கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

டொரண்டோவில் ஒரு இலக்கியச் சுரங்கம்! 

முகநூல் எனக்குப் பல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது – பல்வேறு துறைகளில் விற்பன்னர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் என ஒரு அரிய சத்சங்கம் அது!

ஆர்ப்பாட்டமில்லாமல், மிகச் சிறந்த இலக்கியப் பணியாற்றிவரும் பேராசிரியர் சு.பசுபதி அவர்களை முகநூல் மூலமாகவும், குவிகம் இலக்கிய வாசல் மூலமாகவும், பேராசிரியர் வ.வே.சு. மூலமாகவும் நான் அறிந்து கொண்டேன். சங்கப்பலகை பக்கத்தில் தொடர்ச்சியாகத் தன் வலைப்பூவிலிருந்து பதிவுகளைப் பகிர்ந்துவரும் பசுபதி அவர்களைக் கனடாவில் சந்தித்தேன்! என் மகள் வசிக்கும் ஓக்வில்லில் இருந்து ஒரு மணி பதினைந்து நிமிடநேரக் கார்ப் பயண தூரத்தில் (74 கி.மீ) உள்ள ஸ்கார்பரோவில் தன் மனைவியுடன் வசித்து வரும் பசுபதி அவர்கள் 82 வயது இளைஞர்!

தமிழ் இலக்கிய உலகில், படைப்புகளை ஆவணப்டுத்துவது என்பது சற்று கடினமான வேலை. உ.வே.சா. அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைத் தேடிப் பதிப்பித்திருக்காவிட்டால், தமிழின் பல அரிய பொக்கிஷங்களை நாம் இன்று வாசித்திருக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேல் தமிழிலக்கிய, பத்திரிகைகளில் வெளியான பல படைப்புகளைச் சேகரித்துத் தனது வலைப்பூவில் பதிவேற்றி வைத்துள்ளார் – அனைத்தும், அன்று அச்சில் வெளியான பத்திரிகைகளின் பக்கங்கள்! அவரது வலைப்பூவில், ஓர் எழுத்தாளரோ, பத்திரிகையோ அல்லது படைப்போ – கம்ப்யூட்டரின் ஒரு க்ளிக் தூரத்தில் நமக்குக் கிடைக்கிறது! அவர் சேகரித்து வைத்துள்ள தமிழ் இலக்கிய படைப்புகளின் தொகுப்புகள், ஓர்  இலக்கியச் சுரங்கம் என்றால், அது சற்றும் மிகையல்ல.

கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமத்தில் பிறந்து, சென்னை இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பயின்று, லயோலா, விவேகானந்தா கல்லூரிகள் வழியே கிண்டி பொறியியல் கல்லூரியில் BE (Telecom), சென்னை ஐஐடி யில் M.Tech, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றவர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் அவர்களிடமிருந்து பரிசு பெற்ற பெருமையும் உண்டு. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக டொராண்டோ பல்கலைக் கழகத்தில் மின்னியல் கணினித் துறையில் ஆசிரியராகப் பணி புரிந்து, தற்போது Professor Emeritus ஆக இருக்கிறார். கனடாவில் நாற்பது ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஒரு பொறியியலாளரின் இலக்கிய வேட்கை நம்மை வியப்பிலாழ்த்துகின்றது.

இளமையில் வாசித்த வால்மீகி ராமாயாணம், மஹாபக்த விஜயம், விக்ரமாதித்தன் கதைகள், பாரத் பிறந்தார், ராஜாங்கம் நூலகத்திலிருந்து வாசித்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆங்கில மர்ம, சரித்திர, சாகஸ, துப்பறியும் நாவல்கள் வாசித்ததால், தானும் எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். பள்ளிக்காலத்தில் ‘அசோகா’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, அதில் கவிதைகள் கூட எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

பழைய ஆனந்த விகடன், குமுதம், அமுதசுரபி, கலைமகள் தொகுப்புகளைச் சிறு வயதிலிருந்தே சேகரிக்கத்தொடங்கினாராம். இன்று அவரிடம் உள்ள ஆயிரக்கணக்கான தொகுப்புகளிலிருந்து, பல அரிய கட்டுரைகள், செய்திகள், எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் என “பார்த்ததும், ஈர்த்ததும், படித்ததும், பதிந்ததும்” என்ற தலைப்பில் ‘பசுபதிவுகள்’ என்று ஆயிரக் கணக்கான பதிவுகள் தனது வலைப்பூவில் பதிந்து வருகிறார்.

வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்றனர் பசுபதி தம்பதியினர். முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. தரைதளத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் – பேசியபடியே எந்தப் புத்தகம் எங்குள்ளது என்பதையும், பழைய பத்திரிகைகளையும் காண்பிக்கிறார். மணியன் செல்வம் வரைந்து கொடுத்த படம், தான் வரைந்த படம் என எல்லாம் அழகாக ஃப்ரேமிடப்பட்டு மாட்டப்பட்டுள்ளன. கோபுலு கார்ட்டூன்கள், சிந்தாநதிக்கு வரைந்த உமாபதி எனப் பல சித்திரக்காரர்களை நினைவுகூர்ந்தார். துப்பறியும் சாம்பு, தில்லானா மோகனாம்பாள் போன்ற தொடர்களில் கோபுலுவின் ஓவியங்களைப்பற்றி பேசினார். தேவன் புத்தகங்கள் வெளிவர முக்கிய காரணமாக இருந்த, மறைந்த திரு.சாருகேசியின் நண்பர் – தேவனின் எழுத்துக்களை சிலாகித்தவர், துக்ளக் இதழில் வண்ணநிலவன் தேவனைப் பற்றி எழுதிய கட்டுரையை தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னது, வியப்பாக இருந்தது. துக்ளக் முதல் இதழைக் காண்பித்தார் – 70களில் சோ ஆனந்த விகடனில் எழுதிய நவரசக் குட்டிக்கதைகளை சமீபத்தில் பதிவிட்டிருந்தார் – ஓரிரண்டு சிறுகதைகள் எனக்கு நினவில் இருந்தாலும், மீண்டும் இப்போது வாசிக்கும்போது, சோ வின் புத்திகூர்மையும், நகைச்சுவையும் சிறப்பாகத் தெரிகின்றன. அதிலும் அந்த ‘மெட்ராஸ் பாஷை’ சிறுகதை சிரிப்புடன், சமூக அவலங்களைப் பேசுகிறது!

1937 ஆம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலரின் ஒரு பகுதியை மிகக் கவனமாக பைண்ட் செய்து வைத்துள்ளார் (ஶ்ரீமதி ஸ்வர்ணாம்பாள் (குகப்பிரியை என்ற புனைபெயரும் உண்டு!) சிறுகதை, நாடோடியின் நாடகம், பேபி கடோல்கஜன் கட்டுரை).

‘யேல்’ பல்கலைக் கழகத்தில் திரு அண்ணாதுரை முனைவர் பட்டம் பெறும்போது தான் அங்கிருந்ததைக் குறிப்பிட்டார்.

தி.நகரில் இராஜாஜி அவர்களின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்த நினைவுகளை அசைபோட்டார்.

பேசிக்கொண்டிருக்கையில், அருமையான காப்பியும், முள் தேன்குழலும் கொடுத்து உபசரித்தார் அவர் மனைவி. தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகள் பேசக்கூடியவர் அவர் மனைவி. தமிழின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் பசுபதி அவர்களுக்கு விருப்பம் அதிகம் என்றும், எப்போது வேலையிலிருந்து ஓய்வு பெறுவோம் என்று காத்திருந்தாற்போல் இலக்கிய ஈடுபாடு அதிகமாக இருகிறது என்றும் அவர் மனைவி சொன்னது உண்மைதான்.

கவிதைகளில் அதிக விருப்பம். எளிதாக மரபுக் கவிதைகளைப் புரிந்துகொள்ளவும், புனையவும் உதவும் வகையில் இவர் எழுதிய புத்தகம், “கவிதை இயற்றிக் கலக்கு”. இவரது கவிதைத் தொகுப்பு – ‘சொல்லயில்’.

இன்றைய அவசர யுகத்தில், எளிமையான சிறு நகைச்சுவைக் கதைகள் முலம், சங்கப் பாடல்களுக்கு ஒரு நகைச்சுவை அறிமுகம் – ‘சங்கச்சுரங்கம்’ (3 தொகுதிகள்) எழுதியுள்ளார். இரண்டாம் தொகுப்பை திரு தேவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். புலவர் கீரன், இவரைச் சங்க நூல்களை வாசிக்கத் தூண்டியதையும், மர்ரே எஸ் ராஜம் பதிப்பில் வெளியான சங்க நூல்களைக் கொடுத்தனுப்பியதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

சமீபத்தில், வ.வே.சு.ஐயர், ஜெயகாந்தன் ஆகியோரின் நினைவில் பதிந்துள்ள பதிவுகள் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. இன்று (ஏப்ரல் 14 – விஸ்வேஸ்வரய்யவின் நினைவு தினம்), விஸ்வேஸ்வரய்யாவைப் பற்றிய ஒரு கட்டுரையைப் பதிவிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரை கலைக்கதிர், அக்டோபர் 60 இதழில், ‘செவ்வேள்’ என்பவரால் எழுதப்பட்டுள்ளது! (விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினம் செப்.15 – இந்தியாவின் பொறியியலாலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது!). ஏப்ரல் 11 தேதியிட்ட, ‘தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி’ என்ற பதிவு, ‘சித்திர ராமாயணம்’ தொடரில் 1944 இல் வந்த விகடன் இதழ்களிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது! தேதி, மாதம், வருடம் வாரியாக எல்லாப் பதிவுகளும், ‘கதம்பம், சங்கீத சங்கதிகள், பாடலும் படமும் போன்ற தலைப்புகளிலும், ஆளுமைகளைப் பற்றிய பதிவுகள் அவரவர் பெயரிலும் அழகாகப் பதிவிடப் பட்டுள்ளன.” ‘கவிதை இயற்றிக் கலக்கு’ கட்டுரைகளும், இசை சார்ந்த பழங்காலக் கட்டுரைகளும், புள்ளி விவரங்களின்படி, அதிகமாகப் படிக்கப்படுகின்றதாகத் தெரிகின்றது” என்கிறார் பசுபதி!

பசுபதி அவர்களுடன் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தது, ஒரு நொடியில் முடிந்து விட்டதுபோலத் தோன்றியது. பொறியியலாளர், இலக்கிய ஆர்வலர் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு மனிதநேய மிக்க மனிதரைச் சந்தித்ததில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

s-pasupathy.blogspot.com – வலைப்பூ தளத்திற்கு சென்று, பல அரிய தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை வாசித்து மகிழுங்கள்! (இதுவரை சுமார் எட்டு லட்சத்தி,எண்பதாயிரம் பேர்கள் இவரது வலைப் பூ தளத்தை வாசித்திருக்கிறார்கள்!)