயசமா பண்ணீட்டீர்கள்! மொத்தத்தில் இன்னைக்கு பட்டினி தான், பிரவீனும் சுனிதாவும் தப்பித்தார்கள்’

    ‘புவனா, புவனா, எனக்கு பசிக்குது, உன் கையால் ஏதாவது செஞ்சு கொடு, நான் இனி குறையே சொல்லாம சந்தோஷமா சாப்பிட்டு போவேன்!’