பாத்திர விளக்கம் -2

அது என்ன? சொற்றொடர்? சென்ற இதழில் நான் விட்ட இடத்தைத் தொடருகிறேன்.

“ கலா! என்ன ஹெல்ப் பண்ணப் போறீங்க .. அப்படித்தானே கேட்ட..  இதைக் கேளு. இனிமே “சிங்கில்” கிடக்கும் பாத்திரங்கள் எல்லாம் என் பொறுப்பு. தேய்த்து அலம்பி வைப்பது என் கடமை.

“ ஆமா! இப்படி சொல்லிட்டு ஒருநாள் பாத்திரங்களை அலம்பி வைத்துவிட்டு மறுநாள் காணாமல் போய் விடுவீர்கள்; ஒங்களப் பத்தித் தெரியாதா !” என்று முகவாயைத் தோளில் வலியின்றி இடித்துக் கொண்டாள்.

“என் கடமை உணர்வையா சந்தேகப் படுகிறாய்? இனி பாத்திரம் விளக்குதல் என் பணி” இது அறிவிப்பல்ல’ சபதம் “

நம்பிக்கையில்லாமல் என்னை ஓர் அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள் கலா ! தான் ஒரு வரலாற்று நிகழ்ச்சியின் தொடக்கப் புள்ளியில் நிற்கிறோம் என்பதை அறியாமலேயே நகர்ந்தாள்.

ஆம் ! வீட்டில் பாத்திரம் துலக்கத் தொடங்கி இன்றோடு ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. 22 மார்ச் 2020 ஆரம்பித்த “லாக் டவுன்” பல நிலைகள் கடந்து, மிகவும் தளர்த்தப்பட்ட வடிவில் இன்று நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் பாத்திரம் துலக்குவதில் தளர்வு ஒன்றும் இல்லை.

இன்னும் கேட்டால் பாத்திரம் துலக்குவதில் நான் “எக்ஸ்பர்ட்” ஆகிவிட்டேன். இப்பணிக்கு ”எக்ஸ்போஸ் ஆன பிறகு எனக்குக் கிடைத்த அனுபவங்களை ஒரு பாட திட்டமாகவே வைத்து இக்கலையை ஒரு “சர்டிபிகேட்” கோர்ஸ் ஆக மாற்றலாம். அவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன. எனவே அதுபற்றி ஒரு தொடர் எழுத உள்ளேன்.

சமையலறையில் “சிங்க்” என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் பாத்திரங்கள் குவிந்திருந்தாலும் தொகுதியைக் கண்டுகொள்ளாமல் செல்லும் ஆளும்கட்சி எம் எல் ஏ போல இருந்த நான் , இன்று தேய்க்கப்படாமல் ஒரு தேக்கரண்டி கிடந்தாலும், ஒலிம்பிக் 100 மீ ஓட்ட வீரர் போல் பத்து வினாடிக்குள் பாய்ந்து சென்று துலக்கிவிடுகிறேன்.

தற்காலிகம் என நினைத்த வேலைக்கு, இல்லத்து அரசு நிரந்தரப் பணி நியமனம் கொடுத்துவிட்டபிறகு திறமையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது அறிவீனம்.

(எனவே இத்தொடரைப் படித்து விளக்கிக் கொள்ளுங்கள். அல்லது (பாத்திரத்தை) விளக்கிக் கொண்டே படியுங்கள்.)

பாத்திரங்கள் பலவிதம்

பாத்திரங்களை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். கடைகளில் பார்த்திருக்கலாம்; அடுக்கி வைத்திருக்கும் “ஷெல்ஃபிலே பார்த்திருக்கலாம், கொண்டுவரும் “கேரியரில்” பார்த்திருக்கலாம், ஹோட்டல்களில் பார்த்திருக்கலாம், கல்யாண வீடுகளில் பார்த்திருக்கலாம். ஆஃபீஸ் கேண்டீனில் பார்த்திருக்கலாம், சாப்பிடும் மேசையிலே பார்த்திருக்கலாம், ஏன் சமையலறையில் கூடப் பார்த்திருக்கலாம்…….

ஆனால் “சிங்க்” கில் பார்த்திருக்கிறீர்களா ? சாப்பிட்ட மிச்ச சொச்சங்கள் ஒட்டிக் கொண்டு , ஒன்றின் மேல் ஒன்றாக, மேலும் கீழுமாக எண்ணெய்ப் பிசு பிசுப்புடன், யாரோ வீசிப் போட்ட குப்பை போலக் கிடக்கும் பாத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?இப்படிக் கரி பூசி விட்டார்களே என்று தலை கவிழ்ந்து வீழ்ந்துகிடக்கும் இலுப்பச்சட்டியைப் பார்த்திருக்கிறீர்களா? கவர்ச்சியெல்லாம் போய்க் கூனிக் குறுகி முகம் கவிழ வீழ்ந்துகிடக்கும் சிறிதும் பெரிதுமான எவர்சில்வர் பாத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகளைப் போல பெரிய பாத்திரங்களின் அடியில் ஒளிந்துகொண்டிருக்கும் “ஸ்பூன்களைப்” பார்த்திருக்கிறீர்களா ?

இல்லையல்லவா! வாருங்கள் நான் விவரிக்கிறேன்.

முதலில் எந்த விதமான பாத்திரங்களை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக, எவர்சில்வர், அலுமினியம், போர்ஸலீன், பீங்கான், கண்ணாடி, பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்த பாத்திரங்கள் இருக்கும்.

இவற்றில் எதை “சர்வ ஜாக்கிரதையாக” கையாளவேண்டும் என்ற “அசட்டுத்தனமான” கேள்வி உங்கள் மனத்தில் எழவே கூடாது. எது “டாமேஜ்” ஆனாலும் கடைசியில் ‘டாமேஜ்” ஆவது நீங்கள்தான்.

இது தவிர பித்தளை, வெண்கலம் ஆகியவற்றில் செய்த பாத்திரங்களும், தோசைக்கல் போன்ற இரும்பு சாமான்களும் சமையலறையில் இருக்கும். இவற்றைத் துலக்கும் போது கைதவறிக் கீழே போட்டால் வேறு யாரும் தண்டனை தரவேண்டாம். காலில் விழும் கனத்த பாத்திரமே அதைச் செய்துவிடும். ( மண் பாத்திரங்கள் உண்டா என்று கேட்கக்கூடாது. துலக்கும் கலையில் டாக்டர் பட்டம் வாங்கியோருக்கே அது இயலும்; நீங்கள் இப்போதுதான் “சர்டிபிகேட்” கோர்ஸின் “சிலபஸ்’ ஐப் படித்துக் கொண்டு இருக்கிறீர்கள்)

பாத்திரங்களின் வடிவங்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது அவசியம். முயலைக் காதைப் பிடித்தும், எலியை வாலைப் பிடித்தும் தூக்க வேண்டும் என்பது வழக்கு. அது போலப் பாத்திரங்களையும் சரியான கோணத்தில் தூக்கிப் பிடித்துத் துலக்கவேண்டும்.

சின்னப் பாத்திரம், பெரிய பாத்திரம் வாலுள்ளது, பிடியுள்ளது, மூடியுள்ளது. குத்தடுக்கு, தட்டுகள். கரண்டி வகைகள், இட்லி தட்டு, சட்டிவகைகள். காப்பிக் குவளைகள்.காப்பி பில்டர்கள் ஆகியவற்றை ஒரேமாதிரியாகக் கையாள முடியாது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவிதமாக பிடித்துக் கொண்டு துலக்கவேண்டும்.

எண்ணெய்ப் பாத்திரங்கள், பால் பாத்திரங்கள் ( பொதுவாக அடியில் கரி பிடித்திருக்கும்), ஆகியவற்றை சுத்தம் செய்ய மினிமம் ஒருவாரப் பயிற்சி வேண்டும். பிரஷர் குக்கர் மூடி. பாட்டம் (Bottom) இவற்றை சுத்தம் செய்யும் போது வாஷர் மற்றும் “குண்டு” ஆகியவற்றை கண்ட இடத்தில் வைக்காமல் அதற்கென உள்ள இடத்தில் வைக்கவேண்டும் ( இல்லையென்றால் பிரஷர் தாங்க முடியாது)

கிரைண்டர் பாத்திரம், குழவி இவற்றைக் கழுவும் போது அதிக கவனம் தேவை. அதே போல “மிக்ஸி” .உள்ளே உள்ள பிளேடு விரல்களைக் காயப்படுத்தாமல் இருக்க கவனத்தோடு இயங்க வேண்டும்.

இது தவிர கத்திகள், தேங்காய்த் துருவி, காஸ் அடுப்பு மீதுள்ள தட்டுகள், பிளாஸ்க் போன்றவைற்றையும் கழுவும் வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கும். இதென்ன “ஜுஜுபி என்று எண்ணினால் இவை காலை வாரிவிட்டுவிடும். ஜாக்கிரதை.

இன்னொரு முக்கியமான குறிப்பு. மேற்சொன்ன ஒவ்வொரு பாத்திரத்திலும் பல வகைகள் இருக்கும். உதாரணத்திற்கு எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். இதில் சின்னது, பெரியது, வாய் அகன்றது, வாய் குறுகி உள்ளது, விளிம்பு உள்ளது இல்லாதது; இருந்தால் மடிந்து வழவழ என்றிருப்பது; சில பாத்திர விளிம்புகள் அழுத்தித் தேய்க்கும் போது கைகளைக் கீறி எதிர்ப்பைத் தெரிவிக்கும்.

பாத்திர “டிஸைனர்” கள் யாரைக் கேட்டு இத்தகைய வடிவங்களை அமைக்கிறார்கள் ?. பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்க வேண்டுமென்றே நினைக்கிறார்களே தவிர தேய்த்து அலம்புவோர்க்கு இடைஞ்சல் ஆக இருக்குமே என்று ஒரு நிமிடமேனும் நினைத்திருப்பார்களா ? தேவையில்லாத இடத்தில் நெளிவையும் , வளைவையும் கொடுத்து “டிஸைனை” ரொம்ப “காம்ப்ளிகேடட்” ஆகச் செய்து விடுகிறார்கள். கேவலம் சில ஸ்பூன் பிடில இருக்கற டிசைனப் பார்த்தால் தேய்க்கவே முடியாது. சில பாத்திரங்களில் விளிம்பு மடிந்திருக்கும்.

குறிப்பாகப் பால் காய்ச்சும் பாத்திரங்களின் வடிவம் மிக முக்கியம்.. சில பால் பாத்திரங்கள் வால் பாத்திரங்கள். பால் காய்ச்சுவது எளிது; ஆனால் துலக்குவது கடினம்., சில சல்லடைக் கரண்டிகளைக் கவனமாகக் கழுவவேண்டும்; இல்லையென்றால் சல்லடைப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சோப்பு நீங்காது.

கல்கியின் “பொன்னியின் செல்வன்” போலச் சமையலறையிலும் பல பாத்திரங்கள் புழங்கும். எல்லாவற்றையும் தெரிந்துவைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

ஒவ்வொரு பாத்திரத்தையும் உங்கள் நண்பர்களாக, தெரிந்த உறவுகளாக, அக்கம்பக்கத்தவர்களாக நினைத்துக் கொள்ளுங்கள். எங்கள் வீட்டில் ஒரு குண்டு அடுக்குப் போணி..என் மாமா ஒருவரை நினைவுறுத்தும்.

இப்படிப் பார்த்தால் பாத்திரம் கழுவுவதில் அலுப்புத் தெரியாது; ஆர்வம்தான் அதிகரிக்கும். ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

(தொடரும்)